கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 14 | பாலகணேஷ்

 கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 14 | பாலகணேஷ்

கரைந்த நிழல்கள்

அசோகமித்திரன்

அதிகாலை மூன்று மணிக்கு வேன் வர, புரொடக்ஷன் மேனேஜர் நடராஜன் ஸ்டுடியோவுக்கு வருகிறான். அன்றைய தினம் அதிகாலையில் நடக்கவிருக்கும் அவுட்டோர் ஷுட்டிங்கிற்கான ஏற்பாடுகளை பரபரப்பாக கவனிக்கிறான். தன் உதவியாள் சம்பத்திடம் கேமராமேன் கோஷையும், டைரக்டர் ஜகந்நாத ராவையும் பிக்கப் செய்து கொண்டு வரச் சொல்கிறான். ஜகந்நாத ராவின் உதவியாளர் ராஜ்கோபால் சம்பத்துடன் சேர்ந்து கொள்ள, அவுட்டோர் ஷுட்டிங் நடக்கிறது. மதியம் ஸ்டுடியோவில் ஷுட் பண்ண வேண்டிய பகுதிக்காக ஸ்டுடியோ திரும்புகிறார்கள்.

சம்பத் ஊரிலிருந்து வந்திருக்கும் தன் உறவினர்களை ஷுட்டிங் பார்க்க அழைத்திருக்க, அவர்கள் வந்து ஒருபுறம் காத்திருக்கின்றனர். கதாநாயகி ஜயசந்திரிகா வராததால் ஷுட்டிங் தடைபடுகிறது. ஸ்டுடியோவுக்கு வந்த தயாரிப்பாளர் ரெட்டியாரிடம் விஷயம் சொல்லப்பட, அவர் சம்பத்தை உடனழைத்துக் கொண்டு காரை ஜயசந்திரிகாவின் வீட்டுக்கு விடச் சொல்கிறார்.

ரெட்டியார் பழம்பெரும் தயாரிப்பாளர். தற்சமயம் அவரது பொருளாதார நிலை கடும் நெருக்கடியில் இருந்தது. அன்றாட ஷுட்டிங்கிற்கே மிகுந்த சிரமத்தின் பேரில் பணம் திரட்டிக் கொண்டிருந்தார் அவர். எனவே கோபத்துடன் ஜயசந்திரிகா வீட்டிற்கு வந்து அவளிடம் கடுமையாக (சற்றே அநாகரிகமாகவும்) பேசி, ஷுட்டிங்கிற்கு வரச் சொல்லி மிரட்டுகிறார். அவள் அவருடன் ஷுட்டிங்கிற்குப் புறப்பட்டு வர, வீட்டு வாசலில் மயக்கமடைந்து விழுகிறாள்.

நிலையான வேலை பார்க்காமல் சினிமாத் தொழிலில் இருப்பதால் உதவி இயக்குனர் ராஜ்கோபாலுக்குத் திருமணம் தள்ளிப் போகிறது. உறவினர் ஒருவர் அவன் அம்மாவையும் அவனையும் சந்தித்து திருமணப் பேச்செடுத்து விட்டுச் செல்கிறார். ராஜ்கோபால், ஜெகந்நாத ரெட்டியை சந்திக்க, அவன் ரெட்டியார் தலைமறைவாகி விட்டதால் படம் நின்று விட்டதாகவும், தான் ஃபாரின் போகப் போவதாகவும் சொல்கிறான். எடிட்டிங் அசிஸ்டெண்ட் சிட்டி, ராஜ்கோபாலை ராம்சிங் என்ற இயக்குனரிடம் சேர்த்துவிட அழைத்துச் செல்கிறான். ஷுட்டிங் பரபரப்பாக நடந்து கொண்டிருக்க, சம்பத் அங்கே புரொடக்ஷன் மேனேஜராக இருப்பதை ராஜ்கோபால் பார்க்கிறான். முன்னொரு சமயம் ராம்சிங்கின் படத்தை வெளிநாட்டுக்காரர் ஒருவர் கேலி செய்தபோது ராஜ்கோபால் உரத்துச் சிரித்தது இப்போது அவனைப் பார்க்கையில் ராம்சிங்குக்கு நினைவு வந்து விடுகிறது. ஆனால் ஷுட்டிங்கிலிருந்த கதாநாயகி ஜயசந்திரிகா, அவனை அடையாளம் கண்டு கொண்டு நெருங்கிப் பழகுகிறாள்.

ராம ஐயங்கார் ஒரு முன்னணித் தயாரிப்பாளர். அவரது ஸ்டுடியோவில்தான் ரெட்டியாரின் ஷுட்டிங் முன்பு நடந்திருந்தது. ஸ்டுடியோவை தற்போது அவர் விரிவுபடுத்திக் கட்டிக் கொண்டிருக்க, நடேச மேஸ்திரி என்பவன் அதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கிறான். ராம ஐயங்கார் முன்பு ரெட்டியார் எடுத்திருந்த முக்கால்வாசிப் படத்தை தன் ஆட்களுடன் பார்க்கிறார். அந்தக் கதையில் சில மாற்றங்கள் செய்து தற்போது ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்யும்படி தன் குழுவைச் சேர்ந்த பண்டிட்ஜி என்பவரிடம் உத்தரவிடுகிறார். அவர் எடுத்திருக்கும் இந்திப் படம் மும்பையில் வெளியாவதில் சிவசேனாக் காரர்களால் சிக்கல் ஏற்பட்டிருப்பது அவருக்குத் தெரியப்படுத்தப்படுகிறது. அவரது பிரம்மாண்டமான விளம்பர ஏற்பாடுகள் யாவும் வீணாகி விடுகின்றன.

