“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 16 (நாவல்) | முகில் தினகரன்

 “கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 16 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 16

சரியாக இருபத்தைந்து நிமிட ஓட்டத்திற்குப் பிறகு, அந்தப் பழைய கால வீட்டின் முன் டாக்ஸி நின்றது.  காரிலிருந்து கீழிறங்கிய பிரகாஷ் நாலாப்புறமும் தேட,  “ஹலோ… பிரகாஷ்… மேலே பாருடா” என்ற குரல் கேட்டது. அண்ணாந்து பார்த்தான் பிரகாஷ். அந்தப் பழைய வீட்டின் முதல் தளத்திலிருந்து கையாட்டினான் ஐன்ஸ்டின்.

டாக்ஸிக்காரனுக்கு பணம் கொடுத்து அனுப்பி விட்டு, காம்பௌண்டிலிருந்த துருப்பிடித்த கேட்டை “கிரீச்”சத்தத்தோடு திறந்து கொண்டு உள்ளே வந்து மேலே போவதற்கான படிக்கட்டுகளைத் தேடினான்.

அதற்குள் வீட்டின் வலது பக்கத்திலிருந்து வெளிப்பட்ட ஐன்ஸ்டின் ஆறுமுகம், “படிக்கட்டு இந்தப் பக்கம் இருக்குப்பா” என்று சொல்லிக் கொண்டே வந்தான்.

இருவரும் படிக்கட்டிலேறி மேலே வரும் போது பிரகாஷ் கேட்டான்.  “கீழே வேற யாராவது குடியிருக்காங்களா?”

 “நோ.. அதுதான் என் ஆராய்ச்சிக் கூடம்” என்றான் ஐன்ஸ்டின் ஆறுமுகம்.

 “டேய்… என்னடா இப்ப முழுநேர விஞ்ஞானியாவே ஆயிட்டியா?”

 இருவரும் முதல் தளத்தை அடைந்து வராண்டாவில் நடந்தனர்.  “ஊர்ல இருந்த போதுதான் வேலை வெட்டி இல்லாம… “நான் ஐன்ஸ்டின் மாதிரி பெரிய சைன்டிஸ்ட் ஆகப் போறேன்”னு… பழைய மார்க்கெட்டுக்கும் போய் ஓட்டை உடைசல் சாமான்களையெல்லாம் வாங்கிட்டு வந்து,  “சிங்கிள் வீல் பைக் செய்யறேன்… தண்ணீரே இல்லாமல் துணிகளைத் துவைக்கும் வாஷிங் மெஷின் கண்டுபிடிக்கறேன்… குழந்தைகள் படிக்கும் போது தூங்கி விழாம இருக்க, தட்டியெழுப்பும் ரோபோட் கண்டுபிடிக்கறேன்”னு சொல்லி செய்தும் காட்டினே!… ஏதோ டைம் பாஸிங்கிற்காகத்தான் அப்ப அப்படி செய்தேன்னு நெனச்சா இங்க வந்தும் அதையேதான் செஞ்சிட்டிருக்கியா?” சிரித்தபடியே ஐன்ஸ்டினின் அறைக்குள் நுழைந்த பிரகாஷ் ஆடிப் போனான்.

திரும்பின பக்கமெல்லாம் கண்ணாடிக் குடுவைகள், ஸ்பேனர் நிறைந்த மரப்பெட்டிகள், பழைய கிராமபோன் பிளேயர், ரெக்கார்ட் பிளேட்ஸ், ஏழெட்டு ஜெயா மின் விசிறிகள், டைரைட்டர்கள், நாலைந்து அரைகுறை பைக்குகள், கம்ப்யூட்டர் மானிட்டர்கள், சி.பி.யூ.க்கள், மொபைல் போன்கள், யூ.பி.எஸ்.கள் இறைந்து கிடக்க,

 “என்னடா இப்படியிருக்கு?… இதுக்குள்ளார எப்படிடா படுத்துத் தூங்கறே?”

