“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 12 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 12
தலையில் கொய்யாப்பழக் கூடையை சுமந்து கொண்டு, நிதானமாய் நடந்து வந்து கொண்டிருந்த வள்ளியம்மாவின் மனத்தில் ஏனோ இன்று கணவரின் நினைவுகளே சுழன்று சுழன்று வந்து கொண்டேயிருந்தன. “ஹும்… வயசுக்கு வந்த பொண்ணை பூக்கடைக்கு வியாபாரத்துக்கு கூட்டிட்டுப் போய் உட்கார வைக்காதீங்க”ன்னு எங்கம்மா தலையால அடிச்சுக்கிட்டா… என்னைப் பெத்தவன் அவ பேச்சைக் கேட்காம என்னைக் கொண்டு போய் தன்னோட பூக்கடைல உட்கார வெச்சான்!.. அதோட விளைவு?… நான் காதல்ல விழுந்தேன்!… கடைசியில் அந்தக் காதலன் கையாலதான் தாலியும் வாங்கி, குடித்தனமும் பண்ணிக் குழந்தையும் பெத்தேன்!… பெத்து என்ன பண்றது?… காதல் புருஷன் தன்னோட காதல் வலையை டான்ஸ்காரி மேலே வீசி… அவளோட ஓடிட்டானே?… ஹும்… எதுக்கும் குடுப்பினை வேண்டும்… எனக்குத்தான் அது சுத்தமா இல்லையே?”
“ஏ வள்ளீம்மா… உனக்கு காது கீது செவிடாயிடுச்சா என்ன?” முதுகிற்குப் பின்னாலிருந்து அந்தக் குரல் வர, சுய நினைவிற்கு வந்தாள் வள்ளியம்மா.
கூடையைத் தலையில் வைத்துக் கொண்டே திரும்பிப் பார்த்தாள். அந்தப் பங்கஜம்தான் அவளைத் துரத்திக் கொண்டு பின்னாடியே வந்து கொண்டிருந்தாள்.
அவளுக்கு முகம் கொடுக்காமல் மீண்டும் முன் பக்கம் திரும்பி நடை போட்டாள் வள்ளியம்மா.
“என்ன வள்ளீம்மா… சுந்தரி வீட்டுக்குள்ளார இருந்து வெளிய வர்றதைப் பார்த்தேன்… அவ கூட எதுக்கு சகவாசம் வெச்சுக்கறே?… அவதானே உன்னைக் குப்புறத் தள்ளி முதுகுல குத்தாட்டம் போட்டவ…” பங்கஜம் தன் வழக்கமான பணியைத் துவக்கினாள்.
அவள் ஏதோ தீய எண்ணத்தோடுதான் வந்திருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட வள்ளியம்மா வாயே திறக்காமல் அமைதியாய் நடந்தாள்.
“இங்க பாரு வள்ளீம்மா… நீ என் பேச்சைக் கேட்டு… நான் சொல்றபடி செஞ்சேன்னா மறுபடியும் நீ அதே கடைத்தெருவுல பூக்கடை போட்டு.. அதே மாதிரி முதலாளியாய் மாறலாம்…என்ன சொல்றே?”
“ம்… சொல்லு கேட்கக் கூடியதாய் இருந்தா கேட்கலாம்” பட்டும் படாமல் பேசினாள் வள்ளியம்மா.
“உம் மவன் பிரகாசு இப்ப என்ன பண்ணிட்டிருக்கான்?” பங்கஜம் கேட்க,
“அதை எதுக்கு நீ கேட்கறே?”
“அட ஒரு நல்லதுக்குத்தான் கேட்கறேன்”
அந்தப் பங்கஜம் தன் வாழ்நாளில் நல்லதையே நினைக்காதவள், நல்லதையே செய்யாதவள் என்பதை நன்கு உணர்ந்திருந்த வள்ளியம்மா, “நீ விஷயத்தை மொதல்ல சொல்லு… அப்புறமா அவன் என்ன செஞ்சிட்டிருக்கான்ன்னு நான் சொல்றேன்” என்றாள்.
“அது… வந்து… நம்ம வேலாயுதம் கணவாய்ப்புதூர்ல இருக்கற அவரோட செங்கல் சூளைக்கு ஆள் வேணும்னு கேட்டிருந்தார்… அதான் உன் மகன் சும்மா இருந்தா அவனுக்கு சிபாரிசு பண்ணலாம்னு கேட்டேன்”
அதைக் கேட்ட வள்ளியம்மாவிற்கு உடம்பெல்லாம் எரிந்தது. சுற்று வட்டாரத்தில் உள்ள பத்து ஊர் மக்களும் அந்த செங்கல் சூளைக்கு வேலைக்குப் போவதென்றாலே பயந்து நடுங்குவார்கள். காரணம், அங்கு வேலைக்குச் செல்பவர்களை அந்த வேலாயுதம் ஒரு கொத்தடிமை போல்தான் நடத்துவார். ஒரு நிமிடம் கூட ஓய்வு கொடுக்காமல் கடுமையாக வேலை வாங்கி விட்டு, குறைந்த கூலியையே கொடுப்பாராம். பத்தே நிமிடம்தான் சாப்பாட்டுக்கு விடுவாராம், அந்த நேரத்திற்குள் வராவிட்டால் சாட்டையால் விளாசுவாராம். எதிர்த்துக் கேள்வி கேட்ட ஒன்றிரண்டு பேரை செங்கல் சூளையில் போட்டு எரித்து விட்டதாய்க் கூட ஊருக்குள் பேசிக் கொள்கிறார்கள். தன் செங்கல் சூளைக்கு வேலையாட்களே கிடைக்காத காரணத்தால் யாராவது ஒரு வேலையாளைக் கொண்டு வந்து சேர்த்து விட்டால் கூட அவர்களுக்கு கமிஷன் தருகிறாராம். அந்த வகையில் கமிஷன் பெறுவதற்காகவே தன் மகனை அந்த சிங்க குகைக்குள் கொண்டு போய்த் தள்ளி விடப் பார்க்கிறாள் அந்த பங்கஜம் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்ட வள்ளியம்மா,
“ஏன் பங்கஜம்… உனக்கு அந்த வேலாயுதத்தைப் பற்றித் தெரியுமா?… தெரியாதா?” நிதானமாய்க் கேட்டாள் வள்ளியம்மா.
