“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 8 (நாவல்) | முகில் தினகரன்

 “கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 8 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 8

காலை ஒன்பது மணிக்கே வந்து சுந்தரியின் கடையில் அமர்ந்த பங்கஜத்தின் முகம் வழக்கத்திற்கு மாறாய் சற்று வித்தியாசமாயிருந்தது.

 “என்ன பங்கஜக்கா இன்னிக்கு மூஞ்சி என்னவோ போலிருக்கு… என்ன ஏதாச்சும் பிரச்சினையா?”

 “எனக்கு வாழ்க்கைல ஒரே பிரச்சினை என் மருமகள்தான்” என்றாள்.

 “என்னக்கா நீங்க யாரு?… உங்களைக் கண்டு இந்த மொத்த மார்க்கெட்டுமே நடுங்குது… நீங்க போயி அந்தச் சின்னப் பொண்ணுக்கு பயந்திட்டிருக்கீங்க!… “ சுந்தரி சொல்ல,

 “என் மகன் எனக்கு சப்போர்ட்டா இல்லையே?.. பொண்டாட்டி முந்தானையைப் பிடிச்சுக்கிட்டல்ல திரியறான்!… அவ என்ன சொன்னாலும் வேதவாக்கு அவனுக்கு!… ச்சை”

“அவ எப்படியோ இருந்திட்டுப் போறா”ன்னு நீங்க பாட்டுக்கு ஒரு ஓரமா இருந்திட்டுப் போக வேண்டியதுதானே?” என்றாள் சுந்தரி.

 “எப்படி… நான் மகாராணி மாதிரி அதிகாரம் பண்ணிட்டிருந்த வீட்டுல நான் பிச்சைக்காரியாட்டம் இருப்பதா?”

 “அய்யய்ய… பிச்சைக்காரின்னு ஏன் சொல்றீங்க?”

 “ஆமாம் சுந்தரி சோறு போட மாட்டேங்கறாளே… வயசான காலத்துல ஒரு நாளைக்கு ஒரு நேரம் தின்னாப் போதாதா?”ங்கறா”

 “த்சொ… த்சொ” என்று பரிதாபப்பட்டு, “வாக்கா… நான் உனக்கு பிரியாணி வாங்கித் தர்றேன்” சொல்லியவாறே சுந்தரி எழ,

 “நீ ஒண்ணும் கடையை விட்டுட்டு வர வேண்டாம்… காசைக் குடு நானே வாங்கிக்கறேன்” என்றாள் பங்கஜம் கையை நீட்டிக் கொண்டு.

இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களை அவள் எடுத்துத் தர, “அட… ஐநூறு ரூவா குடு” என்றாள் பங்கஜம்.

ஒரு சிறிய யோசனைக்குப் பின், “ஓ.,.. ராத்திரிக்கும் சேர்த்து இப்பவே வாங்கிக்கறியா?” என்றவாறு அவள் கேட்ட ஐநூறு ரூபாயைக் கொடுத்தாள்.

 “சுந்தரி… இந்த ஐநூறுக்கே நீ யோசனை பண்ணினா எப்படி… நீ இன்னும் எவ்வளவு தர வேண்டி இருக்கு தெரியுமா எனக்கு?” பங்கஜம் தன் அஸ்திரத்தை எய்தாள்.

 “என்னது… நான் தரணுமா?… நான் எப்ப உங்க கிட்டக் காசு வாங்கினேன்?”

 “காசா வாங்கினாத்தான் காசா?… எத்தனை யோசனை சொல்லிக் குடுத்திருக்கேன்!…. உனக்காக இங்க உட்கார்ந்து போற வர்ற பொம்பளைகளையெல்லாம் வலியக் கூப்பிட்டு அந்த வள்ளியம்மாவைப் பத்தி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி… அவ வியாபாரத்தையே உன் பக்கம் திருப்பி விட்டிருக்கேன் ஞாபகம் வெச்சுக்க” சொல்லும் போது பங்கஜத்தின் குரல் உச்சஸ்தாய்க்குப் போக,

 “ப்ச்… அதுக்கென்ன இப்ப?” சன்னக் குரலில் கேட்டாள்.

 “உன்னோட லாபத்துல எனக்குப் பாதி வரணும்!…”

 “என்னது லாபத்துல பங்கா?… அது செரி… நீ எவ்வளவு மூலதனம் போட்டிருக்கே உனக்கு லாபத்துல பங்கு தர?”

 “அடியே… அன்னிக்கு கார்ல வந்த ஒருத்தி சும்மாவாச்சும் இங்க பூ வாங்கைப் போட்ட பின்னாடிதான் எனக்கு வசதி வந்திச்சுன்னு சொல்லிட்டுப் போனாளே?”

 “ஆமாம்.,.. அது உன் ஏற்பாடுதான்னு சொன்னியே?”

 “அதுக்கு செலவு பண்ணின பணத்தை உன் கிட்டக் கேட்டேனா?” பங்கஜம் அழுத்தம் திருத்தமாய்ச் சொன்னாள்.

 “சரி… அதுக்கு வேணா எவ்வளவு செலவாச்சுன்னு சொல்லு குடுத்துடறேன்” என்றாள் சுந்தரி.

