“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 11 (நாவல்) | முகில் தினகரன்

 “கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 11 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 11

போலீஸ் ஸ்டேஷன்.

நல்லவேளையாக இவர்கள் போயிருந்த நேரத்தில் இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனில் இருந்தார்.

கண்ணீருடன் உள்ளே நுழைந்த சுந்தரியையும், உடன் வந்திருந்த வள்ளியம்மாவை ஏற இறங்கப் பார்த்தவர், “என்னம்மா என்ன பிரச்சினை?” கேட்டார்.

சுந்தரி பேசக் கூடிய நிலையில் இல்லாத காரணத்தால் வள்ளியம்மா பேசினாள், “சார்… இவங்க பேரு சுந்தரி… இவங்க புருஷன் ஆறுமுகம்… அஞ்சு மாசத்துக்கு முன்னாடி….ஜெயில்ல….”

சட்டென இடையில் புகுந்த இன்ஸ்பெக்டர், “பரவாயில்லையே… அஞ்சு மாசத்துக்கு முன்னாடி வரச் சொன்னதுக்கு இவ்வளவு சீக்கிரத்திலேயே வந்திட்டீங்களே?” என்று நக்கலாய்ச் சிரித்தபடி சொன்ன இன்ஸ்பெக்டர், “ஏம்மா… போலீஸ் ஸ்டேஷனிலிருந்து ஒரு கான்ஸ்டபிள் உங்க வீடு தேடி வந்து உங்களை ஸ்டேஷனுக்கு வரச் சொன்னா… நிச்சயம் ஏதாவதொரு முக்கியமான காரணமாய்த்தான் இருக்கும்!ன்னு உங்களுக்குத் தெரியாதா?” கோபத்தோடு கேட்டார்.

“சார்… இவங்க மார்க்கெட்டுல பூக்கடை வெச்சி வியாபாரம் பண்ணிட்டிருக்கற ஒத்தைப் பொம்பளை… அந்த சமயத்துல என்ன பிரச்சினையோ… பாவம் இவளால வர முடியலை!… அதுக்கப்புறம் மறந்தும் போயிட்டா…. என்ன சார் பண்றது?… அன்னாடங்காச்சிங்க பொழப்பு அப்படியிருக்குது” சமாளித்தாள் வள்ளியம்மா.

 “சரிம்மா… புருஷன் பொண்டாட்டிக்குள்ளார ஆயிரம் சண்டைக இருக்கும்!.. அதுக்காக ஜெயில்ல இருக்கற புருஷனை வருஷக்கணக்குல வந்து பார்க்காம இருந்தா எப்படி?… பாவம்… தன்னோட தவறுகளை உணர்ந்து திருந்தின மனுஷன்… மனசு நொந்தே செத்துப் போயிட்டான்” இன்ஸ்பெக்டர் சொன்னதும் ஓங்கியழுதாள் சுந்தரி.

 “ஆமாம்… இப்ப ஒப்பாரி வெச்சு என்ன பிரயோஜனம்?… அஞ்சு மாசத்துக்கு முன்னாடி நாங்க கூப்பிட்டப்பவே… பாடியை வாங்கிட்டுப் போயி… உங்க சாத்திர சடங்குப்படி காரியங்களைப் பண்ணி அடக்கம் பண்ணியிருக்கலாமல்ல?”

“சார்…. இப்ப… அந்த பாடி?” மெல்லக் கேட்டாள் வள்ளியம்மா.

“சட்டப்படி நாங்க அதைக் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குக்குத்தான் வெச்சிருக்க முடியும்!… அந்தக் காலத்துக்குள்ளார யாரும் வந்து கேட்கலேன்னா… நாங்களே அடக்கம் பண்ணிடுவோம்!… அந்த வகைல ஆறுமுகத்தோட சவத்தையும் நாங்களே அடக்கம் பண்ணிட்டோம்!…ம்ம்ம்… நாங்க இன்னிக்கு எதுக்கு உங்களை வரச் சொன்னோம்ன்னா… அந்த ஆறுமுகம் ஜெயில்ல இருந்த காலத்துல செஞ்ச வேலைக்கான தொகை எங்க கைவசம் இருக்கு!… அதுக்கு அவன் தன்னோட மனைவி சுந்தரியை நாமினியா போட்டிருக்கான்!… அதனால… இவங்களை கையெழுத்துப் போட்டு அதை வாங்கிட்டுப் போகச் சொல்லுங்க” என்றார் இன்ஸ்பெக்டர்.

