கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 8 | பாலகணேஷ்

 கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 8 | பாலகணேஷ்

நகைச்சுவை நாவல் என்கிற வார்த்தையை யாராவது சொன்னால் உடனே மனதில் பளிச்சிடும் பெயர் ‘வாஷிங்டனில் திருமணம்’ என்பதுதான். எழுதப்பட்டு ஆண்டுகள் நிறையக் கடந்துசென்று விட்டாலும் இன்றளவும் புதிதாகப் படிப்பவர்களை வாய்விட்டுச் சிரிக்க வைக்கும், மீண்டும் மீண்டும்  படிப்பவர்களைப் புன்னகையில் ஆழ்த்தும் இந்த நகைச்சுவைப் புதினத்திற்கு இணை சொல்ல மற்றொன்று இல்லை.

வாஷிங்டனில் திருமணம்

– சாவி

அமெரிக்க கோடீஸ்வரி ராக்பெல்லரின் நாத்தனார் பெண் லோரிட்டாவும், யுனெஸ்கோவில் பணிபுரியும் மூர்த்தியின் மகள் வசந்தாவும் கல்லூரித் தோழிகள். மிஸஸ் ராக்பெல்லரின் நாத்தனார் கணவரான ஹாரி ஹாப்ஸ், வசந்தாவின் திருமணத்துக்காக குடும்பத்துடன் கும்பகோணம் வருகிறார். அந்தத் திருமணத்தை அதிசயமாகப் பார்க்கும் அவர், அது பற்றிய குறிப்புகளையும் (சாப்பாட்டில் அப்பளம் என்ற வட்டமான ஒரு வஸ்துவைப் போடுகிறார்கள். அதை எப்படி வட்டமாகச் செய்கிறார்கள், எப்படி நொறுங்காமல் செய்கிறார்கள் என்பதெல்லாம் விளங்காத மர்மங்களா யிருக்கின்றன) எழுதிக் கொள்கிறார்.

அந்தக் குறிப்புகளைப் படித்தும், தென்னிந்தியக் கல்யாண விவரங்களை ஹாரிஹாப்ஸ் தம்பதிகள் சொல்லக் கேட்டும் மிஸஸ் ராக்பெல்லருக்கு ஒரு தென்னிந்தியத் திருமணத்தைப் பார்க்கும் ஆசை ஏற்படுகிறது. அமெரிக்காவில் ஒரு தென்னிந்தியத் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்யுங்கள் என்று உத்தரவிடுகிறார். தென்னிந்தியாவில் பெண் (ருக்மணி)யின் குடும்பத்தினர் அம்மாஞ்சி, சாம்பசிவம் என்கிற இரு சாஸ்திரிகளுடன் அமெரிக்கா வருகின்றனர். பெண் வீட்டைச் சேர்ந்த பஞ்சு கல்யாண ஏற்பாடுகளுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறான். விமானத்தில் பணிப் பெண்ணாக இருக்கும் லலிதாவை பஞ்சுவின் அத்தைக்குப் பிடித்துப் போகிறது. பஞ்சுவுக்கும்தான்!

மணமகன் (ராஜகோபாலன்) குடும்பத்தினர் தனி விமானத்தில் ‌அமெரிக்கா வருகின்றனர். இந்தியாவிலிருந்து தனி விமானங்களில் கல்யாணத்துக்கு வேண்டிய அனைத்துப் பொருட்களும், நபர்களும் வரவழைக்கப்படுகின்றனர். பந்தக்கால் நடுதல், அப்பளம் இடுவது, ஜானவாசம், சம்பந்தி சண்டை என்று தென்னிந்தியத் திருமணத்தின் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் அமெரிக்கர்களுக்குப் புதிதாக இருக்க பல கலாட்டாக்கள் அரங்கேறுகின்றன. இவற்றுக்கிடையில் பஞ்சு-லல்லியின் காதலும் வளர்கிறது. இறுதியில் திருமணம் நன்கு நடந்தேற, ராக்பெல்லர் சீமாட்டி அனைவருக்கும் பரிசுப் பொருள்களும், சன்மானங்களும் கொடுத்து, கலங்கிய கண்களுடன் வழியனுப்பி வைக்கிறாள்.

