மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 21 | பெ. கருணாகரன்
பிரம்பாஸ்திரங்களை முறித்தெறிந்த முத்தம்
அப்போதைய பள்ளி நாட்களை இப்போது நினைத்தால் கூச்சலிடும் பிரம்புகளின் ஓயாத இரைச்சல்களே இன்னமும் என் காதுகளைத் துளைத்தெடுக்கின்றன. ஓ… அந்த நாட்கள். பிரம்புகளுக்குப் பயந்து பள்ளிக்கு கட் அடித்துவிட்டு தியேட்டர், ரயில்வே ஸ்டேஷன், பெரிய கோயில், ஆற்றங்கரை என்று சுற்றிய நாட்கள்… எப்படி மீண்டேன்? இத்தனைக்கும் விடை ஒரே ஒரு முத்தம். அந்த முத்தம் பிரம்புகளை முறித்தெறிந்து என் காயங்களுக்கு மருந்திட்டது என்றால் மிகையல்ல.
வீட்டில் நான் செல்லம். யாரும் என்னை அடிப்பதில்லை. விருத்தாசலம் நகராட்சித் தொடக்கப் பள்ளியில் என்னைச் சேர்த்த முதல்நாள் இன்னும் நினைவிருக்கிறது. என் அம்மாவும் அப்பாவும் வகுப்பறையில் என்னை விட்டுவிட்டுச் சென்ற பிறகு, சுற்றிலும் புதிய மாணவர்கள், மனிதர்களுக்கு நடுவே நான் மிரண்டுபோ அழுது கொண்டிருந்தேன். அப்போது, வகுப்பாசிரியர் கையில் பிரம்புடன் அருகே வந்து ‘வாயை மூடு… கொன்னுடுவேன்…’ என்று மிரட்டினார். வெதும்பிக் கொண்டே நான் வாய் மூடி மவுனமானேன். அன்று ஆரம்பித்ததுதான் வகுப்பறை அலர்ஜி. கையில் பிரம்புடன் சுற்றும் ஆசிரியர்களைப் பார்த்துப் பார்த்து பயமும் வெறுப்பும்தான் அதிகமானது. பாடத்தின் மீது வரவேண்டிய ஆர்வம், பிரம்புகளின் மீதான அச்சத்தால் நழுவியது.
இதனால், அடிக்கடி ஏதாவது காரணம் சொல்லி பள்ளிக்கு மட்டம் போட்டுக் கொண்டே இருந்தேன். ஒருநாள் வயிற்றுவலி. இன்னொருநாள் தலைவலி. இதன் நீட்சியாகப் பள்ளிக்குச் செல்லும்போது சாக்கடையில் விழுந்து உடை, பை அனைத்தையும் வேண்டுமென்றே நாசமாக்கிக் கொண்டு அதைக் காரணமாக்கி அன்று ஒருநாள் பள்ளிக்கு மட்டம் போட்டேன். பள்ளிக்குச் செல்லாமல் இருக்க, நாளை என்ன காரணம் சொல்லலாம் என்று முதல்நாளே யோசிக்க வைத்து விட்டது ஆசிரியர்களின் பிரம்பு மிரட்டல்.
ஒருநாள், என் சித்தப்பா ‘ஏண்டா பள்ளிக்குப் போக மாட்டேங்கிறே..?’ என்று வாஞ்சையுடன் கேட்டபோது, மனதில் இருந்ததையெல்லாம் அவரிடம் கொட்டித் தீர்த்தேன். அதன்பிறகு நகராட்சி தொடக்கப் பள்ளியிலிருந்து தென்கோட்டை வீதி பள்ளிக்கு மாற்றினார்கள். அங்கும் ஆசிரியர்கள் பிரம்பாஸ்திரத்தோடுதான் இருந்தார்கள். முதலில் படித்த பள்ளியைவிட இங்கு கூடுதல் தண்டனைகள். வகுப்புக்குத் தாமதமாகப் போனால் வழிநடையில் முட்டி போட வைப்பார்கள். போவோர் வருவோர் எல்லாம் பார்த்துக் கொண்டே செல்வார்கள். அவமானம் பிடுங்கித் தின்னும் (உடன் மாணவிகளும் படிப்பது பெரும்சங்கடம்). இதை எப்படிச் சமாளிப்பது என்றே தெரியவில்லை. இறுதியில் தோன்றிய யோசனை, வகுப்புக்கு கட்.
