கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 7 | பாலகணேஷ்

 கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 7 | பாலகணேஷ்

ஒரு சரித்திர நாவலைக்கூட துப்பறியும் நவீனத்தின் விறுவிறுப்புடன் எழுத முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஸ்ரீவேணுகோபாலன். இவரை நினைக்கும் போதெல்லாம் ஆச்சரியம்தான் வரும் எனக்கு.

தேர்ந்த நடிகன் இரட்டை வேடம் போடுவதைப் போல, புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் செக்ஸ்+க்ரைம் கதைகளையும், ஸ்ரீவேணு கோபாலன் என்ற பெயரில் ஆன்மீக + சரித்திரக் கதைகளையும் அந்தந்தத் தளங்களுக்கே உரிய நடையில் அமர்க்களமாக எழுதுபவர் அவர்.

இந்நாவலில் அவரது அழகிய தமிழ்நடையில் நெருப்பென வரும் வீர சாகசங்களும், உணர்ச்சிக் கொந்தளிப்பான தந்தை-மகன் உறவும், குறிப்பாக…. உத்தமன், விச்வநாதன் காதல்களில் பொங்கிவரும் வர்ணனைகளும், உரையாடல் களும் காதல் ரசத்தில் மூழ்கடித்து விடும்.

அப்படி காதல் ரசத்தில் மூழ்கித் திளைக்க உடனே முழுக் கதையையும் தேடிப் பிடித்து படித்து மகிழுங்கள்.

மோகவல்லி தூது

– ஸ்ரீவேணுகோபாலன்

கி.பி. பதினாறாம் நூற்றாண்டு. விஜயநகரத்திற்குள் உத்தமன் என்ற இளைஞன் மூன்று சகாக்களுடன் வருகிறான். பாண்டிய ராஜ வம்சத்தைச் சேர்ந்த இளவரசி உடன்கட்டை ஏற முற்பட, சகாக்களுடன் போய் அவளைக் காப்பாற்றி, குதிரையில் பறக்கிறான். ஏழு வீட்டார் என்ற கூட்டத்தின் தலைவர் சிங்கார பூபனின் ஆட்கள் அவர்களைத் துரத்துகின்றனர். ஒரு சத்திரத்தில் தங்கி, தான் மாலடிப் பெருமாள் என்ற சிற்றரசரின் மகன் எனவும், பாண்டிய ராஜவம்சத்தின் கடைசி வாரிசான அவள் தீக்குளிக்கக் கூடாதென்றும் சொல்கிறான் உத்தமன். அவள் சினத்துடன் மறுக்க, அப்போது சிங்காரபூபனின் ஆட்கள் அங்கு வர, சண்டை நடக்கிறது. உத்தமனையும் அவன் சகாக்களையும் கைது செய்து கொண்டு செல்கிறான் சிங்காரபூபன். வழியில் நண்பர்களின் சாதுர்யத்தால் தப்பும் உத்தமன், நண்பர்களைப் பிரிந்து செல்லும்படி நேர்கிறது.

மயக்கமுற்று குதிரையில் சாய்ந்திருந்த அவன் கண் விழிக்கும் போது, ஒரு இளைஞனை புலி துரத்தி வருவதைக் கண்டு, புலியுடன் போரிட்டுக் கொன்று அவனைக் காப்பாற்றுகிறான். அந்த இளைஞன் தன் பெயர் விச்வநாதன் என்றும் தான் விஜயநகரத்தின் ராஜப் பிரதானி என்றும் அறிமுகம் செய்து கொண்டு உத்தமனின் நண்பனாகிறான். உத்தமன் தன் சகாக்களை தேடிப் பிடித்து அவர்களுடன் சென்று பாண்டிய இளவரசியை மறைத்து வைத்திருக்கும் இடத்திலிருந்து மீண்டும் கடத்தி வந்து விஜயநகரத்தில் விச்வநாதனின் பாதுகாப்பில் அவளை விடுகிறான். அவள், உத்தாரணர் என்ற முள்ளிநாட்டுக் குறுநில மன்னரிடம் ஒரு ஓலை தரும்படியும், அதற்கு பதில் வரும்வரை உடன்கட்டை ஏறாமலிருப்பதாகவும் உத்தமனிடம் சொல்ல, உத்தாரணர் போலிப் பாண்டியரின் ஆதரவாளர் என்பதால் அவன் தயங்குகிறான். பின் சம்மதித்து, ஓலையுடன் புறப்படுகிறான்.

