“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 18 (நாவல்) | முகில் தினகரன்

 “கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 18 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 18

      நிதானமாக அந்த அறைக்கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தவர்களை  ஏ.சி.யின் ஜில்லிப்பு வரவேற்றது.

     ஓவல் வடிவிலான அந்த மேஜையின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த சிங்கப்பூர் நிறுவனத்தின் எம்.டி. வெள்ளை நிற வினுசக்ரவர்த்தி போலிருந்தார்.

     அவருக்கு அருகில் பூனை போல் நின்றிருந்தார் லீகல் அட்வைஸர் ராஜன்.

     சற்றுத் தள்ளி அந்த அறையின் ஜன்னலருகே நின்றிருந்த அவர்கள் மூவரும் அர்னால்டு ஸ்குவாஷ்னேக்கர் தம்பிகள் போலிருந்தனர்.

“சரி… சிங்கப்பூரிலிருந்தே ஜிம் பாய்ஸ்களைக் கூட்டிட்டு வந்திருக்கான் போலிருக்கு இந்த எம்.டி.” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் ஐன்ஸ்டின்.

பிரகாஷையும், ஐன்ஸ்டினையும் பத்துப் பைசாவிற்குக் கூட மதிக்காதவர் போல், கை ஜாடையில் உட்காரச் சொன்னார் அந்த எம்.டி.

அதைப் பார்த்ததும் “சுர்ர்ர்”ரென்று கோபம் வந்தது ஐன்ஸ்டினுக்கு.  அடக்கிக் கொண்டான்.

அங்கு நிலவிக் கொண்டிருந்த அவஸ்தையான அமைதியைக் குலைக்கும் விதமாய், “மிஸ்டர் பிரகாஷ்… இவர்தான் எங்க எம்.டி. மிஸ்டர்.ஜோஸ்…” என்று சொல்லி விட்டு, தலையைத் திருப்பி, பிரகாஷைக் காட்டி, “ஹீ ஈஸ் மிஸ்டர் பிரகாஷ்… சன் ஆஃப் குணசீலன்” என்றார்.

மரியாதை நிமித்தமாய் பிரகாஷ் வணக்கம் தெரிவிக்க, அவர் அதை அலட்சியப்படுத்தி விட்டு, ஐன்ஸ்டினைக் காட்டி, “இவர்?” என்று கேட்க,

“மை டெக்னிகல் அட்வைஸர்… மிஸ்டர் ஐன்ஸ்டின்!…” என்றான் பிரகாஷ் சற்றும் மிடுக்கு குறையாமல்.

குளிர்ந்து போனான் ஐன்ஸ்டின்.

“அக்ரிமெண்ட் டாக்குமெண்ட்டைக் கிளியரா படிச்சிட்டீங்களா? எம்.டி.கேட்டார்.

பிரகாஷ் பதில் சொல்ல வாயெடுக்க, அவனை முந்திக் கொண்டு வந்த ஐன்ஸ்டின், “படிச்சாச்சு… ஓ.கே. சொல்லியாச்சு” என்றான்.

தலையை “விருட்”டென்று தூக்கி ஐன்ஸ்டினைப் பார்த்தான் பிரகாஷ்.  அவன் புன்னகையோடு தலையை மேலும் கீழும் ஆட்டினான்.

“அப்ப… அக்ரிமெண்ட்ல கையெழுத்துப் போட்டிடலாமே?”

“ம்… தாராளமா” என்றான் ஐன்ஸ்டின்.

தன்னிடம் தயாராயிருந்த அந்த போலி அக்ரிமெண்டைக் கொண்டு வந்து பிரகாஷின் எதிரில் வைத்து, “மொத்தம் ஏழு பக்கம்… எல்லாப் பக்கத்திலும் கையெழுத்துப் போட்டுட்டுங்க” என்றார் லீகல் அட்வைஸர்.

பிரகாஷ் ஐன்ஸ்டினைப் பார்க்க, அவன் அந்த லீகல் அட்வைஸர் ராஜனைப் பார்த்து, “மொதல்ல அவர் கையெழுத்துப் போடட்டும் அப்புறம் இவர் போடுவார்” என்றான்.

“வொய்?” அந்த எம்.டி.கோபமாய்க் கேட்க,

“சீனியர்ஸ் ஃபர்ஸ்ட்!… ஜூனியர்ஸ் நெக்ஸ்ட்!” என்றான் ஐன்ஸ்டின்.

அதைக் கேட்டதும் ராஜனைப் பார்த்து, கை ஜாடையால் “அதை இங்கே கொண்டு வாய்யா” என்று எம்.டி. சொல்ல,

“யெஸ் சார்” என்றபடி அந்த அக்ரிமெண்டைக் கொண்டு போய் அவர் முன் வைத்தார் லீகல் அட்வைஸர் ராஜன்.

