“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 17 (நாவல்) | முகில் தினகரன்

 “கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 17 (நாவல்) | முகில் தினகரன்

                                   

அத்தியாயம் – 17

ஐன்ஸ்டின் ஆறுமுகத்தின் கண்டுபிடிப்பான ஆமுலண்டரில் ஏறி அவர்களிருவரும் நீலாங்கரை ரிசார்ட்டை அடைந்த போது மணி நாலரை.

கேட்டிலிருந்த செக்யூரிட்டியிடம் தங்கள் வரவைப் பற்றி பிரகாஷ் சொல்ல, அவன் இண்ட்ரகாம் மூலம் அந்த லீகல் அட்வைஸரைத் தொடர்பு கொண்டு பேசி விட்டு, “ம்.. அப்படியே நேராப் போயி லெப்ட் சைட் திரும்புனீங்கன்னா… ஒரு பில்டிங் இருக்கும் அங்கே போயி… ஸ்டெப் ஏறி ஃபர்ஸ்ட் ஃப்ளோருக்குப் போங்க” என்றான்.

அவன் சொன்னபடியே நடந்து முதல் தளத்தைத் தொட்டு அங்கிருந்த ஒரு கதவை பிரகாஷ் நாசூக்காய்த் தட்ட, “யெஸ் கம் இன்” என்று உள்ளிருந்து ஒரு கட்டைக் குரல் வந்தது.

உள்ளே அவர்கள் நுழையும் போதே எதிர் கொண்டு வரவேற்றான் லீகல் அட்வைஸர் ராஜன்.  “எம்.டி.சார்… இப்ப வந்திடுவார்… அதுவரைக்கும் நீங்க இந்த அக்ரிமெண்ட்டைப் படிச்சுப் பாருங்க” என்றபடி ஒரு பிளாஸ்டிக் ஃபைலைத் தர,  வாங்கிக் கொண்டு அங்கிருந்த ஒரு மேஜைக்குச் சென்று அமர்ந்தான் பிரகாஷ்.

ஐன்ஸ்டின் தயங்கியபடி நிற்க, “சார்… அவர் படிக்கட்டும் நீங்க இந்த சோபாவில் அமர்ந்து வெய்ட் பண்ணுங்க” என்றான் லீகல் அட்வைஸர்.

ஐன்ஸ்டின் அந்த “மெத்…மெத்” சோபாவில் அமர்ந்தான்.  அவன் பார்வை அந்த இடத்தை தீர்க்கமாய் ஆராய்ந்தது.  அதீத பணக்காரத்தனமாயிருந்த அந்த அறையின் ஏ.சி. “ம்ம்ம்ம்”என்ற மெல்லிய ஓசையுடன் அங்கே ஜில்லிப்பை பரப்பிக் கொண்டிருந்தது.  பால் வெண்மையில் “பளிச்”சென்றிருந்த சோபாக்கள் பார்ப்போரை  “வா… வந்து என் மேல் படர்ந்து கொள்” என்று அழைத்தன.

சரியாக பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு, “ஓ.கே.சார்” என்றபடி அந்த ஃபைலை ராஜனிடம் திருப்பிக் கொடுத்தான்.

“எம்.டி. இன்னும் பதினைந்து நிமிடத்தில் வந்திருவார்… அதுவரைக்கும் நீங்க பக்கத்து அறையில் இருங்க!…” என்ற ராஜன், “என்ன சாப்பிடறீங்க?… ஹாட்… ஆர் கோல்ட்?” கேட்டான்.

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் சார்… நாங்க வெய்ட் பண்றோம்” என்று சொல்லியபடி பிரகாஷ் கதவை நோக்கி நடக்க, ஐன்ஸ்டினும் எழுந்து நடந்தான்.

பக்கத்து அறைக்குள் நுழைந்ததும் அந்த அறைக் கதவைத் தாழிட்ட ஐன்ஸ்டின், பிரகாஷைப் பார்த்து வாய் மேல் விரலை வைத்து, “உஷ்ஷ்ஷ்ஷ்” எதுவும் பேசாதே என்று சொல்லி விட்டு, அறையை அங்குலம் அங்குலமாய்ச் சோதனையிட்டான்.  அவனை வினோதமாய்ப் பார்த்த பிரகாஷ், “என்ன தேடுறே?” என்று கண்ணால் கேட்க,

“காமிரா ஏதாவது செட் பண்ணி வெச்சிருக்கானுகளோ?ன்னு செக் பண்ணினேன்” என்றான் சன்னக் குரலில்.

