“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 9 (நாவல்) | முகில் தினகரன்

 “கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 9 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 9

அன்று முழுவதும் தனக்குள்ளேயே பொருமிக் கொண்டிருந்த பங்கஜம், இறுதியில் அந்த முடிவெடுத்தாள்.

“சாட்சிக்காரன் கால்ல விழறதை விட, சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்”… இந்த சுந்தரியைப் பழி வாங்க அந்த வள்ளியம்மாவையே பயன் படுத்தினா என்ன?” உள் மனதில் அந்தக் கேள்வி எழுந்ததும்,

 “அவளொண்ணும் இந்த சுந்தரி மாதிரி விவரமில்லாதவள் இல்லை… நீ சொல்றதையெல்லாம் முழுசா நம்பி… உன் வலைல விழறதுக்கு!.. சரியான விவரக்காரி… உன்னையே உனக்கெதிரா திருப்பி விட்டடிப்பா…” உள் மனதே பதிலும் சொன்னது.

 “அதையும்தான் பார்ப்போமே?” என்று வாய் விட்டுச் சொல்லிக் கொண்டே எழுந்தாள் பங்கஜம்.

அவள் கால்கள் நேரே மார்க்கெட்டுக்கு வெளியே கொய்யாப் பழக் கூடையோடு அமர்ந்திருக்கும் வள்ளியம்மாவை நோக்கிச் சென்றது.

இவள் போன நேரம் வள்ளியம்மா ஒரு பெரியவரிடம் பேசிக் கொண்டிருந்தாள்.  “இங்க பாருங்க பெரியவரே… நான் இந்தக் கொய்யாப்பழங்களை மொத்த வியாபாரியுடம் வாங்கிட்டு வந்து வியாபாரம் பண்ணலை!… நேரா தோப்புக்கே போய் ஓனர் கிட்டேயிருந்து வாங்கிட்டு வர்றேன்!… அதனால பெரிசா ஒண்ணும் லாபம் வைக்க மாட்டேன்!…”

 “சரிம்மா… நீ சொன்ன வெலைக்கே ஒரு கிலோ போடும்மா”

 அந்தப் பெரியவர் சென்றபின், வள்ளியம்மாவை நெருங்கி வந்த பங்கஜம், “என்ன வள்ளி எப்படியிருக்கே?” என்று கேட்க,

கீழே குனிந்து கூடைக்குள்ளிருந்த பழங்களை அடுக்கிக் கொண்டிருந்த வள்ளியம்மா மெல்லத் தலையைத் தூக்கிப் பார்த்தாள்.

“ஹி… ஹி… ஹி.” என்று அசிங்கமாய்ச் சிரித்தபடி நின்றிருந்த பங்கஜத்தை அருவருப்பாய்ப் பார்த்த வள்ளியம்மா, “ம்… ஏதோ இருக்கேன்…” என்றவள், “அது செரி… என்ன திடீர்னு எம்மேல கரிசனம்?… விசாரிப்பெல்லாம் பலமாயிருக்கு” கேட்டாள்.

 “ஹும்… அங்கே கடைவீதில… பெரிய பூக்கடைல மொதலாளியம்மாவா உட்கார்ந்திட்டிருந்த உன்னை இந்த நிலைமைல பார்க்கறதுக்கு மனசு ரொம்பக் கஷ்டமாயிருக்கு வள்ளி” என்றாள் பங்கஜம்.

 “ரொம்பக் கஷ்டமாயிருக்கா?… அப்ப ஒண்ணு செய்யி… ஒரு மூணு லட்ச ரூபாய் கடன் கொடு… அதே மாதிரி ஒரு பூக்கடை வெச்சு… மொதலாளியம்மாவா உட்கார்ந்துக்கறேன்” என்றாள் வள்ளியம்மா.

தர்ம சங்கடமாகிப் போன பங்கஜம், “என்ன வள்ளி… என்னமோ ஆகாதவங்க கிட்டப் பேசற மாதிரிப் பேசறே?… ஏதோ உன் மேல் இருந்த பாசத்துல கேட்டுப்புட்டேன்… அதுக்கு இப்படி ‘வெடுக்’குன்னு பேசறியே” என்றாள்.

 “இங்க பாரு பங்கஜம்… நான் இப்ப வியாபாரத்துல இருக்கேன்… உன் கூடப் பேசவெல்லாம் எனக்கு நேரமில்லை… கொஞ்சம் கிளம்பறியா?” முகத்திலடித்தாற் போல் சொன்னாள் வள்ளியம்மா.

