“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 6 (நாவல்) | முகில் தினகரன்

 “கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 6 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 6

மாலை வாக்கில் அம்மாவின் கடைக்குச் சென்ற பிரகாஷ் பூக்கள் அத்தனையும் விற்காமல் மீந்து கிடப்பதைப் பார்த்து மனம் நொந்தான்.  அதே நேரம், பூக்களை கடனுக்கு சப்ளை செய்யும் மொத்த வியாபாரியும் நேரில் வந்து, வராத கடனுக்காக மல்லுக் கட்டுவதைக் கண்டு சோகமானான்.

 “அண்ணே… கொஞ்சம் பொறுத்துக்கங்க அண்ணே… இன்னும் ஒரே வாரத்துல மொத்தக் கடனையும் அடைச்சிடறேன்” வள்ளியம்மா கூனிக் குறுகிக் கெஞ்சினாள்.

 “இதான் கடைசி… இனி காசு வந்தால்தான் பூ வரும்… அவ்வளவுதான் சொல்லிட்டேன்” மொத்த வியாபாரி சென்றதும், இடத்துக்காரன் வந்தான்.

 “என்ன வள்ளியம்மா… எனக்கு மாத வாடகை குடுக்கணும்கறது ஞாபகத்தில் இருக்கா?.. இல்லையா?” நக்கலாய்க் கேட்டான்.

 “அய்ய… அதையெல்லாம் மறக்க முடியுங்களா அய்யா!… கண்டிப்பா இந்த மாசம் குடுத்துடறேன்” என்றாள் வள்ளியம்மா அசடு வழிந்தவாறு.

 “இங்க பாரு வள்ளியம்மா… நீ வாடகை குடுத்து மூணு மாசமாச்சு!… உன்னோட அட்வான்ஸ்ல அதைக் கழிச்சுக்கறேன்… நீ கடையைக் காலி பண்ற வழியப் பாரு… உன்னை விட ரெண்டு மடங்கு வாடகை குடுக்க பழமுதிர் நிலையத்துக்காரன் காத்திட்டிருக்கான்..”

 “அய்யய்ய… அப்படியேதும் செஞ்சிடாதீங்க அய்யா!… இந்த மாசம் மொத்தத்தையும் அடைச்சிடறேன்”

 நம்பிக்கையில்லாமல் தலையாட்டியபடி சென்றான் இடத்துக்காரன்.

 அங்கு நடந்த நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்த பிரகாஷ், இதற்கு மேலும் அம்மா கிட்ட அந்த விஷயத்தைச் சொல்லாம இருந்தா… அம்மா பிரஷ்ஷர் ஏறியே செத்திடும்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன்,

 “அம்மா… இங்க வா!… உட்காரு… உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என்றான் பிரகாஷ்.

நெற்றியைச் சுருக்கியவாறே அவனருகில் வந்தமர்ந்தாள் வள்ளியம்மா.

“இத்தனை வருஷமா நல்லா வியாபாரம் ஓடிட்டிருந்த நம்ம கடை சமீபத்துல ஒரு நாலஞ்சு மாசமா டல்லடிக்குதே… அது ஏன்?னு யோசிச்சியா?”

 “அட வியாபாரம்ன்னா அப்படித்தாண்டா இருக்கும்!… ஏறும்… இறங்கும்…” சாதாரணமாய்ச் சொன்னாள் வள்ளியம்மா.

 “ஆனா இது சதியால இறங்கின வியாபாரம்” என்றான் பிரகாஷ்.

 “என்னடா சொல்றே?”

 அந்த சர்பத் கடையில் அமர்ந்து தான் கண்டவைகளை தாயிடம் அப்படியே சொன்னான் பிரகாஷ்.

சில நிமிடங்கள் அமைதியாய் யோசித்த வள்ளியம்மா, “ம்ம்ம்…அந்த சுந்தரி அப்படிப்பட்டவளல்லவே!…” என்றாள்.

 “அவங்க மேலே தப்பில்லை… அங்க இன்னொரு பொம்பளை வர்றா அவதான் எல்லார் கிட்டேயும் பேசறா… அவ பேரு….ம்ம்ம்ம்ம்” யோசித்த பிரகாஷ், “ம்… பங்கஜம்” என்றான்.

 “ஓ… அவளா?.. அவ ரொம்ப மோசமானவ!…. மார்க்கெட்டுல யாருமே அவளைக் கடைக்குள்ளார சேர்த்துக்க மாட்டாங்க!… பாவம் அந்த சுந்தரி… அவளைப் பத்தித் தெரியாம அவ கூட சகவாசம் வெச்சிட்டிருக்கா… ஒரு நாளைக்குப் புரிஞ்சுக்குவா

“அதைப் பத்தி நமக்கென்ன?… இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி நம்ம கடையை ஒரு மாதிரி காலி பண்ணிட்டா… மொத்த வியாபாரியும்… இடத்துக்காரனும் வந்து கத்திக்கிட்டுப் போறாங்க!… இதெல்லாம் யாராலே?.. அவளால… அவளைச் சும்மா விடக் கூடாதும்மா”

 “டேய்…டேய்… விடுடா… விடுடா… பாவம் அவளுக்கென்ன கஷ்டமோ?” வள்ளியம்மா கொஞ்சமும் ஆவேசப்படாமல் பேசுவது பிரகாஷுக்கே ஆச்சரியமாகவும், கொஞ்சம் கோபமாகவும் இருந்தது.

