“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 5 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 5
சுந்தரியின் பூக்கடை அருகிலிருந்த சர்பத் கடைக்கு வந்திருந்தான் வள்ளியம்மாவின் மகன் பிரகாஷ். தன் அம்மாவின் கடையில் பூ வாங்கிக் கொண்டிருந்த பெண்களெல்லாம் இங்கே பூ வாங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு குழப்பமானான்.
அவன் முகத்தை வைத்த அவன் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட சர்பத் கடை சேகர் கேட்டான். “என்னப்பா…. உங்கம்மாவோட பூக்கடைல வியாபாரம் டல்லடிக்குது… இங்கே நல்லாப் போயிட்டிருக்கு!ன்னு பார்க்கறியா?”
“ஆமாம்… அது மட்டுமில்லாம அங்க எங்கம்மா கிட்ட ரெகுலர் கஸ்டமரா இருந்த பெண்களெல்லாம் இப்ப இங்க வாங்கிட்டிருக்காங்களே… அதுதான் என்ன காரணம்னு யோசிக்கறேன்” என்றான் பிரகாஷ்.
“அதுக்குக் காரணம் ஒரு பொம்பளை!” என்றான் சேகர்.
“பொம்பளையா?… என்னப்பா சொல்றே?” பிரகாஷ் கேட்க,
“கொஞ்சம் கடைக்குள்ளார வா… இங்கியே ஒரு அரை மணி நேரம் உட்கார்ந்திட்டிரு… நீயே புரிஞ்சுக்குவே”
“அட… நீயே சொல்லிடுப்பா” என்றான் பிரகாஷ்.
“இல்லப்பா…. ஒரு வியாபாரியா இருந்திட்டு இன்னொரு வியாபாரியோட வியாபாரம் பாதிக்கற மாதிரி… சில வேலைகளை… அதாவது ஒருத்தரைப் பத்தி இல்லாததையும் பொல்லாததையும் போட்டுக் குடுக்கறது… நேர்ல வேற மாதிரி முதுகுக்குப் பின்னாடி வேற மாதிரி பேசறது… அதெல்லாம் பண்ணக் கூடாது!… அப்படி இருந்ததினாலதான் இருபது வருஷமா இதே இடத்துல எங்கப்பா சர்பத் கடை நடத்திட்டிருந்தார்!… எங்கப்பாவுக்குப் பின்னாடி இப்ப நான் நடத்திட்டிருக்கேன்” என்ற சேகர் சட்டென்று தன் குரலைத் தாழ்த்திக் கொண்டு, “பிரகாஷ்… நான் சொன்னது அந்தப் பொம்பளைதான்” என்று சொல்லி ஆடி அசைந்து நடந்து வந்து கொண்டிருக்கும் பங்கஜத்தைக் காட்டினான்.
“இவளா?… இவளுக்கும் எங்க வியாபாரத்துக்கும் என்ன சம்மந்தம்?” நெற்றியைச் சுருக்கிக் கொண்டு பிரகாஷ் கேட்க,
“அமைதியா… அந்தப்பக்கம் என்ன பேசறாங்க!ன்னு இங்கிருந்தே கேளு”
“என்ன சுந்தரி… ரொம்பவே செழிப்பாயிட்ட போலிருக்கு!” கேட்டவாறே அந்தக் கடை வாசலில் அமர்ந்தாள் பங்கஜம்.
“ஆமா… இன்னும் அந்த வள்ளியம்மா கடை ஓடிக்கிட்டிருக்கே… எப்படி?” பங்கஜம் கேட்க,
காதுகளைத் தீட்டிக் கொண்டான் பிரகாஷ்.
“முக்கால்வாசி வாடிக்கையாளர்கள்தானே இங்கே வந்திருக்காங்க!… இன்னும் கால் வாசிப் பேர் அங்கதானே வாங்கிட்டிருக்காங்க” இது சுந்தரியின் குரல்.
நெற்றியைச் சுருக்கினான் பிரகாஷ்.
“அந்தக் கால்வாசியை மட்டும் ஏன் விட்டு வைக்கணும்!… அவங்களையும் இழுத்துப் போட வேண்டியதுதானே?” என்றாள் பங்கஜம்.
“இல்லைக்கா… விடுக்கா… அவளுக்கும் கொஞ்சம் யாவாரம் நடக்கட்டும்” என்றாள் சுந்தரி.
“அய்ய… என்ன நீ இன்னும் பச்சைப்புள்ளையாவே இருக்கே?… அப்படியெல்லாம் தயவு தாட்சண்யம் பார்த்தா யாவாரம் பண்ண முடியாது” என்ற பங்கஜம் சாலையில் பூவோடு நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்மணியை வலிய அழைத்தாள்.
“என்னம்மா கோயிலுக்கா?” கேட்டாள்.
“பின்னே?… கோயிலுக்கு எதிர் ரோட்டுல கைல பூவோட போறேன்னா… அது கோயிலுக்கு இல்லாம வேற எங்கே?” அவள் பங்கஜத்தையே மென்று முழுங்கி விடுவாள் போலிருந்தாள்.
“இல்லைம்மா… ஏன் கேட்டேன்னா… இந்தப் பூவை எங்கே வாங்கினே?”
“ம்ம்ம்.. அடுத்த தெருவுல இருக்கற அந்த வள்ளியம்மா கடைல.,.. ஏன் கேட்கறே?”