ராம ஐயங்காரின் மகன் பாச்சா இரவு எஸ்டேட் வீட்டில் குடித்துக் கொண்டிருக்கிறான். அவனை ராம ஐயங்கார் சந்தித்து தன் சாம்ராஜ்யத்தை அவன் நிர்வகிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ள, அவன் மறுத்து விடுகிறான். பணத்தின் சபலத்திற்கு ஆட்படாமல் வாழ விரும்புவதாக அவன் சொல்ல, தான் பூஜ்யத்திலிருந்து ஆரம்பித்து வளர்த்த சாம்ராஜ்யத்தை அவன் வளர்க்கா விட்டாலும் அப்படியே பார்த்துக் கொண்டால் போதும் என்னும் ராம ஐயங்கார், அவனை பொறுப்பற்ற தன்மைக்காக கடிந்து கொண்டு சென்று விடுகிறார்.

ஃபிலிம் பிஸினஸ், ரியல் எஸ்டேட் எல்லாம் கலந்துகட்டி செய்பவன் நான். சோமநாதன் என்கிற கதாசிரியர் என்னிடம் வர சம்பத் எடுக்கப் போகும் புதிய படத்திற்கு கதை கேட்டிருந்ததால் புரொட்யூசர்களைப் பார்த்து கதை சொல்லும்படி சொல்கிறேன். அவர் என் தெருவில் காலியாக இருந்த வக்கீல் வீட்டு மாடிக்கு மல்லிகா என்ற பெண்ணை யாரோ குடி வைத்திருப்பதாக தகவல் சொல்லிச் செல்கிறார். நான் பனகல் பார்க் வர என் நபர் சேட் என்னிடம் ராம ஐயங்கார் எடுத்த `கதிர் விளக்கு’ (ரெட்டியார் பாதியில் விட்ட படம்) தோல்வி என்றும், ஆனால் ராம ஐயங்கார் எடுத்து இந்திப் படம் வட நாட்டில் எதிர்பாராத அளவுக்கு நன்றாக ஓடுவதாகவும் சொல்கிறான்.

சம்பத் வர, அவனுடன் காரில செல்லும் போது நடிகை ஜயசந்திரிகா, ராஜ்கோபாலைத் திருமணம் செய்து கொண்டு விட்ட விஷயத்தைச் சொல்கிறான். புரொட்யூசர்கள் கதைக்கு அவசரமில்லை. உடனே ஒரு ஆபீசும் அதைப் பார்த்துக் கொள்ள ஆளும் வேண்டும் என்கிறார்கள். நான் சம்பத்திடம் நடராஜன் சரிப்படுவானா என்று கேட்க, அவர் மிகவும் வறுமையில் வாடுவதாகவும், கால்கள் இரண்டும் வீங்கிப் போய் ஆஸ்பத்திரிக்குச் செல்லவும் பணம் இல்லாமல் தவிக்க, தான் உதவியதாகவும் சம்பத் சொல்கிறான். வேறு நபர் பார்க்கும்படி நான் சம்பத்திடம் சொல்ல, அவன் தான் புது ஆபீஸ் பார்த்திருப்பதாகச் சொல்லி ஸ்டேஷன் பார்டர் ரோடில் 68ம் நம்பர் வீடு என்கிறான்.

சோமநாதன் சொன்னது நினைவுவர, வக்கீல் வீட்டு மாடியா என்று நான் கேட்க, ஆமாம் என்றுவிட்டுச் செல்கிறான். நான் என் அறைக்கு வர, அசிஸ்டெண்டுகள் யாருமில்லை. என் பீடிக் கட்டிலிருந்து நான்கைந்தை உருவிக் கொண்டு சென்று விட்டிருக்கின்றனர்.

அசோகமித்திரனின் `கரைந்த நிழல்கள்’ கதையின் இந்தச் சுருக்கத்தைப் படித்ததுமே இது வழக்கமான கதை இல்லை  என்பதைப் புரிந்திருப்பீர்கள். சில கதாபாத்திரங்கள், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், முடிவு என்கிற வழக்கமான கதையின் இலக்கணங்களுக்குள் வராமல், சினிமா உலகத்தை, அதன் சிறப்புகளை, அழுக்குகளை அனைத்தையும் பரந்துபட்ட பார்வையில் பிரித்து மேய்ந் திருக்கிறார் அசோகமித்திரன்.

இது தொடர்கதையாக வெளிவந்த போது `கதை புரியவில்லை’ என்று திட்டியவர்கள் சிலர்; படைப்பின் சிறப்பைப் புரிந்து கொண்டு பாராட்டியவர்கள் பலர் என்கிறார் அசோகமித்திரன் இதன் முன்னுரையில். அவரது குறிப்பிடத்தக்க நாவல்களுள் ஒன்றான இந்த `கரைந்த நிழல்கள்’ நாவலை முழுமையாக ரசித்துப் படித்தால் பாராட்டுபவர்களின் பட்டியலில் நிச்சயம் நீங்களும் இருப்பீர்கள்.

முந்தையபகுதி – 13 | அடுத்தபகுதி – 15

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...