கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 11 | பாலகணேஷ்
பட்டுக்கோட்டை பிரபாகருக்குப் பெரும்புகழ் சேர்த்த நாவல் இது. அவரின் மாஸ்டர்பீஸ்களில் பிரதானமானது என்றும் கூறலாம். படிப்பவனின் கையைப் பிடித்து பக்கத்தில் அமர்ந்து உரையாடுவது போன்ற அழகிய எளிய தமிழ்நடையில் என்றும் நினைவில் நிற்கும் ஒரு காதல் நாவலைத் தந்திருக்கிறார் பிகேபி.
தொட்டால் தொடரும்
பட்டுக்கோட்டை பிரபாகர்
வெங்கடேஷ் ‘பாலங்கள்’ பத்திரிகையின் உதவி ஆசிரியர். பிரசவத்துக்காக மனைவி ஊருக்குச் சென்றிருக்க, ஒரு மழை நாளின் மாலையில் பாஸ்கர் என்ற இவனது நண்பன், தான் காதலித்த வசந்தி என்ற பெண்ணுடன் மதுரையிலிருந்து ஓடிவந்து இவன் வீட்டுக் கதவைத் தட்டுகிறான். வெங்க டேஷுக்கு அவர்கள் ஓடிவந்த செயல் பிடிக்காவிட்டாலும் நண்பனுக்கு அடைக்கலம் தருகிறான். ஸ்ரீராம் வெங்கடேஷின் வீட்டு மாடியில் குடியிருக்கும் ஒரு ஓவியன். அவன் கனவுகளி்ல் அடிக்கடி குதிரையில் வரும் ஒரு இளவரசியின் முகம் வசந்தியின் முகமாக இருக்கக் கண்டு வியப்பில் ஆழ்கிறான் ஸ்ரீராம்.
வெங்கடேஷ், தனக்குத் தெரிந்த கெளதமன் என்ற தொழிலதிபரிடம் பாஸ்கருக்கு வேலை கேட்க அழைத்துச் செல்கிறான். கெளதமனுடன் பேசும் நேரம் மாடியிலிருந்து அலறல் சத்தம் கேட்க, அவர் எழுந்து விரைகிறார். கெளதமனின் மகள் மஞ்சு சிகிச்சையை ஏற்க மறுத்து கலாட்டா செய்ய, சமாதானம் செய்கிறார். தூசி படிந்த ஓவியமாய் அந்த அறையிலேயே அடைந்து கிடக்கும் அழகான அந்த மஞ்சு, இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை நினைவுகூர்கிறாள். கெளதமனின் நண்பர் மகன் நந்தாவுடன் காரில் வெளியில் செல்ல, மூன்று ரவுடிகளால் நந்தா தாக்கப்பட்டு, தான் கற்பழிக்கப்பட்டதை தன்னால் சுலபமாக மறந்துவிட முடியாது என்று சொல்லி அழும் அவளைத் தேற்றுகிறார் கெளதமன்.
டாக்டர், மஞ்சுவுக்குத் திருமணம் செய்து வைப்பது நலலதென்றும், அவள் வாழ்வில் நடந்த விஷயங்களை மணப்பவனிடம் மறைக்காமல் இருப்பதே அவளுக்கு நல்லது என்றும் சொல்லிவிட்டுச் செல்கிறார். கீழே வந்ததும் வெங்கடேஷ், பாஸ்கருடனான பேச்சில் பல விஷயங் களினூடே, கற்பழிக்கப்பட்ட பெண்கள் குற்றமற்றவர்கள், வாழ்வுதர வேண்டும் என்று பாஸ்கர் ஆவேசமாகப் பேச கெளதமன் அவனுக்கு தன் அலுவலகத்தில் வேலை தருகிறார்.
ஸ்ரீராம் பாஸ்கர் – வசந்தியுடன் நட்பாகப் பழகுகிறான். ஸ்ரீராமின் பண்பாடான நடத்தையும், ஓவியத் திறமையும் வசந்தியைக் கவர்கிறது. தன் கம்பெனியில் தற்காலிக டைப்பிஸ்டாக வசந்திக்கு வேலை வாங்கித் தருகிறான் ஸ்ரீராம். பாஸ்கருக்கு மஞ்சுவை கெளதமன் அறிமுகப்படுத்தி வைக்கிறார். பாஸ்கரின் விளையாட்டு ஈடுபாடும், கலகல சுபாவமும் மஞ்சுவை சோகத்திலிருந்து மீட்டு வருகிறது. மகிழ்ச்சியடைந்த கெளதமன், பாஸ்கரை தன் பங்களாவின் அவுட் ஹவுஸிலேயே தங்கும்படி கட்டளையிட, வேறு வழியின்றி வசந்தியைப் பிரிந்து அங்கே செல்கிறான் பாஸ்கர்.