அதிர்ந்து போன பிரகாஷ் அச்சத்தோடு சுற்றும்முற்றும் பார்க்க, “பயப்படாதே… அப்படி எதுவும் இல்லை!… ஒருவேளை இருந்தாலும் அதுகளை செயலிழக்கச் செய்யும் ஸ்பெஷல் ஜாமர் என் கிட்டே இருக்கு” என்று சொல்லி தன் பாக்கெட்டிலிருந்த டி.வி. ரிமோட் போன்ற ஒரு பொருளை எடுத்து அதை ஆன் செய்து அங்கிருந்த டீப்பாயின் மீது வைத்தான்.

பிரகாஷ் புருவங்களை உயர்த்தி, “என்ன?” என்று வினவ, “நமக்குத் தெரியாம எங்காவது காமிராக்கள் இருந்தாலும் அது வொர்க் பண்ணாது” என்றான்.

கண்களை விரித்து ஆச்சரியம் காட்டினான் பிரகாஷ்.

அப்போது வராண்டாவில் யாரோ நடக்கும் ஓசையும், தொடர்ந்து பக்கத்து அறைக்கதவு திறக்கப்பட்டு, சாத்தப்படும் ஓசையும் கேட்க, “எம்.டி.வந்திடடார் போலிருக்கு?” என்று சொல்லியபடி பிரகாஷின் அருகில் வந்து அமர்ந்து, தன் வாட்சைக் கழற்றி, அதில் தெரிந்த டிஜிட்டல் திரையில் எதையோ டைப் செய்தான்.

பிரகாஷ் எதையோ கேட்க வாயெடுக்க, “ஸ்ஸ்ஸ்… சத்தமா பேசாதே…. அந்த ரூம்ல நான் உட்கார்ந்திட்டிருந்த சோபாவின் இடுக்குல ஒரு சின்ன சைஸ் மைக்ரோ போனை செருகி வெச்சிட்டு வந்திருக்கேன்!… இப்ப அவங்க… அங்க என்ன பேசினாலும் நமக்குக் கேட்கும், அதனால கொஞ்ச நேரம் சைலண்டா இரு” என்றான் ஐன்ஸ்டின்.

சில நிமிடங்கள் அமைதியாயிருந்த அந்த வாட்சின் திரைப்பகுதி ஒளிர, பேச்சுக் குரல் கேட்டது.

“வெல் கம் சார்” இது லீகல் அட்வைஸர் ராஜனின் குரல்.

“குட் ஈவினிங் மிஸ்டர் ராஜன்?… வாட் ஹேப்பண்ட்?… அந்த கம்பெனி ரெப்ரஸெண்டேடிவ்ஸ் வந்திட்டாங்களா?” இது எம்.டி.யின் வில்லத்தனமான குரல்.

“வந்திட்டாங்க சார்!… திஸ் டைம்… மிஸ்டர் குணசீலன் வரலை!… அவரோட சன் பிரகாஷ் மட்டும் கூட இன்னொருத்தரோட வந்திருக்கார்!… ” என்றார் ராஜன்.

“அப்ப… நோ ப்ராப்ளம்!… அகிரிமெண்டை அவங்க படிச்சுப் பார்த்திட்டாங்களா?” எம்.டி.கேட்க,

“பார்த்திட்டாங்க சார்!… “ஓ.கே”வும் சொல்லிட்டாங்க!…”

“ஹா… ஹா… ஹா…”வென இடிக் குரலில் சிரித்த எம்.டி., “அப்ப அந்த அக்ரிமெண்டைக் கிழிச்சுப் போட்டுட்டு… இதோ இந்த அக்ரிமெண்ட்ல கையெழுத்து வாங்கிடுவோம்” என்றார்.

ஐன்ஸ்டின் பிரகாஷைப் பார்க்க, அவன் முகம் சுளித்தான்.

