காதைக் கொண்டா ஒரு ரகசியம் (சிறுகதை) | ஆர்னிகா நாசர்

 காதைக் கொண்டா ஒரு ரகசியம் (சிறுகதை) | ஆர்னிகா நாசர்

மெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனும் ரஷ்யஜனாதிபதி விளாதிமிர் புதினும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரோனும் ஜெர்மன் ஜனாதிபதி ஜிம்மி பிராங்கி வால்டர் ஸ்டெய்ன்மியரும் நியூசிலாந்து பிரதமர் ஜெஸிந்தா ஆர்டர்னும் தண்டர்ஸ்டார் ஜிம்மிகுமாரை சுற்றி நின்றனர். ஜெஸிந்தா ஒருபடி மேலே போய் ஜிம்மிகுமாரை கட்டிக் கொண்டார்.

“ஜிம்மிகுமார் டார்லிங்!” ஜோ பைடன்.

“என்ன?” கோமான் தோரணையில் ஜிம்மிகுமார் வினவினார்.

“அந்த ரகசியத்தை எனக்கு சொல்லிப்புடு மாமே..”

“எந்த ரகசியத்தை? எனக்கு சினிமாவில் நடிக்கவே தெரியாது என்கிற ரகசியத்தையா?”

“இல்லைப்பா!”

“பின்ன? நான்  எந்த படத்ல நடிச்சாலும் ஹீரோயினை அசமடக்கி கோடிக்கணக்ல கடன் கேப்பேனே.. அந்த ரகசியத்தையா?”

“இல்ல ப்ரோ!”

“நான் ஆரம்பிச்சு நடத்ற நாமுக கட்சில பத்து உறுப்பினர்கள் கூட கிடையாது 0.5 சதவீதம் கூட ஓட்டு வங்கி கிடையாது என்கிற ரகசியத்தையா?”’

“நோ தமிழா!”

“அஞ்சு வருஷமா சான்ஸ் இல்லாம வீட்ல குப்பை கொட்டிக்கிட்டு இருந்த எனக்கு கிணி சார் தன் படத்ல ஒரு சான்ஸ் கொடுத்தார். அந்த படத்ல நடிகையை கட்டிபிடிக்க முடியல உம்மா கொடுக்க முடியலன்னு கிணி சார் மீது புகார் காண்டம் படிச்சேனே…. அந்த ரகசியத்தையா?”

“விட்டா உன் முதுகு அழுக்கு பூராத்தையும் திறந்து காண்பிச்சிருவ போல.. மனிதர்கள் 150வயசு வரை உயிர் வாழ வைக்கும் ரகசியம் உன்னிடம் இருப்பதாக கூறியுள்ளாய்.. அந்த ரகசியத்தை அமெரிக்காவுக்கு கொடுத்திரு. எவ்வளவு டாலர் வேணாலும் தரம்…”

“ரஷ்யாவுக்கும் கொடுத்திரு.. இல்லேன்னா உன் மீது போர் தொடுப்போம்!” புடின்.

“ஜெய் கிஜ்ரங்க மிலி… நானும் சிந்துதான்ய்யா.. அந்த ரகசியத்தை இங்கிலாந்துக்கு கொடுத்திரு. இந்தியா முழுக்க ரயில்வே தண்டவாளம் போட்டது நாங்கதானே?” ரிஷி சுனக்.

ஜெஸிந்தா, “அந்த ரகசியத்தை ந்யூஸிலாந்துக்கு கொடுத்தா உன்னையையே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்!”

“நான் இன்னொரு கல்யாணம் பண்ணினா என் நடப்பு பொண்டாட்டி மைதிகா என்னை கரன்ட் வைச்சு கொன்னுடுவா..”

“பேசாம அந்த ரகசியத்தை உலகத்துக்கு அறிவிச்சினா உலகமக்கள் பூராவும் 150வயசு வரை வாழட்டுமே!”

“நான் என் இரகசியத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டும்தான் சொல்வேன். அதுவும் ஒரு கண்டிசனோட 2026 சட்டசபை தேர்தல்ல என்னை மக்கள் முதலமைச்சர் ஆக்கினால் ரகசியத்தை வெளியிடுவேன்!”

“உன்னை அமெரிக்க துணை ஜனாதிபதி ஆக்குகிறேன்.. ரகசியத்தை சொல்லிடு..”

