மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 22 | பெ. கருணாகரன்

 மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 22 | பெ. கருணாகரன்

மழைநாள் வைராக்கியங்கள்

ழையில் நனையாத பால்யமுண்டா? மழையில் நனையாதது பால்யம்தானா? சிறுவயது மழைநாள் நினைவுகள் இன்றும் ஓயாமல் மனதுக்குள் பெய்து கொண்டே இருக்கிறது. நினைவு மழையில் உள்ளம் உழுத வயல்போல்  நெகிழ்ந்து விடுகிறது. இப்போது கூட மழை பெய்யும்போதெல்லாம் மனம் ஒரு சிறுவனாய் மாறிவிடுகிறது. மழை பெய்யும் நாட்களில் ஒரு பெர்மூடாவையும், டி ஷர்ட்டையும் அணிந்துகொண்டு காரணமே இல்லாமல் மழையில் நனைந்து அலைந்திருக்கிறீர்களா? மழைநாட்களின் பொழுதுபோக்கே இன்றும் எனக்கு அதுதான். சிறுவயதிலிருந்தே மழை என்னை ஒன்றும் செய்ததில்லை. என் உடல்நிலையை அது பாதித்ததில்லை.
‘மழை கவிதை கொண்டு வருது
யாரும் கதவடைக்க வேண்டாம்
குடைபிடித்து யாரும் கறுப்பு
கொடி பிடிக்க வேண்டாம்’ என்கிற வைரமுத்துவின் பாடல் வரிகளில் எனக்குச் சம்மதமே. மழையில் நனைதல் உடலினை வலுப்படுத்தும் என்று இப்போது வரை நம்பிக் கொண்டிருக்கிறேன். இயற்கைக்கும் நமக்குமான தொப்புள் கொடி உறவுதான் அந்த நீர்தாரைகள்.

பால்ய நாட்களின் அந்த மழைநாட்கள்…. நினைக்கும்போதே கண்களின் முனைகளில் இளஞ்சூட்டுடன் ஈரமழை துளிர்க்கிறது. மழை என்றாலே மகிழ்ச்சிதான். மழையில் மகிழாதவன் மனப்பிறழ்வுள்ளவனாகவோ. அல்லது ஏழை அன்றாடங்காய்ச்சியாகவோதான் இருக்க வேண்டும். வாழ்க்கைப் பாதுகாக்கப்பட்டதாக வரமளிக்கப்பட்டவர்களுக்கு மழை இனிக்கும் துளிகள்தான். வெளியில் சென்றால்தான் வயிறு நிறையும் என்கிற உறுதியற்ற வாழ்க்கை வாழும் ஏழையர்களுக்கு அது, கரிக்கும், கசக்கும் துளிகள். இன்று எனக்கு இனிக்கும் மழை சிறுவயதில் பலநாட்களில் கசக்கவும் செய்தது.   பகலில் பெய்யும் மழை தேவர்களாலும் இரவில் பெய்யும் மழை சாத்தான்களாலும் பூமிக்கு அனுப்பப்படுவதாக உணர்ந்த காலகட்டம் அது.

1970களில் எங்கள் தெருவில் ஒரு சில வீடுகளைத் தவிர, பெரும்பாலானவை கூரை வீடுகள்தான். நாணலும், நாணல் வாங்கக் கூட வக்கில்லாத பஞ்சையர்க்கு கருப்பஞ்சத்தையுமே வீட்டின் மேற்கூரையாக அருளப்பட்டன.  மழை என்பது இரு துருவ மனோநிலைக் கோளாறு கொண்டவனாகவே என்னை உருமாற்றியிருந்தது. இரவின் மழை கசந்தது. பகலின் மழை இனித்தது. அதற்குக் காரணம் இருந்தது. வெளியில் நாலு தூறல் போட்டாலே வெளியில் பெய்யும் மழையை மனசார வீட்டுக்குள் வரவேற்று இடம் அளிக்கும் ஓட்டைக் கூரை வீட்டில் வசித்தவர்கள் அனைவரும் இந்த இருதுருவ மனோநிலைக் கோளாறு நிலையைக் கடந்துதான் வந்திருப்பார்கள். .

பகலில் பெய்யும் மழை ஆடிக் களிப்பதற்காக இறைவனால் அனுப்பப்படுவது. மழையில் ஒருதுளியையும் விரயமாக்கக் கூடாது என்கிற வெறியுடன் நனைந்து, தண்ணீர் தேங்கிய தரையில் உருண்டு ஆனந்தத்தின் உச்சத்தைத் தொட்ட நாட்கள். இன்றைகள்போல் அன்று எங்களைத் தடுப்பார் இல்லை. மழையிலே நனையாதே… சளி பிடிச்சிக்கும். காய்ச்சல் வரும் என்றெல்லாம் எங்களுக்கு முட்டுக்கட்டைகள் இல்லை. இன்றைய குழந்தைகள் போல அன்று நாங்கள் பூஞ்சைகள் அல்ல. சத்தான உணவில்லாத போதும் உடம்பில் தேவைக்கு அதிகமாகவே நோய் எதிர்ப்புச் சக்தி இருந்தது.

