நட்பு
1882இல் இங்கிலாந்து சென்ற போப் 1885 முதல் 1908ஆம் ஆண்டு அவர் இறப்பு வரைக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். அக்காலத்தில் தமிழ் நூல்களைக் கற்பதிலும் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதிலும் தீவிரமாகத் தம் கவனத்தைச் செலுத்தினார். அவர் ஆர்வத்திற்கு பேருதவியாக உ.வே.சா பதிப்பித்த பழந்தமிழ் நூல்கள் இருந்தன. அதன் அடிப்படையில் இருவருக்கும் நட்பு உருவாகி வளர்ந்தது.
உ.வே.சாமிநாதையர் பதிப்பித்த சீவக சிந்தாமணி நூலை எப்படியோ பெற்ற போப் தம் நாலடியார் மொழிபெயர்ப்பு நூலில் அப்பதிப்பைப் பாராட்டி எழுதினார். 1893ஆம் ஆண்டு வெளியான நாலடியாரின் முன்னுரையில் “எளிதாக வாசிக்கத்தக்க வகையில் வே.சாமிநாதையர் பதிப்பித்த சீவக சிந்தாமணி பதிப்பு போற்றத்தக்கது” என்று (p.xii) எழுதினார்.
இவ்வாறு அவர் எழுதியுள்ள தகவலைப் பூண்டி அரங்கநாத முதலியார்தான் உ.வே.சா.விடம் தெரிவித்தார். நாலடியார் பிரதியையும் கொடுத்தார். அதை நினைவில் கொண்டிருந்த உ.வே.சா 1894ஆம் ஆண்டு தாம் புறநானூற்றைப் பதிப்பித்ததும் அதன் ஒரு பிரதியைப் போப்புக்கு அனுப்பிவைத்தார். நெடுநாட்களாக அவரிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை. 1895 ஏப்ரல் இறுதியில் போப் எழுதிய கடிதம் மே மாதத்தில் உ.வே.சா.வுக்குக் கிடைத்தது. இதுதான் இருவருக்கும் கடிதத் தொடர்பு ஏற்பட்ட முதல் சந்தர்ப்பம். அதன் பின் 1908ஆம் ஆண்டு போப் இறக்கும் வரைக்கும் கடிதம் வாயிலான நட்பு தொடர்ந்தது.
-பெருமாள் முருகன்
நன்றி: அருஞ்சொல்