“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 10 (நாவல்) | முகில் தினகரன்

 “கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 10 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 10

ரை விட்டு கிட்டத்தட்ட நாலு கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் அந்த கொய்யாத் தோப்பிற்கு மினி பஸ்ஸில் வந்திறங்கினாள் வள்ளியம்மா.  வழக்கம் போல் அந்த தோட்டக்காரனிடம் பேரம் பேசி ஒரு கூடை கொய்யாப்பழங்களை அள்ளிக் கொண்டு, சாலையோரம் வந்து மினி பஸ்ஸுக்காக காத்திருந்தாள்.

நீண்ட நேரமாய் எந்த பஸ்ஸுமே வராமல் போக நொந்து போனவாளாய், “ஹும்… இப்பவே மணி எட்டாயிடுச்சு… இதுக்கு மேலே அங்க போய் வியாபாரத்தை ஆரம்பிச்சா… பாதி கூட விக்காது… மீதியைத் திருப்பிக் கொண்டு போயிட்டு நாளைக்குத்தான் தூக்கிட்டு வரணும்!”

அப்போது ஒரு பைக் வேகமாய் அவளைத் தாண்டிச் சென்றது.  அதை ஒரு போலீஸ்காரர் ஓட்டிச் சென்றார்.  சிறிது தூரம் சென்ற பின், அந்த பைக் வேகம் மட்டுப்பட்டு, யூ டர்ன் அடித்து அவளிடம் வந்து நின்றது.

“ஏம்மா… நீ மார்க்கெட்டுலதானே வியாபாரம் பண்றே?” போலீஸ்காரர்களுக்கே உரிய கட்டைக் குரலில் கேட்டார்.

 “ஆமாங்கய்யா…” நடுங்கிக் கொண்டு பதில் சொன்னாள்.

 “அங்க… கோயில் தெருவுல பூ வியாபாரம் பண்ற சுந்தரியைத் தெரியுமா உனக்கு?”

 “ம்,.. தெரியுங்கய்யா…”

 “அவ கடை?”

 “ம்.. தெரியுங்க”

 “அப்ப என் கூட வண்டில வா… எனக்கு அந்தக் கடையைக் காட்டு”

கூடையை மடியில் வைத்துக் கொண்டு, பைக்கின் பில்லியனில் அமர்ந்து கொண்டாள் வள்ளியம்மா.

போகிற வழியில் அந்தப் போலீஸ்காரர் கேட்டார்.  “அந்த சுந்தரியோட புருசனைத் தெரியுமா உனக்கு?”

 “கேள்விப்பட்டிருக்கேன்… ஆனா பார்த்ததில்லைங்கய்யா…”

 “என்ன கேள்விப்பட்டிருக்கே?” போலீஸ்காரர்களுக்கே உரிய குணம்.

 “வந்து… அந்தாளு சரியில்லை!… ஊருக்குள்ளார நிறைய பேர்க் கிட்ட காசு பணம் வாங்கிட்டு யாருக்குமே திருப்பிக் குடுக்காம ஒளிஞ்சிட்டு வாழ்றதா கேள்விப்பட்டிருக்கேன் அய்யா”

 “அவ்வளவுதான் கேள்விப்பட்டிருக்கியா?” போலீஸ்காரர் எதையோ மனதில் வைத்துக் கொண்டு கேட்க,

 “எனக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான் சாமி… நீங்க போலீஸ்காரரு உங்களுக்கு என்னை விட அதிகம் தெரிஞ்சிருக்கலாம்…” என்றாள் வள்ளியம்மா.

 “ம்.. சொல்றேன்… அங்க வந்து அந்த சுந்தரியைப் பார்த்ததும் அவ கிட்டச் சொல்லுவேன்… அதை நீயும் கேட்டுக்கோ” என்றார் போலீஸ்காரர்.