“த பாருங்க மிஸ்டர்.ராஜன்… நாம செய்யப் போறது மிகப் பெரிய ஃப்ராடு!… இது எந்தக் காரணத்தைக் கொண்டும் லீக் ஆயிடக் கூடாது”

“ஆகாது சார்” என்ற ராஜன், “இந்த புது அக்ரிமெண்ட்ல என்ன இருக்குன்னு லீகல் அட்வைஸரான நான் தெரிஞ்சுக்கலாமா?… எதுக்கு கேட்கிறேன்னா… ஒருவேளை ஃப்யூச்சர்ல ஏதாச்சும் பிராப்ளம் வந்திட்டா… தப்பிக்கறதுக்கான சட்ட ஓட்டைகளை நான் தயார் பண்ணி வைக்கணுமல்ல சார்?”

 “ஓ.கே. நான் விரிவா சொல்றேன்… நல்லாக் கேட்டுக்கங்க!… இப்ப சிங்கப்பூர் அண்ட் மலேஷியாவுல எந்த பிராண்ட் ஷர்ட்…. பேண்ட்…. விற்பனைல நெம்பர் ஒன் இடத்துல இருக்கு?… டிரெண்டிங்கா இருக்கு?” எம்.டி.கேட்டார்.

“ப்ளூ ஈகிள்” பிராண்டுதான் நெம்பர் ஒன்ல இருக்கு… சிங்கப்பூர்… மலேஷியா… மட்டுமில்லாம இன்னும் ஹாங்காக்… பாங்காக்…ன்னு ஆஸ்திரேலியா வரைக்கும் அந்த பிராண்டுக்குத்தான் டிமாண்ட் அதிகம்” என்றார் ராஜன்.

 “யெஸ்… நாம இந்த “வள்ளீஸ் ரெடிமேட்ஸ்” கம்பெனியிலிருந்து வர்ற சர்ட்… பேண்ட்… எல்லாத்திலேயும் அவங்க பிராண்ட் லேபிளை எடுத்திட்டு அந்த இடத்துல… “ப்ளூ ஈகிள்” லேபிளை ஃபிக்ஸ் பண்ணி சேல்ஸ் பண்றோம்!….” என்று எம்.டி.சொல்ல,

 “அய்யோ சார்… அது மிகப் பெரிய குற்றம் சார்!… மாட்டினோம்ன்னா கேஸ் போட்டுடுவானுக சார்!… நாம இதுவரைக்கும் சம்பாதிச்ச அத்தனை சொத்திலும் பங்கு கேட்டிடுவானுக சார்” லீகல் அட்வைஸர் பதைபதைத்தார்.

 “மிஸ்டர்… எதுக்கு இப்படி பயப்படறீங்க?… நாம் இந்த போலி “ப்ளூ ஈகிள்” துணிகளையெல்லாம் எந்த நாட்டிலும் சிட்டி ஏரியாக்கள்ல விற்கப் போறதில்லை!… ரூரல் ஏரியாக்கள்ல மட்டும்தான் விற்கப் போறோம்!…”

 “இல்லை சார்… எங்க வித்தாலும் மாட்டிக்குவோம் சார்” மிகவும் பயந்தார் ராஜன்.

 “ஹா… ஹா…. ஹா….”என்று சிரித்த எம்.டி., “மிஸ்டர்… இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த வள்ளீஸ் ரெடிமேட்ஸ் ரெப்ரஸெண்டேடிவ் கையெழுத்துப் போடற அக்ரிமெண்ட்ல என்ன வாசகம் இருக்கும் தெரியுமா?… “நாங்க போலி ப்ளூ ஈகிள் பிராண்ட் ஆடைகளை உங்களுக்கு அனுப்புவோம்… அதே போல் இந்த போலி வியாபார ரகசியத்தை எந்தக் காரணம் கொண்டும் வெளியிட மாட்டோம்!… ஒரு வேளை, எதிர்காலத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அதற்கு முழுப் பொறுப்பையும் நாங்களே ஏற்றுக் கொள்கிறோம்”ன்னு நான் சில வரிகளை சேர்த்து வேற அக்ரிமெண்ட் கொண்டாந்திருக்கேன்!… இதுல அவன் கிட்டே கையெழுத்து வாங்குங்க!… “ஏற்கனவே நீ படிச்சுப் பார்த்தியே அதே அக்ரிமெண்ட்டுதான்னு சொல்லி அவனைப் படிக்க விடாமப் பண்ணுங்க!.. எனக்கு அகிரிமெண்ட் இன்னிக்கு கையெழுத்தாகணும்… அவ்வளவுதான்” என்றார்.