-கதைச் சுருக்கம் என்று சொன்னால் சாவி அவர்கள் எழுதிய ‘வாஷிங்டனில் திருமணம்’ கதையை இவ்வளவுதான் சொல்ல முடியும். பல கலாட்டாக்கள் என்று நான் இங்கு குறிப்பிட்டிருக்கும் ஒவ்வொன்றும் சாவி அடிக்கும் நகைச்சுவை ஸிக்ஸர்கள். அதை அனுபவிக்க முழுப் புத்தகத்தையும் நீங்கள் படித்தாக வேண்டும். சாம்பிளுக்காக சில இங்கே உங்களுக்காக:

தவில் என்பது டபுள் ஹெட்டட் இன்ஸ்ட்ரூமென்ட். இதை வாசிப்பவர் ஒரு பக்கத்தை ஸ்டிக்கால் ‘பீட்’ செய்து கொண்டு மறு பக்கத்தைக் கையால் அடிக்கிறார். எப்படி அடித்தாலும் தவில் கிழிவதில்லை. தாலி கட்டும்போது சிலர் ஆள்காட்டி விரலை ‌வேகமாக ஆட்டி இவரைப் பயமுறுத்துகிறார்கள். உடனே தவில்காரர் பயந்து ‘டமடம’வென்று தவிலைக் கொட்டி முழக்குகிறார்.

சாஸ்திரிகள் தண்ணீரில் மூழ்கி எழும் போதெல்லாம் ‘ஹாரி, ஹாரி’ என்று ஹரி நாமத்தை நீட்டி முழக்கி கோஷித்தார். கரையில் நின்று கொண்டிருந்த ஹாரி என்ற பெயருடையவர்கள் எல்லாம் தங்கள் பெயரைத்தான் சொல்கிறார் என்று எண்ணி மகிழ்ந்தார்கள்.

வெங்கிட்டு, தன் பாட்டியிடம் ஓடிப் போய், ‘‘பாட்டி! பறந்த அப்பளத்தையெல்லாம் பறக்கும் தட்டுன்னு நினைச்சு அமெரிக்கர்கள் சுட்டு விட்டார்களாம்’’ என்றான். ‘‘அடப்பாவமே! சுடுவானேன்? என்னிடம் சொல்லியிருந்தால் எண்ணெயில் பொரித்துக் கொடுத்திருப்பேனே! சுட்ட அப்பளம் நன்னாயிருக்காதேடா!’’ என்றாள் பாட்டி.

விருந்தில் பரிமாறப்பட்ட வடுமாங்காயைக் கடிக்கத் தெரியாமல் பலர் விரலைக் கடித்துக் கொண்டு ‘ஆ! ஆ!’ என்று அலறினர். பற்களுக்கிடையி்ல் விரல்கள் அகப்பட்டுக் கொண்டதால் காயம் ஏற்படவே விரல்களைச் சுற்றி பிளாஸ்திரி போட்டுக் கொண்டார்கள். மறுதினம் விரலில் துணி சுற்றிக் கொண்டு நின்ற தவில் வித்வான்களைக் கண்ட அமெரிக்கர் சிலர், ‘‘ஐயோ பாவம்! இவர்களுக்கும் வடுமாஙகாய் சாப்பிடத் தெரியவில்லை போலிருக்கிறது’’ என்று சொல்லி அனுதாபப் பட்டனர்.

நடந்து நடந்து கால் வீங்கிய சீமாட்டியின் காலில் விளக்கெண்ணையைத் தடவி ஒத்தடம் கொடுத்தார்கள் அத்தையும் பாட்டியும். ‘‘இப்ப நீங்க என்ன செய்யறீங்க?’’ என்றாள் மிஸஸ் ராக். ‘‘எங்களுக்குத் தெரிந்த கை வைத்தியம் செய்கிறோம்’’ என்றாள் அத்தை. ‘‘கால் வீங்கிப் போயிருக்க, கை வைத்தியம் செய்தால் எப்படி? கால் வைத்தியமாகச் செய்யுங்க’’ என்றாள் திருமதி ராக்.

‘‘நலங்கிட ராரா… ராஜகோபாலா’’ என்று ருக்கு பாடியபோது அத்தனை பேரும் உற்சாகத்துடன் சிரித்தனர். ‘ராஜகோபாலா’ என்று கணவன் பேரைச் சொல்லிப் பாடிவிட்ட ருக்மணி, வெட்கம் சூழ்ந்து கொள்ள மவுனமாகி விட்டாள். ‘‘எதுக்கு எல்லாரும் சிரிக்கிறாங்க?’’ என்றாள் மிஸஸ் ராக். ‘‘ருக்கு தன் ஹஸ்பெண்ட் பேரைச் சொல்லி விட்டாள். அதற்குத்தான் சிரிக்கிறோம்’’ என்றாள் லோசனா. ‘‘ருக்குவின் ஹஸ்பெண்ட் நேம் அவ்வளவு ஹ்யூமரஸா?’’ என்று கேட்டாள் மிஸஸ் ராக்.

முந்தையபகுதி – 7 | அடுத்தபகுதி – 9

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...