“நோ.. எவரிபடி கெட் லாஸ்ட்!” தன்னைச்சுற்றி நிற்கும் உலகநாடுகளின் ஜனாதிபதிகளை பிரதம மந்திரிகளை ஒரே கும்மாங்குத்தில் சிதற்றினார் ஜிம்மி குமார்.

கனவு அறுந்தது.

எழுந்து அமர்ந்தார் ஜிம்மிகுமார். வயது 72. கிராமத்து திருவிழாக்களில் பீமபுஷ்டி அல்வா விற்பார்கள். அந்த தள்ளுவண்டியில் ஒரு பயில்வானின் படம் டிஸ்பிளே பண்ணப்பட்டிருக்கும். அந்த பயில்வானைப் போலவே இருப்பார் ஜிம்மி குமார். ஜிம்பாடி பல திருமணங்கள் செய்தும் தாம்பத்யதாகம் அடங்காதவர். ஆரம்பக் கால படங்களில் ஜெமினிகாந்த் என்கிற பெயரில் நடித்தார். இருபது வருடங்களுக்கு முன் நா.மு.க கட்சி ஆரம்பித்தார். கீமான் கட்சிக்கு ஆறுசதவீதம் ஓட்டுகள். கிஜேபிக்கு 2.5சதவீதம் ஓட்டுகள். தைகிமுகவுக்கு 1.5சதவீதம் ஓட்டுகள். சாமாகவுக்கு நான்கு சதவீதம் வாக்குகள். பிசிகவுக்கு இரண்டு சதவீத வாக்குகள் ஆனால் ஜிம்மி குமார் கட்சிக்கு 0.10 சதவீத வாக்குகளே இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்தன.

ஜிம்மிகுமார் தனக்குதானே ‘தண்டரிங் ஸ்டார்’ என பெயர் சூடிக்கொண்டார்.

கடந்த வாரம் ஜிம்மிகுமார் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு குண்டை போட்டார். “இப்ப எனக்கு வயது 72ஆகுது. என்னிடம் ஆண்மையும் ஆரோக்கியமும் கொட்டிக்கிடக்கு. நான் 150வயது வரை உயிர் வாழ்வேன். என்னை வருகிற சட்டசபை தேர்தலில் முதலமைச்சர் ஆக்குனீர்கள் என்றால் 150வயது வரை உயிர் வாழும் ரகசியத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்வேன்..”

“நீங்க தனியா தேர்தல்ல நின்னா 234தொகுதிகள்லயும் டெபாஸிட் கூட வாங்க மாட்டீங்களே.. உங்களுக்கு ஏன் சிஎம் ஆசை?”

“எந்த கட்சி வேணாலும் ஜெயிக்கட்டும் ஆனா ஜெயிக்ற கட்சி என்னை முதலமைச்சரா தேர்ந்தெடுக்கட்டும்!”

“இந்த சட்டசபை தேர்தல்ல கிமுகதான் ஜெயிக்கும்னு கருத்துக்கணிப்புகள் சொல்லுது. முதலமைச்சர் பதவியை ரூஸ்வெல்ட் எப்படி விட்டுக் கொடுப்பார்?”

“கட்சிகள் ஏராளமான இலவசங்களை கொடுக்கலாம். ஆனா மக்களுக்கு நீண்ட ஆயுளை காரன்டியா தர முடியுமா? கடவுள்மாதிரி நான் தரேன்… எல்லா கட்சிகளும் கூடிப் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்!”

“அகிமுக கண்ணீர்செல்வமும் மழப்பாடியும் ஒத்துக்கமாட்டாங்க.. சட்டசபை தேர்தல்ல அவங்க ஜெயிச்சிட்டா தலையாணியை குழந்தைகள் ஆளுக்கு ஒரு பக்கம் பிடிச்சு இழுத்து பஞ்சுகளை பறக்க விடுறமாதிரி சிஎம் போஸ்ட்டை கடிச்சுக் குதறிடு வாங்க..”

“அது அவங்க பிரச்சனை!”

“தம்பிமலை லூட்டி ஓவரா இருக்குமே..”

“தம்பிமலை டில்லி முடிவுக்கு கட்டுப்படுவார். என் ஆபரை எந்த கட்சி புறக்கணிச்சாலும் அவங்க வெளிப்படையா மக்கள் விரோதி ஆய்டுவாங்க!”

“முதலமைச்சர் ஆனவுடனே அந்த ரகசியத்தை நீங்க சொல்லலேன்னா?”