 தான் வந்த நேரம் சரியில்லை போலிருக்கு, இன்னொரு நாள் வந்து பேசுவோம், என்று தனக்குள் முடிவு செய்து கொண்டு, “அப்ப போயிட்டு வர்றேன்  வள்ளி” என்று பங்கஜம் சொல்ல,

 “போ… வராதே” என்று சொல்லி அனுப்பினாள் வள்ளியம்மா.

அவள் பத்தடிதான் சென்றிருப்பாள், திடுமென எதிரில் நின்றான் பிரகாஷ், “அம்மா… அவ எதுக்கு இங்க வந்தா?… உன் கிட்ட வந்து என்ன பேசினா?”

 “என்னமோ… என் நிலைமையப் பார்த்துப் பரிதாபப்படற மாதிரி பேசினா…  “உன் கூடப் பேச நேரமில்லை… போயிட்டு வா”ன்னு சொல்லி விரட்டிட்டேன்” என்றாள் வள்ளியம்மா.

 “ம்மா… இன்னிக்கு அந்த சர்பத் கடைக்குப் போயிருந்தேன், அப்ப அந்த சேகர் சொன்னான்… இந்த பங்கஜத்துக்கும்… அந்த சுந்தரிக்கும் சண்டையாம்..  “இதுக்கு நீ நல்லா அனுபவிப்பே”ன்னு சாபம் குடுத்திட்டு வந்திருக்காளாம் இந்தப் பொம்பளை”

 “ஓ… அதான் அந்த மடத்தை விட்டுட்டு இந்த மடத்துக்கு வந்திருக்காளா?” தலையை மேலும் கீழும் ஆட்டியபடி சொன்னாள் வள்ளியம்மா.

 “அம்மா… அடுத்த தடவை அவ வந்து ஏதாச்சும் பேசினா… அவ என்ன பேசறா?ங்கறதை மட்டும் கேட்டுக்க…. நீ எதுவும் பதில் பேசிடாதே!” என்றான் பிரகாஷ்.

 “அதெல்லாம் வேண்டாம்டா… அவ பேச்சே வேண்டாம்ங்கறேன்” ஆணித்தரமாய்ச் சொன்னாள் வள்ளியம்மா.

 “இல்லம்மா.. என்னென்ன நாடகங்கள் நம்ம முதுகுக்குப் பின்னாடி நடந்திருக்கு?ன்னு நாம தெரிஞ்சுக்குவோம்”

 “தெரிஞ்சு என்ன பண்ணப் போறோம்டா… விடுடா”

 “ப்ச்… நான் சொல்றதை மட்டும் கேளு… அவ்வளவுதான்” சொல்லி விட்டு அவன் நகர,

“கொய்யாப் பழம்!… கொய்யாப் பழம்” தன் கூவலைத் தொடர்ந்தாள் வள்ளியம்மா.

***

அவர்கள் எதிர்பார்த்தது போலவே மூன்றாம் நாள் வந்து நின்றாள் பங்கஜம்.

“என்னமோ போடி… நீ என்னைத் திட்டினாலும் சரி… விரட்டியடிச்சாலும் சரி… உன்னைப் பார்த்துப் பேசவே என்னோட மனசு துடிக்குதடி” தன் வசிய வார்த்தைகளுடன் துவங்கினாள் பங்கஜம்.

அவள் வித்தைகளை முழுவதுமாய் அறிந்திருந்த வள்ளியம்மா, வெறும் புன்னகையோடு அவளை வரவேற்று விட்டு, அமைதியானாள்.

மெல்ல நெருங்கி வள்ளியம்மாவின் பக்கமாய்ச் சென்று, “இங்க உட்கார்ந்துக்கவா?” என்று கேட்டாள்.

 “ம்” என்றாள் வள்ளியம்மா ஒரே வார்த்தையில்.

 வள்ளியம்மா பக்கத்தில் தரையில் அமர்ந்துக் கொண்டவள், “இந்த உலகத்துல யாரையுமே நம்பக் கூடாது வள்ளி!… நல்லவங்க மாதிரியே பேசுவாங்க… கடைசில நமக்கே வெந்தண்ணி ஊத்திடுவாங்க” என்று சொல்ல,

 “உன்னை மாதிரியே” என்று வாய் வரை வந்து விட்ட வார்த்தைகளை அப்படியே நிறுத்திக் கொண்டாள் வள்ளியம்மா.

