என்னை காணவில்லை – 28 | தேவிபாலா

 என்னை காணவில்லை – 28 | தேவிபாலா

அத்தியாயம் – 28

ராவமுதன் கொதி நிலையில் இருந்தான். அவன் அனுப்பிய செந்தில், ஆஸ்பத்திரியில் சிக்கி, போலீஸ் கைது செய்து அழைத்து போனதை அவனது ஆள் தெரிவிக்க,

“ராஸ்கல்! கவனமா செய்டானு சொல்லியனுப்பினேன். மாட்டிக்கிட்டான்.!”

“இவன் கொண்டு போன விஷ ஊசியை லேபுக்கு அனுப்பிட்டாங்களாம். இவனை லாக்கப்ல வச்சு, லாடம் கட்டினா, சகலத்தையும் உளறுவான் தல. உங்க பேரு தான் முதல்ல வெளில வரும்.!”

எதிரே இருப்பவனை ஓங்கி அறைந்தான் ஆராவமுதன்.

“ தல! எங்கிட்ட நீங்க ஏன் ஆத்திரப்படறீங்க? ஸ்பாட்ல துவாரகேஷ் இருந்திருக்கான். நம்மாளை கையும் களவுமா, அவன் தான் புடிச்சு தந்திருக்கான்.!”

“காஞ்சனாவை துவாரகேஷ் அட்மிட் பண்ணினப்பவே இதுல உள் குத்து இருக்குனு புரிஞ்சு போச்சு. செந்திலை, துவாரகேஷ்  ஃபாலோ பண்ணியிருப்பான். இது இன்னும் ஆபத்தாச்சே. துவாரகேஷ் ஒரே நேரத்துல பல சங்கதிகளை யோசிக்கற மூளைக்காரன்.!”

ஆராவமுதன், போட்டி கம்பெனி ராஜேந்திரனுக்கு உடனே ஃபோன் அடிக்க, ஸ்விட்ச் ஆஃப் என வந்தது. பல முறை அடித்தும் எடுக்காததால் ஆராவுக்கு ரத்தம் தலைக்கேறியது. செந்திலை லாக்கப்பில் வைத்து பிரித்து எடுப்பதற்கு முன்பு, அவனை வெளியே எடுக்க வேண்டும். தவறினால் சகலமும் கந்தல் ஆகும். பி.ஏ.வை முயற்சி செய்தான் கிடைக்கவில்லை. ராஜேந்திரன் பங்களாவுக்கே போக முடிவு செய்து, வெளியே வந்து பைக்கை எடுத்தான். வேகம் பிடித்தான். அவர் வீட்டை அடைந்து விவரம் கேட்க,

“ சார், புறப்பட்டு போய் ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகுது.!”

ஆராவமுதன் தலையை பிய்த்து கொண்டான். தன் வக்கீலுக்கு போன் செய்து முன் ஜாமீனுக்கு சொன்னான். செந்தில் உளறினால், போலீஸ் என்னைத்தான் தேடி வரும். அதற்கு முன் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் ஆழம் பார்க்க வேண்டும். நேராக அங்கே வந்து, தெரிந்த பிசியை பிடித்து கேட்க,

“நீங்க சொல்ற மாதிரி யாரையும் கைது பண்ணி இங்கே கூட்டிட்டு வரலியே?”

“மெட்ரோ ஆஸ்பத்திரில ஒரு குற்றம் நடந்து, போலீஸ் கைது செஞ்சா, இங்கே தானே கூட்டிட்டு வருவாங்க?”

“ஆமா சார். இது வரைக்கும் யாரையும் கூட்டிட்டு வரலை.!”

ஆராவமுதன் குழம்பி நிற்கும் வேளையில், செந்திலை கைது செய்து அழைத்து வந்த போலீஸ் அதிகாரி, நேராக, அவனை வயல் வெளிகளுக்கு மத்தியில், கிருகம் பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு, அழைத்து வந்தார்கள். அங்கே ஒரு ஆடிக்கார் நின்றது. அதன் மேல் சாய்ந்து ராஜேந்திரன், போட்டி கம்பெனி, இரண்டாமிடத்தை பிடித்த சேர்மன் நின்றார். அந்த போலீஸ் அதிகாரி இவருக்கு சல்யூட் வைத்தார்.