கம்பெனியில் ஸ்ரீராமையும், வசந்தியையும் இணைத்து டாய்லெட்டில் யாரோ எழுதி வைத்துவிட, கோபமான ஸ்ரீராம், அதை எழுதிய மாதவ் என்பவனைக் கண்டுபிடித்து, அனைவர் முன்னிலையிலும் அடித்து, வேலையை விட்டு அவனை அனுப்பச் செய்கிறான். ஸ்ரீராமின் அந்த ரோஷமும் காமம் கலக்காத வசந்தியி்ன் மீதான அவன் அன்பும் அவளை பிரமிக்க வைக்கிறது. மஞ்சுவின் அண்மை பாஸ்கரை நிலைதடுமாற வைக்கிறது. வசந்தியின் பிறந்த நாளைக்கூட புறக்கணித்து கெளதமன், மஞ்சுவுடன் திருச்சி செல்கிறான். வேலையாள் மூலம் கேக் அனுப்பி வைக்கிறான். ஸ்ரீராம் இரவு முழுவதும் கண்விழித்து அவளை ஓவியமாக வரைந்து பரிசளிக்கிறான். வசந்தி நெகிழ்கிறாள்.
பாஸ்கர் திரும்பி வந்ததும் வசந்தி அவனிடம் தான் கெளதமனின் பங்களாவுக்கு போன் செய்த விவரத்தைக் கூறி விளக்கம் கேட்க, அவளை எடுத்தெறிந்து கோபமாகப் பேசிவிட்டுப் பிரிகிறான் பாஸ்கர். மறுதினம் மனம் கேட்காமல் வசந்தி போன் செய்ய, அவளிடம் அப்போதும் கடுமையாகப் பேசுகிறான். தன் சொத்து விவரங்களையும், அனைத்தும் மஞ்சுவுக்குத்தான் என்றும், மஞ்சுவின் மீது தான் வைத்திருக்கும் பாசத்தையும் சொல்லி, அவளை மணந்து கொள்ளும்படி பாஸ்கரிடம் கெளதமன் வேண்டுகோள் விடுக்க… தடுமாறுகிறான் பாஸ்கர்.
ஸ்ரீராமின் அப்பா இறந்து விட்டதாக தந்திவர, அப்பாவின்மேல் வெறுப்பிலிருக்கும் அவனுக்கு அறிவுரை கூறி, ஊருக்கு அனுப்பி வைக்கிறாள் வசந்தி. வெங்கடேஷின் அலுவலகம் வரும் பாஸ்கர், தான் முதலாளி மகள் மஞ்சுவை மணக்கத் தீர்மானித்திருப்பாகச் சொல்ல, வெங்கடேஷ் கோபமாகிறான். வசந்தியுடன் திருமணமா நடந்து விட்டது, அவள் தன் ஊருக்கே போகட்டும் என பாஸ்கர் சொல்ல, வெங்கடேஷ் அவனிடம் நியாயத்தை எடுத்துச் சொல்லி சண்டை பிடிக்கிறான். வசதியான வாழ்வு வரும்போது உதறுவது மடத்தனம் என்றும், ப்ராக்டிகலாக நடந்து கொள்ள வேண்டுமென்றும் உறுதியாகச் சொல்லிவிட்டு போகிறான் பாஸ்கர்.
வெங்கடேஷ் கெளதமனைச் சந்தித்து பாஸ்கர்-வசந்தி காதலையும், ஊரை விட்டு ஓடி வந்ததையும் சொல்ல, அவர் தனக்கு ஏற்கனவே தெரியுமென்றும், வசந்திக்கு பணம் தந்து செட்டில் செய்வதாகவும் சொல்கிறார். அவரிடம் நியாயம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகிறான் வெங்கடேஷ். வசந்தியை முகம் பார்த்துப் பேச கஷ்டப்பட்டு, ஸ்ரீராமின் மாடிப் போர்ஷனில் வந்து படுக்கிறான். இரவில் ஸ்ரீராம் வர, அவனிடம் பாஸ்கரின் நடத்தையைப் பற்றிக் கூறி என்ன செய்வது என ஆலோசிக்கிறான். ஸ்ரீராம் கோபமாக நியாயம் கேட்க இப்போதே போகலாம் என்க, வெங்கடேஷ் தடுககிறான். ஸ்ரீராம் மறந்து வைத்துவிட்ட ஸ்டவ்வைக் கொடுக்க வரும் வசந்தி இவர்கள் பேசியது அனைத்தையும் கேட்டு விடுகிறாள்.