“இதைப் பார்த்தே இப்படிச் சொல்ற நீ… என்னோட ஆராய்ச்சிக் கூடத்தைப் பார்த்தா என்ன சொல்லுவே?” சிரித்தபடியே அந்த ஐன்ஸ்டின் ஆறுமுகம் கேட்க,

 “இப்ப வேண்டாம்… அப்புறமா பார்த்துக்கறேன்”

 “சரி என்ன அஃபிஸியல் வேலை உனக்கு சென்னைல?” ஐன்ஸ்டின் கேட்டான்.

 காணாமல் போயிருந்த தன் தந்தை கோடீஸ்வரராக திரும்பி வந்ததையும், இப்போது கோயமுத்தூரில் “வள்ளீஸ் ரெடிமேட்ஸ்” என்னும் ஆயத்த ஆடைத் தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கி, ரெடிமேட் ஆடைகள் தயாரித்து வெளிநாடுகளுக்கு எக்ஸ்போர்ட் செய்து கொண்டிருப்பதையும் விலாவாரியாகச் சொன்னான்.

 “ஓ… அப்ப “வள்ளீஸ் ரெடிமேட்ஸ்” கம்பெனியோட எக்ஸிக்யூடிவ் டைரக்டராயிட்டே நீ?” என்றான் ஐன்ஸ்டின்.

 “அப்பா இப்ப மொத்தப் பொறுப்பையும் என் கிட்டே விட்டுட்டு அம்மாவோட சந்தோஷமா இருக்கார்!… நான் இப்ப சென்னை வந்தது ஒரு சிங்கப்பூர் கஸ்டமர் கூட வியாபார ஒப்பந்தம் செய்து, அதுக்காக டாகுமெண்ட்ஸ்ல கையெழுத்துப் போடத்தான்!…”

 “அப்ப…. ரொம்பப் பெரிய ஆளாயிட்டே!ன்னு சொல்லு” தானே எழுந்து சென்று அங்கிருந்த கெட்டிலை எலக்ட்ரிக் ஸ்டவ் மீது வைத்து தேநீர் தயாரித்தான் ஐன்ஸ்டின்.

 “தைரியமா குடி… ஒரு சைன்டிஸ்ட் தயாரித்த டீ… கொஞ்சம் வித்தியாசமாய்த்தான் இருக்கும்”

 “சைன்டிஸ்ட் போட்ட டீ”ன்னு சொல்லு என்னமோ அந்த டீத்தூளையே நீ தயாரிச்ச மாதிரியல்ல.. “சைன்டிஸ்ட் தயாரித்த டீ”ன்னு சொல்றே?” சிரித்தவாறே பிரகாஷ் கேட்க,

 “அரே பையா… அந்த டீத்தூளும் நானே தயார் செய்தது”

 “அய்ய…”என்ற பிரகாஷ் வாய் வரை கொண்டு போய் விட்ட தேனீர் டம்ளரைக் அவசரமாய்க் கீழிறக்க,

 “பயப்படாமக் குடிப்பா…. குடிச்சிட்டு டேஸ்ட் எப்படியிருந்திச்சுன்னு சொல்லு… அப்புறமா அது எதுல தயாரிச்சது?ன்னு நான் சொல்றேன்”

முகத்தை அஷ்டகோணலாய் வைத்துக் கொண்டே டீயைப் பருகிய பிரகாஷின் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் பிரகாசமாகியது. “ஹேய்ய்ய்… சூப்பரா இருக்குடா… எதுல தயாரிச்ச டீ இது?”

 “வேப்ப இலைல…” என்றான் ஐன்ஸ்டின்.

“என்னது வேப்ப இலையிலா?… கொஞ்சம் கூடக் கசக்கவேயில்லையே?” ஆச்சரியமானான் பிரகாஷ்.

 “இது என் தயாரிப்பு…. வேப்ப இலைகளோட சேர்க்க வேண்டியதைச் சேர்த்தா அந்தக் கசப்பு மட்டும் மங்கிடும்,…ஆனா அதனோட சத்து அப்படியே இருக்கும்”

 இருவரும் தேநீர் பருகி முடித்ததும் ஐன்ஸ்டின் கேட்டான்.  “ஆமாம் எத்தனை மணிக்கு அந்த சிங்கப்பூர் கஸ்டமரைப் பார்க்கப் போறே?”

