“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 7 (நாவல்) | முகில் தினகரன்

 “கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 7 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 7

 எப்படியெல்லாமோ வாழ ஆசைப்பட்டு, ஒரு கட்டத்தில் எப்படியாவது வாழ்ந்தால் போதும் என்கிற நிலைக்குத் தள்ளி விடுவதுதான் வாழ்க்கை.  கடை வீதியில் பெரிய பூக்கடை வைத்து கிட்டத்தட்ட ஒரு முதலாளியாய் வாழ்ந்து கொண்டிருந்த வள்ளியம்மா யாரோ செய்த சதியால், மார்க்கெட்டிற்கு வெளியே கூடையில் வைத்து கொய்யாப்பழங்களை விற்கும் நிலைக்கு வந்தாள்.

ஆனாலும், மனம் சோர்ந்து விடாமல் தன்னம்பிக்கையோடு அந்த வியாபாரத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டாள்.

அவள் மகன் பிரகாஷ்தான் அவ்வப்போது ஆக்ரோஷமாகி, “அந்த பங்கஜத்தை என்ன செய்கிறேன் பார்?” என்று குதிப்பான்.  அந்த நேரங்களில் தன்னுடைய மென்மையான அறிவுரையால் அவனைக் கண்ட்ரோல் செய்வாள் வள்ளியம்மா.

அன்று இரவு, எட்டு மணி வாக்கில் வேக வேகமாக வீட்டிற்குள் வந்த பிரகாஷ் காரண காரியத்தைச் சொல்லாமல் “காச்…மூச்”சென்று கத்தினான்.  “இனி யார் என்ன சொன்னாலும் நான் கேட்கப் போவதில்லை!… எனக்கு என்ன தோணுதோ… எனக்கு எது சரின்னு தோணுதோ அதைத்தான் செய்யப் போறேன்”

 “த பார்ரா… கோபம்ங்கறது ஒரு கொடிய அமிலம்!… அது விழற இடத்தை விட… அது இருக்கும் இடம்தான் ரொம்ப ரொம்ப அபாயகரமானது!… அது இப்ப உன் மனசுல இருக்கு… எவ்வளவு சீகிரத்துல அதை வெளியேற்ற முடியுமோ அவ்வளவு சீக்கிரத்துல அதை வெளியேற்றிடு!… இல்லேன்னா உன்னையே அரிச்சிடும்” என்றாள் வள்ளியம்மா.

 “அம்மா…. என்னோட கோபம் உங்க எல்லோருக்குமே ஒரு திமிராத்தான் தெரியுது… ஆனா உங்க யாருக்குமே ஒண்ணு தெரிய மாட்டேங்குது… அது என் மனசோட வேதனை வெளிப்பாடு”ன்னு” என்று சொல்லி விட்டு அவன் லேசாய்க் கண் கலங்க, அவன் எதனாலோ ரொம்பப் பெரிதாய் பாதிக்கப்பட்டிருக்கான் என்பதைப் புரிந்து கொண்ட தாய், அவனருகே வந்து அமர்ந்தாள்.

 “சொல்லுப்பா… என்னாச்சு உனக்கு?” வார்த்தைகளில் பாசத்தைத் தடவி, ஆறுதலை நிரப்பி இறக்கினாள் வள்ளியம்மா.

  “வந்து… வந்து… நானும்… அந்த… குரியர் சர்வீஸ் பொண்ணும்…” என்று அவன் இழுக்க,

 “ம்… தெரியும்… தெரியும்… அரசல் புரசலா என் காதுக்கும் விஷயம் வந்திச்சு!… இப்ப என்னாச்சு சொல்லு… அதுல ஏதாவது பிரச்சினையா?”

 “அவ… என்னைக் கழட்டி விட்டுட்டு… அந்த பிரவுஸிங் செண்டர்க்காரனோட ஒட்டிக்கிட்டா!… என் கண் எதிர்ல அவன் கூட பைக்ல உட்கார்ந்து சுத்தறா… என்னால தாங்க முடியலைம்மா… எல்லாம்… எல்லாம்… உன்னாலதாம்மா”

  “என்னது… எல்லாம் என்னாலதானா?… என்னடா… என்னடா சொல்லுறே?.. நான்…. நானா அவளை அவன் கூடப் போகச் சொன்னேன்?” கோபமானாள் வள்ளியம்மா.