மீண்டும் சத்தமில்லாமல் குலுங்கினாள் சுந்தரி.

அவள் முதுகைத் தட்டி சமாதானம் செய்தாள் வள்ளியம்மா.

கையெழுத்துப் போட்டு, அவர்கள் கொடுத்த தொகையைப் பெற்றுக் கொண்டு வெளியேறப் போன சுந்தரியை நிறுத்தினார் இன்ஸ்பெக்டர்.  “இந்தாம்மா ஒரு நிமிஷம் நில்லும்மா”

நின்று திரும்பியவளிடம், ஒரு கவரைக் கொண்டு வந்து கொடுத்தார் ஒரு கான்ஸ்டபிள். “உன் புருஷன் ஜெயிலுக்கு வந்தப்ப போட்டிருந்த டிரஸ்… அவனோட மத்த உடைமைகள்… செக் பண்ணி வாங்கிட்டுப் போங்க” என்றாள்.

அதையும் வாங்கிக் கொண்டு, ஸ்டேஷனை விட்டு வெளியேறி, மீண்டும் ஒரு ஆட்டோ பிடித்து ஏறியமர்ந்தனர்.

”வள்ளியக்கா… கடைக்குப் போக வேண்டாம்!… எனக்கு வீட்டுக்குப் போகணும்” என்றாள் சுந்தரி.

அவளிடமே விலாசம் கேட்டு ஆட்டோ டிரைவரை வழி நடத்தினாள் சுந்தரி.

வீட்டையடைந்ததும், ஆட்டோவை அனுப்பி விட்டு, நிதானமாய் சுந்தரியை வீட்டிற்குள் அழைத்து வந்த வள்ளியம்மா, அவளை அங்கிருந்த கட்டிலில் அமர வைத்து விட்டு, தானே சமையலறைக்குச் சென்று ஒரு செம்பில் தண்ணீர் எடுத்து வந்து அவளுக்குக் கொடுத்தாள்.  “நெஞ்சு பாரமெல்லாம் இறங்கட்டும் முதல்ல தண்ணி குடி சுந்தரி”

அவள் குடித்து முடித்ததும், “டீ போட்டுத் தரவா சுந்தரி?” கேட்டாள்.

சட்டென்று வள்ளியம்மாவின் கைகளைப் பற்றிக் கொண்டு உள்ளுக்குள் குற்ற உணர்வால் தழுதழுத்தாள் சுந்தரி. “அந்த பங்கஜத்தின் பேச்சைக் கேட்டுக்கிட்டு… இந்த வள்ளியம்மாவுக்கும் நான் எத்தனை துரோகங்கள் செய்திருக்கிறேன்… அதெல்லாம் தெரிந்தால் இவள் என்னோட இவ்வளவு பாசமா… அன்பா பழகுவாளா?… “போடி நாயே!”ன்னு தூக்கியெறிஞ்சிட்டுப் போயிட மாட்டாளா?”

கணவன் இறந்த துக்கத்தில்தான் அவள் தழுதழுக்கிறாள் என்றெண்ணிய வள்ளியம்மா, “சுந்தரி… வாழ்க்கையே ஒரு போராட்டம்தான்!… இந்தப் போர்க்களத்தில் நீ வெற்றி பெற உனக்குத் தேவை துணையில்லா துணிச்சல்… தனிமைத் தைரியம்!… உலகம் பெரிசு…. வாழ்க்கை சிறிசு” என்று சொல்ல,

“வள்ளியக்கா… இதுவரைக்கும் நான் அழுதது என் புருஷன் இறந்ததுக்கு… இப்ப நான் அழுவது… நான் உங்களுக்கு செஞ்ச துரோகத்துக்கு…” சொல்லி விட்டு வள்ளியம்மாவின் இரு கைகளையும் தன் முகத்தில் பதித்துக் கொண்டு ஓங்கியழுதாள் சுந்தரி.