 “போறே” அல்ல “போறோம்” என்றான் பிரகாஷ்.

 “என்னது?… போறோமா?… நானுமா?… அட நான் எதுக்குப்பா அங்கெல்லாம்…” ஐன்ஸ்டின் தவிர்க்க,

 “டேய்… நீ என் கூட அவசியம் வேணும்!… ஏன்னா… எனக்கு அந்த சிங்கப்பூர் கஸ்டமரோட லீகல் அட்வைஸர் கிட்டே பேசின பின்னாடி கொஞ்சம் நெருடலாயிருக்கு”

 “என்னடா சொல்றே?”

 “முதல்ல ரெண்டு மணிக்கு ஹோட்டல் பிருந்தாவுக்கு வாங்க!ன்னு சொன்னான்.. அப்புறம் எங்க டாடி வரலை… நான் மட்டும்தான் வந்திருக்கேன்னு தெரிஞ்சதும் அஞ்சு மணிக்கு அதுவும் நீலாங்கரை ரோட்டுல ஒரு ரிசார்ட் இருக்காம் அங்க வரச் சொல்லுறான்!… எனக்கு கொஞ்சம் நெருடலாயிருக்கு!… எங்க அப்பா வரலைன்னு தெரிஞ்சதும் அக்ரிமெண்ட்ல ஏதோ ஃப்ராடு பண்ணறானுகளோ?ன்னு சந்தேகமாயிருக்கு”

சில நிமிடங்கள் யோசித்த ஐன்ஸ்டின், “ஓ.கே…நானும் உன் கூட வர்றேன்!… என்னோட டூ வீலரிலேயே போய்க்கலாமல்ல?” கேட்டான்.

 “என்ன வண்டி உன்னோடது… ஆக்டிவாவா?… ஸ்பிலெண்டரா?”

 “ஆமுலண்டர்”

 “என்னது… ஆமுலண்டரா?… அப்படியொரு வண்டி நான் கேள்விப் பட்டதேயில்லையே?!… ஃபாரீன் வண்டியா?”

 “அது நானே தயாரிச்ச வண்டி….” காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு சொன்னான் ஐன்ஸ்டின்.

 “ஸ்கூட்டரா?… பைக்கா?”

 “எனக்கே தெரியலை!… “கடவுள் பாதி… மிருகம் பாதி… இரண்டும் சேர்ந்த கலவை” அது” சிரித்துக் கொண்டே சொன்னான் ஐன்ஸ்டின்.

 “ஓடுமா?”

 “ஓடும்… ஆனா ஓடாது…”

“டேய்… நாம போறது மிக முக்கியமான வேலைடா… இதுல ரிஸ்க் எடுக்க வேண்டாம்… பேசாம ஒரு கால் டாக்ஸி புக் பண்ணிட்டுப் போயிடுவோம்”

 “என்ன ப்ரோ?… என் கண்டுபிடிப்பின் மேல் உங்களுக்கு இவ்வளவுதான் நம்பிக்கையா?… நீ கவலையே படாத ப்ரோ… அது நல்லாவே ஓடும்” நம்பிக்கையோடு சொன்னான் விஞ்ஞானி.

 “அது செரி… அதென்ன ஆமுலண்டர்?”

 “ஸ்பிலெண்டர் மாதிரி ஆறுமுகம் கண்டுபிடிச்சதினால அதுக்குப் பேரு ஆமுலண்டர்”

“கடவுளே!” என்று மேலே பார்த்து பிரகாஷ் சொல்ல, “என்னப்பா… என்னோட கண்டுபிடிப்புக்களை கிண்டல் பண்றே?… இப்ப சொல்றேன் கேட்டுக்கோ… நீயே என் கண்டுபிடிப்புக்களை பாராட்டும் நேரம் வரத்தான் போகுது”

(- தொடரும்…)

முந்தையபகுதி – 15 | அடுத்தபகுதி – 17

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...