என்…அவர்., என்னவர் – 11 | வேதாகோபாலன்

 என்…அவர்., என்னவர் – 11 | வேதாகோபாலன்

இந்தவாரத் தலைப்பு : என் பிரிய வேதம்.

தலைப்பு உபயம் : ரேவதி நரசிம்மன் 

அடுத்த நாள் என்னைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் சித்தூரிலிருந்து (இல்லை.. புத்தூரோ?) வருவதாக இருந்ததால் என் அண்ணா எங்களின் அத்தையைத் தண்டையார்ப் பேட்டையிலிருந்து வரவழைத்திருந்தார். (என் அத்தையின் 100 பர்சன்ட் ஜாடை எனக்கு வந்திருந்தது என்பது உபரிச் செய்தி).

அத்தை வந்தால் வீடே கலகலப்பாகிவிடும். “அந்த விக் ஸ்டவ்வை மாத்தி பப்ம் ஸ்டவ் வாங்குடா” என்று அண்ணாவுக்கு ஆணையிட்டது முதல், சொஜ்ஜி பஜ்ஜி செய்ய அம்மாவுக்குக் கை கொடுத்தது வரைக்கும் அத்தையின் டிபார்ட்மென்ட்.

தன் தங்கைக்குக் கல்யாணம் நல்லபடி ஆக வேண்டுமே என்று கீதா அக்காவுக்குக் கவலை. “சும்மா பவுடர்தான் போட்டுப்பேன்” என்று கண்டிஷன் போட்டதும், கீதா அக்கா அக்கறையாய்த் தலைபின்னிவிட்டதும், நான் வெளிர் பிஸ்தா நிற பாலியெஸ்டர் சேலை கட்டிக்கொண்டதும் இந்தத் தொடருக்குச் சம்பந்தமில்லாத விஷயம்ஸ்.

 ‘பையன்’ (பெயர் நினைவில்லை), அவன் பெற்றோர் மற்றும் தங்கை பெண்பார்க்க வந்திருந்தனர். நல்ல மழை.

ஹாலுக்கும் நான் இருந்த அறைக்கும் நடு அறையில் இருந்த கண்ணாடியில் காட்டினாள் கீதா அக்கா.

“அதோ இளைய ராஜா ஜாடையில் உட்கார்ந்திருக்கான் பாரு. அதுதாண்டி பையன். பார்த்துக்கோ” என்றான். (1980ம் வருஷ ஏப்ரல் மாதத்து இளைய ராஜா ஜாடை).

பெரிய ஹீரோ தோற்றம் இல்லை என்றாலும்… குறையொன்றும் இல்லை. பேங்க் உத்தியோகம். ஆனால் பாமாஜி அளவுக்கு அழகாய் இல்லை என்று தன்னிச்சையாய்த் தோன்றியது.

“நாங்க ஊருக்குப் போய் பதில் போடறோம்” என்றார்கள்.

அடுத்த நாள் இவர் வந்தபோது பெண் பார்த்த விஷயத்தைப் பற்றி அண்ணா, தம்பி, அம்மா எல்லோரும் அவரிடம் சொல்ல… “பேஷ் பேஷ். கங்கிராஜுலேஷன்ஸ்” என்றார் உற்சாகமாய்.

சினிமாவில் காட்டுவது மாதிரியெல்லாம் எனக்கோ அவருக்கோ சோகமெல்லாம் இல்லை. ரொம்பவும் இயல்பாய் நடந்துகொண்டோம். பேசினோம்.

அடுத்த நாள் மாப்பிள்ளை வீட்டாரிடமிருந்து கடிதம். பிரிப்பதற்கு முன்பே ரிசல்ட் தெரிந்துவிட்டது. ஏனெனில் என்னுடைய போஸ்ட் கார்ட் சைஸ் புகைப்படத்தைக் கடிதத்துடன் இணைத்திருந்தார்கள்.

ஒரு பெண்ணைப் பிடிக்கவில்லை என்று  சம்பந்தமில்லாதவர்கள் சொல்லும்போது வரும் ஆத்திரமும் கோபமும் எனக்கு வந்தாலும்.. அந்த வரன் அமையவில்லையே என்ற ஏமாற்றம் ஏற்படவேயில்லை.

மறுநாள் அவர் வந்தார். விஷயத்தைச் சொன்னோம். என் முகத்தில் இருந்த சோகத்தை  அவர் படித்திருக்க வேண்டும். “பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்” என்றார்.

“அந்தப் பையன் கொடுத்து வைக்கவில்லை” என்று நான் துடுக்காய் பதில் சொன்னேன்.

மாப்பிள்ளை வீட்டுக்காரர்களுக்கு அனுப்பிய போஸ்ட் கார்ட் அளவு போட்டோவை பாமாஜியிடம் காண்பித்தபோது “சக்தி ஸ்டூடியோக்காரர் இயன்ற அளவு நல்லாத்தானே எடுத்திருக்காரு..” என்றார். (“போட்டோவில் அழகாய்த் தெரியறியே” என்று தவறிப்போய்ப் பாராட்டினால் குறைந்தா போயிடுவீங்க?” என்று தோன்றியது. அவரிடம் கண்ணியமற்ற வார்த்தை வரவே வராது)

ஆனால் என் மனசுக்குள் சின்னதாய் ஒரு நெருடல். சமீபத்தில் குமரன் குன்றம் முருகர் கோயிலுக்குப் போய்விட்டு வந்தபோது எனக்கு முருகர் ஒரு சகுனம் தந்தார். அது தப்பாகிவிட்டதா?

