“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 20 (நாவல்) | முகில் தினகரன்

 “கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 20 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 20

அதே நேரம் நீலாங்கரை ரிசார்ட்டில்,

“மிஸ்டர் ராஜன்… கையெழுத்தான அந்த அக்ரிமெண்ட் ஃபைலை மத்த ஃபைல்கள் வைக்கும் இடத்தில் வைக்க வேண்டாம்!… கான்ஃபிடென்சியல் ஃபைல்ஸ் வைக்கும் இடத்தில் வெச்சிடுங்க! அதுக்கு முன்னாடி நாலஞ்சு காபீஸ் ஜெராக்ஸ் எடுத்திடுங்க” எம்.டி.ஜோஸ் கட்டளையிட,

“இதோ உடனே எடுத்திடறேன் சார்” சொல்லிக் கொண்டே அடுத்த அறையிலிருந்த ஜெராக்ஸ் மெஷினுக்குச் சென்றவர், அதே வேகத்தில் திரும்பி வந்தார்.  அவர் முகத்தில் பிசாசை நேரில் கண்டது போலொரு பீதி.

“என்ன ராஜன்?… காப்பீஸ் எடுத்திட்டீங்களா?” எம்.டி.ஜோஸ் கேட்க,

“சார்… சார்… அந்த… அந்தப் பயல் நம்மை ஏமாத்திட்டான் சார்” நடுங்குல் குரலில் சொன்னார்.

“யோவ்… என்னய்யா சொல்றே?… கொண்டாய்யா அந்த ஃபைலை” கத்தலாய்க் கேட்டு வாங்கிப் பிரித்துப் பார்த்த எம்.டி.ஜோஸ் பேயறைந்தது போலானார்.  “என்னய்யா… இந்த ஒரிஜினல் அக்ரிமெண்ட்ல அவன் கையெழுத்துப் போடலை?”

“போட்டான் சார்… என் ரெண்டு கண்ணால அவன் கையெழுத்துப் போடறதையும் பார்த்தேன்!.. நீங்க “எல்லா பேப்பரிலும் கையெழுத்து இருக்கா?”ன்னு செக் பண்ணச் சொன்னப்ப… மறுபடியும் பார்த்தேன் ஏழு பக்கத்திலும் கையெழுத்து இருந்திச்சு சார்… சத்தியமா சொல்றேன் சார்” கெஞ்சினார் லீகல் அட்வைஸர் ராஜன்.

கண்களை மூடிக் கொண்டு யோசித்தார் எம்.டி.ஜோஸ், “நானும் இங்கிருந்தே கவனிச்சேன்… அவன் கையெழுத்து போட்டான்!… அது எப்படி இல்லாமல் போகும்?”

கண்களைத் திறந்து நெற்றியைத் தட்டிக் கொண்டே அப்போது நடந்தவைகளை நினைவு விரல்களால் அங்குல அங்குலமாக நகர்த்திப் பார்த்தார்.  “முதல்ல என்னைக் கையெழுத்துப் போடச் சொன்னான்!… நான் போட்டுக் குடுத்ததும்… தயங்கினான்… நான் கத்தலாய்க் கேட்டதும்… பயந்து போய் கையெழுத்துப் போட்டான்!… அதுக்கு முன்னாடி… அதுக்கு முன்னாடி…?.. என்ன நடந்திச்சு?” மூளையைக் கசக்கினார்.

“கரெக்ட்… கரெக்ட்… அவன் கையெழுத்துப் போடப் போன போது… அவன் கூட வந்தவன் இடையில் புகுந்து… “இது ராசியான பேனா… இதுலதான் சார் எப்பவும் கையெழுத்துப் போடுவார்”ன்னு சொல்லி ஒரு பேனாவைக் குடுத்து கையெழுத்துப் போட வெச்சான்!… அந்தப் பேனாவில் தான் விஷயம் இருக்கு”

 “டேய்… மொதல்ல அந்த ரெண்டு பேரும் எங்கிருந்தாலும் போய்த் தூக்கிட்டு வாங்கடா..” எம்.டி.ஜோஸ் ஆத்திரமாகிக் கத்தினார்.

 “சார்… வேண்டாம் சார்… அது… நமக்கு நாமே வெச்சுக்கற சூன்யம்!” என்றார் லீகல் அட்வைஸர் ராஜன்.

 “என்னய்யா சொல்றே?”

“சார் அந்த அக்ரிமெண்ட் டாக்குமெண்ட்ல நாம் என்ன போட்டிருக்கோம் “நாங்க போலி ப்ளூ ஈகிள் பிராண்ட் ஆடைகளை உங்களுக்கு அனுப்புவோம்… அதே போல் இந்த போலி வியாபார ரகசியத்தை எந்தக் காரணம் கொண்டும் வெளியிட மாட்டோம்!… ஒரு வேளை, எதிர்காலத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அதற்கு முழுப் பொறுப்பையும் நாங்களே ஏற்றுக் கொள்கிறோம்” ன்னு போட்டிருக்கோம்!… அதுல நீங்க மட்டும்தான் கையெழுத்துப் போட்டிருக்கீங்க!… அதை அந்த பிரகாஷோட டெக்னிகல் அட்வைஸரா வந்தானே?… அந்தப் பயல் போட்டோ எடுத்திட்டுப் போயிருக்கான்!… ஸோ… இந்த விஷயத்தை நாம இத்தோட விட்டுடறதுதான் புத்திசாலித்தனம்” என்றார் ராஜன்.

