“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 15 (நாவல்) | முகில் தினகரன்

 “கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 15 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 15

மூன்று மாதங்களுக்குப் பிறகு,

“வள்ளீஸ் ரெடிமேட்ஸ்” ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் திறப்பு விழா உள்ளூர் ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவர் அவர்களால் துவக்கி வைக்கப்பட, ஏற்கனவே குணசீலனுக்கு பழக்கமாயிருந்த சிங்கப்பூர் வாடிக்கையாளர்களும் விழாவிற்கு வந்திருந்தனர்.

“தூக்கி வீசப்பட்ட இடத்தில் மரமாக வளர்ந்திடு, தூக்கி வீசியவர்கள் அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு” என்பதை மெய்யாக்கும் விதமாய் நான்கு மாதங்களுக்கு முன்னால் மார்க்கெட் வாசலில் கூடையில் வைத்து கொய்யாப் பழங்களை விற்றுக் கொண்டிருந்த வள்ளியம்மா இன்று பெரிய நிறுவனத்தில் முதலாளியாகி, பலரின் பாராட்டுக்கும், சிலரின் பொறாமைக்கும் ஆளாகினாள்.

குறித்த தேதியில் பைக் டியூ கூடக் கட்ட முடியாமல், ஃபைனான்ஸ்காரன் வந்து பைக்கை தூக்கிப் போகும் நிலையிலிருந்த பிரகாஷ், தனது டிரான்ஸ்போர்ட் வேலையை விட்டு விட்டு தந்தையோடு ரெடிமேட் பிசினஸில் இணைந்தான்.

தனது சிங்கப்பூர் வியாபார நுணுக்கங்களையும், அனுபவங்களையும் தன் மகனும் பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் மகனையும் தன்னோடு அடிக்கடி சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று தன் வியாபார நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தினார் குணசீலன்.

அவனும் எல்லா வாடிக்கையாளர்களோடும் சிறப்பாக ஒத்துழைத்து, சாதூர்யமாகவும், நாகரீகமாகவும் பேசக் கற்றுக் கொண்டான். ஒவ்வொரு முறையும், எந்த வியாபர விஷயத்திற்கும் மகனைத் தனியாக அனுப்பாமல் தானும் உடன் சென்று கொண்டிருந்த குணசீலன் முதல் முறையாக ஒரு முக்கியமான வியாபார ஒப்பந்தத்தில் கையெழுத்திட தன் மகனை அனுப்பினார்.

ஆனால், அந்தச் செயலே தன் மகனின் வாழ்க்கையையே புரட்டிப் போடும் ஒரு நிகழ்வாக மாறும் என்பது அவருக்கு அப்போது தெரியவில்லை.

“ம்ம்ம்… பிரகாஷ்…. வர்ற வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் கஸ்டமர் ஒருத்தர் பிசினஸ் டை-அப் அக்ரிமெண்ட் கையெழுத்திட சென்னை வர்றார்!…. இன்னும் கொஞ்ச நேரத்துல அவர் எந்த நேரத்தில்… எந்த விமானத்தில் வருவார்?… எந்த ஹோட்டலில் தங்குவார்?… போன்ற தகவல்கள் வரும்.,.. அது வந்ததும் அதை உனக்கு ஃபார்வேர்டு பண்றேன்… அதுக்குத் தகுந்த மாதிரி நீ புறப்பட ரெடியாய்க்க…!… ஆபீஸ்ல ரிசிப்ஷனிஸ்ட் கிட்டே சொல்லி ஃப்ளைட் டிக்கெட் புக் பண்ணிக்க” என்றார் குணசீலன்.

“டாடி… கையெழுத்துப் போட நீங்களும் வர்றீங்கதானே?” சந்தேகமாய்க் கேட்டான்.

 “இல்லப்பா… போதும் இதுவரைக்கும் நான் கையெழுத்துப் போட்டது!… இனிமேல் எல்லா அக்ரிமெண்டிலும் நீயே கையெழுத்துப் போடு!…” என்று தந்தை சொல்ல, அவரை நெகிழ்ச்சியோடு பார்த்தான் பிரகாஷ்.

 “என்னப்பா?… ஏன் என்னைய இப்படிப் பார்க்கறே?” கேட்டார்.