 “சரி… சரி… விடு… விடு” புன்னகையோடு வள்ளியம்மா சொல்ல,

 “கடைவீதில.. ஒரு முதலாளியா சொந்தக்கடை வெச்சு… பூ வியாபாரம் பண்ணிட்டிருந்த உங்களை… மார்க்கெட்டுக்கு வெளியே கூடைக்காரியா உட்கார வெச்சது… அந்த பங்கஜத்தோட சேர்ந்து நான் உங்களுக்குச் செஞ்ச துரோகம் வள்ளியக்கா…”

 “எனக்கு எல்லாம் தெரியும்” என்று சாதாரணமாகச் சொன்னாள் வள்ளியம்மா.

 “விருட்”டென்று தலையைத் தூக்கி அவளை நேர்ப்பார்வை பார்த்த சுந்தரி, “என்னது… எல்லாம் உங்களுக்குத் தெரியுமா?….” நம்ப முடியாமல் கேட்டாள்.

 “உனக்கு சொல்லிக் குடுத்து என்னைக் கவிழ்த்த அதே பங்கஜம்…. என்கிட்டே வந்து உன்னைக் கவிழ்க்க எனக்கு ஐடியா குடுத்தா”

விழிகளைப் பெரிதாக்கி முறைத்தாள் சுந்தரி.

“அவ வலைல நான் விழலை!…” சிரித்துக் கொண்டே சொன்ன வள்ளியம்மாவைக் கூர்ந்து பார்த்து விட்டு, “உங்களுக்கு என் மேல் கொஞ்சம் கூட கோபமே வரலையா?” சுந்தரி கேட்டாள்.

 “எதுக்கு?… எதுக்கு கோபப்படணும்?…”

 “உங்க வியாபாரத்தைக் கெடுத்து… உங்களை வீதியில் உட்கார வைத்தவள் நான்… அதிலும்… உங்களை ஒரு விதவை என்று சொல்லி… ச்சை!… எனக்கே என் மேல் வெறுப்பாயிருக்கு!… உங்களால் எப்படி என் மேல் அன்பு காட்ட முடிகிறது?”

“கஷ்டமோ… நஷ்டமோ… எது நடந்தாலும்… நாம சிந்திக்க வேண்டிய விஷயங்கள் ரெண்டு….! ஒண்ணு… அதனால் என்ன?… இன்னொண்ணு…. அடுத்து என்ன?”…. அந்தப் பங்கஜத்தோட சதியால் என் வியாபாரம் படுத்துப் போச்சு… அப்ப நான் சிந்திச்சது…  “அதனால் என்ன?”…. கூடைக்காரியாய் கொய்யாப்பழத்தைத் தூக்கியது  “அடுத்து என்ன?”ன்னு நான் சிந்திச்சதால…!”

சொல்லிக் கொண்டே போன வள்ளியம்மாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தாள் சுந்தரி.

“இப்ப உனக்கு நான் சொல்றது என்ன?ன்னா… உன் புருஷன் இறந்திட்டார்…. இறப்பு தவிர்க்க முடியாத சோகம்… ஆனா அதுவே உன்னை முடக்கி விடக் கூடாது… இப்ப நீ சிந்திக்க வேண்டியது… “அடுத்து என்ன?”ன்னு”

 “அடுத்து இந்தப் பூக்கடையை குளோஸ் பண்ணிட்டு நானும் உங்களை மாதிரி கொய்யாப்பழக் கூடையைத் தூக்கிட வேண்டியதுதான்” என்றான் சுந்தரி விரக்தியாய்.

 “ஏன்?… ஏன் அப்படிச் சொல்றே?”

 “பின்னே… இது நாள் வரைக்கும் என் புருஷன் உயிரோட இருந்தார்… இப்ப இல்லையே?… நான் விதவையாயிட்டேனே?… இனி நான் எப்படி… பூக்கடை….?” சுந்தரி நிறுத்த,

“ஏன்?… விதவை பூக்கடை நடத்தக் கூடாதுன்னு ஏதாச்சும் சட்டமிருக்கா?… இல்லையே?… அப்புறமென்ன நீ பாட்டுக்கு நடத்து!… அப்புறம் இன்னொரு விஷயம்… இப்போதைக்கு உன் புருஷன் ஜெயில்ல இறந்த விஷயம் எனக்கும் உனக்கும் மட்டும்தான் தெரியும்!… அதை அப்படியே நமக்குள்ளார வெச்சுக்குவோம்!… யாருக்கும் சொல்ல வேண்டாம்!… தெரியப்படுத்தவும் வேண்டாம்” வள்ளியம்மா சொல்ல.

