“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 14 (நாவல்) | முகில் தினகரன்

 “கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 14 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 14

“யாரிந்த ஆளு?… நம்ம அம்மா பேரைச் சொல்லிக் கேட்கறாரே?” வேகமாய் வீட்டிற்குள் வந்து, “ம்மா… உன்னைக் கேட்டுத்தான் யாரோ வந்திருக்காங்க… அதுவும் பி.எம்.டபிள்யூ.கார்ல” என்றான்.

“என்னைக் கேட்டு… அதுவும் கார்ல வந்திருக்காங்களா?” குழப்பம் மேலிட அவளும் எழுந்து வாசலுக்கு வந்தாள்.

காரிலிருந்து இறங்கி இவர்கள் வீட்டை நோக்கி நடந்து வந்த அந்த மனிதருக்கு கிட்டத்தட்ட ஐம்பத்தியெட்டு வயதிருக்கும்.  சாம்பல் நிற சஃபாரி ஆடை, தங்க பிரேமிட்ட மூக்குக் கண்ணாடி, கருப்பு வெள்ளையில் மின்னும் தலை முடி, பள…பளக்கும் கருப்பு ஷூ.

அந்த மனிதர் கொஞ்சம் கொஞ்சமாய் நெருங்கி வர வர, வள்ளியம்மாவின் முகத்தில் குழப்பம் கொஞ்சம் கொஞ்சமாய் குழப்பம் குறைய ஆரம்பித்தது.

“இவர்… இவர்… என்னைத் தொட்டுத் தாலி கட்டிய… எனக்கு ஒரு ஆண் மகனைத் தந்த… என் காதல் கணவர்” உள்ளம் உற்சாகத்தில் துள்ளியது. இதயம் இன்ப ஊஞ்சல் ஆடியது.

ஆனால், மனதின் இன்னொரு புறமிருந்து வேறொரு குரல் ஒலித்தது.

“இவன் மோசமானவன், பெண் பித்தன், யாரோ ஒரு நாட்டியக்காரியின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு கைக்குழந்தையோடு உன்னைத் தவிக்க விட்டு விட்டுச் சென்றவன்”

அதற்குள் அருகில் வந்து வள்ளியம்மாவின் முகத்தை வெறித்துப் பார்த்தபடி உறைந்து போய் நின்றார்.

 “சார்… யார் சார் நீங்க?…” பிரகாஷ் கேட்டான்.

ஆனால், அவன் குரல் அவர் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை.  அவர் பார்வை இன்னமும் வள்ளியம்மாவின் மீதே இறுகப் பதிந்திருந்தது.

பிரகாஷுக்குள் ஆத்திரம் மூண்டது.  “யார் இந்த ஆளு…? என் முன்னாடியே அம்மாவை இப்படி நோட்டம் போடுறான்?”

“யோவ்…. கேட்கறது காதுல விழலையா?” கத்தினான்.

சட்டென்று சுயநினைவிற்கு வந்த அந்த நபர், “வள்ளீ… எப்படிம்மா இருக்கே?” என்று கணிவான குரலில், அன்பொழுகக் கேட்க,

இருபது வருடங்களுக்கு முன்னால் அவள் இதயத்தில் இன்பங்களைக் குவித்த அந்தக் குரலைக் கேட்டு மெய் மறந்து போன வள்ளியம்மா, “நான் நல்லாயிருக்கேன்… நீங்க… எப்படி இருக்கீங்க?” அதே போல் கணிவான குரலில் கேட்டாள்.

குழம்பிப் போன பிரகாஷ் தாயை நெருங்கி வந்து, “ம்மா… இவர் யாரும்மா?” கேட்டான்.

 “இவர்தாண்டா உங்கப்பா”

திரும்பி அந்த மனிதரை ஏற இறங்கப் பார்த்த பிரகாஷ், “என்னம்மா சொல்றே?… இவர்தான் அப்பாவா?” நம்ப முடியாமல் கேட்டான்.

அதற்குள் தெருவில் பலர் கூடி அந்த பி.எம்.டபிள்யூ. காரையும், அதிலிருந்து இறங்கிய மனிதர் வள்ளியம்மா வீட்டு வாசலில் நிற்பதையும் கண் கொட்டாமல் பார்த்தனர்.

“என்னைய வீட்டுக்குள்ளார கூப்பிட மாட்டியா வள்ளீ?” அந்த மனிதர் கேட்க,

“வாங்க!” வழி விட்டு ஒதுங்கி நின்றாள் வள்ளியம்மா.

உள்ளே நுழைந்த அந்த மனிதர், சட்டென்று கண் கலங்கி, வள்ளியம்மாவின் கைகளைப் பற்றிக் கொண்டு, “என்னைய மன்னிச்சிடு வள்ளி” என்று தழுதழுக்க,

விரக்தியாய் ஒரு புன்னகையைச் சிந்திய வள்ளியம்மா, “நான் மன்னிச்சிடுவேன்… அந்த ஆண்டவன் உங்களை மன்னிப்பானா?ன்னு தெரியலை” என்று இறுக்க முகத்தோடு சொன்னாள்.