 “வேண்டாம் சுந்தரி… என்னால ஆக்கவும் முடியும்… அழிக்கவும் முடியும்… என்கிட்ட வம்பு வெச்சுக்காதே” கோபத்தில் உச்சிக்கே போனாள் பங்கஜம்.

அவள் வார்த்தையில் இருந்த உண்மை சுந்தரியின் மனத்தை உறுத்தியது.  “இவ எதையும் செய்யக் கூடியவ… பேசாம ஒரு தொகையைக் குடுத்து இவ சங்காத்தமே வேண்டாம்னு விட்டுடறதுதான் நமக்கு நல்லது” என உள்ளுக்குள் நினைத்துக் கொண்டு.

 “அட பங்கஜம்… எதுக்கு இப்படிக் கோவிச்சுக்கறே?… நாம ரெண்டு பேரும் என்ன அப்படியா பழகியிருக்கோம்!.,.. என் கஷ்டத்தை மத்தவங்க கிட்ட சொன்னப்ப அவங்கெல்லாம் சும்மா உச்சுக் கொட்டிட்டுத்தான் போனாங்க!… நீ ஒருத்திதான்… எனக்கு ஒரு நல்ல மார்க்கத்தைச் சொன்னே!… அதுக்கு நான் உனக்கு ரொம்பவே கடன்பட்டிருக்கேன்!…” சுந்தரி சமாதானமாய்ப் பேச,

“சரி…சரி… இந்தப் பேச்செல்லாம் வேலைக்கு ஆகாது… எனக்கு மாசமாசம் ஒரு அஞ்சாயிரம்… வேண்டாம் ஒரு மூவாயிரம் ரூபாயைக் குடுத்துடு” கண்டிப்போடு சொன்னாள் சுந்தரி.

அதிர்ந்து போனாள் சுந்தரி.

“அக்கா… எப்படிக்கா.. எனக்கு கட்டுபடியாகாதுக்கா!…”

“வியாபாரமே இல்லாம ஈ ஓட்டிக்கிட்டிருந்தப்ப கட்டுப்படியாச்சா?… த இந்தக் கதையெல்லாம் என்கிட்டப் பேசாதே… மாசம் எத்தனை ரூபாய்க்கு பூ வாங்கறே… அதை எத்தனைக்கு விக்கறே?… என்ன லாபம் கிடைக்குது… எல்லா விவரமும் எனக்குத் தெரியும்” சுந்தரி தெளிவாய்ச் சொல்ல,

 “க்கும்… அது மட்டும்தான் உங்களுக்குத் தெரியுது… செலவு இருக்கல்ல?… இட வாடகை… கரண்டு சார்ஜ்… அப்பப்ப காக்கி ஆளுக்கு மாமூலு… கவுன்சிலர்களுக்கு மாமூலு… என்னோட சாப்பாட்டு செலவு…. டீ செலவு… இத்தனை இருக்கல்லக்கா?” கெஞ்சலாய்ச் சொன்னாள் சுந்தரி.

 “தாயி… அதனாலதான் அஞ்சாயிரம்ன்னு வாயில வந்தும்… செலவுகளைக் கணக்கு வெச்சிட்டு… சட்டுன்னு இறங்கி மூவாயிரம்ன்னு சொன்னேன்” என்றாள் பங்கஜம்.

 “ஹும்… போயும் போயும் இவ கூடவா கூட்டுச் சேர்ந்தோம்?… கடைசில எனக்கே ஆப்பு வைக்கிறாளே… என்ன செய்யலாம்?… ஆனது ஆகட்டும்னு ஒரு ஆயிரம் ரூபாயைக் கைல குடுத்து,… “இத்தோட சரி… இனிமே கடைப்பக்கம் வந்திடாதே”ன்னு சொல்லி அனுப்பிடலாமா?” யோசித்தாள் சுந்தரி.

“கரெக்ட் அதுதான் ஒரே வழி” என்று தனக்குள் முடிவு செய்து கொண்டு, இன்னும் இரண்டு ஐநூறு ரூபாய்த் தாள்களை எடுத்து அவள் கையில் குடுத்து விரட்டினாள்.

அதை எதிர்பார்க்காத பங்கஜம் ஒரு கணம் ஆடிப் போனாள். அந்த மார்க்கெட்டில் ஏற்கனவே தனக்கு கெட்ட பெயர் இருக்கும் போது இவளோட சண்டை போட்டால் இங்கிருக்கற மொத்த வியாபாரிகளும் அவளுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவாங்க… என்பதைப் புரிந்து கொண்ட பங்கஜம் சுந்தரி நீட்டிய இரண்டு ஐநூறு ரூபாய்த்தாள்களை “வெடுக்”க்கெனப் பறித்துக் கொண்டு, “சுந்தரி நல்லா ஞாபகம் வெச்சுக்க… இதுக்கு நீ அனுபவிப்பே…” பற்களை “நற.. நற”வென்று கடித்துக் கொண்டு நகர்ந்தாள்.

(- தொடரும்…)

முந்தையபகுதி – 7 | அடுத்தபகுதி – 9

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...