கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 9 | பாலகணேஷ்

 கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 9 | பாலகணேஷ்

என்னது..? குடும்பக் கதைகளில் உணர்ச்சிகளைப் பொழிந்து தள்ளகிற எழுத்தாளர் லக்ஷ்மி சரித்திரக் கதைகூட எழுதியிருக்கிறாரா என்ன? என்று புருவங்களை உயர்த்துவீர்கள் தலைப்பைக் கேட்டதுமே. இந்த நாவல் அவரின் எழுத்துக்களில் மாறுபட்டதாக சரித்திர, சமூகக் கதையாகப் பரிமளித்திருக்கிறது. சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு நடந்த கதை என்கிற குறிப்புடன் 1956ல் இதை எழுதியிருக்கிறார் லக்ஷ்மி அவர்கள். இப்போதும் படிப்பதற்கு போரடிக்காத இந்தக் கதை இங்கே உங்களுக்கு கேப்ஸ்யூலாக!

வீரத்தேவன் கோட்டை

– லக்ஷ்மி –

அந்த திரைப்படக் குழு காவிரிக் கரையில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருக்கிறது. உணவு இடைவேளை விடப்பட, அனைவரும் உணவருந்தியபடியே அரட்டையடிக்கின்றனர். தனக்கு முன் தென்பட்ட இடிந்த கோட்டையைக் கண்ட கதாநாயகி காமினி, அதைப் பறறிக் கேட்க, அதற்கு ‘வீரத்தேவன் கோட்டை’ என்றும், அந்நாட்களில் வீரத்தேவன் பெயர் கேட்டால் அழுத பிள்ளையும் வாய் மூடும் என்றும் கூறுகிறார். ‘இந்தக் கோட்டை போரில் அழிந்திருக்குமோ’ என இயக்குனர் கேட்க, ‘ஒருவகையில் பெரும் போர்தான். அன்பை வெல்ல இருவர் போராடினார்கள். நூறு வருஷங் களுக்கு முன்பு…’ என்று கதையை சொல்லத் தொடங்குகிறார் கதாசிரியர்.

காவிரி பெருக்கெடுத்தோடும் கொள்ளிடக்கரையில் திருவிழா நடந்து கொண்டிருக்க, நண்பர்கள் வீரத்தேவனும் இருளப்பனும் அதைப் பார்த்து மகிழ்ந்தபடி நடககின்றனர். அங்கே கறுப்பாக, நீள் வட்ட முகமும், சிவந்த அதரங்களும், முத்துப் பற்களையும் கொண்ட அழகியொருத்தியைக் கண்டு வீரத்தேவன் மயங்குகிறான். பவளவல்லி என்கிற பெயர் கொண்ட அவள் இதயமும் வீரத்தேவனை நாடுகிறது. திருவிழா முடிந்தபின் அவளைக காண விருமபி பதினைந்து தினங்களுக்கும் மேலாக இருளப்பனுடன் அவளைத் தேடியலைகிறான் வீரத்தேவன். ‘பொன்னம்பலத் தேவர்’ என்கிற எதிரியின் எல்லையில் அந்தப் பெண்ணை மீண்டும் கண்டு அவளுடன் பேச்சுக் கொடுக்கின்றனர். இருளப்பனின் பேச்சில் கோபமடைந்து பவளவல்லி சென்று விடுகிறாள்.

அதேநேரம் அரண்மனையில் சைவப் பழமாய் காட்சி யளிக்கும் வீரத்தேவனின் தாய் மங்களாம்பிகையைக் காண ஒரு கிழவி வந்திருப்பதாக தோழியர் சொல்ல, அவள் முகம் வெளிறிப் போகிறது. ‘ஏன் இங்கேயெல்லாம் வந்தாய்’ என்று கிழவியை அவள் கடிந்து கொள்ள, கிழவி பணம் கேட்கிறாள். ‘அந்த ஒலையைத் தந்தால் நிறையப் பணம் தருவேன்’ என மங்களாம்பிகை சொல்ல, ‘அது பிறகு, இப்போது கொஞ்சம் பணம் தா’ என்று அவளை மிரட்டி பணம் பறித்துச் செல்கிறாள் கிழவி.

அன்றைய படப்பிடிப்பு முடிந்து விட்டதால் கதையை நிறுத்திய கதாசிரியர் மறுநாள் லன்ச் பிரேக்கில் மீண்டும் தொடர்ந்து சொல்கிறார்.