“ஏன் வள்ளி இப்படிப் பேசறே?…”

“பின்னே?… மூணு வயசுக் குழந்தையோட என்னைத் தவிக்க விட்டுட்டுப் போனீங்க… இப்ப இருபத்திரெண்டு வருஷம் கழிச்சு வந்து நிக்கறீங்க… மன்னிப்புக் கேட்கறீங்க… எனக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியலை”

“வள்ளி… இப்ப ஒரு உண்மையை நான் உன் கிட்டே சொல்றேன்… நான் அவ கூடக் கிளம்பிப் போன முதல் நாளே அவளோட சுய ரூபத்தை நான் தெரிஞ்சுக்கிட்டேன்!… தன் நாட்டியத் திறமையையும்… மேனியழகையும் காட்டி பணக்கார ஆண்களை வளைச்சுப் போட்டு… அடியாட்களை வெச்சு மிரட்டி… அவங்க சொத்துக்களை கபளீகரம் பண்றதுதான் அவ வேலையே!… என்னையும் மிரட்டிக் கேட்டா… சொத்துக்களை எழுதித் தரச் சொல்லி… கடைசில என் கிட்டே பெரிசா ஏதொரு சொத்தும் இல்லைன்னு தெரிஞ்சதும்… அதே அடியாட்களைக் கொண்டு என்னை அடிச்சுத் துரத்திட்டா…”

 “நிஜமாகவா?… அப்படின்னா நேரா நீங்க இங்கல்ல வந்திருக்கணும்?… ஆனா இருபத்திரெண்டு வருஷமா வரலையே?”

 “நினைச்சேன்… நேரா இங்கதான் வரணும்னு நினைச்சேன்!… ஆனா அந்தச் சூழ்நிலைல உன் முகத்துல முழிக்கவே எனக்கு அவமானமா இருந்திச்சு!… நான் அந்த நாட்டியக்காரியோட ஓடிப் போன விஷயம் எப்படியும் ஊருக்கே தெரிஞ்சிருக்கும்… அப்படியிருக்கும் போது அடி வாங்கி…. ரத்தக் காயங்களோட ஊருக்குள்ளார நான் வந்தா யார் என்னை மதிப்பாங்க?… ஒரு புழுவைப் பார்ப்பது போல் கேவலமாக அல்ல பார்ப்பாங்க?… அப்பத்தான் முடிவெடுத்தேன்… “இந்த நிலைமைல ஊருக்குப் போகக் கூடாது!… எங்காவது போய் நல்லா சம்பாதிச்சு… பெரிய பணக்காரனாகி அப்புறம்தான் இந்த ஊருக்குள் வரணும்”னு ஒரு முடிவெடுத்தேன்!… திருச்சியிலிருந்த என்னோட பால்ய சிநேகிதனைத் தேடிப் போய் நடந்ததைச் சொல்லியழுதேன்!…”

****

“ம்ம்ம்… உன்னோட நிலைமையை நெனச்சா ரொம்பப் பரிதாபமாய்த்தான் இருக்கு குணசீலா.. சொல்லு என்கிட்டே என்ன மாதிரியான உதவியை எதிர்பார்க்கிறே?… சொல்லு… என்னால முடிஞ்சதைச் செய்யறேன்” என்றான் திருச்சி நண்பன் ஸ்ரீதர்.

“வந்து… நான் எங்காவது கண் காணாத இடத்துக்குப் போய்… நிம்மதியா வாழணும் நினைக்கறேன்… ஸ்ரீதர்.”

ஒரு நெடிய யோசிப்பிற்குப் பின், “வந்து… நான் இங்க… ரெடிமேட் ஆடைகள் தயாரிச்சு… அதுகளை சிங்கப்பூர்க்கு அனுப்பி அங்க வெச்சு வியாபாரம் பண்ணிட்டிருக்கேன்!… சிங்கப்பூர்ல எனக்கு ஒரு கடை இருக்கு!…. அந்தக் கடைக்கு ஒரு நம்பகமான ஆள் வேணும்… உன்னால் சிங்கப்பூர் போய் அந்தக் கடையை முழுமையா நிர்வகிக்க முடியுமா?… சொல்லு”

முகம் மலர்ந்து போன குணசீலன், “நிச்சயம் முடியும்!…” மகிழ்ச்சியோடு சொன்னான்.

“ஓ.கே… உன் கிட்டே பாஸ்போர்ட் இருக்கா?” ஸ்ரீதர் கேட்க,

உதட்டைப் பிதுக்கினான் குணசீலன்.

“சரி விடு…. என்னோட செல்வாக்கை வெச்சு நான் ஏற்பாடு பண்ணித்தர்றேன்… இன்னும் ஒரு வாரத்துல கிளம்ப நீ தயாராயிரு!” என்ற ஸ்ரீதர், “ஆமாம்… வீட்டுல உன் மனைவிக்கு எந்தத் தகவலும் தர வேண்டாமா?” கேட்டான்.

“வேண்டவே வேண்டாம்” அடியோடு மறுத்தான் குணசீலன்.