அதை மைக்ரோ போன் மூலம் கேட்டுக் கொண்டிருந்த பிரகாஷும், ஐன்ஸ்டினும் அதிர்ந்து போயினர்.

“சார்… அவன் படிச்சுப் பார்க்காம கையெழுத்துப் போட்டுட்டா பரவாயில்லை!… நான் சொல்வதைக் கேட்காம படிச்சுப் பார்த்தான்னா… கையெழுத்துப் போட மாட்டேன்னு மறுத்தா… என்ன பண்றது சார்?” லீகல் அட்வைஸர் ரொம்பவே தெளிவாயிருந்தார்.

“அதற்கும் ஏற்பாடு இருக்கு!… அவன் கையெழுத்துப் போட இங்க வரும் போது என் கூட இன்னும் ரெண்டு பேர் இருப்பாங்க!… அவங்களை என் பிசினஸ் பார்ட்னர்ஸ்ன்னு அறிமுகப்படுத்துவேன்.. ஆனா அவங்க உண்மையில் என் பார்ட்னர்ஸ் அல்ல!… அவன் கையெழுத்துப் போடாம பிரச்சினை பண்ணினா அவனை அந்த இடத்திலேயே சுட்டுத் தள்ள நான் ஏற்பாடு செஞ்சிருக்கும் “பெய்ட் கில்லர்ஸ்”!… பணம் மட்டும் குடுத்திட்டாப் போதும்… யார்… எவர்?ன்னு கூடப் பார்க்காம சுட்டுத் தள்ளிட்டுப் போயிட்டே இருப்பானுக”

 “சரி சார்… இப்பவே ஒரு மணி நேரத்துக்கும் மேலாச்சு.,… இதுக்கு மேலேயும் அவனுகளை வெய்ட் பண்ண வெச்சா… இங்கேயே வந்தாலும் வந்திடுவானுக சார்”

 “அப்ப… உடனே கால் பண்ணி வரச் சொல்லு”

      பிரகாஷின் மொபைல் ஒலிக்க, எடுத்துப் பார்த்து விட்டு, “அவங்கதான்” என்றான் கிசுகிசு குரலில்.

     ஐன்ஸ்டின் உடனே அந்த மைக்ரோ போன் ஸ்பீக்கரை ஆஃப் செய்து விட, “ஹலோ… சொல்லுங்க சார்… எம்.டி.வந்திட்டாரா சார்?” தெரியாதவன் போல் கேட்டான் பிரகாஷ்.

     “இப்பத்தான் ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸுக்கு முன்னாடி வந்தார்!… அவர் அவசரமா இன்னொரு பிசினஸ் மீட்டுக்குப் போகணும்.. அதனால உடனே கிளம்பணும்னு சொல்றார்… நீங்க சீக்கிரம் வந்தா… பரவாயில்லை” லீகல் அட்வைஸர் ராஜன் சொல்ல,

      “இப்ப்… இப்ப வந்திடறோம் சார்” சொல்லி விட்டு இணைப்பிலிருந்து வெளியேறிய பிரகாஷ் ஐன்ஸ்டினின் முகத்தைப் பார்த்தான், “டேய்… இப்ப என்னடா பண்றது?… அங்க போகாம இப்படியே எஸ்கேப் ஆயிடலாம்ன்னு பார்த்தா…அவன் என்னைச் சுட்டுக் கொல்ல ஆட்களோட வந்திருக்கான்!.. ஸோ… நாம அங்க போகாம இருக்க முடியாது!.. என்னடா பண்றது?… நல்ல வகையா மாட்டிக்கிட்டோம்” டென்ஷனாகிப் பரபரத்தான் பிரகாஷ்.

      “ஒண்ணும் பிரச்சினையில்லை… நீ தைரியமாய்க் கிளம்பு… நானும் உன் கூட வர்றேன்… என்னதான் ஆகுது?ன்னு பார்ப்போம்”

     இருவரும் அறைக் கதவைச் சாத்திக் கொண்டு வெளியேற, பிரகாஷ் நடுங்கினான்.  ஐன்ஸ்டின் அவனுக்கு தைரியமூட்டியவாறே உடன் நடந்தான்.

(- தொடரும்…)

முந்தையபகுதி – 16 | அடுத்தபகுதி – 18

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...