“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 13 (நாவல்) | முகில் தினகரன்

 “கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 13 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 13

 “நடப்பதெல்லாம் நன்மைக்கே, என்று நினைத்து நாம் வாழப் பழகிவிட்டால், மகிழ்ச்சியை நாம் தேடிச் செல்ல வேண்டியதில்லை, அதுவே நம்மைத் தேடி வரும்” என்னும் ஆன்றோர் மொழியை நிரூபிப்பது போல் அந்த நிகழ்ச்சி வள்ளியம்மாவின் வாழ்க்கையில் நிகழ்ந்தது.

சுந்தரியின் வீட்டிலிருந்து திரும்பிய வள்ளியம்மாவை கோபமாய் வரவேற்றான் அவள் மகன் பிரகாஷ்.  “என்னம்மா எங்கே போயிருந்தே?… நான் மார்க்கெட் வாசலுக்கு வந்து பார்த்தேன் நீ வழக்கமா உட்கார்ந்திருக்கற இடத்துல உன்னைக் காணோம்!… நான் அங்கிருந்தவங்க கிட்டே விசாரிச்சப்ப அவங்க இன்னிக்கு காலையிலிருந்தே நீ வியாபாரத்துக்கு வரலே”ன்னு சொன்னாங்க!… அவங்க சொன்ன மாதிரியே உன் கூடைல மொத்தக் கொய்யாப்பழங்களும் அப்படியே இருக்கு!… ஏன்?.. எங்கே போனே?”

 “அதுவா…”என்று இழுத்தவள், “டேய் பிரகாசு… செய்த புண்ணியங்கள் பலன் தராமல் போகாது… அதே மாதிரி செய்த பாவங்களும் தண்டனை தராமல் போகாது” என்று சொல்ல,

 “இப்ப எதுக்கு இந்தத் தத்துவம்?…” எரிச்சலாய்க் கேட்டான்.

 “நாம செஞ்ச புண்ணியங்கள் நமக்குப் பலன் தராமல் போனாலும்… அந்த சுந்தரியும்… பங்கஜமும் செய்த பாவங்கள் அவங்களுக்கு தண்டனையைக் குடுத்திடுச்சு…”என்றாள் வள்ளியம்மா ஆயாசமாய்.

 “என்னம்மா சொல்றே?” பிரகாஷ் கேட்க,

 “இன்னிக்குக் காலைல கொய்யாத் தோப்பிற்குப் போய் கூடை நிறைய கொய்யாப்பழங்களை அள்ளிக்கிட்டு வரும் போது… ஒரு போலீஸ்காரர் பைக்ல வந்து சுந்தரியைப் பற்றி விசாரித்தார்” என்று ஆரம்பித்து, சுந்தரியை அவள் வீட்டில் விட்டு விட்டு வந்தது வரை அப்படியே ஒப்பித்தாள் மகனிடம்.

“பட…பட”வென்று கை தட்டியவன், “இப்பத்தாம்மா எனக்கு சந்தோஷமா இருக்கு… கடைவீதில கடை ஓனராயிருந்த உன்னை மார்க்கெட்டுக்கு வெளியே மண் தரைல உட்கார்ந்து கொய்யாப் பழம் விற்க வெச்சா… அது மட்டுமா என் காதலி என்னை விட்டுப் போவதற்கு மூல காரணமே அவள்தான்!… அதான் ஆண்டவன் தர வேண்டிய நேரத்துல தர வேண்டிய தண்டனையை கரெக்டாக் குடுத்திட்டான்” என்றான்.

“அவ கதைதான் அப்படின்னா… இந்தப் பங்கஜத்தோட கதை அதை விட சோகம்” என்று சொல்லி பங்கஜத்திற்கு நடந்ததையும் அட்சரம் பிசகாமல் சொன்னாள்.

