என்…அவர்., என்னவர் – 10 | வேதாகோபாலன்

 என்…அவர்., என்னவர் – 10 | வேதாகோபாலன்

இந்தவாரத் தலைப்பு : பசுமை நிறைந்த நினைவுகளே

தலைப்பு உபயம் : அகிலன் கண்ணன்

ப்போ வருவீங்க?” என்று கேட்பதற்குள் போனை வைத்துவிட்டதால் கோபமோ என்று நினைத்தேன் அல்லவா?

அன்றிரவு..

என் அண்ணா கோபால் அலுவலகத்திலிருந்து வந்தவுடனேயே “பாமா கோபாலன் சாருக்கு போன் செஞ்சேன்”
என்று நான் சொல்ல ஆரம்பித்த அதே நிமிஷம்..

“பாமா கோபாலன் சார் போன் செஞ்சார்” என்று சொன்னார் அண்ணா.

அட!

“நான் போன் செய்தேன்னு…”

“சொன்னார்”

“வேதா கிட்ட அதிகம் பேச முடியலை.. ஆபீசில் ஆடிட்டிங்.” என்றார். இன்னும் ஒரு வாரத்துக்கு பிஸியாம். இந்தப் பக்கம் வர முடியாதுன்னாரு.

அடுத்த வாரம் வந்தார். கலகலப்பாக அரை மணி நேரம் பேசிய பிறகு “என்ன சார் ரொம்ப நாளா வரலை?” என்று கேட்டேன்.

“உண்மைல ஆபீஸ்ல வேலை அதிகம்தான். ஆனால் .. எனக்கு ஒரு சின்ன சங்கடம் அதனாலதான் இந்த வீட்டுக்கு வர்றதுல ஒரு தயக்கம் இருந்தது..” என்றார்.

“சங்கடமாவது தயக்கமாவது? எங்க வீட்டுக்கு வர்றது பற்றி அதெல்லாம் கூடாதே.. ஏன்? என்னாச்சு?” என்று கேட்டார் அண்ணா.

“நான் பாட்டுக்கு இயல்பாய் எந்த எண்ணமும் இல்லாமல் உங்க வீட்டுக்கு வந்து போயிக்கிட்டிருந்தேன். இப்போ ‘கல்யாணம்’ னு பேச ஆரம்பிச்சு, அப்பிடி எதுவும் நடக்கப்போறதில்லைன்னு ஒரு  நிலை வர்றபோது.. வேதாவுக்கு என்னைப் பார்த்துப் பேசும்போது தர்ம சங்கடமாய் இருக்கக்கூடும். எனக்குமே ஒரு அன்ஈஸினஸ்..” என்றார்.

எனக்கு இந்த வார்த்தைகளில் இருந்த நேர்மை பிடித்திருந்தது. அதே சமயம் இதையெல்லாம் காரணம் காட்டி  அவர் வராமல் இருந்துவிடுவாரோ என்ற பதைப்பு ஏற்பட்டது.

நமக்குத்தான் ஒளிவு மறைவு ஏதும் கிடையாதே? “அச்சோ.. சார்.. சங்கடம் அது இதுன்னு நீங்க பாட்டுக்கு வர்றதை நிறுத்திடாதீங்க.. கடந்த சில மாசங்களா நீங்க வர்றது எங்க எல்லாருக்குமே பெரிய உற்சாகமான விஷயம்..” என்றேன்.

அந்த ஆறு மாசங்களில் எத்தனை எழுத்தாளர்கள்.. எத்தனை கதைகள்.. எத்தனை சினிமாக்களை விவாதித்திருக்கிறோம்! அப்போது நான் எழுதிக்கொண்டிருந்த கதைகளையெல்லாம் அவருடன் விவாதித்து அவர் சொன்ன மாற்றங்களையெல்லாம் செய்து, அந்தக் காரணத்தினாலேயே பிரசுரமாகியிருக்கின்றனவே?

சோம்பேறிகளின் சங்கத் தலைவியாகும் அளவுக்குத் தகுதி பெற்ற என்னை நூற்றுக் கணக்கான பக்கங்களுக்கு நாவல் எழுத வைத்தவர்.. அதை அச்சில் பார்க்கும் அளவுக்கு வெற்றி பெற வைத்தவர்.

எந்த எழுத்தாளரையும் நேரில் பார்த்துப் பேசியதில்லை நான்.  இவருடைய அறிமுகம் கிடைத்தபிறகு எத்தனை எழுத்தாளர்கள் எங்களின் நட்பு வட்டத்துக்குள் வந்திருக்கிறார்கள்!

எழுத்தாளர் ராஜேஷ்குமார் (அண்ணா), பட்டுக்கோட்டை பிரபாகர் சிவசங்கரி அம்மா, சுகந்தி, நிவேதா, இ ரா கணேஷன், ரிஷபன், கிருஷ்ணா, ஏ எஸ் ராகவன், ஷைலஜா, ராஜரிஷி என்று லிஸ்ட் தினமும் நீண்டுகொண்டல்லவா போனது?

இதற்கிடையே ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்தது. 1980 ஆம் ஆண்டு ஜனவரியில் என் நாவல் பிரசுரமானபோது ராஜேஷ்குமார் அண்ணாவுடன் பிரமாதமான கடிதப்போக்குவரத்து இருந்தது. வாரம் ஒரு கடிதமாவது நான் எழுதுவேன். அண்ணாவும் பதில் எழுதுவார்.