 “என் மேல் நீங்க வெச்சிருக்கற அந்த நம்பிக்கை… என்னை மிரள வைக்குது டாடி”

 “ஹா… ஹா… ஹா…”  எனச் சிரித்தவர், “இருபத்திரெண்டு வருஷமா உங்கம்மாவைத் தனி மரமாய் வாழ வெச்சிட்டேன்!… உனக்கு வியாபாரத்தைக் கற்றுக் கொடுக்கத்தான் இத்தனை நாள் நான் கூட இருந்தேன்!… ஐ திங்க்… நீ இப்ப நல்லா தேறிட்டே… அதனாலதான் மொத்தப் பொறுப்பையும் உன் கிட்டே விட்டுட்டு… நான் உங்கம்மா கூட சந்தோஷமா வாழப் போறேன்…” என்றார்.

அவரை அன்போடு பார்த்த பிரகாஷ், “உண்மை டாடி… அம்மா ரொம்பக் கஷ்டப்பட்டுட்டாங்க!…. இனி வரும் காலங்களிலாவது அவங்க சந்தோஷமா இருக்கட்டும்”

 “டோண்ட் வொரி… அவங்களை நான் பார்த்துக்கறேன்… பிசினஸை நீ பார்த்துக்க” என்றார் குணசீலன்.

 “அப்புறம் டாடி… எனக்கு ஃப்ளைட் டிக்கெட் வேண்டாம்… நான் டிரெயினிலோ… பஸ்ஸிலோ போய்க்கறேன்!” என்றான் பிரகாஷ்.

 “வொய்?” புருவங்களை நெரித்துக் கொண்டு கேட்டார் குணசீலன்.

 “இப்ப சீஸன் டைம்!… ஃப்ளைட் டிக்கெட் அநியாய ரேட்டாயிருக்கு!… ஏதாவது அர்ஜெண்ட்ன்னா… நாம ரெண்டு பேரும் போற மாதிரி இருந்திச்சின்னா… ஃப்ளைட்ல போகலாம்!… இது வெள்ளிக்கிழமை புரோகிராம்தானே?… நானும் தனியாத்தானே போறேன்?… நிதானமா பஸ்ஸில் கூடப் போகலாமே!… செலவைக் குறைக்கலாம்!”

“ஆஹா… இப்பவே நிர்வாகம் பண்ண ஆரம்பிச்சிட்டே போலிருக்கு?… செலவைப் பற்றியெல்லாம் பேசறே?… வெரி குட்!… வெரி குட்!… நீ உன் விருப்பப்படியே போய்க்கோ!… ரிசப்ஷனிஸ்ட் கிட்டே சொல்லி அட்வான்ஸா டிக்கெட் புக் பண்ணிக்கோ” என்றார் குணசீலன்.

பாவம் அவருக்கெப்படித் தெரியும் விதி வலியது என்று?

****

வெள்ளிக் கிழமை இரவு.

பத்தரை மணிவாக்கில் காந்திபுரம் ஆம்னி பஸ் ஸ்டாண்டிற்கு காரில் வந்திறங்கிய பிரகாஷ், காரையும் டிரைவரையும் அனுப்பி விட்டு, நேரே அந்த டிராவல்ஸ் ஆபீஸிற்குச் சென்று அந்த டிக்கெட்டைக் காண்பித்து விசாரித்தான்.

“இங்கியே வெய்ட் பண்ணுங்க சார்… பத்து நிமிஷத்துல பஸ் வந்திடும்” என்ற அந்த நபர், “என்ன சார் பி.எம்.டபிள்யூ.ல வந்து இறங்கறீங்க… அதிலேயே சென்னை போகலாமே சார்” என்று சொல்ல,

“அது மொதலாளி காருப்பா…. ஏதோ பஸ் ஸ்டாண்டு வரைக்காவது குடுத்தாரே… அதுவே பெரிய விஷயம்” என்றான் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு.

தோளில் இருந்த லெதர் பேக்கை மடியில் வைத்துக் கொண்டு அங்கிருந்த சேரில் அமர்ந்தான்.