மழை பெய்யும் நேரங்களில்தான் தோட்டத்தில் இலந்தைப்பழங்கள் அதிகமாய் உதிரும் என்பதால், மழைப்பொழுதுகளில் தோட்டமே கதியாய் கிடப்போம். டிரவுசர் பை நிறையும் வரை பொறுக்கிக் கொண்டிருந்துவிட்டுத் திரும்புவோம். மழையில் ரப்பர் பந்து, தென்னை மட்டை பேட்டுடன் கிரிக்கெட் ஆடுவோம். திருடன் போலீஸ் ஆட்டமும் நடக்கும். மழையில் கபடி ஆடியிருக்கிறீர்களா? நாங்கள் ஆடுவோம். மழையில் ஆடும் கபடி சவாலானது. ஆளைப் பிடிக்க முடியாது. வழுக்கும். அந்தச் சூழலில் கபடி ஆடுவது சவாலான த்ரில்தான்.

மழை நீரைச் சேமிக்காமல் இன்றைய நாட்களில் நாம் அதனை விரயம் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், அந்த நாட்களில் மழைநீரை விரயம் செய்யாமல், நாங்கள் சேமித்து வைத்திருக்கிறோம் – எங்கள் நினைவுகளில். கான்கிரீட் சிறைக்கூடங்களில் பெற்றோர் என்னும் ஜெயில் வார்டன்களின் கண்காணிப்பில் அடைக்கப்பட்டிருக்கும் இன்றைய தலைமுறைக் குழந்தைகளிடம் மழைநாள் அனுபவத்தைப் பற்றிக் கேட்டால், என்ன சொல்வார்கள்? ‘அது ஒரு சிறைநாள் அனுபவம்….’ என்பார்களோ?

பள்ளி நாட்களில் என் நெருங்கிய நண்பன் சம்பத்.  உயர்நிலைப் பள்ளிக்கு இருவரும் ஒருவர் தோள்மேல் இன்னொருவர்  கைபோட்டுக் கொண்டு சேர்ந்துதான் போவோம். வீட்டுக்குத் திரும்பும்போதும் அப்படிதான். தோழன் தோளில் கைபோட்டுப் பழகாதவர்கள் பால்யத்தை முழுமையாய் ருசிக்காதவர்கள்.

இரண்டு பேரும் துண்டு ஃபிலிம் சேகரிப்பதில் பைத்தியங்கள். அன்று ஒருநாள் ‘’16 வயதினிலே’ படத்தில்’ ரஜினி  மரத்தடியில்  உட்கார்ந்து கொண்டிருப்பது மாதிரி ஃபிலிமை அவன் எடுத்து வந்திருந்தான். ரஜினி என்றால் எனக்கு உயிர் ஆயிற்றே.

‘டேய்… எனக்குக் கொடுடா…’ என்று அவனிடம் கெஞ்சிக் கேட்டேன்.‘கொடுக்க முடியாது…’’ என்று அவன் மறுத்துவிட்டான்.

நான் கடுப்பாகி விட்டேன்.  அவன் பேச்சு ‘கா’’ விட்டேன். மதியத்திலிருந்து அவனுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டேன்.  சாயங்காலம் வானத்தில் மேகம் சூழத் தொடங்கியது. சிறிதுநேரத்தில்  எங்கும் இருட்டிவிட்டது. பள்ளி க்ளோசிங் பெல் அடித்தது. மின்னலும் இடியும் போட்டியிட்டன. மழை சீறலோடு வீறத் தொடங்கியது.

புத்தகப் பையைத் தலைக்கு வைத்துக்கொண்டு, எல்லோரும் வீட்டுக்குக்  ஓடத் தொடங்கினோம். சம்பத் முன்னால் ஓடத் தொடங்க, நான் இடைவெளி விட்டு அவனுக்குப் பின்னாலேயே ஓடத் தொடங்கினேன். கொஞ்ச தூரம்தான்  அவன் ஓடியிருப்பான். அப்போது, ஒரு மின்னல்… தொடர்ந்து காது பிளக்கும் இடி. என்ன நடந்ததென்று தெரியவில்லை. ‘அம்மா…’’ என்று அலறிக்கொண்டே சம்பத் சுருண்டு விழுந்தான். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

முகத்தில் வழிந்த மழைநீரைத் துடைத்துக்கொண்டே அருகில் போய்ப்பார்த்தேன். அவன் கரிய நிறத்தில் விரைத்துக்கிடந்தான். ‘கா’ விட்ட வீறாப்பையெல்லாம் மறந்து ‘சம்பத்… சம்பத்…’ என்று கத்திக் கூப்பிட்டுப் பார்த்தேன். அவனிடம் எந்த அசைவும் இல்லை. அதற்குள் கடைத்தெருவில் அனைவரும் கூடிவிட, தகவல் அறிந்து சம்பத் வீட்டிலிருந்து, பதறிக் கொண்டு ஓடி வந்தார்கள். அவனது அம்மா, வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறினாள்.