 “ஹும்… நீங்க விதவை என்கிற ஒரே அஸ்திரத்தை வெச்சு… உங்க வியாபாரத்தையே காலி பண்ணினேன்!… ஆனா நீங்க…  “அதனாலென்ன… நீ பாட்டுக்கு நடத்து”ன்னு என்னை ஊக்குவிக்கறீங்க!… வள்ளியக்கா… உங்க காலடித் தூசுக்குக் கூட சமமில்லை இந்தச் சுந்தரி” கண் கலங்கி விட்டாள்.

சில நிமிடங்கள் அவள் முகத்தையே பார்த்து வறட்சியாய்ச் சிரித்த வள்ளியம்மா, “சுந்தரி இப்ப நான் ஒரு உண்மையை உன் கிட்டே சொல்றேன் தெரிஞ்சுக்கோ… “நான் உண்மையில் விதவை இல்லை!… என் கணவர் உயிரோடுதான் இருக்கார்!” என்றாள்.

அரண்டு போனாள் சுந்தரி, “என்னக்கா சொல்றீங்க?… அந்தப் பங்கஜம் நீங்க விதவைன்னு சொல்லித்தானே உங்க வியாபாரத்தையே குலைச்சா…”

 “அவ மட்டுமில்லை… இந்த ஊரே என்னையொரு விதவைன்னுதான் நெனச்சிட்டிருக்கு… காரணம் என் புருஷன் என் கூட இல்லாதது!…”

 “அவர் எங்கே இருக்கார்?”

 “யாருக்குத் தெரியும்?… ஒரு தடவை இந்த ஊர் திருவிழாவுக்கு நாடகம் போட வந்த ஒரு நாடக கோஷ்டில இருந்த ஒரு டான்ஸ் ஆடுற பொம்பளையோட அழகுல மயங்கி அவ பின்னாடியே போனார்!… அந்த நாடக கோஷ்டி எந்த ஊரிலெல்லாம் நாடகம் போடுதோ… அந்த ஊருக்கெல்லாம் போய்.. அவளோட டான்ஸைப் பார்த்துப் பார்த்து அவளே கதின்னு அவ காலடியில் கிடந்தாரு… ஒரு கட்டத்துல அவர் என்னையும் என் மகனை மொத்தமாத் தலைமுழுகிட்டு அவ கூடவே போயிட்டாரு!… ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டதாக் கூட தகவல் வந்திச்சு!… “

 “நீங்க ஏன்க்கா விட்டீங்க?… கேஸைப் போட்டு அந்த நாட்டியக்காரியை அத்து விட்டிருக்கலாமல்ல?”

“ஹும்… அவ கூட இருப்பதே அந்த மனுஷனுக்கு சந்தோஷம்ன்னு தெரிஞ்ச பிறகு அந்த சந்தோஷத்தை நாம ஏன் கெடுப்பானேன்?ன்னு விட்டுட்டேன்” சாதாரணமாய்ச் சொன்னாள் வள்ளியம்மா.

 “இப்ப அவரு எந்த ஊர்ல இருக்கார்?… கொழந்தை குட்டி உண்டா?”

 உதட்டைப் பிதுக்கிய வள்ளியம்மா, “சுந்தரி…. சிறகுகள் கிடைத்தால் சந்தோஷமாய்ப் பறப்பது மட்டுமல்ல வாழ்க்கை!… சிலுவைகள் கிடைத்தாலும் சந்தோஷமாய்ச் சுமப்பதுதான் வாழ்க்கை!…. இருபது… இருபத்திரெண்டு வருஷமா நானும் சிலுவைச் சுமந்துக்கிட்டுத்தான் இருக்கேன்!… என்ன செய்ய?… சரிம்மா… ரொம்ப நேரமாயிடுச்சு… நான் கிளம்பறேன்… பையன் வீட்டுக்கு வந்து என்னைத் தேடிட்டு இருப்பான்” சொல்லிக் கொண்டே எழுந்த வள்ளியம்மாவின் முகத்தில் வரும் போது இல்லாத சோகம் கெட்டியாய் அமர்ந்திருந்தது.

(- தொடரும்…)

முந்தையபகுதி – 10 | அடுத்தபகுதி – 12

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...