அடுத்த சில தினங்களில் பவளவல்லி-வீரத்தேவன் காதல் நன்கு வளர்ந்து விட்டிருக்கிறது. தன் இயற்பெயரான சுந்தரத்தேவன் என்று அவளுடன் அறிமுகமாகிப் பழகி வருகிறான். அவள் வீட்டுக்கு தாமதமாகத் திரும்புவதைக் கண்ட பொன்னம்பலத் தேவர், அவளைக் கண்டித்து வீரத்தேவன் என்பவன் தன் பரமவைரி என்று கூறி, பரம்பரைக் கதையைச் சொல்கிறார். ‘‘கொள்ளிடத்தின் மறுகரையை ஆண்டு வந்த சிவஞானத் தேவனின் மகன் இந்த வீரத்தேவன். பத்தாண்டுகளுக்கு முன் சிவஞானத் தேவர் சிலரால் தாக்கப்பட்டு மரணமடைந்தார். அதை நான் செய்ததாக பலர் சொல்கிறார்கள். நான் செய்யவில்லையே என்பதுதான் என் வருத்தமும். ஆனாலும் வீரத்தேவனின் உதிரத்தில் என் பழி தீர்த்துக் கொள்வேன். வீரத்தேவனின் தாய் மங்களாம்பிகை பெண்ணாகப் பிறந்த ஒரு பேய். என் மகனையும் மருமகளையும் கொன்று தீர்த்த அந்தக் குடும்பத்தை பழி தீர்ப்பேன்’’ என்று குமுறுகிறார்.

‘‘உன் மாமன் பாண்டித்துரையும், சிவஞானமும் நெருங்கிய நண்பர்கள். ஒரு பெண் விவகாரமாக அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு எதிரிகளானார்கள். உன் மாமி பூரண கர்ப்பிணியாயிருக்கையில் அவளுடன் ஒரு திருமணத்திற்குச் சென்று திரும்பிய உன் மா‌மனையும் மாமியையும் இருளில் சில ஆட்கள் தாக்கிக் கொன்று விட்டனர். அவர்கள் அணிந்திருந்த நகைகளை சில காலம் சென்றபின் மங்களாம்பிகை குறைந்த விலைக்கு விற்றாள் என்பதால் அதைச் செய்தது இன்னாரென விளங்கிற்று. நம் குடும்ப நகைகளில் மச்ச சின்னம் பொறித்திருக்கும்’’ என்கிறார் பொன்னம்பலத் தேவர். பவளவல்லி அவசரமாக ஓடிச் சென்று வீரத்தேவன் பரிசளித்த பச்சைக்கல் மோதிரத்தை எடுத்துப் பார்க்கிறாள். மச்சச் சின்னம் கண் சிமி்ட்டுகிறது அங்கே.

படப்பிடிப்பு மும்முரமாக நடைபெறவே கதையை இத்துடன் விட்டுவிட்டு மறுதினம் மீண்டும் தொடர்கிறார் கதாசிரியர்.

அதன்பின் வீரத்தேவன் தன் காதலியைச் சந்திக்க வர, பவளவல்லி, தான் பொன்னம்பலத் தேவரின் பேத்தி என்பதால் இந்தக் காதல் நிலைக்காது என்று கண்ணீருடன் சொல்லவிட்டு ஓடி விடுகிறாள். அதற்குப் பதினைந்து தினங்கள் கழித்து இரவில் சில முரட்டு மனிதர்கள் எதிர்பாராதவிதமாக பொன்னம்பலத் தேவரைத் தாக்கி மயக்கமடையச் செய்து, பவளவல்லியைத் தூக்கிச் செல்கின்றனர். கண் விழிக்கும் பவளவல்லியை சந்திக்கும் மங்களாம்பிகை, அவள் கறுத்த நிறத்தை கேலி செய்துபேசி, அழவைத்து, தனக்குப் பணிப்பெண்ணாக இருக்கும்படி கூறுகிறாள். வீரத்தேவன் அவளிடம் ‘சிலகாலம் அம்மாவுக்கு பணிப்பெண்ணாக இருந்து அவள் மனம் மகிழச் செய்தால் உன்னை மன்னித்து நம் கல்யாணத்துக்கு சம்மதிப்பாக சொல்லியிருக்கிறாள், ஆகவே வேறு வழியில்லை’ என்று கடுமையாக சொல்லிச் செல்கிறான்.