“தெரியும்… தெரியும்!… வேலைன்னு வந்திட்டா… ஆள் ரொம்ப கண்டிப்பானவராம்!.. “காச்…மூச்”சுன்னு கத்திடுவாராம்!… மத்தபடி நல்ல மனுஷனாம்” என்றாள் பங்கஜம். கமிஷன் தொகை அவளை அவ்வாறு பேச வைத்தது.
“அப்படியா?… அப்ப அங்க வேலை பார்த்திட்டிருந்த கருணாகரன் என்கிற ஒரு ஆளை செங்கச் சூளையில் போட்டு எரிச்சிட்டதா சொல்றாங்களே?… அது என்ன பொய்யா?” கேட்டாள்.
“அய்யோ… மாபெரும் பொய்!… அது யாரோ அவருக்குப் போட்டியா இருக்கற செங்கல் சூளைக்காரங்க பரப்பி விட்ட வதந்தி”
தன்னுடைய அந்த அஸ்திரம் வெத்து வேட்டாகிப் போனதில் மனம் நொந்து போன பங்கஜம் அடுத்த அஸ்திரத்தைக் கையிலெடுத்தாள். “ஆமாம்… உன் மகன் பிரகாசு… யாரோ ஒரு பொண்ணு கூடச் சுத்திட்டிருக்கான்னு ஊர்ல பேசிக்கறாங்க… அது உனக்குத் தெரியுமா?”
நின்று தன் தலையிலிருந்த கூடையைக் கீழே இறக்கி வைத்து விட்டு, அந்த பங்கஜத்தை அருகில் அழைத்தாள் வள்ளியம்மா. தான் பயன்படுத்திய அந்த இரண்டாவது அஸ்திரம் வேலை செய்கிறது எனத் தப்பாகப் புரிந்து கொண்டு புன்னகையோடு வள்ளியம்மாவை நெருங்கி வந்தாள் பங்கஜம்.
“அம்மா அகிலாண்டீஸ்வரி… பிரம்மாண்ட நாயகி!… நீ என் மேலேயும்,. என் மகன் மேலேயும் நீ காட்டின அக்கறைக்கு ரொம்ப நன்றி… நீ கிளம்பிப் போறியா… இல்லை என் மகனை வரச் சொல்லி உன் கூடப் பேசச் சொல்லட்டுமா?” கோபமாய்க் கேட்டாள் வள்ளியம்மா.
“அடப்போ வள்ளியம்மா… உனக்கு நல்லது சொல்ல வந்தா என்னை நீ புரிஞ்சுக்காமப் பேசறே…” தன் வேலைத்தனம் அங்கு எடுபடாததால் வேக வேகமாக நடந்து வள்ளியம்மாவைக் கடந்து சென்றாள் பங்கஜம்.
போகிற போக்கில் தலையைத் திருப்பி, தலையில் கூடையோடு வந்து கொண்டிருந்த வள்ளியம்மாவைப் பார்த்து ஒரு அருவருப்பான அபிநயத்தைச் செய்த அந்த பங்கஜம் தன் எதிரில் வந்த வேகமாய் வந்து கொண்டிருந்த அந்த இரு சக்கர வாகனத்தைக் கடைசி விநாடியில்தான் பார்த்தாள்.
“ட…மா…ர்” என்ற ஓசையோடு பைக் அவள் மீது மோத, தூக்கியெறியப்பட்டாள் பங்கஜம்.
வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், சிறிது தூரம் சென்று பைக்கோடு கவிழ்ந்த அந்த இளைஞன், மெல்ல எழுந்து பார்த்தான்.
பதறிக் கொண்டு ஓடி வந்த கூட்டம் பங்கஜத்தைச் சுற்றி வளைக்க, அந்தக் களேபரத்தில் தன்னை யாரும் கவனிக்கவில்லை, என்பதைப் புரிந்து கொண்ட அந்த இளைஞன் அவசரமாய் பைக்கை ஸ்டார்ட் செய்து பறந்தான்.
இயல்பாகவே இரக்க குணம் கொண்ட வள்ளியம்மா அந்தப் பங்கஜத்தைக் காப்பாற்ற கூடையோடு ஓடினாள்.
ஆனால், அங்கே கூடியிருந்த கும்பலைத் தள்ளிக் கொண்டு அவளால் பங்கஜத்தின் அருகே போக முடியாததால், “சரி… நான் இல்லாவிட்டாலும் அவளைக் காப்பாற்ற… அவளை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போக… இங்கே இத்தனை பேர் இருக்கிறார்களே… அது போதும்” என்று நினைத்துக் கொண்டு தன் வழியே அவள் நடந்தாள்.
(- தொடரும்…)