“திரையுலக பயணம்” – 2| இயக்குநர் மணிபாரதி

 “திரையுலக பயணம்”  – 2| இயக்குநர் மணிபாரதி

மைக் மோகனின் கோபம்

பத்திரிக்கைகளில் சிறுகதை எழுதிக்கொண்டிருந்த எனக்கு, அந்த பத்திரிக்கைகளின் ஆசிரியர் யாரையாவது சந்தித்து ஆசிரியர் குழுவில் வேலை கேட்டால் என்ன என்கிற எண்ணம் எழுந்தது. அதே சமயம் அது சினிமா பத்திரிக்கையாக இருந்தால் மேலும் வசதியாக இருக்கும் என்கிற  எண்ணமும் தோன்றியது.

அப்படி யார் இருக்கிறார்கள் என யோசித்த போது தராசு ஷ்யாம் அவர்கள் நினைவிற்கு வந்தார். தராசுடன் இணைந்து திரைச்சுவை என ஒரு பத்திரிக்கையும் நடத்திக் கொண்டிருந்தார். வார இதழ். அவரிடம் அப்பாய்ன்ட்மென்ட் வாங்கி அவரை சந்தித்தேன். என்னுடைய நல்ல நேரம் அங்கு வேக்கன்சி இருந்தது என்பதுதான் ஆச்சரியம். விஷயத்தை கேட்டவர், இங்கு வேலை கேட்டு வருகிறவர்கள், பெரும்பாலும் சினிமா ஆர்வத்தில்தான் வருகிறார்கள். அதே ஆர்வத்தில்தான் நீங்களும் வந்திருக்கிறீர்கள். தப்பு இல்லை. ஆனால், ஒரு வருடமாவது நீங்கள் ஒர்க் பண்ண வேண்டும் என வேண்டு கோல் வைத்தார். நானும் சரி என ஒப்புக் கொண்டேன்.

மறுநாளே உதவி ஆசிரியராக  வேலையில் சேர்ந்தேன்.

முதல் பேட்டியே நடிகர் மோகனிடம்தான் எடுத்தேன். அன்று, சினிமாவில் பணியாற்ற வாய்ப்பு தேடி அலைந்த போது திறக்காத ஏவிஎம் ஸ்டுடியோவின் பெரிய கதவு, ஒரு பத்திரிக்கை நிருபராக உள்ளே போன போது, மரியாதையுடன் வரவேற்றது. அப்போது சன் டிவி, விஜய் டிவி போன்ற பிரைவேட் சேனல்களோ, யூ ட்யூப் சேனல்களோ கிடையாது. பத்திரிக்கை வாயிலாகதான் செலிபிரிட்டீஸ் மக்களை சென்றடைய முடியும்.

ஏவிஎம் ஸ்டுடியோவில் மோகன் நடிக்கும்  “வசந்தி“  படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. மோகனை சந்தித்து என்னை அறிமுகம் செய்து கொண்டு “கொஞ்சம் பேசலாமா“ எனக்கேட்டேன். உதவியாளரை அழைத்து தனியாக இரண்டு சேர் போட சொன்னார்.  ஷாட் கேப்பில் இருவரும் உட்கார்ந்தோம். முதல் கேள்வியாக “உங்கள் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைகிறதே“ என ஆரம்பித்தேன். அவருக்கு கோபம் வந்ததே பாருங்கள். “நா எத்தனை சில்வர் ஜூப்ளி படம் குடுத்துருக்கேன்.. உங்களுக்கு தெரியும்தான..“  என வானத்திற்கும் பூமிக்கும் தாண்டி குதித்தார். எனக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. ஒரு நடிகரின் கோபத்தை நேரடியாக பார்க்கும் முதல் அனுபவம். ஆனாலும், அந்த பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அடுத்து, அவர் அப்போது சொந்தக் குரலில் பேச ஆரம்பித்திருக்கிறார் என்பது தெரியாமல் “நீங்கள் சொந்தக் குரலில் பேசுவதில்லையே ஏன்“ எனக்கேட்டேன். அவர் என்னை மீண்டும் ஒருமுறை கோபமாக  பார்த்தார். கண்ணில் கணல் தெரித்தது. “போதும் சார், நாம இன்னொரு நாள் பேசலாம்“ என முடித்துக் கொண்டார். முதல் அனுபவம் தோல்வியில் முடிந்ததை நான் உணர்ந்தேன். கொஞ்ச நாள் கழித்துதான், அதே கேள்வியை “உங்கள் படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற வில்லையே“ என மாற்றி கேட்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன். அத்துடன், ஒரு நபரை பேட்டி எடுக்க வேண்டும் என்றால் அவரைப்பற்றி நன்றாக தெரிந்து கொண்டு, அதன் பிறகுதான் பேட்டி எடுக்க வேண்டும் என்கிற அடிப்படை விஷயத்தையும் தெரிந்து கொண்டேன். இப்போது கூகுளை தட்டினால் தகவல்கள் கொட்டி விடும். அப்போது அந்த வசதி கிடையாது. தேடித் தேடிதான் கண்டு பிடிக்க வேண்டும். மேலும்,  அவர்கள் சொல்லும் பதிலிலிருந்தே அடுத்த கேள்வியை உருவாக்கி விடலாம் என்கிற உத்தியும் தெரிய ஆரம்பித்தது.

