“என் படத்திற்கு நானே வரி விலக்கு அளிக்கிறேன்” – ராதாகிருஷ்ணன் பார்த்திபன்

 “என் படத்திற்கு நானே வரி விலக்கு அளிக்கிறேன்” – ராதாகிருஷ்ணன் பார்த்திபன்

பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் டிக்கெட் விலையை குறைத்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டு கவனம் பெற்றுள்ளார்.

பிரபல நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் (R Parthiban) இயக்கத்தில் குழந்தைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘டீன்ஸ்’. பல புதுமுக குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப் படத்துக்கு டி இமான் இசையமைத்துள்ள நிலையில், சமீபத்தில் சில மாதங்களுக்கு முன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று முடிந்தது. இப்படத்தில் பார்த்திபனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய், வரும் ஜூலை 12ஆம் தேதி இந்தியன் 2 படத்துடன் பார்த்திபனின் டீன்ஸ் படமும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஹாரர் திரில்லர் ஜானரில் குழந்தைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் இப்படத்தை பயோஸ்கோப் ட்ரீம்ஸ், அகிரா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீரைலர் கடந்த மாதம் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இப்படம் குழந்தைகளை பெற்ற ஒவ்வொருவருக்கும் சென்றடைய வேண்டும் என்கிற எண்ணத்தில், இப்படத்தின் டிக்கெட் விலை சில தினங்களுக்கு ரூ.100 மட்டுமே என அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “எதற்காகவும் நான் என்னை குறைத்து கொண்டதே இல்லை. பட் டீன்ஸ் படத்தின் டிக்கெட் விலை முதல் சில நாட்களுக்கு இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.100 மட்டுமே. இதில் நட்டமே இல்லை. வசதி குறைவானவர்களும் காண வசதியாக இருப்பதன் நாட்டமே” என தெரிவித்துள்ளார்.

பார்த்திபனின் முந்தைய படைப்பான ‘இரவின் நிழல்’ தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு அங்கீகாரங்களையும் பெற்று சாதனை படைத்த நிலையில் அவரது புத்தம் புதிய புதுமை திரைப்படம் ‘டீன்ஸ்’ மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...