 “ஒரு அநியாயம்… அன்னிக்கு நான் அந்த சுந்தரி கடைல உட்கார்ந்திட்டிருக்கேன்… அவ என்ன பண்ணினா… ரோட்டுல கை நெறைய பூ கொண்டு போன ஒரு பொம்பளைய இவளா வலியக் கூப்பிட்டு பேச்சுக் குடுத்தா”

கொய்யாப்பழம் கேட்டு ஒரு பெண்மணி வந்து நிற்க, அவளுடன் பேசி, ஒரு கிலோ கொய்யாப்பழத்தை அவளுக்கு குடுத்து விட்டு, காசை வாங்கி தான் உட்கார்ந்திருந்த கோணிப்பையைத் தூக்கி அதனடியில் போட்டுக் கொண்டாள்.

 “ம்.. அப்புறம்” வள்ளியம்மாவே பங்கஜத்தின் வாயைக் கிளறி விட்டாள்.

 “அதென்னமோ.. உன்னோட பூக்கடைக்கு மட்டும் கூட்டம் வருதாம்… அவ கடைக்கு யாருமே வர்றதில்லையாம்!… ஒரு நாள் என்கிட்ட சொல்லிப் புலம்புனா” என்றாள் பங்கஜம்.

 “அப்படியா?… அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க” வேண்டுமென்றே கேட்டாள் வள்ளியம்மா.

 “அதுக்கென்னடி பண்ண முடியும்!.. அவகிட்ட விலை கம்மியோ என்னவோ?”ன்னு நான் சொன்னேன்!…”

 “ம்ம்ம்….”

 “அவ கேட்கிறா… வள்ளியம்மாவோட வியாபாரத்தைக் கெடுக்கணும்… அவளை நடு ரோட்டுல உட்கார வைக்கணும்.. அதுக்கு ஏதாச்சும் ஐடியா குடுங்க”ன்னு என்னைக் கேட்டா”

“ஓ….அப்புறம்?”

 “நான் கோபத்துல எந்திரிச்சிட்டேன்… “இந்த வேலையெல்லாம் என் கிட்ட வெச்சுக்காதே… அடுத்தவங்களை கெடுக்கற ஆளில்லை நான்”ன்னு சொல்லிட்டு உடனே கிளம்பிட்டேன்”

 “சரிதானே நீங்க செஞ்சது?” என்றாள் வள்ளியம்மா.

 “நான் செஞ்சது சரிதான்!… ஆனா அதுக்கப்புறம் அந்த சுந்தரி செஞ்சது எதுவுமே சரியில்லையே?”

 “புரியலையே”

 “ரோட்டுல போற பொம்பளைகளையெல்லாம் இவளே கூப்பிட்டு… “அந்த வள்ளியம்மா விதவை… அவ கையால பூ வாங்கி சாமிக்குப் போடாதீங்க”ன்னு ஒரு பொய்ப் பிரசாரத்தைப் பண்ணி… எல்லா பொம்பளைகளையும் மயக்கி உன் கடையை விட்டுட்டு அவ கடைக்கு வர வெச்சிட்டா!… இதுதான் வள்ளி… உன்னோட வியாபாரம் சரிஞ்சதுக்கும்… நீ இப்படி நடுத்தெருவுல வந்து உட்கார்ந்து கொய்யாப்பழம் விக்குறதுக்கும் காரணம்” ஒருவழியாய்ச் சொல்லி முடித்தாள் பங்கஜம்.

தலையை மேலும், கீழும் ஆட்டிய வள்ளியம்மா, “ஆமாம்… என் புருஷன் செத்துட்டான்!னு யார் சொன்னா?” கேட்க,

பங்கஜமே ஒரு கணம் அரண்டு போனாள்.  “எ…என்ன வள்ளியம்மா சொல்லுறே?… உன் புருஷன் செத்துப் போயிட்டான்னு அல்ல ஊரே சொல்லுது”

 “காரணம் அவன் என் கூட இல்லாதது…”

 “அப்ப… அவன் எங்கே?”

 “அவன் உயிரோடதான் இருக்கான்!… அவன் எங்கிருக்கான்?… என்ன பண்றான்?ங்கறதெல்லாம் உனக்குத் தேவையில்லாத விஷயம்?” பேச்சை அத்தோடு கத்தரித்து விட்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் வள்ளியம்மா.  மனசுக்குள், “இன்னிக்கு இந்த பங்கஜம் தூங்க மாட்டா… வள்ளி புருஷன் எங்க போனான்?… என்ன ஆனான்?”ன்னு யோசிச்சு யோசிச்சே… தூக்கம் கெடப் போறா… சாவட்டும் சனியன்” சிரித்துக் கொண்டாள்.

(- தொடரும்…)

முந்தையபகுதி – 8 | அடுத்தபகுதி – 10

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...