இன்னொரு நாள், வாஹினி ஸ்டுடியோவில், ராஜாதிராஜா படப்பிடிப்பில் இருந்த நடிகை ராதாவை சந்தித்தேன். அவர் “உங்களதான் எதிர்பார்த்துகிட்டு இருந்தேன் வாங்க“ என்று கூறி தாம்தூமென்று குதித்தார். எனக்கு எதுவும் புரியவில்லை. நான் ராதாவின் மிகப்பெரிய ரசிகன்.  அவர்மேல் எனக்கு அளப்பெரிய மரியாதை உண்டு. கோபம் கொப்பளிக்கும் அவர் முகத்தைப் பார்த்ததும் தடுமாறிப் போனேன். பின், அவர் பேசியதில் நான் புரிந்து கொண்டது, எனக்கு முன்னால் இருந்த ரிப்போர்ட்டர், அவரைப்பற்றி தப்பு தப்பாக செய்தி போட்டிருக்கிறார் என்பதும், அதனால்தான் இந்த கோபம் என்பதும். அவரிடம் “நா இப்பதான் ஜாய்ன்ட்  பண்ணிருக்கேன்“ என்று  எவ்வளவோ எடுத்து கூறியும், அவர் காது கொடுத்து கேட்கவே இல்லை. அவ்வளவு கோபம். அந்த ரிப்போர்ட்டர் அப்படி என்ன எழுதினார் என்று தெரியவில்லை.

சத்தம் கேட்டு, செட்டிற்குள்ளிருந்து ராதாரவி வெளியே ஓடி வந்தார். அவரைப் பார்த்ததும் எனக்கு இன்னும் பயம் அதிகமானது. வில்லனாச்சே. ஹீரோ மோகனின் கோபத்தை பார்த்தே பயந்தவன்,  வில்லனின் கோபத்தால் என்ன ஆகப் போகிறேனோ என்கிற பயம் மேலும் அதிகரித்தது.  ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அவர் நிலமையை புரிந்து கொண்டு, எங்கள் இருவரையும் சமாதானப் படுத்தி வைத்தார். கோபம் குறைந்ததும் “என்ன கேக்கனுமோ கேளுங்க..“ என்றார் ராதா. கேள்விகளை அடுக்கினேன். பட் பட்டென்று பதில் சொன்னார். ராதாவுடன், அன்று தொடங்கிய நட்பு, இன்று வரை தொடர்கிறது. நடிகைகள் மிகவும் மென்மையானவர்கள். வீட்டிலும் சரி, படப்பிடிப்பிடிப்பிலும் சரி, சுற்றி இருப்பவர்கள் அவர்களை மகிழ்ச்சியாகவே வைத்திருப்பார்கள். அதில் ஏதாவது குறை வந்தது, இப்படிதான் விபரீதத்தில் போய் முடியும்.

இன்னொரு சம்பவம்.  பாண்டியராஜனும், சீதாவும் காதலிப்பதாக கிசுக்கிசு பரவிய நேரம். நான் பாண்டியராஜனிடம் அது குறித்து கேட்டேன். அவர் “அப்படியெல்லாம் எதுவும் இல்லை“ என மறுத்தார். நான் “நெருப்பு இல்லாம புகையாதே சார்“ என்றேன். அவர் கொஞ்சமும் யோசிக்காமல் “ஐஸ் புகையுதே“ என்றார். அவரது அந்த அறிவுபூர்வமான பதிலில், நான் அசந்து போனேன்.