சரியாக பத்தே நிமிடத்தில் வந்து சேர்ந்தது அந்த பஸ்.  வேகமாய்ச் சென்று உள்ளே புகுந்து, தன் இருக்கையைத் தேடிப் பிடித்து அமர்ந்தான்.  அது ஸ்லீப்பர் கோச் ஆனதால் காலை நீட்டிக் கொண்டு, மொபைலை எடுத்து ஹெட்போனைக் காதில் செருகிக் கொண்டு சாய்ந்து படுத்தான்.

“சாலை ஓரம் சோலை ஒன்று ஆடும்… சங்கீதம் பாடும் இளையராஜாவின் இசையில் மயங்கிக் கண்களை மூடினான்.

பஸ் கிளம்பியது கூடத் தெரியாமல் இசை வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தவன், சிறிது நேரத்தில் உறங்கியும் போனான்.

“சார்… சார்” யாரோ உலுக்க, “விலுக்”கென்று கண் விழித்தான் பிரகாஷ்.

“சார்… எங்கே இறங்கணும்?” பஸ்ஸின் நடத்துனர் கேட்க, “கோயம்பேடு போகுமல்ல?” கேட்டான்.

“போகும்… போகும்” என்று இங்கே சொல்லிக் கொண்டே, பின்னால் திரும்பி, “போலாம் ரெய்ட்” என்று கத்தினான்.

*****

     கோயம்பேட்டில் பஸ்ஸை விட்டு இறங்கியதும் தந்தை கொடுத்த அந்த சிங்கப்பூர் கஸ்டமர் எண்ணுக்கு கால் செய்தான் பிரகாஷ்.

      “குட் மார்னிங் சார்!… நான் பிரகாஷ்… மிஸ்டர் குணசீலன் ஸன்!…”

      “குட் மார்னிங்!… குட் மார்னிங்!… மிஸ்டர்.தேவராஜ் குளிச்சிட்டிருக்கார்!. நான் ராஜன்… மிஸ்டர் தேவராஜோட லீகல் அட்வைஸர்!…” என்றது எதிர் முனை ஆண் குரல்.

      “நான் இப்பத்தான் சென்னை ரீச் ஆனேன்!… நீங்க எந்த ஹோட்டல்ல தங்கியிருக்கீங்க?” பிரகாஷ் கேட்டான்.

      “ஹோட்டல் பிருந்தா!”

 “ஓ.கே. பிசினஸ் ஒப்பந்தம் குறித்த நம்ம டிஷ்கஸன் எங்கே?… எப்போ?”

 “பை லக் வீ ஆர் ஹேவிங் ஒன் செமினார் ஹால் ஹியர்!… ஸோ… இந்த  செமினார் ஹாலிலேயே நாம நம்ம டிஷ்கஸனையும்…. ஒப்பந்த டாகுமெண்ட்ல கையெழுத்துப் போடுற வேலையையும்  வெச்சுக்கலாம்” என்று அந்த லீகல் அட்வைஸர் சொல்ல,

      “ஓ.கே…!…ஓ.கே!… நான் எந்த டைமுக்கு அங்கே வரணும்?” பிரகாஷ் கேட்டான்,

      “மதியம் ரெண்டு மணிக்கு…” என்ற அந்த ராஜன், “ஆமாம்… உங்க டாடி உங்க கூட வந்திருக்காரா?” என்று கேட்க,

     “இல்லை… நான் மட்டும்தான் வந்திருக்கேன்!”

      “அக்ரிமெண்ட்ஸ்ல கையெழுத்து…?” ராஜன் இழுக்க,

      “நான்தான் போடப் போறேன்!… இனிமேல் அப்பா ரெஸ்ட் எடுப்பார்… நான்தான் ஃபீல்டுல இருப்பேன்” என்றான் பிரகாஷ்.

      “அப்படியா?… ஒன் மினிட் லைன்ல இருங்க சார்” என்ற அந்த லீகல் அட்வைஸர், வேறு யாருடனோ சன்னக் குரலில் பேசி விட்டு, “ம்ம்ம் மிஸ்டர் பிரகாஷ்… ரெண்டு மணிக்கு வேண்டாம்… நீங்க ஒரு அஞ்சு மணிக்கு இந்த ஹோட்டல் பிருந்தா வேண்டாம்… நீலாங்கரை ரோட்டுல எங்க எம்.டி.க்கு சொந்தமான ஒரு ரிசார்ட் இருக்கு அங்க வந்திடுங்க… அங்க வெச்சு முடிச்சுக்கலாம்” என்றார்.