அந்த பாட்டு ‘செந்தூர் முருகன்’ சொன்னது. ஆனால் குமரன் குன்றத்தில் உள்ளவன் சொன்ன சேதி வேறு என்பது எனக்கு அப்போது சத்தியமாகப் புரியவில்லை.

வழக்கம்போல் அவரை ‘வாசல் கேட்’ வரை வழியனுப்புவதற்காக நான், அண்ணா, தம்பி. தங்கை நால்வரும் போனபோது “வேற எந்தப் பையன் கொடுத்து வைச்சிருக்கானோ?” என்றார். எப்போதோ சொன்னதற்கு எப்போதோ பதில்!

பிறகு விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டேன். என் சிநேகிதிகளுக்கெல்லாம் திருமணமாக ஆரம்பித்துவிட்டது.

என்னையாவது ஒரே ஒருத்தர்தான் வேண்டாம் என்றார். என் தோழிகள் சிலருக்கு நாலைந்து ரிஜெக்டட் கடிதங்கள். சூப்பராய்ச் சமாதானம் சொல்வேன். (“அந்தப் பையன் கொடுத்து வைக்கவில்லை”).

அடுத்த ஞாயிறு கிழமை காலை எட்டு மணிக்கு வந்தார். வழக்கமாய் சாயங்காலம்தான் வருவார். அத்தனை சீக்கிரம் வருகிறார் என்றால் என் கதை எதிலோ பிரசுரமாகியிருக்கிறது என்று அர்த்தம்.

அப்படி இருந்தால் “கங்கிராஜுலேஷன்ஸ்” என்பாரே? சொல்லவில்லையே?

வழக்கமான உற்சாகத்துடன் வரவேற்றபோது என் அண்ணாவைப் பார்த்து “கொஞ்சம் பேசணுமே” என்றார். அண்ணாவிடம் மட்டும் தனியாகப் பேச விரும்பினார்.

பேசிமுடித்தவுடனேயே அண்ணா உற்சானார். என்னையும் என் அம்மாவையும் உள்ளேயிருந்து கூப்பிட்டார்.

“எனக்கு நூறு பர்சன் ஓ கே.. இவங்க கிட்டயே நேரடியாச் சொல்லுங்க சார்.” என்றார் என் அண்ணா.

சொன்னார்.

“நான் கல்யாணம் வேணாம்னுதான் இருந்தேன். ஆனா, அப்பா ரொம்பவும் கவலைப்படறார். தவிரவும் என்னைப் புரிஞ்சுண்ட பெண்ணாய் இருந்தால் நல்லதுன்னு தோணித்து. இன்னிக்கைக் காலைல என் அப்பாவை நிக்க வைச்சு நமஸ்காரம் செய்தேன். ‘வேதா எனக்குப் பொருத்தமான மனைவியா இருப்பான்னு தோணுதுப்பா.’ ன்னு மட்டும்தான் சொன்னேன். ‘டேய் நீ போய்ச் சொல்றியா.. அல்லது நான் போய் அவங்க வீட்ல பெண் கேட்கவா’ன்னு அப்பா பரபரப்பாயிட்டார். என் வீட்டைப் பொருத்த வரைக்கும் என் அப்பா ஒருத்தர் தீர்மானிச்சா போதும். நீங்க எல்லாரும் கலந்து பேசுங்க. வேதா.. தயவு செய்து நல்லா யோசிச்சுட்டு பதில் சொல்லுங்க. பிகாஸ் உங்களுக்கும் எனக்கும் பதிமூணு வயசு வித்தியாசம். நாளைக்கு உங்க சிநேகிதிகளோ.. மற்ற வெளி மனிதர்களோ கிண்டல் செய்ய சான்ஸ் இருக்கு.. அப்போ வருத்தப்படக்கூடாது” என்றார்.

(அந்த தினம் வரைக்கும் அவர் என்னை ஒருமையில் பேசியதில்லை. அன்றைக்கும் ‘நீங்க’தான்)

அண்ணா ஏற்கனவே நூறு பர்சன்ட் ஒகே சொல்லிவிட்டார்.  எப்போதும் எதிலும் அவசரமோ பதற்றமோ காட்டாத அம்மாவே சட்டென்று “இதுல யோசிக்க என்ன இருக்கு? உங்களைவிடப் பொருத்தமாய் ஒருத்தர் எங்க வீட்டுக்கு மாப்பிள்ளையா அமைய முடியாது.. உங்க வயசை நீங்க சொன்னாதான் நம்ப முடியும். ரொம்ப சந்தோஷம்..”

என்னபோது..

“நான் யோசிச்சு சொல்றேனே..” என்றேன்.

எல்லோருக்கும் கொஞ்சம் ஷாக்தான்.

-நினைவுகள் தொடரும்…

முந்தையபகுதி – 10 | அடுத்தபகுதி – 12

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...