“அம்மா… நாம தோற்கிறோம்ன்னா… அதுக்குக் காரணம் எதிரியோட பலமல்ல… நம்மோட பலவீனம்!… இப்ப இவ்வளவு நடந்த பின்னாடியும்  “விடுடா…விடுடா”ன்னு சொல்ற பாரு… அது… அதுதான் உன்னோட பலவீனம்” என்றான் பிரகாஷ்.

“வேறென்ன பண்ணச் சொல்றே?… அவ கூடப் போய் நேருக்கு நேர் சண்டை போடச் சொல்லுறியா?… அவ தராதரம் இல்லாதவ… அவ கூடச் சண்டை போட்டா… அது நமக்குத்தாண்டா அசிங்கம்”

 “ஹும்… இப்படியே சொல்லிட்டிரு… எல்லோரும் உன் தலைல மொளகாய் அரைச்சிட்டுப் போயிட்டே இருப்பாங்க!… ஒரு நாளைக்கு இல்லாட்டி ஒரு நாளைக்கு நீ தெருவுல நிற்கப் போறே?” கோபமாய்ச் சொல்லி விட்டு வெளியேறினான் பிரகாஷ்.

***

எந்த நேரத்தில் பிரகாஷ் அந்த வார்த்தைகளைக் கொட்டி விட்டுச் சென்றானோ… அடுத்த வாரத்திலேயே அவைகள் பலிக்கத் துவங்கின.

முதல் தாக்குதலாய் இடத்துக்காரன் அவனுக்கான நிலுவை வாடகையை அட்வான்ஸ் தொகையில் கழித்துக் கொண்டு, மீதியைக் கொண்டு வந்து வள்ளியம்மாவின் கையில் திணித்து விட்டு, “இன்னும் ரெண்டு நாள் டைம்!… உங்களோட சாமான்களை எடுத்திட்டு கடையைக் காலி பண்ணிக் குடுத்திடுங்க!.,.. புதன்கிழமை பழமுதிர் நிலையத்துக்காரன் கடையை ஆரம்பிக்கப் போறான்” என்று சொல்ல, இடிந்தே போனாள் வள்ளியம்மா.

அன்று மாலையே சொல்லி வைத்தாற் போல் வந்து நின்றார் மொத்த வியாபாரி, “என்ன வள்ளியம்மா இன்னும் ரெண்டு நாள்தான் கடையாம்!… காலி பண்ணப் போறியாம்…. பழமுதிர் நிலையம் வரப் போகுதாமே!”

அவருக்கு பதில் சொல்ல முடியாமல், தொண்டையை அடைக்கும் துக்கத்தை விழுங்கிக் கொண்டு அமைதியாய் நின்றாள் வள்ளியம்மா.

“அப்புறம்… உன்னோட நிலுவை வாடகையைக் கழிச்சிட்டு… பாக்கி அட்வான்ஸ் தொகையை குடுத்திட்டாராம்… எடத்துக்காரர்!… அப்புறமென்ன வள்ளியம்மா கையோட என்னோட கடனையும் குடுத்திட்டேன்னா… நானும் வந்த வழியே போய்ட்டிருப்பேன்”

சற்றும் யோசிக்காமல் அவருடைய கடனை அந்த நிமிடமே அடைத்தாள் வள்ளியம்மா.

 “ரொம்ப நன்றிம்மா” அந்த மனிதர் கிளம்பியதும், அக்கம் பக்கத்துக் கடைக்காரர்கள் வந்து துக்கம் விசாரிக்க ஆரம்பித்தனர்.

 “எல்லாம் கெட்ட நேரம் வள்ளியம்மா” இது பெட்டிக்கடைக்காரன் கூற்று.

 “யாரோ கண்ணு வெச்சு உன் கடையைக் குளோஸ் பண்ணியிருக்காங்க வள்ளியம்மா!… எனக்கென்னமோ அந்த பழமுதிர் நிலையத்துக்காரன்தான் இந்த இடத்தைப் பிடிப்பதற்காக… ஏதோ கோளாறு பண்ணி உன்னைக் காலி செஞ்சிருக்கான்!னு தோணுது” இது பூஜை சாமான்கள் விற்கும் கடைக்காரன் கருத்து.

“நீ எதுக்கும் கவலைப்படாதே வள்ளியம்மா… கொய்யாக் கூடையைத் தூக்கிட்டு மார்க்கெட்டு வாசல்ல உட்காரு.. தானா வரும் காசு” என்றாள் வெற்றிலை விற்கும் வெள்ளையம்மாள்.

“இங்க பாருங்க… உங்க எல்லோரோட அன்புக்கும் ரொம்ப நன்றி!… எப்பவுமே நான் “உள்ளது எதுவோ அது இறைவன் கொடுத்தது”ன்னு சந்தோஷப்பட்டுக்குவேன்!… இல்லாதது எதுவோ அது இனிமேல் இறைவன் கொடுக்கப் போவது”ன்னு நெனச்சுக்கிட்டு நம்பிக்கையோட இருப்பேன்!”… பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும் தரையில் இருக்கவும் கற்றுக் கொள்ளனும்!… அப்பத்தான் சிறகுகளை இழந்தாலும் வருத்தம் ஏற்படாது!… நான் பறக்கவும் செய்வேன்!… தரையில் இருக்கவும் செய்வேன்!” சொல்லியவாறே கடைக்குள் சென்று எடுக்க வேண்டிய பொருட்களை அடுக்க ஆரம்பித்தாள்.

(- தொடரும்…)

முந்தையபகுதி – 5 | அடுத்தபகுதி – 7

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...