“உன் புருஷன் நல்லாயிருக்கானா?” பங்கஜம் கேட்க,
“ம்.. இருக்கான்” என்றான் அவள்.
“எங்க வேலை பார்க்கறான்?”
“லாரி டிரைவரா இருக்கான்!… ஆமாம் இதையெல்லாம் எதுக்கு நீ கேட்கறே?”
“ம்… லாரி டிரைவரா…?…ஏம்மா… அந்த மனுஷன் குடும்பத்துக்காக தன் உயிரையே பணயம் வெச்சு லாரி ஓட்டறான்!… அவன் உயிர் மேலே அக்கறையில்லாம இருக்கியே நீ?” என்று பங்கஜம் சொன்னதும் கடும் கோபத்திற்கு ஆளான அந்தப் பெண், “த பாரும்மா… நீ பாட்டுக்கு வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிட்டுத் திரியாதே… அப்புறம் ஏடாகூடமாயிடும்… ஏன்னா… நான் ஒரு மாதிரி” அவள் பங்கஜத்தையே மீறுவாள் போலிருந்தாள்.
“அம்மாடி… காரணமில்லாமல் நான் அப்படிச் சொல்லலை!… வந்து… இப்ப நீ கோயிலுக்கு வந்திருக்கே… எதுக்கு?… நீ… உன் புருஷன்… குழந்தை குட்டிக எல்லோரும் நல்லாயிருக்கணும்!னு வேண்டிக்க… அப்படித்தானே?”
“ஆமாம்”
“அப்படியிருக்கும் போது… அந்த வள்ளியம்மா கடைல போயி பூ வாங்கிட்டு வந்து சாமிக்குப் போடறியேம்மா… அது சரியா?” பங்கஜம் கேட்க,
தடுப்புக்கு மறுபுறமிருந்து அதைக் கேட்டுக் கொண்டிருந்த பிரகாஷ் புருவங்களை நெரித்தான்.
“ஏன்… அங்க வாங்கினா என்ன?… எப்பவும் அங்கதானே வாங்கிட்டிருக்கேன்?”
“அய்ய… அந்த வள்ளியம்மா ஒரு விதவை… அது தெரியாதா உனக்கு?”
“இருந்திட்டுப் போகட்டும்.. அதனால் என்ன?”
“அடப் புரியாதவளே!… தாலியறுத்தவ கையால பூ வாங்கி சாமிக்குப் போட்டு… என் தாலியைக் காப்பாத்துன்னு வேண்டிக்கிட்டா… அது எப்படிம்மா பலிக்கும்?” என்று பங்கஜம் சொல்ல,
அதுவரையில் கான்கிரீட் போல் உறுதியாயிருந்த அந்தப் பெண்ணின் கண்களில் லேசாய்ச் சலனம். அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில், “சமீபத்துல உன் குழந்தைக ரெண்டுக்குமே உடம்பு சரியில்லாமப் போயிருக்குமே?” சும்மாவாகிலும் சொல்லி வைத்தாள் பங்கஜம்.
“ஆமாம்.. ஆமாம்!… சின்னவனுக்கு காய்ச்சலோ காய்ச்சல்… அவனைச் சரி பண்றதுக்குள்ளார எங்க ஆவியே போய் வந்திட்டுது” என்று அந்தப் பெண் சொன்ன மறு நிமிடம், வேகமாய்ச் சென்று அவள் கையிலிருந்த பூவைப் பறித்துக் கொண்டு, “சுந்தரி இந்தம்மாவுக்கு நீ உன்ர கையால பூ குடு தாயி” என்றாள்.
சுந்தரியும் அதே போல் தர, “இன்னிக்கு இதைக் கொண்டு போய் சாமிக்கு சாத்து அப்புறம் பாரு மாற்றங்களை…” என்றாள் பங்கஜம்.
அந்தப் பெண் காசை எடுக்க, “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்!.. நல்லது செய்யறதுக்கு எதுக்கு தாயி காசு?” என்றாள் பங்கஜம்.
அந்தப் பெண் இவர்கள் இருவரையும் கும்பிட்டு விட்டு நகர,
“பார்த்தியா பிரகாஷ்?… இங்க இப்படியொரு சதி வேலை நடந்திட்டிருக்கும் போது… உங்கம்மாவோட கடைல எப்படி வியாபாரம் நடக்கும்?” சர்பத் கடைக்காரன் சொல்ல,
உலையாய்க் கொதித்துக் கொண்டிருந்தான் பிரகாஷ். “எனக்கு அங்க வாங்க வேண்டாம்னு சொன்னது கூட அவ்வளவா கோபத்தைக் குடுக்கலை சேகர்!… எங்கம்மாவை விதவைப் பெண்ன்னு சொன்னா பாரு… அதை மட்டும் என்னால தாங்க முடியலை சேகர்” கண் கலங்கி விட்டான் பிரகாஷ்.
“இங்க பாரு பிரகாஷ்… எனக்கு மனசு கேக்கலை… அதனால் உன்னை வரச் சொல்லி நடப்பதைக் காட்டிட்டேன்!… புத்திசாலித்தனமா நடந்துக்கப்பா!… ஆவேசமா ஏதாச்சும் செஞ்சு… நீயும் பிரச்சினைல மாட்டிக்காதப்பா” பொறுமையாய் அறிவுரை வழங்கி அனுப்பினான் சர்பத் கடை சேகர்.
(- தொடரும்…)