“ கொண்டு வந்துட்டேன் சார்!”

செந்திலை இறக்கி அழைத்து வந்தார்கள்.

“ நீங்க ஆஸ்பத்திரில இருந்து தகவல் தந்தீங்க. எனக்கு சாதகமான ஆள் நீங்க. இதுவே ட்யூட்டில உள்ள அதிகாரி வேற நபரா இருந்திருந்தா, கதையே மாறியிருக்கும். என்னடா நடந்தது ஆஸ்பத்திரில?”

“சார்! நான் கவனமாத்தான் இருந்தேன். அவசரப்பட்டு மாட்டலை. உள்ளே நான் நுழையும் போது, காஞ்சனா தவிர யாருமில்லை. ஏறத்தாழ ஊசியை போடற நொடில, பெரிசா ஒரு உதை விழுந்து தூக்கி வீசப்பட்டேன். காஞ்சனா நிச்சயமா என்னை உதைச்சிருக்க வாய்ப்பில்லை. அங்கே ஆளே இல்லை சார். ஆனா எனக்கு புரட்டி, புரட்டி உதை விழுந்தது. என்னை பாத்ரூம்ல தள்ளின நொடில, நான் குப்புற விழுந்தேன். கஷ்டப்பட்டு நான் தலை தூக்கினா, எதிரே துவாரகேஷ். பாத்ரூம்ல நான் தள்ளப்படற வரைக்கும் யாரும் இல்லை. அந்த பத்து நொடிக்கும் குறைவான நேரத்துல துவாரகேஷ் உள்ளே வர வாய்ப்பில்லை. ஏதோ மாயா ஜாலம் தான் நடக்குது.!”

“இல்லை இது வேற. அவனோட விஞ்ஞானம் வேலை செய்யுது. எப்படீன்னு தெரியலை. மோசடி பண்ணின ஆராவமுதன் கோஷ்டியை கையும் களவுமா பிடிச்சு வெளில தள்ளின விஞ்ஞானம். எங்களை திக்கு முக்காட வைக்கற விஞ்ஞானம். நிர்வாண கபாலியை, கொடைக்கானல் கதிரை, ஆஸ்பத்திரி ஆயாவை அத்தனை பேரையும் நடுங்க வைக்கற விஞ்ஞானம். கடைசியா, காஞ்சனாவை மடக்கி போட்டதும் இதே விஞ்ஞானம் தான். சரி, செந்தில் வெளில போனா, நாணய போலீஸ் கையில மாட்டுவான். இந்த பம்ப் ஹவுஸ் வீட்ல அடைங்க. போகலாம்.!”

இவருக்கு சேவகம் செய்யும் போலீசுடன் ராஜேந்திரன் நடக்க,

“இவன் யார் கைல மாட்டினாலும் ஆபத்து. இவனை இங்கியே வச்சு போட்ருங்க.  சொக்கப்பானை கொளுத்தற வைக்கப்போர்ல வச்சு எரிச்சிடுங்க. எலும்பு கூட யார் கையிலும் அகப்படக்கூடாது.!”

ராஜேந்திரன் ஒரு கட்டு பணத்தை அந்த அதிகாரியிடம் வீசி விட்டு காரில் ஏறினார். கார் புறப்பட,ஆராவுக்கு ஃபோன் செய்ய,

“செந்தில் போலீஸ்ல மாட்டாம செஞ்சாச்சு. எப்படீன்னு கேள்வி கேக்காதே. இனிமே குடுத்த வேலைகளை கவனமா செய். துவாரகேஷ் வெடி குண்டு மாதிரி. எங்கே வெடிப்பான்னு தெரியாது. ஃபோன் பண்ணிட்டு சாயங்காலமா என்னை பார்க்க வா!”

இதற்கிடையில் துவாரகேஷின் கம்பெனி வக்கீல், அவசரமாக அவனுக்கு ஃபோன் செய்தார். உடனே பார்க்க வந்தார்.

“ துவாரகேஷ்! அந்த விஷ ஊசி செந்திலை ஸ்டேஷனுக்கு கொண்டு வரலை. கைது பண்ணினவன் லஞ்ச போலீஸ். விவரம் தெரிஞ்சு, இதை எதிர் பார்த்த ராஜேந்திரன், குறுக்கே புகுந்து விளையாடிட்டான். அவன் சரியான கையில சிக்கி, உள்ளே போயிருந்தா, அந்த கும்பலை ஆதாரத்தோட வளைச்சு பிடிச்சிருக்கலாம். நழுவிடுச்சே!”