ஒருநாள் ஆரம்பித்த பழக்கம், வழக்கமானது. மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த அந்தக் காலத்தில் நான் பார்த்த எம்.ஜி.ஆர். படங்கள் ஐம்பதைத் தாண்டும். தியேட்டர் தவிர, பெரிய கோயில் மேல்மாடம், மணிமுக்தாறு நதிப் பாலத்தின் கண்மாயில் ஏறி உறங்குவது என்று கட் அடித்தல் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் தொடர்ந்தது. ஒருநாள் நானும் என் அம்மாவும் கடைத் தெருவில் வந்து கொண்டிருந்தபோது, கோவிந்தன் என்ற எனது வகுப்பு நண்பன் என்னை வழிமறித்து, ‘என்னடா கருணா… கிளாஸ்க்கே வரமாட்டேங்கிறே? பள்ளிக் கூடத்திலிருந்து நின்னுட்டியா?’ என்று சத்தமாகக் கேட்டான் (படுபாவி…).
நான் தேள் கொட்டிய திருடன்போல் விழித்தேன். என் அம்மா அவனிடம் விசாரித்தபோது, அவன் என் வண்டவாளங்களைப் புட்டுப் புட்டு வைத்துவிட்டான். மறுநாள், என் சித்தப்பா என்னைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று தலைமை ஆசிரியரைத் தனியாகச் சந்தித்து என்னைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் வைத்துவிட்டுப் போனார்.
அதன் பிறகு ஆசிரியர்களின் ‘க்ளோஸ் சர்க்யூட்’டில் வைத்துக் கண்காணிக்கப்பட்டேன் (ஆனால், என் பிரச்சினையே வேறு. அதை யாரும் கடைசிவரை புரிந்து கொள்ளவேயில்லை). பல்லைக் கடித்துக் கொண்டு இரண்டாண்டுகள் ஓட்டினேன். ஐந்தாம் வகுப்பு முடிந்த நிலையில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1976-ல் ஆறாம் வகுப்பு சேர்க்கப்பட்டேன். தொடக்கப் பள்ளி ஆசிரியர்களே பரவாயில்லை என்று எண்ணும்படியாக இருந்தது உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை நடத்தியவிதம். கண்ணப்ப பத்தர் என்று ஓர் ஆசிரியர். அவரது கிள்ளலில் இருந்து மாணவர்களின் காது தப்பாது. பல மாணவர்களின் காதுகள் அவரது கிள்ளலால் ஓட்டையாகியிருந்ததே பத்தர் என்று அவர் அழைக்கப்படக் காரணம்.
இன்னொரு ஆசிரியர் சரித்திர வகுப்பெடுப்பவர் . தண்டனை கொடுப்பதிலும் சரித்திரம் படைத்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். முட்டி போட்டவாறே விளையாட்டு மைதானத்தைச் சுற்றிவரச் சொல்வார். சரளைக் கற்கள் கால் முட்டியை ரணமாக்கும் என்றால், நெருஞ்சி முட்களும் உடன்சேர்ந்து பதம் பார்க்கும். இவர் பெயர் தர்ம(அடி?)லிங்கம்.
அடுத்து, நாற்காலித் தண்டனை. நாற்காலி இருக்காது. ஆனால், நாற்காலியில் உட்காருவதுபோல் பாவனை செய்ய வேண்டும். கைப்பிடியில் கைகளை வைப்பதுபோல் கைகளை நீட்டிக்கொள்ள வேண்டும். சிறிதுநேரத்தில் கால், கை நரம்புகளைப் பிடித்து இழுக்க ஆரம்பிக்கும். வலி உயிரே போவிடும். இந்தத் தண்டனையைப் பல ஆசிரியர்கள் கொடுப்பார்கள்.