“புதியபாதை“ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரம். பார்த்திபனும், சீதாவும் காதலிப்பதாக, செய்தி பரவிக் கொண்டிருந்தது. ஆனால், பார்த்திபனும், சீதாவும் “இல்லவே இல்லை“ என பத்திரிக்கைகளில் அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார்கள். பத்திரிக்கையாளன் என்பதையும் தாண்டி, நான் சீதாவிற்கு நல்ல நண்பன். (என்னிடமிருந்து பாலகுமாரன், சுஜாதா நாவல்களை வாங்கி அவர் படிப்பதுண்டு) “ராஜநடை“ படப்பிடிப்பில் இருந்த சீதாவிடம், நட்பாக   “என்ன செய்தி உண்மையா“ எனக் கேட்டேன். அவர் “ஆமாம்“ என தலையசைத்து “அவரோட பறக்குறதுக்கு நேரம் பாத்துகிட்டு இருக்கேன்..“ என்றார். அதே வாரத்தில், அதற்கு தொடர்புடைய வார்த்தைகளுடன், குமுதத்தில் செய்தி வந்தது. சீதா,  நான்தான் குமுதம் நிருபரிடம் போட்டுக் கொடுத்து விட்டேன் என நினைத்து, என்னிடம் பயங்கரமாக கோபித்துக் கொண்டார். குமுதம் நிருபருக்கு எப்படி தகவல் தெரிந்தது என்பது எனக்கு தெரியாது. சீதாவின், அந்த கோபம் தீர அதிக நாள் ஆனது. பின்னாளில், ராஜ் டி வியில், அவரை வைத்து ஆறு மனமே ஆறு என்கிற தொடரை இயக்கினேன்.

இப்படி, அன்று முன்னணியில் இருந்த ரஜினி, கமல் சத்தியராஜ். விஜயகாந்த். பிரபு, கார்த்திக், இராமராஜன், கவுதமி, ராதிகா, அமலா, நிரோஷா, சில்க் ஸ்மிதா, பாணுப்ரியா, பாக்யராஜ், டி ராஜேந்தர், பார்த்திபன், என அத்தனை பேரையும் பேட்டிக் கண்டு எழுதினேன்.  பத்திரிக்கையும் விற்பனையில் அதிகரித்தது.  வெறும் பேட்டியாக மட்டும் இல்லாமல் வித்தியாசமான முயற்சிகளையும் மேற்கொள்வேன். உதாரணத்திற்கு, ஒருமுறை, மனோரமா, ஸ்ரீவித்யா, ரேவதி மூன்று பேரையும் சந்திக்க வைத்தேன். மூன்று பேரும் சினிமாவில் மூன்று தலை முறைகளை சேர்ந்தவர்கள். அவரவர் காலத்து சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொள்ள சொன்னேன். அப்போது செல்ஃபோன் கிடையாது. போனில்தான் புரோக்ராம் பண்ணுவேன். ஒருமுறை ஒப்புக் கொண்டால் பெரும்பாலும் கேன்சல் பண்ண மாட்டார்கள். ஸ்ரீவித்யா வீட்டில்தான் சந்திப்பு. சொன்ன தேதியில், சொன்ன நேரத்தில் மனோரமா, ரேவதி இருவரும் ஸ்ரீவித்யா வீட்டிற்கு  வந்து சேர்ந்தார்கள். கலந்துரையாடல் களை கட்டியது. முடிந்ததும் ஸ்ரீவித்யா அருமையான ஒரு லஞ்சுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அது இன்றளவும் மறக்க முடியாத ஒரு சாப்பாடு. நாங்கள் மூவரும் சாப்பிட்டு முடித்து புறப்பட்டோம். ரேவதி, என்னை அவருடைய காரில், திரைச்சுவை ஆபிஸில் கொண்டு வந்து இறக்கி விட்டுப் போனார்.

ஸ்ரீவித்யா ஒரு சாய்பாபா பக்தை. ஒருமுறை அவருக்கு நிகழ்ந்த பாபாவின் அதிசயத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

  • தொடரும்…

முந்தைய பகுதி – 1 | அடுத்தபகுதி – 3

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...