மங்களாம்பிகைக்குப் பணிய மறுத்து கைதியாக பவளவல்லி படும் துன்பம் கண்டு பொறாமல், அவளுக்கு ரகசியமாக உதவ முன்வருகிறான் இருளப்பன். தன் நம்பிக்கைக்குரிய சேடிப் பெண் மூலம் இரவு அவளைத் தப்ப வைப்பதாக செய்தியனுப்புகிறான்.  இரவில் அந்தப் பணிப்பெண் வழிகாட்டி அழைத்துச் செல்ல, இருவரும் பதுங்கி தோட்டத்துக்கு வரகின்றனர். பின்கதவை நெருங்குவதற்குள் யாரோ நடந்து வரும் காலடி ஓசை‌ கேட்கவே இருளில் பதுங்குகின்றனர். முக்காடிட்டுக் கொண்டு ஒரு இருள் உருவம் வருவதைக் கண்டு மிரள்கின்றனர். அது முக்காட்டை நீக்க… அந்தக் கிழவி! அவள் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு தன் இடுப்பிலிருந்த துணிப்பையை எடுத்து அருகிலிருந்த திரைச்சீலை மடிப்பில் ஒளித்து வைத்துவிட்டு நிற்கிறாள். தோழிப் பெண் வந்து ராணி காத்திருக்கிறார்கள் என்று கூறி அவளை அழைத்துச் செல்ல, பவளவல்லி மெல்ல அந்த துணிப்பையை கைப்பற்றுகிறாள். அதற்குள் மங்களாம்பிகை, கிழவியுடன் உரத்த குரலில் பேசுவது கேட்கிறது. அவர்களிருவரும் பயந்து ஓடி ஓரிடத்தில் வெளியேற வழியின்றி கதவு பூட்டியிருப்பதைக் கண்டு மறைந்து கொள்கின்றனர்.

சத்தம் கேட்டு அங்கே வரும் மங்களாம்பிகை அவர்களைக கண்டுபிடிக்கவில்லை. பின்னாலேயே கிழவி வருகிறாள். இம்முறை அவளுக்கு பெரும்பணம் தந்து விட்டதால் ஓலையைத் தரும்படி மங்களாம்பிகை மிரட்ட, மலடியானவள் ஒரு மகனுக்குத் தாயாக வேண்டுமானால் கஷ்டங்களை அனுபவிக்கத்தான்வேண்டும் என்று சிரிக்கிறாள் கிழவி. ‘‘உனக்கு குழந்தை பிறக்காததால் வேறு கல்யாணம் செய்ய உன் கணவர் திட்டமிட்டிருந்தார். அப்படி நடந்திருந்தால் இரண்டாவது மனைவிக்கு பணிப்பெண்ணாய் இருந்திருப்பாய். மருத்துவச்சி நான் சூழ்ச்சி செய்து நீ கர்ப்பமாய் இருப்பதாக பொய் சொன்னேன்.திருட்டுத்தனமாக ஒரு குழந்தையைப் பெற்று உன் அறையில் ஒளித்துவைத்து அது உனக்குப் பிறந்தது என்று உறுதிப்படுத்தினேன். உண்மையில் குழந்தையைப் பெற்றவள் ஒரு ஓலையில் அதன் பூர்வோத்திரங்களை எழுதி அவன் வயது வந்ததும் கொடுக்கச் சொல்லிவிட்டு இறந்தாள். அந்த ஓலைக்கு நீ என்ன கொடுத்தாலும் தகும்’’ என்கிறாள். கிழவிக்கு இன்னும் பணம் தந்து ஓலையைத் தரச் சொல்ல, அவள் வைத்த இடத்தில் துழாவி ஓலை காணவில்லையன்று மிரள, கோபமிகுதியில் மங்களாம்பிகை கிழவியின் கழுத்தை நெறித்துக் கொன்று விடுகிறாள். பிணத்தை திரைச்சீ‌லையின் பின் மறைத்துவிட்டு அவள் செல்ல, பவளவல்லி அங்கிருந்து வெளியேறி, இருளப்பன் உதவியுடன் தப்புகிறாள்.