“மக்களுக்கே வராத சந்தேகத்தை மீடியாக்காரன் கிளப்பாதே!”

“மீடியாக்காரன் அவன் இவன்னு பேசாதிங்க..”

“பேசினா என்ன பண்ணுவ? மோதி பார்க்கலாம் வரியா?” சட்டையைக் கழற்றி எயிட்பேக் உடலை முறுக்கினார் ஜிம்மிகுமார்.

ஏப்ரல் 6ஆம் தேதி 2026 ஆம் வருடம்.

கிமுக இரு கிம்யூனிஸ்ட் கட்சிகள், கிங்கிரஸ், வைகிமுக, சாமாக, பிசிக கட்சிகள் ஒரு கூட்டணியாய்..

அகிமுக கிஜேபி கட்சிகள் ஒரு கூட்டணியாய்..

சட்டசபைத் தேர்தலில் நின்றன.

விருதுநகர் தொகுதியில் ஜிம்மிகுமார் நின்றார். அவரை எதிர்த்து எந்த கட்சியும் வேட்பாளர் நிறுத்தவில்லை. அன்னபோஸ்ட்டாக ஜிம்மிகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேர்தல் முடிவுகள் வெளியாகின.

172இடங்களில் கிமுக கூட்டணி வெற்றி.

38இடங்களில் அகிமுக கூட்டணி வெற்றி

23 இடங்களில் இதர கட்சிகள் வெற்றி

ஒரே ஒரு இடத்தில் ஜிம்மிகுமார் வெற்றி.

‘எந்த கட்சி ஜெயித்தாலும் பரவாயில்லை. அந்த கட்சி ஜிம்மிகுமாரை முதலமைச்சராக தேர்ந்தெடுக்க வேண்டும் எங்களுக்கு ஜிம்மிகுமாரின் ரகசியம் தேவை!” என தமிழ்நாட்டு மக்கள் குரல் எழுப்பினர்.

ரூஸ்வெல்ட் பொருமிக் கொண்டே ஒதுங்கி நின்றார்.

ஜிம்மிகுமார் முதலமைச்சராக பதவியேற்றார். பத்திரிகையாளர் சந்திப்பில் ஜிம்மிகுமார் “நூற்றி அம்பது வயது வரை வாழும் ரகசியத்தை இப்போதே நான் சொல்ல மாட்டேன். ஒரு வருடம் ஆட்சி செய்து முடித்தும் தான் கூறுவேன் அதுவரை மக்கள் பொறுமை காக்கவேண்டும்!”

தனக்கு ஜோடியாக நடித்த நடிகைகளின் தோளில் கைபோட்டவாறே முதல்வராக கோலோச்சினார் ஜிம்மிகுமார்.

-மே இரண்டாம் தேதி 2027ஆம் வருடம்

“மன்னிக்க வேண்டும் 150வயதுவரை வாழும் ரகசியத்தை சொல்லும் அளவுக்கு மக்கள் பக்குவப்படவில்லை அதனால் இன்னும் ஒரு ஆண்டு போனவுடன் கூறுகிறேன்!’‘ என்றார் ஜிம்மி குமார்.

தொடர்ந்து மூன்றாவது வருடம்.. நான்காவது வருடம்..

இதே நொண்டி சாக்கு பதில். பதவியேற்ற நான்கரை வருடங்கள் கழித்து ஒருநாள் ஜிம்மிகுமார். கைலாசாவுக்கு ரகசியமாக பறந்து போனார்.

ஜிம்மிகுமாரின் உடைமைகளை ஆராய்ந்தனர். எங்காவது 150வயதுவரை வாழும் ரகசியத்தை ஒளித்து வைத்திருக்கிறாரா?”

கடுமையாக துழாவிய பின் ஒரு கவர் கிடைத்தது. கவரில் 150வயதுவரை வாழும் ரகசியம் என போடப்பட்டிருந்தது.

பிரித்தனர். அதில்-

‘149வயது ஆன தமிழ்நாட்டு மக்களை என்னிடம் அழைத்து வாருங்கள். அவர்களை 150வயது வரை வாழ வைத்து விடுகிறேன். பிம்பிளிக்கி பிளாக்கி’

ஏமாந்து ஏமாந்து பழகிப் போன ஏமாந்த சோணகிரி தமிழ்மக்கள் “மாப்பு வச்சிட்டான்டா ஆப்பு!” என அலறி ஓய்ந்தனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...