 “பின்னே?… கொஞ்சம் நாளாவே அவ என்னை விட்டு விலகிப் போயிட்டேயிருந்தா… எனக்குக் காரணம் புரியல… நேத்திக்கு வலுக்கட்டாயமா நிறுத்தி சண்டை போட்டேன்!… அவ சொல்றா… இதுக்கு முன்னாடி உங்கம்மா கடைவீதில பெரிய அளவுல பூக்கடை வெச்சு வியாபாரம் பண்ணிட்டிருந்தாங்க… நீயும் நல்லா செல்வச் செழிப்பா இருந்தே!… இப்ப உங்கம்மா நொடிஞ்சு போய் பிளாட்பாரத்துல உட்கார்ந்து கூடைல வெச்சு கொய்யாப்பழம் வித்திட்டிருக்காங்க!.,.. நீயும் கை வத்திப் போய்… வெத்து ஆளாத் திரியறே!… இனி உன் கூட ஒட்டிட்டு இருந்தா நானும் பிச்சைக்காரியாயிடுவேன்!னுதான் இப்ப அந்த பிரவுஸிங் செண்டர் அருணோட ஒட்டிக்கிட்டேன்!… எனக்கு காதலெல்லாம் பெரிசு இல்லைடா!… காசு பணம்தான் பெரிசு!…  “காசேதான் கடவுளடா”ங்கறதை விட… “காசுள்ளவன்தான் கடவுள்”ங்கறது என் பாலிஸி”ன்னு சொல்லிட்டாம்மா” உணர்ச்சி பொங்க வேக வேகமாய்ச் சொல்லி முடித்த மகனைப் பரிதாபமாய்ப் பார்த்தாள் வள்ளியம்மா.

“டேய்… இது அழ வேண்டிய விஷயமல்ல… சிரிக்க வேண்டிய விஷயம்”

 “என்னம்மா சொல்றே?”

 “எல்லாத் தீமையிலும் ஒரு நன்மையிருக்கும்”ன்னு பெரியவங்க சொல்லுவாங்க!… நமக்கு ஏற்பட்ட வறுமை நிலை ஒரு தீமைதான்!.. ஆனா அது உனக்கு செஞ்ச நன்மை என்ன தெரியுமா?… உன்னோட காதலியோட சுயரூபத்தை உனக்கு உரிச்சுக் காட்டிச்சு பாரு?… அதுதான் அந்தத் தீமையிலிருந்த நன்மை!”

 “புரியலை”

 “நல்லா யோசிச்சுப் பாரு… நாளைக்கு நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட பின்னாடி… இதே மாதிரி ஒரு வறுமை நிலை உனக்கு வந்தா… அப்ப அவ என்ன பண்ணுவா?… இதே மாதிரி உன்னை விட்டுட்டு இன்னொருத்தன் கூட ஓடியிருப்பா!… நல்லவேளை  அப்படியெல்லாம் எதுவும் நடக்கலை”

அதுவரையில் ஆவேசமாய்க் கத்திக் கொண்டிருந்த பிரகாஷ் நிதானமாய் யோசிக்க ஆரம்பித்தான்.

“டேய்… உன்னிடம் பணம் இல்லையென்பதற்காகவும், உன்னிடம் வசதி இல்லையென்பதற்காகவும் உன்னை ஒதுக்கும் உறவுகளுக்குத் தெரியாது… உன் வாழ்க்கை இன்னும் முடியவில்லை என்பதும்… இனிமேல்தான் ஆரம்பமாகப் போகுதென்பதும்”

 “அப்படியாம்மா?…” விழிகளை விரித்துக் கொண்டு கேட்ட மகனைத் தழுவிக் கொண்டு, “வாழ்க்கை கொஞ்சம் கஷ்டம்தான்!… ஆனா முடியாதது இல்லை… முயற்சி பண்ணு ஏதோவொரு வகைல மேலே வருவே” என்றாள்.

காயம் பட்டிருந்த மனசு தாயின் ஆறுதலாலும், அரவணைப்பாலும் சற்றுத் தேறி விட, “சரிப்பா… மழை வர்ற மாதிரி இருக்கு… போய் பைக்கை எடுத்து உள்ளார வை” என்றாள் வள்ளியம்மா.

 “இல்லைம்மா… அதுக்கு அவசியமில்லைம்மா” விரக்தியாய்ச் சொன்னான்.

 “ஏண்டா?”

 “பைக்கை டியூக்காரன் எடுத்திட்டுப் போயிட்டான்!”

 “அய்யய்யோ… என்கிட்டச் சொல்லியிருக்கலாமல்ல?” பதறினாள் வள்ளியம்மா.

“எதுக்கு… வேற எதையாவது விற்று டியூ கட்டவா?.. தேவையேயில்லை!… அந்த பைக் எனக்கு எதுக்கு?.. அப்படியே அது தேவைன்னா சம்பாதிச்சு வாங்கிக்கறேன்” என்றான் பிரகாஷ்.

 “சம்பாதிச்சா?” முகத்தில் கேள்விக் குறியைத் தொங்க வைத்துக் கொண்டு கேட்டாள் வள்ளியம்மா.

 “ஆமாம்மா… லாரி புக்கிங் ஆபீஸ்ல வேலை கேட்டிருக்கேன்!… நாளைக்கு வரச் சொல்லியிருக்காங்க!.. அநேகமா கிடைச்சிடும்…”

தாவி வந்து மகனைக் கட்டிக் கொண்டாள் வள்ளியம்மா.

பங்கஜத்தின் தீய எண்ணங்கள் தன் குடும்பத்தில் பல சின்னச் சின்ன நன்மைகளைச் செய்து கொண்டிருப்பதை அவளால் நன்றாகவே உணர முடிந்தது.

(- தொடரும்…)

முந்தையபகுதி – 6 | அடுத்தபகுதி – 8

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...