“எதுவும் நழுவலை. கமிஷனர் நியாயமானவர். செந்திலை கைது பண்ணி கொண்டு போன சிசிடீவி ஃபுட்டேஜ் இருக்கும் ஆஸ்பத்திரில. ராஜேந்திரனோட வயல் வெளி வீட்ல செந்திலை வச்சிருப்பாங்க.”

“செந்திலை அவங்க கொன்னுட போறாங்க.!”

“கொஞ்சம் இப்படி வாங்க. இதை பாருங்க.!”

துவாரகேஷ், தன் ஐ.ஃபோனை காட்ட, வயல் வீட்டில் செந்தில், சிக்கன் அயிட்டங்களை வளைத்து கட்டி கொண்டிருந்தான்.

“ எப்படி துவாரகேஷ்?”

“அவனை உதைச்சு, பாத்ரூம்ல கொண்டு போய் தள்ளின உடனே, இந்த சிப்பை அவன் செயின்ல பொருத்திட்டேன். ஜூம் பண்ணி பாருங்க!”

ஒரு பொட்டு கடலை சைஸில், கழுத்து செயின் மடிப்பில் அது இருந்தது.

“ அவன் இதை பார்த்துட்டா?”

“அது நம்ம அதிர்ஷ்டம். அது வரைக்கும் அவகாசம் எடுத்துக்க வேண்டாம். கமிஷனருக்கு நான் தகவல் தந்தாச்சு. அவங்க வர்றதுக்குள்ளே இவன் கதையை அவங்க முடிக்க வாய்ப்பிருக்கு. முந்திக்கணும். நானே போறேன்!”

அங்கே வயிறு புடைக்க அவன் சிக்கன் பிரியாணியை தின்று தீர்த்திருக்க, கூடவே காவலுக்கு ராஜேந்திரன் ஆள். அவன் ஃபோன் செய்து, வைக்கப்போர் ரெடியா எனக்கேட்க, தயாராக இன்னும் முக்கால் மணி நேரம் ஆகும் என்றார்கள். அவனுக்கு தந்த சிக்கன் பிரியாணியில் மயக்க மருந்து கலந்திருக்க, பேசிக்கொண்டே அவன் மயங்க,

“ஆள் மட்டை ஆயாச்சு.!”

“முழிப்பு வர்றதுக்கு முன்னால இவனை சாம்பல் ஆக்கிடணும். சீக்கிரம் ரெடி பண்ணுங்க. யாருக்கும் சந்தேகம் வராம செய்ங்க.!”

அதற்குள் கமிஷனருக்கு ஃபோன் செய்து, ஆஸ்பத்திரியில் ஏற்கனவே சேகரித்த சிசிடீவி ஃபுட்டேஜை, கிருகம் பாக்கத்தில் செந்திலை போலீஸ் வாகனத்திலிருந்து இறக்கி அந்த அதிகாரியும், ராஜேந்திரனும் பேசுவது என அங்குள்ள சகல விவரங்களும் பதிவாகியிருக்க, கமிஷனர் ஆவேசமாகி, தயாராக இருந்த போலீஸ் படையை முடுக்கி விட,

இங்கே வைக்கப்போர் தயார் என அறிவிப்பு வர, மயங்கிய செந்திலை தூக்கி வந்து ஒரு காரில் கிடத்தினார்கள். அந்த கார் பிரதான சாலைக்கு வந்ததும், கிளை சாலையிலிருந்து துவாரகேஷின் கார் உள்ளே புகுந்தது. முதலில் இவர்கள் கவனிக்கவில்லை. வைக்கப்போர் குவித்திருந்த இடத்துக்கு வந்து, அவர்கள் செந்திலை வெளியே எடுத்தார்கள். அந்த சிப் அவன் உடலில் இருந்ததால் நடக்கும் சகல சம்பவங்களையும் கமிஷனர், தன் செல்ஃபோனில் பார்த்து, போலீஸ் படையை துரிதப்படுத்தினார். இங்கே செந்தில் மேல் பெட்ரோலை ஊற்ற, துவாரகேஷ் கார் வந்து நிற்க, ஆட்கள் பதட்டமாகி, உருட்டு கட்டைகளுடன் திரும்ப, காருக்குள் யாரும் இல்லை. காலி கார் ரிவர்ஸ் எடுக்க, அவர்கள் மிரண்டார்கள். ரிவர்ஸ் எடுத்த கார் வேகமாக பின்னுக்கு போய், அதே வேகத்தில் முன்னுக்கு வந்து, பெட்ரோலில் குளித்த செந்தில் உடலின் அருகில் வந்து நின்றது. ஆட்களுக்கு அதை பார்த்து மயக்கமே வந்து விட்டது.

