“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 19 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 19
இரவு பதினோரு மணி வாக்கில் ஐன்ஸ்டினின் இருப்பிடத்தை அடைந்ததும், கோபத்தில் கத்தினான் பிரகாஷ். “உன்னை என் கூடக் கூட்டிட்டுப் போனதே வேஸ்ட்!.. அங்க ஏதாச்சும் பிரச்சினை வந்தா… நீ ஏதாவது ஐடியா பண்ணி என்னைக் காப்பத்துவே!ன்னு நினைச்சுத்தான் உன்னைக் கூட்டிட்டுப் போனேன்!… கடைசில அந்த வில்லங்கமான ஒப்பந்தத்துல என்னைக் கையெழுத்துப் போட வெச்சிட்டே,… அதுவும் ஏழு கையெழுத்து…”
அவன் ஆவேச அபிநயங்களை புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்த ஐன்ஸ்டின் அவன் கோபத்தை மேலும் உச்சத்திற்குக் கொண்டு போக,
“என்னடா சிரிக்கறே?… நான் எப்பேர்ப்பட்ட சிக்கலுக்கு வரவேற்பு வளையம் கட்டியிருக்கிறேன்!னு உனக்கு எங்கே புரியப் போகுது?… சும்மாவாச்சும் “நான் ஒரு சைன்டிஸ்ட்… எதிர்காலத்துல இந்த உலகமே என்னைத் திரும்பிப் பார்க்கப் போகுது”ன்னு பினாத்திட்டுக் கிடக்கற ஒரு அரை மெண்டல் கேசு… உன்னைப் போய் நம்பினேனே..” என்று சொல்லிக் கொண்டே தன் தலையில் அடித்துக் கொண்டான் பிரகாஷ்.
“நண்பா… ஆத்திரப்படாதே!… இந்த ஆறுமுகத்தை நம்பினோர் என்றுமே கை விடப்படார்” என்றான் ஐன்ஸ்டின்.
“க்கும்… டயலாக்கெல்லாம் நல்லாத்தான் இருக்கு… ஆனா செய்லபாடுகள்தான் கோமாளித்தனமாயிருக்கு” என்றான் பிரகாஷ் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு.
“பிரகாஷ்… இங்க என் பக்கத்துல வா…. இந்த பேனாவாலே இங்கே ஒரு கையெழுத்துப் போடு” என்று சொல்லி ஒரு காகிதத்தை பிரகாஷிடம் தந்தான் ஐன்ஸ்டின்.
“என்னது இன்னொரு கையெழுத்தா?… இது எதுக்குடா… ?” கலவர முகத்துடன் கேட்டான் பிரகாஷ்.
“சும்மா போடு சொல்றேன்”
“பிரச்சினை எதுவும் வந்திடாதே?”
“வராது போடுப்பா”
தயங்கித் தயங்கி ஒரு கையெழுத்தைப் போட்டு முடித்தான் பிரகாஷ்.
“அந்தக் காகிதத்தை… அப்படியே அந்த மேஜை மேலே வெச்சிட்டு இங்கே வா!… அப்புறம் ஒரு பதினஞ்சு நிமிஷம் கழிச்சு அதைப் போய்ப் பாரு” என்றான் ஐன்ஸ்டின்.
“ஹும்… நீ ஒரு ஆளுன்னு நீ சொல்றதையெல்லாம் நான் செஞ்சிட்டிருக்கேன் பாரு… என்னைச் சொல்லணும்” தலையிலடித்துக் கொண்டு சற்றுத் தள்ளிச் சென்று, மொபைலைத் தேய்க்க ஆரம்பித்தான் பிரகாஷ்.
அப்போது கோவையிலிருந்து அவனுடைய தந்தையின் அழைப்பு இடையில் புகுந்தது.
“அய்யய்யோ… அப்பா” என்றான் பிரகாஷ் அச்சத்துடன்.
“அட்டெண்ட் பண்ணுப்பா” என்றான் ஐன்ஸ்டின்.
“அக்ரிமெண்ட் படிச்சுப் பார்த்தியா?… கையெழுத்துப் போட்டியா?”ன்னு கேட்பார்… நான் என்ன சொல்றது?” பதட்டத்தில் கைகளை உதறினான்.
“படிச்சுப் பார்த்தேன்!… நமக்கு சரிப்படாது போலத் தெரிஞ்சுது… கையெழுத்துப் போடாம வந்திட்டேன்”னு சொல்லு”
“பொய் சொல்லச் சொல்றியா?”
“சொல்லு… அந்தப் பொய்யை உண்மையாக்கிடலாம்” என்றான் ஐன்ஸ்டின்.
“டேய்ய்ய்ய்ய்…” கத்தினான் பிரகாஷ்.
அதற்குள் அந்தக் கால் நின்று விட, “என்னடா… மொச்சைக்கொட்டை… மொச்சக் கொட்டையா ஏழு கையெழுத்துப் போட்டிருக்கேன்… அதுவும் ஸ்டாம்ப் பேப்பர்ல… எப்படிடா “போடலை”ன்னு சொல்றது? கேட்டான்.
“ஒரு நிமிஷம் போய் அந்த மேஜை மேல் இருக்கற காகிதத்தைப் பாரு”
ஐன்ஸ்டினை முறைத்துக் கொண்டே போய் அந்தக் காகிதத்தை எடுத்துப் பார்த்த பிரகாஷ் அதிர்ந்து போனான் அந்த இடத்தில அவன் போட்ட கையெழுத்தைக் காணோம். பேப்பரைத் திருப்பித் திருப்பிப் பார்த்து விட்டு, “என்னடா நான் போட்ட கையெழுத்தைக் காணோம்?” கத்தலாய்க் கேட்டான்.
“அதுவா?.. அது அழிஞ்சு போச்சு” என்றான் ஐன்ஸ்டின் சிரித்துக் கொண்டே,
“அப்படின்னா….”என்று பிரகாஷ் இழுக்க,
“அதேதான்…! அங்க… அந்த அக்ரிமெண்ட்ல நீ போட்டியே ஏழு கையெழுத்து… அதெல்லாம் இதே மாதிரி அழிஞ்சு போயிருக்கும்… எல்லாம் என் கண்டுபிடிப்பான “சிக்ஸ் ஃபேஸ்” இங்க் மகிமை!… பதினைந்து நிமிடத்திற்கு மேல் அது நிக்காது… அதுவா காணாமல் போயிடும்”
“அப்ப… அப்பாவுக்குப் போன் பண்ணி விஷயத்தைச் சொல்லிடவா?” சந்தோஷமாய்க் கேட்டான் பிரகாஷ்.
“தாராளமாய்ச் சொல்லிடு!…” என்ற ஐன்ஸ்டின், திடீரென்று வாய் விட்டுச் சிரிக்க, “என்னடா சிரிக்கறே?” பிரகாஷ் அச்சத்துடன் கேட்டான்.
“ஒண்ணுமில்லை… இன்னேரம் அந்த எம்.டி., லீகல் அட்வைஸரைப் பிடிச்சு வாங்கு வாங்குன்னு வாங்கிட்டிருப்பான்!… அதை நெனச்சுப் பார்த்தேன்… சிரிச்சேன்”
(- தொடரும்…)