      “ஏன்?… இப்பத்தான் ரெண்டு மணி சொன்னீங்க… அதுக்குள்ளார நாலு மணிங்கறீங்க…! அதே மாதிரி ஹோட்டல் பிருந்தாவுல செமினார் ஹால் இருக்கு இங்கியே வெச்சுக்கலாம்!னீங்க… இப்ப திடீர்னு ரிசார்ட்டுக்கறீங்க… என்னாச்சு?… என்ன பிரச்சினை உங்களுக்கு?”

     உடனே பதிலளிக்க முடியாத எதிர்முனை அங்கு யாரிடமோ பேசி விட்டு, “அது.. வந்து… அக்ரிமெண்ட் டாகுமெண்ட்ஸ்ல கொஞ்சம் கரெக்‌ஷன் பண்ண வேண்டியிருக்கு… அதுவுமில்லாம இந்த ஹோட்டல் பிருந்தா ரொம்ப கலீஜா இருக்கு… அதான்…” என்று அசட்டுச் சிரிப்புடன் சொல்ல,

     பிரகாஷின் மனதில் ஒரு சந்தேக வித்து விழுந்தது.

      “ஓ.கே.” என்று சொல்லி விட்டு இணைப்பிலிருந்து வெளியேறிய பிரகாஷ் யோசித்தான்.  “இந்த ஆளோட பேச்சில் ஏதோவொரு கள்ளத்தனம் தெரியுது… சம் திங் ராங்!… நான் முதன்முதலா கையெழுத்துப் போடுற இந்த ஒப்பத்தத்துல ஏதாச்சும் ஃப்ராடு வேலை பண்ணி என்னை சிக்கல்ல சிக்கி விட்டுட்டானுகன்னா… அப்பாவுக்கு என் மேலே இருக்கற நம்பிக்கையெல்லாம் மொத்தமா ஸ்பாயில் ஆயிடும்… கொஞ்சம் கேர்ஃபுல்லாவே இந்த விஷயத்தை டீல் பண்ணனும்!… என் கூட யாராவது இருந்தா கொஞ்சம் பெட்டராயிருக்கும்… யாரைக் கூப்பிடலாம்?” யோசித்தான்.

     சட்டென்று அவன் மூளைக்குள் தன் நண்பன் “ஐன்ஸ்டின் ஆறுமுகம்” ஞாபகம் வர, அவன் எண்ணுக்கு கால் செய்தான்.  எதிர் முனையில் “நினைத்தது யாரோ?… நீதானே?… தினம் உனைப் பாட… நான்தானே?” பாடல் ஒலித்தது.

      “ஹலோ… ஐன்ஸ்டின் ஆறுமுகம் ஹியர்”

      “டேய்… வில்லேஜ் விஞ்ஞானி… எப்படிடா இருக்கே?”

     பிரகாஷின் குரலை வைத்தே அவனை அடையாளம் கண்டுபிடித்து விட்ட அந்த ஐன்ஸ்டின் ஆறுமுகம், “ஹேய்ய்ய்… பிரகாஷ்… என்னப்பா சர்ப்ரைஸ் கால்?” கேட்டான்.

      “இங்கே சென்னைக்கு ஒரு அஃபிஸியல் வொர்க்கா வந்திருக்கேன்!…”

      “எங்கே தங்கியிருக்கே?”

      “டேய்… இப்பத்தாண்டா பஸ்ஸை விட்டே இறங்கியிருக்கேன்… இனிமேல்தான் ஹோட்டல்ல ரூம் போடணும்”

      “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்… நான் என் ரூமோட லொக்கேஷன் மேப் அனுப்பறேன் அதை வெச்சு… கால் டாக்ஸில வந்திடு”

      “சரிடா” இணைப்பிலிருந்து வெளியேறிய இரண்டாம் நிமிடம் மொபைலுக்குள் அந்த லொக்கேஷன் மேப் வந்து விழுந்தது.

     பக்கத்திலிருந்த கால் டாக்ஸி ஸ்டாண்டிற்குச் சென்று, அந்த மேப்பைக் காட்டியவாறே ஏறியமர்ந்தான் பிரகாஷ்.

(- தொடரும்…)

முந்தையபகுதி – 14 | அடுத்தபகுதி – 16

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...