“ இதென்ன மந்திர வாதம்?”

கார் கதவு தானாக திறக்க, வெறும் காலடி ஓசை மட்டும். செந்தில் உடல் அடுத்த பத்தாவது நிமிஷம் தரையிலிருந்து அப்படியே எழும்பி, அந்தரத்தில் அதே மல்லாந்த நிலையில் நிற்க, ஆட்கள் அலறிய படி அதை பார்க்க, துவாரகேஷ் செந்தில் உடலை தூக்கி கொண்டு நின்றது யார் கண்ணுக்கும் தெரியவில்லை. அந்த உடலை தூக்கி கொண்டு துவாரகேஷ் சில சர்க்கஸ் வேலைகளை செய்ய, அவர்கள் பார்வையில் அந்தரத்தில் அது சுழல, உடலை கையில் எடுத்த நொடியில் பொட்டுக்கடலை சிப்பை துவாரகா எடுத்து விட, கமிஷனருக்கு இணைப்பு துண்டானது. அவர் பதறி விட்டார்.

“சீக்கிரம் போய்யா!”

உடலை கீழே கிடத்தினான் துவாரகேஷ். தன் காருக்குள் நுழைந்து காரை ரிவர்ஸ் எடுத்து, காலி கார் திரும்பி போக, அதற்குள் போலீஸ் வாகனங்கள் உள்ளே வந்து முற்றுகையிட, ஆட்கள் தெறித்து ஓடமுயல, காலியான துவாரகேஷின் கார் முன் வந்து விழ, போலீஸ் படை வளைத்து விட்டது. துவாரகேஷ் காரை விட்டு இறங்கி வந்தான். பெட்ரோலில் குளித்த செந்திலுக்கு லேசாக மயக்கம் தெளிய, அந்த பிரதேசம், கீழே கிடந்த செந்தில், வைக்கப்போர் என சகலமும் படம் பிடிக்கப்பட்டது. அவர்களையும் காரில் ஏற்ற, துவாரகேஷிடம் கமிஷனர் வந்தார்.

“ தேங்க்யூ சார்!”

“எதுக்கு துவாரகேஷ்? நாங்க தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். சகல மின்னணு வித்தைகளையும் கரைச்சு குடிச்சிருக்கீங்க. முன் கூட்டியே இப்படித்தான் நடக்கும்னு துல்லியமா கணிக்கறீங்க. காஞ்சனாவை வச்சு பெரிசா ஒரு ஸ்கெட்ச் போட்டு, ஒரு க்ரிமினல் கூட்டத்தையே வளைச்சிட்டீங்க.  ஆஸ்பத்திரி, சிசிடீவி ஃபுட்டேஜ் உதவினாலும், ராஜேந்திரன் அதுல மாட்ட வாய்ப்பில்லை. ஆனா செந்தில் செயின்ல வச்ச மேக்னட்டிக் பொட்டுக்கடலை சிப், எல்லா உண்மைகளையும் வெளில கொண்டு வந்துடுச்சு. போகலாம். செந்திலுக்கு மயக்கம் தெளியட்டும். மீடியாவையும் வச்சிட்டு, ஒட்டு மொத்தமா தோலை உரிச்சிடலாம் துவாரகேஷ்.”

“முதல்ல இதை முடிப்போம் சார். கபாலின்னு ஒரு ஆபாச நாய் வெளில இருக்கு. அவனையும் மடக்கணும்.”

விகாரமான உண்மைகள் வெளியே வரத்தொடங்கி விட்டன.

(-தொடரும்…)

முந்தையபகுதி – 27 | அடுத்தபகுதி – 29

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...