 மார்க்கெட்டிற்கு நூறடி முன்னால் வரும் போதே வள்ளியம்மா கத்தினாள். “அய்யோ.. நிறுத்துங்க!… நிறுத்துங்க”

சடன் பிரேக்கிட்ட போலீஸ்காரர், “என்னம்மா… என்னாச்சு?… கூடையிலிருந்து ஏதாச்சும் கீழ விழுந்திடுச்சா?” கேட்க,

“அதெல்லாம் ஒண்ணுமில்லை… இப்படியே நாம ரெண்டு பேரும் போயி அந்த சுந்தரியோட கடை முன்னாடி இறங்கினா… அவ்வளவுதான்… நான்தான் உங்ககிட்ட  எதையோ சொல்லி உங்களைக் கூட்டிட்டு வந்திருக்கேன்!னு நெனச்சு ஆடுவா!… அம்மாடி… அவ பேச்சைக் கேட்டா… நோயாளிகெல்லாம்  “பொட்”டுன்னு போய்ச் சேர்ந்திருவாங்க” சொல்லியவாறே பைக்கிலிருந்து இறங்கினாள்.

இறங்கியவள், “அதோ… அங்க தெரியுது பாருங்க வலதுகைப் பக்கம் ஒரு கரண்டுக்கம்பம் அதுக்கு அடுத்த கடை” என்றாள்.

“அட… பயப்படாம வாம்மா… நான் பார்த்துக்கறேன்” என்று அந்தப் போலீஸ்காரர் தைரியமூட்டியவாறே பைக்கைத் தள்ளிக் கொண்டு நடக்க, அரை மனதுடன் அவருடன் நடந்தாள்.

தன் கடை எதிரில் ஒரு போலீஸ்காரரும், உடன் வள்ளியம்மாவும் வந்து நிற்க, எடுத்த எடுப்பில் மனம் “திக்”கென்று அதிர்ந்தும், அதை காட்டிக் கொள்ளாமல், “என்ன சார்?… பூ வேணுமா?” இயல்பாய்க் கேட்டாள் சுந்தரி.

 “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்… உன் கிட்டக் கொஞ்சம் பேசணும்” என்றார் அந்தப் போலீஸ்காரர்.

 சுந்தரி மனதில் தாறுமாறான சிந்தனைகள். “என்னவாயிருக்கும்… அந்தப் பங்கஜமும் நானும் சேர்ந்து இந்த வள்ளியம்மாவோட வியாபாரத்தைக் கெடுக்க போட்ட சதித் திட்டத்தைத் தெரிஞ்சுக்கிட்டு… என் மேலே ஏதாச்சும் புகார் கிகார் குடுத்திட்டாளோ?”

பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு, சுந்தரியின் அருகில் வந்த போலீஸ்காரர், தன் குரல் வால்யூமைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டு, “ஆறுமுகம் உன் புருஷன்தானே?” கேட்டார்.

 “ஆமாம்…. ஜெயில்ல இருக்காரு…அதுக்கென்ன இப்போ?”

 “ஜெயில்ல இருக்கார்”ன்னு சொல்லாதா “ஜெயில்ல இருந்தார்”ன்னு சொல்லு” என்று போலீஸ்காரர் பூடகமாய்ப் பேச,

 நெற்றியைச் சுருக்கிக் கொண்டு அவர் முகத்தப் பார்த்தாள் சுந்தரி.

 “ஏம்மா… அஞ்சு மாசத்துக்கு முன்னாடி உன் வீட்டுக்கு ஒரு போலீஸ்காரர் உன்னை ஸ்டேஷனுக்கு வரச் சொல்லிக் கூப்பிட்டிருந்தாரே?… ஏன் வரலை?”

 அன்றொரு நாள் பக்கத்து வீட்டு பங்கஜம், “உன்னைத் தேடி போலீஸ்காரர் வந்திட்டுப் போனாரு… உன்னைய ஸ்டேஷனுக்கு வரச் சொன்னார்” என்று சொன்னதும், அந்தச் சமயத்தில் வியாபாரம் ரொம்பவும் படுத்துக் கிடந்ததன் காரணமாய் தான் போலீஸ்காரர் வந்து போனதையே மறந்ததும், அப்போதுதான் சுந்தரியின் ஞாபகத்தில் அந்த நிகழ்ச்சி வந்தது.

“அது… வந்து… அந்தச் சமயத்துல வேறொரு பிரச்சினை!…”சமாளித்தாள் சுந்தரி.

 “சரி… இன்னிக்காவது ஸ்டேஷனுக்கு வந்து… இன்ஸ்பெக்டர் அய்யாவைப் பாரு” என்றார் போலீஸ்காரர்.