“ம்மா… என்னம்மா இது?… காலம் எப்படி இப்படி திடீர்னு மாறிச்சு?… எப்பவுமே கெட்டவங்களுக்குத்தான் அது நல்லது செய்யும்!… நல்லவங்களுக்கு எப்பவுமே கெட்டதைத்தான் செய்யும்… இப்ப திடீர்னு எல்லாமே உல்டாவா நடக்குதே… ஏன்?”

அவன் கேள்விக்கு வெறும் புன்னகையை மட்டுமே பதிலாய்த் தந்தாள் வள்ளியம்மா.

“இனிமேல் அந்த சுந்தரி பூக்கடை நடத்தவே முடியாது!… எதைச் சொல்லி உன் வியாபாரத்தைக் கெடுத்தாளோ… அதே காரணம் இப்ப அவளுக்கும் பொருந்தி வந்திடுச்சு… பார்க்கலாம் என்னதான் பண்றாள்ன்னு” பிரகாஷ் சொல்ல,

 “இல்லைடா… அவளை அந்த வியாபாரத்தையே தொடர்ந்து நடத்தச் சொல்லிட்டேன்”

 “எப்படி… அவ கிட்ட யாருமே பூ வாங்க வரமாட்டாங்களே?”

 “வருவாங்க!… ஏன்னா.. அவ புருஷன் செத்துப் போன விஷயம்… எனக்கும் அவளுக்கும் மட்டும்தான் தெரியும்!… அதை நாங்க ரெண்டு பேருமே வெளிய சொல்லாம மறைச்சிடலாம்னு முடிவு பண்ணிட்டோம்!… அதனால அவ வியாபாரம் எப்பவும் போலவே நடக்கும்” என்றாள் வள்ளியம்மா.

தன் தாயின் அந்தச் செய்கை பிரகாஷ் மனதில் ஒரு கோபத்தை ஏற்படுத்தினாலும், அதன் பின் புலத்தில் மறைந்திருக்கும் தன் தாயின் உயர்ந்த குணம் அவனுக்குப் புரிய வர, “அம்மா… நீ கிரேட்ம்மா” என்றான்.

“மகனே… வாழ்க்கையை வெறுக்க ஆயிரம் காரணங்கள் இருந்தாலும்… வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரே காரணமாய் இருப்பது “நாளை எல்லாம் சரியாகிவிடும்” என்கிற நம்பிக்கைதான்!… அந்த நம்பிக்கையில்தான் நான் பொறுமையாய் இருந்தேன்!… இனி எனக்கு எல்லாமே நல்லதே நடக்கும்”

அவள் சொல்லி வாய் மூடவில்லை, வாசலில் ஏதோ வாகனம் வந்து நிற்கும் ஓசை கேட்டது.

 “என்னடா… நம்ம வீட்டு வாசல்ல ஏதோ வண்டி வந்து நிற்கிற மாதிரித் தெரியுது… போய்ப் பாரு” என்றாள் மகனிடம்.

 “ஆமாம்… நம்ம வீட்டு வாசல்ல பி.எம்.டபிள்யூ.காரா வந்து நிற்கும்?… கார்ப்பரேஷன் குப்பை லாரிதான் வந்து நிற்கும்” என்று சொல்லிக் கொண்டே வாசலுக்குச் சென்றவன் அதிர்ந்தான்.

உண்மையிலேயே அங்கே ஒரு பி.எம்.டபிள்யூ.கார் நின்று கொண்டிருந்தது.  அதிலிருந்து இறங்கிய ஒரு சஃபாரி சூட் மனிதர், ஒரு வழிப்போக்கனிடம் யாரையோ விசாரித்துக் கொண்டிருந்தார்.

தன் காதுகளைக் கூர்மையாக்கி அதைக் கேட்ட பிரகாஷின் முகத்தில் குழப்பம்.

“இங்க… வள்ளியம்மா… வீடு?”

(- தொடரும்…)

முந்தையபகுதி – 12 | அடுத்தபகுதி – 14

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...