சற்றும் தாமத்திக்காமல் இரண்டே நிமிடத்தில் ஏழு கையெழுத்துக்களைப் போட்டு வீடு, அந்த அக்ரிமெண்டை பிரகாஷை நோக்கித் தள்ளினார் எம்.டி.

தன் எதிரில் வந்து விழுந்த அந்த அக்ரிமெண்ட் டாக்குமெண்டையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்த பிரகாஷைப் பார்த்து, “கையெழுத்துப் போடு மேன்” என்றார் எம்.டி.ஜோஸ்.

 “ஒரு நிமிஷம் சார்” என்ற ஐன்ஸ்டின் தன் மொபைல் கேமிராவில் அந்த அக்ரிமெண்ட் பக்கங்களை பதித்துக் கொண்டு, பிரகாஷ் பக்கம் தள்ளினான்.

அதில் என்ன ஷரத்துக்கள் உள்ளன?… தான் அதில் கையெழுத்திட்டால் அதனால் என்னென்ன மாதிரி பிரச்சினைகள் வந்து சேரும்?… என்பதையெல்லாம் அறிந்திருந்த காரணத்தால் அதில் கையெழுத்திட மிகவும் தயங்கினான் பிரகாஷ்.

“ராஸ்கல் போட்றா கையெழுத்தை…” இடிக் குரலில் எம்.டி.கத்த,

சற்றுத் தள்ளி நின்றிருந்த ஜிம் பாய்ஸ் தயாராயினர்.

“இதற்கு மேலும் கையெழுத்திடாமல் இருந்தால் நிச்சயம் அவர்கள் தன்னைத் தாக்குவார்கள், துப்பாக்கி முனையில் மிரட்டிக் கையெழுத்துப் போட வைத்து விடுவார்கள், அதனால் இப்போதைக்கு கையெழுத்தை போட்டுத் தொலைத்து விட்டு, இங்கிருந்து உயிரோடு வெளியேறுவோம், பிறகு பிரச்சினைகளைச் சந்தித்துக் கொள்வோம்” என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டு,

லீகல் அட்வைஸர் நீட்டிய பேனாவை வாங்கினான் பிரகாஷ்.

“ஒன் மினிட்” என்று இடையில் புகுந்த ஐன்ஸ்டின், “எங்க பாஸ் எப்போதுமே இந்த ராசியான பேனாவில்தான் கையெழுத்திடுவார்!… அதனால் அவர் இதை யூஸ் பண்ணட்டும்” என்று சொல்லி தன் பாக்கெட்டிலிருந்த அந்தப் பேனாவை எடுத்துத் தந்தான்.

“க்கும்… போடறதே பிரச்சினையான அக்ரிமெண்ட்டுல… இதுல ராசியாவது… காசியாவது” என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டே ஐன்ஸ்டின் நீட்டிய பேனாவை வாங்கி, ஏழு கையெழுத்துக்களை எரிச்சலோடு பதித்தான் பிரகாஷ்.

“மிஸ்டர் ராஜன்… அந்த அக்ரிமெண்டை எடுத்து எல்லாப் பக்கங்களிலும் கையெழுத்து இருக்கா?ன்னு செக் பண்ணுங்க” என்றார் எம்.டி.ஜோஸ்.

பாய்ந்து வந்து அக்ரிமெண்ட் டாகுமெண்டை எடுத்து வரிசையாய் ஒவ்வொரு பக்கத்தையும் தூக்கிப் பார்த்து விட்டு, “ஓ.கே.சார்… ஏழு கையெழுத்தும் இருக்கு” என்றார்.

 “அப்ப நாங்க கிளம்பறோம்” ஐன்ஸ்டின் அவசரப்பட,

 “நோ… இன்னிக்கு நைட் இங்கியே ஸ்டே பண்ணிட்டு நாளைக்குப் போகலாம்!… நைட் இங்கே ஸ்பெஷல் பார்ட்டி இருக்கு” என்றார் எம்.டி.

 “இல்லை சார்… நாங்க அவசரமாய் கோயமுத்தூர் போகணும்” இருவரும் எழுந்து உடனே வெளியேறினர்.

தங்கள் அறைக்குள் வந்ததும், “டேய் பிரகாஷ்.. கால் மணி நேரத்துக்குள்ளார நாம் இந்த ஏரியாவை விட்டே பறந்திடணும்” என்றான் ஐன்ஸ்டின்.

“ஏண்டா…?”

“அதையெல்லாம் அப்புறம் விளக்கமா சொல்றேன்!… சீக்கிரம் இந்த அறையை விட்டு வெளியேறு”

அடுத்த ஐந்தாவது நிமிடம் ஐன்ஸ்டினின் ஆமுலேண்டரில் அவர்கள் இருவரும் மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருந்தனர்.

(- தொடரும்…)

முந்தையபகுதி – 17 | அடுத்தபகுதி – 19

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...