“திரையுலக பயணம்” | இயக்குநர் மணிபாரதி
“வாட்ச்மேன்களைதான் பார்க்க முடிந்தது..“
சிறு வயதில் நான் அதிகம் பார்த்தது எம் ஜி ஆர் நடித்த படங்கள்தான். பட்டிக்காட்டு பொன்னையா, உலகம் சுற்றும் வாலிபன், ஊருக்கு உழைப்பவன், உழைக்கும் கரங்கள், உரிமைக்குரல், நேற்று இன்று நாளை, நாளை நமதே. இந்தப் படங்கள் எல்லாம் இப்போதும் மனதில் பசுமையாக நினைவில் இருக்கிறது. அவரது உடையையும், தலை முடியின் ஸ்டெயிலையும் வைத்தே அது என்ன படம் என்பதை சொல்லி விடலாம். எங்கள் ஊர் (நாகப்பட்டினம்) பாண்டியன் தியேட்டரில் அப்போது டிக்கெட் விலை 55 பைசா. அடித்துப்பிடித்து சட்டை கிழிந்து டிக்கெட் எடுத்து பார்த்த படங்கள்.
எப்போதாவது சிவாஜி படங்கள் பார்ப்பது உண்டு. அப்படி ரீ ரிலீஸில் பார்த்த படம் தெய்வமகன். அதற்கு முன்பும் சில சிவாஜி படங்கள் பார்த்தது உண்டு. ஆனால் 3 ரோலில் சிவாஜி வித்தியாசம் காட்டி நடித்திருந்தது என்னை மிகவும் கவர்ந்தது. படம் பார்த்து விட்டு வெளியில் வந்த பிறகு எனக்கு வேறு வேலையே ஓட வில்லை. அந்தப்படத்தின் காட்சிகளே திரும்ப திரும்ப மனதில் ஓடிக் கொண்டிருந்தது. போகிற வருகிற நண்பர்களையெல்லாம் கூப்பிட்டு, படத்தின் கதையை சொல்லி அதில் மகிழ ஆரம்பித்தேன்.
அதுதான், எனக்குள் புதைந்து கிடந்த கலையை, ஆர்வமாக மாற்றி, அந்தப்பக்கம் என் கவனத்தை திருப்பி விட்ட, அடிப்படை சம்பவம் என்று சொல்லலாம். அதன் பிறகு சிவாஜி நடித்த படங்களை தேடி தேடிப் பார்க்க ஆரம்பித்தேன். அப்படி பார்த்த படங்களில், இன்றும், என் மனதில் ஒரு வற்றாத நதியாக ஓடிக் கொண்டிருக்கும் படங்கள், தங்கப்பதக்கம், ராஜபார்ட் ரங்கத்துரை, கௌரவம், வியட்நாம் வீடு, அவன்தான் மனிதன், ஞான ஒளி, புதிய பறவை. ஒவ்வொரு படத்திலும் என்ன ஒரு ஸ்டெயில். என்ன ஒரு தனி அடையாளம். எதிரில் எவ்வளவு பெரிய நடிகர் நடிகைகள் இருந்தாலும், தன்னுடைய ஒரு சிறு கண்ணசைவில் அவர்களை தூக்கி சாப்பிட்டு விடுவார். அதுதான் சிவாஜி.
படப்பிடிப்பின் போது, தனது காட்சி எடுக்கப்பட்டு விட்டாலும், உடனே செட்டை விட்டு வெளியே வந்து விடாமல், அங்கேயே ஒரு நாற்காலியை போட்டு உட்கார்ந்து கொண்டு, அடுத்தவர் நடிப்பை உற்று கவனிப்பது அவரது வழக்கம். காரணம், அவர்கள் அந்தக் காட்சியில் எப்படி நடிக்கிறார்கள் என்பதை மனதில் ஏற்றிக் கொண்டு, அதற்கு பிறகு எடுக்கப்படும் காட்சிகளில், அவர்களுக்கு பொருத்தமான நடிப்பை வழங்கி விடுவார். அதுபோல், தான் நடிக்கும் காட்சியில் உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு எப்படி நடிக்க வேண்டும் என்பதையும் நடித்து காட்டுவார்.
சிவாஜி படங்களில் இருந்த என்னுடைய கவனம், டைரக்டர் ஸ்ரீதர் படங்களின் மேல் திரும்பியது. கல்யாண பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம் இந்த இரண்டு படங்களும் என்னை மிகவும் கவர்ந்தது. காரணம் அதன் திரைக்கதை அமைப்பும், டைரக்சன் உத்தியும். உடனே ஸ்ரீதரின் படங்களை தேடி தேடிப் பார்க்க ஆரம்பித்தேன். நெஞ்சம் மறப்பதில்லை, காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு, ஆகியப் படங்கள் அப்போதும் சரி, இப்போதும் சரி போர் அடிக்கவே அடிக்காது. எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். பின்னாளில் வந்த இளமை ஊஞ்சலாடுகிறது, தென்றலே என்னைத் தொடு படங்களும் நினைவில் நிற்கும் படங்கள்.
அவர் காலத்திலேயே, அவரைப்போல் புது முகங்களை வைத்து, வித்தியாசமான படங்களை எடுத்தவர் கே பாலசந்தர் அவர்கள். அது மட்டுமல்ல, டைரக்சனில் அவருக்கென்று ஒரு தனி பாணியை உருவாக்கினார். மூன்று முடிச்சு, அவர்கள், சொல்லத்தான் நினைக்கிறேன், அபூர்வ ராகங்கள், தப்புத்தாளங்கள், நிழல் நிஜமாகிறது, நூல் வேலி, அரங்கேற்றம், இப்படி எத்தனையோ படங்களை சொல்லிக் கொண்டு போகலாம். அவற்றை தொடர்ந்து பின்னாளில் வந்த ஏக் துஜே கேலியே, வானமே எல்லை, புதுப்புது அர்த்தங்கள், சிந்து பைரவி ஆகியப் படங்கள் தனி முத்திரை பதித்த படங்கள். இந்தப் படங்கள் எல்லாம் எனக்குள் சினிமா ஆசையை கொஞ்சம் கொஞ்சமாக தூவ ஆரம்பித்தன.