இன்னொரு ஆசிரியர் தண்டிக்கும் ஸ்டைலே வேறு. அவர் ஆறாம் வகுப்பு ஆசிரியர். தண்டிக்க வேண்டிய மாணவனையே வேப்ப மரத்தில் ஏற வைத்து கொழுந்துக் கிளையாகப் பார்த்து (சில சமயங்களில் கீழே நின்று அவரே தேர்வு செய்வார்) ஒடித்து வரச்சொல்லி, அதன் இலைகளை அந்த மாணவனை விட்டே நீக்கச் செய்துஅவனைத் தண்டிப்பார். ‘குரங்கு சேட்டை பண்றவனுக்கு இதான் தண்டனை…’ என்பார், மாணவனை மரத்தில் ஏறச் சொல்வதற்கான காரணம் வேண்டுமல்லவா.
இன்னொரு தமிழ் ஆசிரியர் ‘தடித்த ஓர் மகனை…’ என்ற வள்ளலாரின் பாடலைக் கண் மூடிப் பாடிக்கொண்டே ‘அம்மையப்பா இனி ஆற்றேன்…’ என்ற இறுதி அடி வரும்போது, கையிலுள்ள பிரம்பால் மாணவனை உரித்துவிடுவார். இத்தகைய ஆசிரியர்களுக்கு நடுவில் முதல் தலைமுறையின் சராசரி மாணவனான எனக்கு வகுப்பறைகள் வதைமுகாம்களாகவே இருந்தன. ஆசிரியர்கள் அனைவரும் கையில் பிரம்பு வைத்திருக்கும் கிங்கரர்களாகவே தோன்றினர். அதனால், மீண்டும் பள்ளிக்கு கட் அடிப்பது, ஊர் சுற்றுவது என்று பாதை மாறியது. இந்நிலையில்தான் நெகிழ்ச்சியான, என் வாழ்க்கைப் பாதையை மாற்றிய அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அது தெய்வச் செயல். கலியமூர்த்தி என்ற ஆசிரிய தெய்வத்தின் செயல்.
அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக்(!) கொண்டிருந்தேன். அன்று கணித வகுப்பு என்று நினைவு. ஆசிரியர் விடுப்பு. அதனால், மாணவர்கள் வகுப்பறையில் விளையாடிக் கொண்டிருந்தோம். தன்னைப் பெரியவன் என்று பாவனை செய்து கொள்ளும் பதின்மூன்று வயது அல்லவா. சினிமாவில் ரஜினிகாந்த் சிகரெட்டைத் தூக்கி எறிந்து வாயால் பிடித்து ஸ்டைலாக ஊதுவார். ஆசிரியர் இல்லாத வகுப்பறையில் நானும் என்னை ரஜினிகாந்த் ஆகப் பாவித்துக்கொண்டு, கரும்பலகையில் சாக்பீசால் ஆசிரியர் எழுதும்போது, கீழே உதிர்ந்திருந்த சாக்பீஸ் துகள்களை ஒரு வெள்ளைத் தாளில் எடுத்து, அதனை ஒரு சிகரெட்டைப்போல் சுருட்டி ஸ்டைலாக ஊதத் தொடங்கினேன். குபுக்… குபுக்…
நான் என்னை மறந்து மற்ற மாணவர்களிடம் சிகரெட் பிடிப்பதாக ஸ்டைல் காட்டிக் கொண்டிருந்தபோது, திடீரென்று மாணவர்கள் எல்லாம் பதற்றத்துடன் தங்கள் இடங்களில் பாய்ந்து சென்று அமர்ந்தார்கள். என்ன நடக்கிறதென்று நான் நிதானிப்பதற்குள் என் தோள் மீது ஒரு கரம் விழுந்தது.