****

“அந்த ஸ்ரீதர் குடுத்த ஆதரவிலும், தைரியத்திலும் நானும் சிங்கப்பூருக்கு கப்பலேறினேன்!… ஒரு வருஷம் ரெண்டு வருஷமல்ல… கிட்டத்தட்ட இருபது வருஷம் கடுமையா உழைச்சேன்!… அதன் காரணமா சிங்கப்பூரில் அவனுடைய ரெடிமேட் ஆடைகளுக்கு பயங்கர டிமாண்ட் உருவாச்சு!… ஒரு கடை ரெண்டு கடையாச்சு… நாலு கடையாச்சு… இப்ப அங்க மொத்தம் இருபது கடைகள் இருக்கு!… எந்த ஏரியாவுக்குப் போனாலும் அங்கே “வள்ளீஸ் ரெடிமேட்ஸ்” கடைகள் கண்ணில் படும்” என்று குணசீலன் சொல்லிக் கொண்டே போக,

இடையில் புகுந்தான் பிரகாஷ், “என்னது வள்ளீஸ் ரெடிமேட்ஸா?… அதெப்படி அவரோட கடைக்கு அம்மா பேரு?”

 பிரகாஷை அருகில் அழைத்து அவன் முதுகில் தட்டிக் கொடுத்த குணசீலன், “வியாபாரம் பெருகி… அளவுக்கதிகமா பணம் கொட்டத் துவங்கிய நேரத்தில்தான் அது நடந்தது…” என்றார்.

 “அதுன்னா… எது?”

 “எங்களுடைய கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சரக்குகளைச் சுமந்து வந்த கப்பல் கடலில் மூழ்கி விட, ஒரே நாளில் உச்சத்திலிருந்தவர் பாதாளத்தில் விழுந்தார்!… அந்த அதிர்ச்சியிலேயே ஹார்ட் அட்டாக் வந்து அந்த ஸ்ரீதரும் செத்துப் போனார்!…”

 “அடப் பாவமே?” வள்ளியம்மாவும் பிரகாஷும் ஒரே நேரத்தில் அங்கலாய்க்க,

 அவர் குடும்பம் என்பது அவருடைய மனைவி மட்டுமே… அவர்களுக்கு குழந்தைகள் கிடையாது… அதனால் கணவர் ஹார்ட் அட்டாக்கில் இறந்த சோகத்தைத் தாங்க முடியாமல் மனைவியும் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க!… கடைசில கம்பெனியின் அட்மினிஸ்ட்ரேஷன் மேனேஜராய் இருந்த நான்… கம்பெனி சொத்துக்களையும், அந்த சிங்கப்பூர்க் கடைகளையும் விற்று… கப்பல் கவிழ்ந்ததால் ஏற்பட்ட நஷ்டங்களை சரி செய்து விட்டு, இப்பத்தான் இந்தியா திரும்பியிருக்கேன்!… இங்கே திருச்சியில் இருக்கும் ரெடிமேட் ஆடைகள் தயாரிப்புக் கம்பெனி மட்டும் ஓடாமல் அப்படியே கிடக்கு!… அதையும் டிஸ்போஸ் பண்ணிட்டு, அந்தப் பணத்தை இங்க கொண்டு வந்து… நம்ம ஊரிலேயே ஒரு ரெடிமேட் ஆடைகள் தயாரிப்புக் கம்பெனியைத் துவக்கி… நாம ஊர்க்காரங்க நூறு பேருக்கு வேலை குடுக்கலாம்னு நினைக்கறேன்”

எங்கே இருந்தாலும் தன் கணவர் சந்தோஷமாக இருந்தால் போதும், அவருக்கு யாருடன் இருந்தால் மகிழ்ச்சியோ அவங்களோடவே இருந்திட்டுப் போகட்டும் என்று விட்டுக் கொடுத்து, இத்தனை வருடங்கள் வாழ்ந்து வந்த வள்ளியம்மாவுக்கு தன் கணவர் அந்தக் காலகட்டங்களில் எவ்வளவு இன்னல்களைச் சந்தித்து விட்டு வந்திருக்கிறார், என்பதைக் கேட்கும் போது அவர் மீது கோபத்திற்கு பதிலாய் பரிதாபமே ஏற்பட்டது.

பிரகாஷ் மனதிலும் தந்தை மீது ஒரு இரக்கமே தோன்றியது.  மெல்ல அவரை நெருங்கி அவரை நேருக்கு நேர் பார்த்து, “இனிமேல் எங்க கூடவே இருங்கப்பா” என்று கரகரத்த குரலில் கேட்க,

நெகிழ்ந்து போனார் குணசீலன்.  “இல்லப்பா… இனிமேல் உங்களை விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன்பா…” என்றார்.

 இருபது… இருபத்தி ரெண்டு வருடங்களாக உற்சாகத்தைத் தொலைத்து விட்டு, இருளில் இருந்த அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சி ஒளி வீசத் துவங்கியது.

(- தொடரும்…)

முந்தையபகுதி – 13 | அடுத்தபகுதி – 15

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...