கொள்ளிடக்கரையில் அவளைச் சேர்த்த இருளப்பன், பரிசல் ஏற்பாடு செய்யச் செல்ல, ஆவல் தாங்காமல் அந்த ஓலையைப் பிரித்துப் படிக்கிறாள். அது புதிய கதை சொல்கிறது. ‘‘நான் கொள்ளிடக் கரையில் சில தினங்கள் முன்பு படுகொலை செய்யப்பட்ட பாண்டித்துரையின் பத்தினி பர்வதவர்த்தினி. நான் இனி பிழைப்பேன் என்று தோன்றவில்லை. எங்களுக்கு இந்த நிலை வரும்படி செய்த அந்தப் பாவிகளை என் மாமன் பழிவாங்குவார். ஆகவே, இதைப் படிக்கும் அன்பு சகோதரரே, என் மைந்தனை யையும் இந்த ஓலையையும் என் மாமா பொன்னம்பலத் தேவரிடம் ஒப்படைக்கும்படி வேண்டுகிறேன். அதற்கு பிரதியாக என் கைகளில் அணிந்திருக்கும் பச்சைக்கல் பதித்த கங்கணங்கள் இரண்டையும் பரிசளிக்கும்படி என்னைக் காத்த அம்மையாரிடம் சொல்லியிருக்கிறேன்.’’ என்று எழுதப்பட்டிருக்கிறது. அத்துடன் உள்ள மற்றொரு ஓலையில் பொன்னம்பலத் தேவருக்கு அவள் எழுதிய கடிதம் இருக்கிறது. அதில் இந்த விஷஜுரத்தில் தான் பிழைக்க மாட்டேன் என்றும், தன் கணவரைக் கொன்றது சிவஞானத்‌ தேவரின் ஆட்கள் என்பதை அவர்கள் பேசியதைக் கேட்டதாகவும், அவரைப் பழிவாங்குமாறும், அவள் மகனின் மார்பில் பொற்காசு அளவில் மச்சமும், கால்களில் ஆறு விரலும் காணப்படுகின்றன என்று அடையாளங்களும் எழுதப்பட்டிருக்கிறது.

ஓலைகளைப் படித்து முடித்ததும் ஸ்தம்பித்துப் போகிறாள் பவளவல்லி. அதற்குள் சில ஆட்களுடன் வந்த வீரத்தேவன் அவளை எதுவும் பேச விடாமல் மீண்டும் கவர்ந்து செல்கிறான். அங்கே சென்றதும் பவளவல்லி தான் தப்புவதற்காக எதிரில் வந்த கிழவியைக் கொன்று விட்டு ஓடிவிட்டாள் என்று மங்களாம்பிகை குற்றம் சாட்ட, கோபத்தில் கொந்தளிக்கும் பவளவல்லி, வீரத்தேவனிடம் உண்மைகளைப் போட்டு உடைக்கிறாள். அதன் வீரியம் தாங்காமல் மயக்கமாகிறாள் மங்களாம்பிகை.

இங்கே கதையை நிறுத்திவிட்டு, படப்பிடிப்பு தொடர்ந்து நடப்பதால் இரண்டு தினங்கள் கழித்து நடிகை காமினியிடம் கதையைத் தொடந்து சொல்கிறார் கதாசிரியர்.

மூர்ச்சை தெளிந்ததும் ஓர் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டு ‘தன் பரமவைரியின் மகனைத் தத்தெடுத்து வளர்த்து விட்டோமே’ என்ற அதிர்ச்சியைத் தாளாது, வைரமோதிரத்தைப் பொடி செய்து விழுங்கி உயிரை விடுகிறாள். இந்த உண்மைகளை ஜீரணிக்க இயலாமல் பல தினங்கள் அதிர்ச்சியுடன் திரியும் வீரத்தேவன், பின் மனம் தேறி, பவளவல்லியைத் திருமணம் செய்து கொண்டு தன் பாட்டனார் பொன்னம்மபலத் தேவரைச் சந்திக்கிறான். ‘‘என் குலக்கொழுந்தே! உன்னை யாரென்று தெரியாமல் வெறுத்தேனே!’’ என்று அவனைக் கட்டியணைக்கிறார் அவர்.

‘‘இதுதான் இந்த வீரத்தேவன் கோட்டையின் கதை’’ என்று முழுவதுமாகச் சொல்லி முடிக்கிறார் கதாசிரியர். அன்றுடன் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிவதனால் அனைவரும் புறப்படுகின்றனர்.

முந்தையபகுதி – 8 | அடுத்தபகுதி – 10

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...