திரும்பிப் பார்த்தால், உதவித் தலைமை ஆசிரியர் கலியமூர்த்தி நின்றிருந்தார். மற்ற மாணவர்களின் முகத்தில் திகில். அடுத்து, என் முதுகுத்தோல் உரியப் போவது நிச்சயம் என்பதான அச்சம் அவர்களது கண்களில் படிந்திருந்தது. எனக்குப் பதட்டத்தில் கை, கால் உதற ஆரம்பித்தன.
கலியமூர்த்தி சார் என்னிடம், ‘உன் பெயர் என்னப்பா?’ என்றார். நான் நடுங்கிக் கொண்டே பதில் சொன்னேன்.
‘என்னப்பா… நீ எவ்வளவு நல்ல பையன். பெரியவங்களே இதைப் பண்ணக் கூடாதுன்னு சொல்லிக்கிட்டிருக்காங்க. நீ சின்னப் பையன். இப்படிப் பண்ணலாமா? உன்னைப் பற்றி ஹெச்.எம்.கிட்டே ரொம்ப நல்ல மாதிரி சொல்லி வச்சிருக்கேன். நீதான் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வருவேன்னு அவர்கிட்டே பந்தயமே கட்டியிருக்கேன். நீ இப்படிப் பண்ணியது ரொம்ப வருத்தமா இருக்கப்பா. இனிமே இப்படிப் பண்ணாதே. இல்லாட்டி உன்கிட்டே நான் டூ விட்டுடுவேன்…’ என்று ஒரு நண்பனின் மொழிநடையில் உரிமையுடன் பேசிக் கொண்டிருந்தவர், என் தோளில் தட்டிக் கொடுத்து, எதிர்பாராத தருணத்தில் என் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து விட்டுச் சென்றார். நான் கண்கலங்கி நின்றேன்.
இப்போது நினைத்தாலும் அந்த முத்தத்தின் ஈரத்தடம் என் கன்னத்தில் இருப்பதாக உணர்கிறேன். அன்றுதான் நான் ஞானஸ்தானம் பெற்ற தினம். அந்த முத்தம் என்னுள் பல்வேறு சிந்தனைகளைக் கிளப்பி விட்டது. பிரம்புகளுக்குக் கட்டுப்படாத, அடங்காத என் விடலை மனம் என்னையும் மதித்து, நட்புடன் பேசி, என் தவறை மன்னித்து, இனி அப்படிச் செய்யாதே என்று அறிவுரை கூறிய அந்த ஆசிரியப் பெருமகனின் அணுகுமுறையால் நெகிழ்ந்தது.
அதன் பிறகு மொத்தமாக நான் மாறிவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். ஒழுங்காக வகுப்புகளுக்குச் செல்வது, முடிந்தவரை படிப்பது என்று என் பாதையில் ஒரு புதிய வெளிச்சம்.
அந்தச் சம்பவத்தின்போது, உதவித் தலைமை ஆசிரியர் எனக்கு ஏதேனும் கடுமையான தண்டனை கொடுத்திருந்தால், அன்று அவரது சைக்கிள் பஞ்சராகி இருக்கும். அதைத் தவிர வேறு முக்கிய நிகழ்வுகள் ஏதும் நடந்திருக்காது. ஆனால், அன்று அவரது அணுகுமுறையால் என் வாழ்க்கையே திசை மாறியது.
மேன்மைக்குரிய ஆசிரியப் பெருமக்களே… ‘சின்னப் பையன்தானே…’ என்று மாணவர்களை அலட்சியப்படுத்தாதீர்கள். பிரம்புகளால் வகுப்பறைகளை நடத்தாதீர்கள். பள்ளி, வீடு என்று அந்தச் சின்ன வாண்டுகளின் உலக எல்லை மிகச் சிறியது. இந்த இரண்டு இடங்களிலும் அவர்கள் அதிகம் எதிர்பார்ப்பது அன்பைத்தான்.
உங்கள் காலடியில் அவர்களின் கனவுகளைப் போட்டு மிதிக்காதீர்கள்.
முந்தையபகுதி – 20 | அடுத்தபகுதி – 22