 “அப்படின்னா…. இந்த டீல்ல… அந்தச் சின்னப் பையன் கிட்டே நான் தோத்துட்டேன்… அப்படித்தானே?” எம்.டி.ஜோஸ் எரிச்சலுடன் கேட்க,

 “அப்படி ஏன் நினைக்கறீங்க?… பின்னாடி வரக் கூடிய பெரிய பிரச்சினைகளை இந்தத் தோல்வி தடுத்திருக்கு!ன்னு நினைங்க” சமாளித்தார் லீகல் அட்வைஸர்.  அவர் வேலையே அதுதானே?

 “ஆனா… அவனுகளை ஏதாச்சும் பண்ணினாத்தான்யா என் ஆத்திரம் தீரும்?” வலது கை முஷ்டியால் இடது உள்ளங்கையில் ஓங்கிக் கித்திக் கொண்டார் எம்.டி.ஜோஸ்.

 “அவனுக இன்னேரத்துல கோயமுத்தூரே போய்ச் சேர்ந்திருப்பானுக சார்”

****

 பிரகாஷ் தந்தை குணசீலனை தானே அழைத்து நடந்த விபரங்களைக் கூற, கொதித்துப் போனார் அவர்.  “என்னாச்சு… கையெழுத்துப் போட்டுட்டியா?” பதட்டமாய்க் கேட்டார் அவர்.

“ம்… போட்டுக் குடுத்திட்டேன்”

“போச்சு… போச்சு… இத்த்னை வருஷம் நான் பாடுபட்டு சம்பாதிச்ச சொத்தெல்லாம் அந்த “ப்ளூ ஈகிள்” கம்பெனிக்காரனுக்குப் போகப் போகுது!… என்னப்பா… இப்படிப் பண்ணிட்டியே?… போட மாட்டேன்னு தைரியமா சொல்ல வேண்டியதுதானே?”

“அப்படி நான் தகராறு பண்ணினா… என்னைப் போட்டுத் தள்ளறதுக்குன்னு ஜிம் பாய்ஸை ஏற்பாடு பண்ணிக் கூட்டிட்டு வந்து பக்கத்திலேயே நிற்க வெச்சிருக்கானே?”

“ச்சை… என்னப்பா… எனக்காவது போன் பண்ணிச் சொல்லியிருக்கக் கூடாதா?”

“டாடி… நான் இங்க வந்து இறங்கினதும் முதல்ல அந்த லீகல் அட்வைஸர் கிட்டே தான் பேசினேன்!.. அவர் ஒரு ஹோட்டல் பேரைச் சொல்லி ரெண்டு மணிக்கு வாங்க!ன்னு சொன்னார்!… அப்புறம் என் கூட நீங்களும் வந்திருக்கீங்களா?ன்னு விசாரிச்சான்… நீங்க வரலேன்னு சொன்னதும்… “நீலாங்கரை ரிசார்ட்டுக்கு அஞ்சு மணிக்கு வாங்க!”ன்னு சொன்னான்!… அப்பவே புரிஞ்சிடுச்சு… இவனுக கிட்டே ஏதோ தப்பிருக்கு!ன்னு.. அதனால்தான் என் கூட என் ஃப்ரெண்ட் ஐன்ஸ்டினைக் கூட்டிட்டுப் போனேன்!… அவன் தான் என்ன இந்தப் பிரச்சினையிலிருந்து காப்பாத்தினான்”

 “எப்படி?… எப்படிக் காப்பாத்தினான்?” ஆர்வமாய்க் கேட்டார் குணசீலன்.

 “அவன் தயாரித்துக் கொடுத்த இங்க்ல கையெழுத்துப் போட்டா… அந்தக் கையெழுத்து பதினஞ்சு நிமிஷத்துக்கு மேல் அதுவாகவே அழிஞ்சிடும்…அதே மாதிரி அந்த அக்ரிமெண்ட்ல நான் போட்ட எல்லாக் கையெழுத்தும் அழிஞ்சு போயிருக்கும்”

“எப்படியோ ஒரு பெரிய இக்கட்டிலிருந்து தப்பிச்சிட்டோம்!… இங்க பாரு பிரகாஷ்… அந்த மாதிரி ஆளுங்கெல்லாம் ரொம்ப மோசமானவனுக… உன்னை ஃபாலோ பண்ணிட்டு வந்து ஏதாச்சும் பண்ணினாலும் பண்ணிடுவானுக!… நீ வெளியே எங்கேயும் போகாம அறைக்குள்ளாரவே இரு!… கூட அந்தப் பையன் ஐன்ஸ்டினா… தாமஸ் ஆல்வா எடிஸனா?.. அவனையும் வெச்சுக்கோ”என்றார் குணசீலன்.

 “நீங்க பயப்படாதீங்க டாடி… நான் நாளைக்கு காலை ஆறேகால் டிரெய்ன்ல… ஜென்ரல் கம்பார்ட்மெண்ட்ல பூந்து வந்திடறேன்”

 “பத்திரம்ப்பா”

 “ஓ.கே.! டாடி”

(- தொடரும்…)

முந்தையபகுதி – 19 | அடுத்தபகுதி – 21

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...