அப்போது அண்ணாவிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அவரை நாவல் எழுதச் சொல்லி மாலைமதியில் கேட்டிருக்கிறார்கள் என்றும் சிறுகதையே எழுதிப் பழக்கப்பட்ட காரணத்தால் நாவல் எழுதுவதில் சிறு தயக்கம் இருப்பதாகவும் நான் எப்படி எழுதினேன் என்றும் ஐடியா சொல்லும்படி கேட்டிருந்தார்.

பெரியவர்கள் ஒரு மரியாதைக்கு அப்படித்தான் கேட்பார்கள். உடனே அதை சீரியஸாக நினைத்துவிடுவார்களோ?

ஆனால் அடியேன் என்ன செய்தேன் தெரியுமா? பெரிய மேதாவி மாதிரி சினாப்ஸிஸ் எழுதும் முறை, அதை அத்தியாயங்களாகப் பிரிக்கும் வகை என்று ஐந்து பக்கத்துக்கு என் கிறுக்கல் கையெழுத்தில் எழுதித் தள்ளிவிட்டேன். உங்கள் நாவல்கள் நூற்றுக் கணக்காக வெளிவர ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் அருள் புரிவாள் என்று கடிதத்தை முடித்தேன்.

ராஜேஷ் அண்ணாவின் நாவல்கள் மடமடவென்று பிரசுரமாக ஆரம்பித்தன. அச்சோ இத்தனை பெரிய திறமைசாலிக்குப்போய் நான் குறிப்புகள் கொடுத்தேனே என்று கூசியது. அண்ணா எவரெஸ்ட்டின் உச்சியில் நின்றபோது நானெல்லாம் பரங்கிமலையைத் தாண்டவில்லை என்பதை உலகம் அறியும்.

எந்த எழுத்தாளருக்கு நான் என்ன கடிதம் எழுதுகிறேன் என்பதும் யாரிமிருந்து என்ன பதில் வருகிறது என்றும் என் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் எப்படித் தெரியுமோ அது மாதிரி பாமாஜிக்கு முழுவதும் தெரியும். கடிதங்களைக் காண்பிப்பேன். படிப்பார்.

அத்தனை பெரிய எக்ஸ்பர்ட்டான அண்ணாவுக்கு நான் இப்படிக் கடிதம் எழுதிவிட்டேனே என்று புலம்பியபோது பாமா கோபாலன் சொன்னார் “ஏன் அப்பிடிச் சொல்றீங்க? ராஜேஷ்குமார் அப்பிடி நினைச்சிருந்தால்.. “எனக்கு எல்லாம் தெரியும் சிஸ்டர்.. ” என்கிற தொனியில் அலட்டலாய் ஒரு பதில் போட்டிருப்பாரே? மாறாக அவர் எத்தனை பண்பாட்டோடு நன்றி சொல்லி லெட்டர் எழுதினார்.. நீங்கள் எழுதிய விதம் நியாயம்னு அவர் நினைச்சிருக்கார் என்பதால்தானே..” என்று சமாதானப்படுத்தினார். எனினும் ஏதோபெரிய எக்ஸ்பர்ட் மாதிரி அந்த ஜீனியஸ் சாதனையாளருக்கு எழுதிய உறுத்தல் இன்று வரை எனக்கு உள்ளது.

இது பற்றிய ஒரு சுவையான விஷயம் பிற்பாடு வருகிறது.

இப்போது…

மற்றொரு சுவாரஸ்ய விஷயம்..

வீட்டிலிருந்து அரை மணி நடையில் உள்ள குமரன் குன்றம் என்ற பிரபலமான கோயிலுக்கு அக்கம் பக்கத்து வீட்டு மாமிகளுடன் சென்றிருந்தேன். போகும்போதும் வரும்போது எல்லாக் கடைகளிலும் ரேடியோப் பாடல்கள் ஒலிக்கும்.

என்னிடம் சின்னதாய் ஒரு விளையாட்டுத்தனமாக பழக்கம் இன்று வரை உண்டு. போகும்போது நினைத்தேன். “திரும்பி வரும்போது இந்த டீக்கடையில் என்ன பாடல் ஒலிக்கிறதோ அதற்கும் என் வாழ்க்கைக்கும் சம்பந்தம் உள்ளது என்று அர்த்தம்”

(இது மாதிரி நிறையப் பைத்தியக்காரத் தனங்கள் என்னிடம் உண்டு. அடுத்து பச்சைப் புடவை கட்டிக்கொண்டு யாரேனும் கடந்து போனால இன்னது நடக்கும் .. என்கிற மாதிரி)

திரும்பி வந்தபோது அந்த டீக்கடையில் நான் கேட்ட பாடல் வரி….

“நாளை வருவான் நாயகன் என்றே நல்லோர்கள் சொன்னாரடி”

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. என்னை சித்தூரிலிருந்து ஒருவர் ‘பெண்’ பார்க்க வருவதாக இருந்தது. அதற்காகப் போனவாரம் ஸ்டூடியோவில்  போய் அண்ணாவின் உத்தரவுப்படி போட்டோ எடுத்து வந்து இணைத்து அனுப்பியதில் அவர்கள் வருவதாக எழுதியிருந்தார்கள்.

(-நினைவுகள் தொடரும்…)

முந்தையபகுதி – 9 | அடுத்தபகுதி – 11

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...