உத்தமன் செல்லும் வழியில் துரத்திவரும் விச்வநாதன், பாண்டிய நாட்டில் அவன் தங்கியிருந்த சமயம் அவனுககு ஏற்பட்ட காதல் அனுபவங்களை உத்தமனிடம் சொல்கிறான். தான் இளமையில் காதலித்த அந்தப் பெண்ணை பாண்டிய நாட்டில் உத்தமன் தேடித் தரும்படி வேண்டுகிறான். அவன் சொல்லும் அடையாளங்கள் பாண்டிய இளவரசி சந்திரமாலாவை ஒத்திருக்க, ஏற்கனவே அவளிடம் மனதைப் பறி கொடுத்திருந்த உத்தமன் திடுக்கிடுகிறான். ஆனாலும் நண்பனுக்காக சம்மதிக்கிறான். பின் விச்வநாதனிடம் அவன் தந்தை நாகம நாயக்கர் பாண்டிய நாட்டைத் தானே அபகரித்து மன்னனாகப் பார்க்கிறார் என்று உத்தமன் கூற, அவன் நம்ப மறுக்கிறான்.

விச்வநாதன் விஜயநகரம் திரும்பிச் செல்ல, உத்தமனைத் தொடர்ந்து வந்த சிங்காரபூபன், சாதுர்யமாக உத்தமனுக்கும் சகாக்களுக்கும் உணவில் மயக்க மருந்தைக் கொடுத்து, ஓலையைத் திருடி விடுகிறான். தாமதமாக இதை அறியும் உத்தமன், எங்கும் நில்லாமல் உத்தாரணரை அடைந்து நடந்ததைக் கூறுகிறான். அவர், தான் பாண்டிய வம்சத்தின் எதிரி இல்லையென்பதையும், போலிப் பாண்டியரிடம் உளவறியவே அவர் ஆதரவாளராக நடித்ததையும் கூறி, இப்போது ஓலை தவறியதால் உண்மைப் பாண்டியருக்கு ஆபத்து என்றும் தெரிவிக்கிறார். உத்தமனை உடனழைத்துக் கொண்டு கடினமான மலையான குரங்கணி துர்க்கத்தில் மலை ஏறி வர, மேலே ஒரு மாளிகை எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு உண்மைப் பாண்டியரும் அரசியும் எரிந்து விட்டதாகப் புலம்பிக் கீழே வீழ்கிறார் உத்தாரணர். அக்கணமே அவர் உயிரும் பிரிகிறது.

உத்தமன் விரைந்து விஜயநகரம் வந்து இளவரசியிடம் நடந்ததைக் கூற, அவள் அவனைக் கோபிக்கிறாள். விச்வநாதனிடம் அனுமதி பெற்று முள்ளிநாடு விரைகிறாள். வழியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொள்ளும் அவளைக் காப்பாற்றுகிறான் உத்தமன். விளைவாக, அவன் கடும் காய்ச்சலால் அவதியுற, அவனுக்கு வைத்தியம் செய்வித்து தன்னுடன் அழைத்துச் செல்கிறாள் சந்திரமாலா. மயக்கம் தெளிந்த உத்தமன், தான் அரண்மனையில் இருப்பதை உணர்ந்து எழுந்து நடக்க, உத்தாரணரின் விதவை ராணி, சந்திரமாலாவைத் திட்டுவதைப் பார்க்கிறான். அவள் உண்மையில் உத்தாரணரின் மகள் மோகவல்லி என்பதும், பாண்டிய வம்சத்துக்காக உயிர்த்தியாகம் செய்ய முற்பட்டிருப்பதும் அப்போதுதான் அவனுக்குத் தெரிகிறது. உண்மையான சந்திரமாலாவைக் காப்பாற்றிவிட்டு பின்னர் தான் உயிர்த்தியாகம் செய்வதாக தன் தாயிடம் உறுதி கூறுகிறாள் மோகவல்லி.