ஆனால், அதை எப்படி தொடங்குவது எங்கிருந்து தொடங்குவது என்பதற்கான வழிமுறை தெரியாமல்தான் தினறிக் கொண்டிருந்தேன். அதையும் எவ்வளவு நாட்களுக்குதான் அடக்கி வைத்துக் கொண்டிருக்க முடியும்?
இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், எனக்கு சந்திரசேகர் என ஒரு நண்பன் இருந்தான். அவன்தான் என்னை விட சினிமாவில் அதிக ஈடுபாடு கொண்டவனாக இருந்தான். அதாவது, சென்னைக்கு ஓடிப் போய் நடிகராகி விட வேண்டும் என அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பான். எப்போதும் அதைப்பற்றியேதான் பேசிக் கொண்டிருப்பான். அப்போது கூட, எனது பயணம் சினிமாவை நோக்கி இருக்கும் என, நான் நினைத்துப் பார்த்தது இல்லை. ஆனால், காலமும், வாழ்க்கைப் போட்ட கணக்கும் அவனை உள்ளூரிலுயே ஹோட்டல் தொழில் செய்யும் படியும், என்னை சினிமாவின் பக்கமும் நகர்த்தி விட்டது. இப்போது நினைத்தாலும் கூட எனக்கு ஆச்சரியமாகதான் இருக்கிறது. எந்த தைரியத்தில் சென்னைக்கு புறப்பட்டு வந்தேன் என்று எனக்கே தெரியவில்லை.
சென்னை வந்ததும் அம்பத்தூரில் உள்ள சிவானந்தா ஸடீல்ஸில் அப்ரண்டிஸ்ஸாக வேலையில் சேர்ந்தேன். அப்போது மாத சம்பளம் 300 ரூபாய். பிடித்தம் போக 280 ருபாய் கொடுப்பார்கள். கம்பெனி கேண்டியனில் காலை டிபன் 30 பைசா. மதிய உணவு 50 பைசா. எனவே பெரும்பாலும் கம்பெனி கேண்டியனிலேயே சாப்பிட்டு விடுவேன். ரூம் வாடகை 50 ருபாய். அந்த சம்பளம் போதுமானதாகதான் இருந்தது. ஷிப்ட் நேரம் போக மீதி நேரம் பஸ் ஏறி தி நகர் வருவேன். அங்கு இருக்கும் சினிமாக்காரர்களின் முகவரியை வைத்துக் கொண்டு, ஒவ்வொரு வீடாக தேடிப்போய், உதவி இயக்குனராக வாய்ப்பு கேட்பேன். கேட்டில் நிற்கும் வாட்ச்மேனை மட்டும்தான் நம்மால் பார்க்க முடியுமே தவிர, தேடி வந்த அந்த இயக்குனரை பார்க்க முடியாது. எல்லாம் பெரிய பெரிய பங்களா. பெரிய பெரிய இரும்பு கதவு. எப்படி அந்த கதவை திறந்து கொண்டு அதன் உள்ளே இருப்பவர்களின் மனதில் இடம் பிடிப்பது? ஒன்றும் புரியவில்லை.
இதில் நம் தோற்றம் வேறு வெகு சாதாரணம்.
சரி, இந்த ரூட்டுதான் ஒர்க் அவுட் ஆக வில்லை. வேறு ரூட்டை பிடிப்போம் என யோசிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் தோன்றியது, ஸ்டுடியோவிற்கு போனால் இவர்களை எல்லாம் எளிதில் சந்தித்து விடலாம் என்று. கோடம்பாக்கம் ஸ்டுடியோக்களை நோக்கிய என்னுடைய பயணம் தொடங்கியது. அப்போது வாஹினி, விஜயா கார்டன், ஏ வி எம், பிரசாத், அருணாசலம், பரணி, கற்பகம், சாரதா, மோகன் என ஏகப்பட்ட ஸ்டுடியோக்கள் உண்டு. எல்லா ஸ்டுடியோ வாசலிலும் வாட்ச்மேன்கள் உண்டு. அவர்களுடைய கெடுபிடிகளும் அதிகம். வீட்டு வாட்ச் மேன்களை விட இவர்கள் கடுமையானவர்கள். ஒரு எறும்பு நுழைவதாக இருந்தால் கூட அது சினிமாவில் நடித்த எறும்பாக இருந்தால்தான் அனுமதிப்பார்கள். இதென்னடா இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என தவித்து போவேன்.
நடந்தே ஒவ்வொரு ஸ்டுடியோ வாசலிலும் போய் நிற்பேன். நோ சான்ஸ்.
இந்த ஸ்டுடியோக்களில் சினிமாக்காரர்களை தவிர, வேறு நபர்களை அனுமதிக்கிறார்கள் என்றால் அது பத்திரிக்கைக்காரர்களை மட்டும்தான். அந்த ஒரு விஷயம் எனக்கு அடிஷனலாக தெரிய ஆரம்பித்தது. உடனே மூளை சுறுசுறுப்பாக வேலை செய்தது.
நாம் ஏன் ஒரு பத்திரிக்கையில் வேலைக்கு சேரக் கூடாது?
– தொடரும்…