கெளதமன் பிஸினஸ் காரியமாக வைத்திருக்கும் மைக்ரோபோனைப் பார்த்ததும் பாஸ்கருடன் விளையாட நினைக்கும் மஞ்சு, அவன் அறையில் அதை வைத்து விட்டு, தன் தோழியின் வீட்டுக்கு வந்து தோழியிடம் பாஸ்கருக்கு போன் செய்யச் சொல்கிறாள். பாஸ்கர் பேசுவது கேசட்டில் ரெகார்டாகும்படி செய்திருக்கிறாள் மஞ்சு. தோழியிடம் பேசிய பாஸ்கர் நிமிர, வசந்தியைக் கண்டு திடுக்கிடுகிறான். நியாயம் கேட்கும் வசந்தியிடம் அவன் கோபமாகப் பேசி அனுப்புகிறான். ஸ்ரீராமின் அறையில் அவன் டைரியை எதேச்சையாகப் பார்க்கும்படி நேர்கிறது வெங்கடேஷுக்கு. அதில் வசந்தி மேல் தான் வைத்திருக்கும் காதலைப் பற்றி ஸ்ரீராம் எழுதியிருப்பதைப் படித்து நெகிழ்கிறான்.
தன் தோழியுடன் பாஸ்கர் பேசிய உரையாடல் டேப்பை போட்டுக காட்டி அவனை கேலி செய்கிறாள மஞ்சு. இங்கே வெங்கடேஷ், ஸ்ரீராமின் காதலைச் சொல்லும் டைரியை வசந்தியிடம் தந்து படிக்கச் சொல்ல, வசந்தி படித்து பிரமிக்கிறாள். மஞ்சுவின் தோழி வீட்டுக்கு வர, அந்த உரையாடல் கேஸட்டை அவளுக்கு போட்டுக் காட்ட, போன் உரையாடலின் தொடர்ச்சியாக வசந்தி – பாஸ்கர் பேசியது முழுவதையும் அப்போதுதான் கேட்கிறாள் மஞ்சு. கடும்கோபத்துடன் கெளதமனையும் அழைத்துக் கொண்டு பாஸ்கரிடம் வரும் மஞ்சு, ‘நாளை தன்னைவிட இன்னொரு பெரிய பணக்காரி கிடைத்தால் தன்னையும் விட்டு விடுவான்தானே’ என்று சீறி, அவனை மணக்க முடியாது என்கிறாள். வசந்தியிடம் மன்னிப்புக் கேட்டு அவளுடன் வாழ்வதுதான் சரி என்று பாஸ்ரிடம் பொரிந்து தள்ளி, அவனை உதறிவிட்டுப் போகிறாள்.
வெங்கடேஷ், ஸ்ரீராமை மணந்து கொள்ளும்படி வசந்தியிடம் கேட்க, அவள் யோசிக்க நேரம் கேட்கிறாள். வெங்கடேஷ் இதுபற்றி ஸ்ரீராமுடன் பேசி, அவனையும் கன்வின்ஸ் செய்தபடி வர, ஸ்ரீராமால் வேலையை விட்டு அனுப்பப்பட்ட மாதவ், அவனைக் கத்தியால் குத்திவிட்டு ஓடுகிறான். பாஸ்கர், தன் தவறை உணர்ந்து கெளதமனிடம் ராஜினாமாக் கடிதம் தந்து விட்டு, புறப்படுகிறான்.ஸ்ரீராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செய்தியை வசந்திக்கு போன் மூலம் வெங்கடேஷ் சொல்ல, பதறி ஓடி வருகிறாள். அவளிடம் ஸ்ரீராம் எழுதிய கடிதத்தை வெங்கடேஷ் தர, அதன் மூலம் ஸ்ரீராமின் உடல் சாராத தூய காதலை தரிசிக்கிறாள் வசந்தி.
அப்போது பாஸ்கர் அங்கு வந்து அவளிடம் மன்னிப்புக் கேட்டு, வசந்தியின் பதிலை எதிர்பார்த்துக் காத்து நிற்க, ஆபரேஷன் தியேட்டரின் கதவு திறந்து நர்ஸ் வெளிப்பட்டு, ஸ்ரீராமுக்கு ரிஸ்கான ஆபரேஷன் என்பதால் யாராவது கையெழுத்திட வேண்டும் என்க, வசந்தி கையெழுத் திடுகிறாள். ‘ஸ்ரீராமுக்கு நீங்கள் யார்?’ என்று நர்ஸ் கேட்க, வசந்தி, வெங்கடேஷைம் பாஸ்கரையும் பார்த்துவிட்டு அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறாள்: ‘‘நான் அவரோட மனைவி!’’