 “சரி சார்” என்று தலையாட்டிய சுந்தரி மெல்லக் கேட்டாள்.  “சார்… என்ன விஷயமா இன்ஸ்பெக்டரய்யா என்னைக் கூப்பிட்டிருக்கார்… தெரிஞ்சுக்கலாமா?”

 “என்னம்மா… உன் புருஷன் அஞ்சு மாசத்துக்கு முன்னாடி மாரடைப்புல இறந்திட்டான்மா… அதுக்காகத்தான் உன்னைக் கூட்டிட்டுப் போக போலீஸ்காரரு வந்தாரு… நீ ஆளும் இல்லை!… ஸ்டேஷனுக்கு வரலை…” போலீஸ்காரர் சற்றுக் கோபமாய்ச் சொல்ல,

 “அ…ய்…யோ!… என் ராசா…” என்று சுந்தரி குரலை உயர்த்திக் கத்த, அது வரையில் அமைதியாய் நின்றிருந்த வள்ளியம்மா சுந்தரியின் அருகில் வந்து, “சுந்தரி… அழாதே சுந்தரி… “ என்று சொல்லி அவள் முதுகில் தடவிக் கொடுத்தாள்.

தான் வந்த வேலை முடிந்ததும், “இந்தாம்மா… இந்தத் தடவையும் வராமல் விட்டுடாதே… கண்டிப்பா ஸ்டேஷனுக்கு வந்து இன்ஸ்பெக்டரய்யாவைப் பாரு… என்ன?” சொல்லி விட்டுத் தன் பைக்கை ஸ்டார்ட் செய்து கொண்டு பறந்தார் அந்தப் போலீஸ்காரர்.

அவர் சென்றதும் கடையின் பின்புறம் இருக்கும் சிறிய அறைக்குள் சென்று குலுங்கிக் குலுங்கி அழுதாள் சுந்தரி.  “ஜெயில்ல இருந்தாலும் நீ உசுரோட இருக்கியே! அதுவே போதும்”ங்கற நிம்மதில வெளில நான் இருந்தேனே?… இப்படி  “பொசுக்”குன்னு என்னை விட்டுப் போயிட்டியே ராசா”

 “சுந்தரி… நல்லா அழுது தீர்த்திட்டுக் கிளம்பு.,.. அந்தப் போலீஸ்காரர் சொல்லிட்டுப் போன மாதிரி ஸ்டேஷனுக்குப் போய் அந்த இன்ஸ்பெக்டரைப் பார்த்திட்டு வரலாம்” என்றாள் வள்ளியம்மா.

 “என் புருஷனே போயிட்டான்… அங்க போய் நான் என்ன பண்ணப் போறேன் வள்ளியக்கா” கண்ணீரோடு சொன்னாள்.

“என்ன சுந்தரி இப்படிச் சொல்லிட்டே?… உன் புருஷன் சவத்தை என்ன செஞ்சாங்க?ன்னு தெரிய வேணாமா?… ஒரு வேளை அவங்க நாம யாராவது வந்து கேட்போம்ன்னு சவத்தை அப்படியே பாதுகாப்பா வெச்சிருந்தாங்கன்னா… அதை வாங்கிட்டு வந்து நாம சடங்குகளை செஞ்சு முறைப்படி அடக்கம் செய்யலாமே?” என்றாள் வள்ளியம்மா.

அவள் சொன்ன பிறகு, நிதானமாய் யோசித்த சுந்தரி, “அப்படியெல்லாம் வெச்சிருப்பாங்களா வள்ளியக்கா?” கண்ணீரோடு கேட்டாள்.

 “தெரியலையே… அங்க போய்க் கேட்டாத்தானே தெரியும்?

 “சரி… இப்பவே கடையைப் பூட்டிட்டுக் கிளம்பலாம்” எழுந்தாள் சுந்தரி.

 சில நிமிடங்களில் கடையைப் பூட்டி விட்டு, கடந்து போன ஒரு ஆட்டோவை நிறுத்தி இருவரும் ஏறியமர்ந்தனர்.

(- தொடரும்…)

முந்தையபகுதி – 9 | அடுத்தபகுதி – 11

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...