இதற்கிடையில் பூபன், போலிப் பாண்டியரின் தூண்டுதலின் பேரில் முள்ளிநாட்டு அரண்மனையைச் சுற்றி வளைக்க, சுரங்க வழியாக மோகவல்லியும் உத்தமனும் தப்பிச் செல்கின்றனர். குரங்கணி துர்க்கம் சென்று சந்திரமாலாவைத் தேடுவதாக சொல்லி, அவனைப் பிரிந்து செல்கிறாள் மோகவல்லி. அதே சமயம் பாண்டியநாட்டு மக்கள் உண்மைப் பாண்டியர் இறந்ததை அறிந்து புரட்சியில் ஈடுபடுகின்றனர். அவர்களிடம் மோகவல்லி எதிர்ப்பட, அவள்தான் பாண்டிய இளவரசி என்று புரட்சிப் படையில் சேர்ந்திருந்த பூபனின் ஆட்கள் சிலர் சொல்ல, புரட்சிப் படை அவளைப் பாண்டிய ராணியாக்கி விடுகிறது.

நாகம நாயக்கரோ அவளது அதிகாரத்தைப் பறித்து பொம்மை ராணியாக வைத்திருக்கிறார். மோகவல்லியைத் தேடி வரும் உத்தமனுக்கு அவள் இதைக் குறிப்பால் சொல்ல, அவன் விஜயநகரம் சென்று விச்வநாதனிடம் சொல்கிறான். இதே சமயம் கிருஷ்ணதேவ ராயருக்கும் நாகமரின் எண்ணம் தெரிந்துவிட, அவரை படையுடன் திரும்பிவரச் சொல்லி கடிதம் எழுதுகிறார். நாகமர் மறுத்துவிட, ராயர் கோபத்துடன் படையெடுத்துச் செல்லும்படி தளபதிகளிடம் சீற, நாகமரின் வீரத்தை எண்ணி தளபதிகள் தயங்க, விச்வநாதன் தான் சென்று, தந்தையென்றும் பாராமல் நாகமரை அடக்குவதாக உறுதிகூறி புறப்படுகிறான். உத்தமனின் துணையுடன் நாகமரை போரில் வெல்லும் விச்வநாதன், கைது செய்து ராயரிடம் அவரை அழைத்து வருகிறான்.

ராயர், விச்வநாதனுக்காக நாகமரை மன்னிப்பதுடன், போலிப் பாண்டியரை அடக்கி, அவர் சம்மதத்துடன் விச்வநாதனை மதுரையின் மன்னனாக்கி அனுப்புகிறார். விச்வநாதனும், உத்தமனும் முள்ளி நாட்டுக்கு வர, மோகவல்லியின் அரண்மனை ஏழு வீட்டாரால் எரிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறார்கள். அவளைத் தேடி குரங்கணி துர்க்கம் விரைகிறார்கள். அங்கே எதிர்ப்படும் ஏழு வீட்டார் படைகளை மொத்தமாக அழித்து, பூபனையும் ‌கொல்கிறான் உத்தமன்.

இறக்கும் தருவாயிலிருந்த உத்தமனின் நண்பர்கள் கொடுத்த தகவலின்படி அங்குள்ள துர்க்கை கோயிலுக்கு விரைய, கோயில் தீப்பற்றி எரிவதையும், அதனுள் மோகவல்லியும், சந்திரமாலாவும் இருப்பதையும் அறிந்து, தீயினுள் பாய்ந்து சென்று முதலில் சந்திரமாலாவைக் காப்பாற்றுகிறான் உத்தமன். சந்திரமாலாவை தீ அண்டாமல் போர்வையாய் இருந்து பாதுகாத்த மோகவல்லியை உத்தமன் மீண்டும் தீயினுள் சென்று தூக்கிவர, தீயில் கருகிய அவள் உடலிலிருந்து உயிர் உத்தமனின் மடியில் பிரிகிறது.

விச்வநாத நாயக்கன், சந்திரமாலாவை மணந்து மதுரையில் நாயக்கர் வம்ச ஆட்சியைத் தொடங்கி வைக்கிறான். சந்திரமாலாவுக்கும் அவனுக்கும் குழந்தை பிறக்காததால் வேறொரு ராணியின் மூலம் பிறந்த நாயக்கர் வம்ச வாரிசுகளே பின்னாளில் பாண்டிய நாட்டை ஆண்டனர். (பின்னர் வந்த திருமலை நாயக்கர், ராணி மங்கம்மாள் போன்றோர் நாயக்கர் பரம்பரையில் புகழ்பெற்றவர்கள்) விச்வநாதனின் ஒவ்வொரு வெற்றியிலும் உத்தமன் துணையாயிருக்க, அவனுக்கு உந்துசக்தியாக அவன் மனதில் நின்று தூது பாடிக் கொண்டிருக்கிறாள் மோகவல்லி.

முந்தையபகுதி – 6 | அடுத்தபகுதி – 8

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...