சம்பத் தலைச்சன் பிள்ளை என்பதால், அவன் மீது இடி விழுந்துவிட்டது என்றார்கள்.  எனது அம்மா என்னை அணைத்துக்கொண்டாள். ‘ரெண்டு பேரும் தோள்ல கைபோட்டுக்கிட்டு ஒண்ணாத்தானே சுத்துவானுங்க…. இவன் எப்படி தப்பிச்சான்?’ என்று வாத்தியார்கள் வியந்தார்கள். ரஜினிதான் என்னைக் காப்பாற்றினாரோ?

சம்பத்தின் மரணத்துக்குப் பிறகும் கூட, பகல் மழை என்னை பயமுறுத்தும் விஷயமாக ஆகிவிடவில்லை. அது என்றும் என்னால் வெறுக்க முடியாததாகவே இருந்தது. மேகம் சூழ்ந்து நாலு தூறல் போட ஆரம்பித்தாலே போதும், நண்பர்கள் எல்லாம் சேர்ந்துவிடுவோம். மழையில் இறங்கி ஒரே கும்மாளம்தான். குதி குதியென்று குஷிதான்!

அன்றொருநாள்… ஆலங்கட்டி மழை பெய்தது. தட் தட்டென்று கல்லால் அடிப்பதுபோல் ஆலங்கட்டிகள் தரையில் வந்து விழுந்தன. ஆலங்கட்டிகளை சீசாவில் போட்டு வைத்தால் அந்தத் தண்ணீர் தேள்கடிக்கு மருந்து என்றார்கள். நான் குடையுடன் மழைக்களத்தில் இறங்கினேன். குடை பொத்துக்கொள்ளுமோ என்று நினைக்கும்படி வேகமாக மழை குடையில் டிரம்ஸ் வாசித்தது.  தரையில் விழுந்த ஆலங்கட்டிகள்  ஐஸ் கட்டிகள் மாதிரிதான் இருந்தன. பொறுக்கி வாயில் போட்டுக் கொண்டேன். ஜில்லென்றிருந்தது.

பகலில் மழை பொழிந்தால் ஆடிக் களிக்கலாம். இரவில் பெய்தால்? ஒழுகும் வீட்டில் வசித்துப் பார்த்தவர்களுக்குத்தான் அதன் துயரம் புரியும். ஒரு சொட்டு தூங்க முடியாது. விழும் ஒவ்வொரு சொட்டும் மூளைக்குள் இறங்கி பேரிடியாய் அதிர வைக்கும். பகல் மழை பால்யத்தின் அமுதப் பொழுதுகள். இரவு மழை நான் அழுத பொழுதுகள்.  சமூகத்தில் பெரும அவமானமாய் உணர்ந்த பொழுதுகள். அந்த அவமானத்திலிருந்து மீண்டு வரவேண்டும் என்று மன எழுச்சி கொண்ட பொழுதுகள். வறுமை சாபமல்ல, அது ஒரு நிலை மட்டுமே. அதிலிருந்து மீண்டெழ வேண்டும் என்று உறுதியெடுத்துக் கொண்ட பொழுதுகள்.

இரவில் மழை பெய்யும்போது, வீட்டுக் கூரையில் சிறிய ஓட்டை, பெரிய ஓட்டை வழியாக மழை நீர் வீட்டுக்குள் அத்து மீறும். பெரிய ஓட்டையிலிருந்து விழும் நீர் ஆக்ரோஷ ஆரோகணமாகவும், சிறிய ஓட்டையிலிருந்து ஒழுகும் நீர் பலகீன அவுரோகணமாகவும் ஒலியெழுப்பும். மழைநாளின் அந்த அவலக் காட்சி இன்னும் நீர்த்தாரைகளுக்கு நடுவே மனதில் பதிந்து, துன்புறுத்திக் கொண்டே இருக்கிறது. சிறிய சிம்னி விளக்கு வெளிச்சம். அந்தக் கறுத்த பெண்மணி, ஒழுகும் இடங்களுக்கு நேராக பாத்திரங்களை அங்கும் இங்கும் நகர்த்தி வைத்துக் கொண்டிருக்கிறார்.  அவர் என் அம்மா. பித்தளை, சில்வர், அலுமினியம் என்று விதவித அளவுகளில் பாத்திரங்கள். மழையின் வீர்யத்துக்கேற்ப ஒழுகும் இடங்களின் எண்ணிக்கையும் அதிகப்படும். கூரையில் ஒழுகாத இடத்திலிருந்து திடீரென்று உள்நுழைந்து எட்டிப்பார்ப்பான் வருண பகவான். உடனே வேறொரு பாத்திரம் அந்த இடத்தில் சென்று உட்கார்ந்து கொள்ளும்.

மழைநீரால் நிரம்பிய பாத்திரங்களை எடுத்துச் சென்று தண்ணீரை வெளியில் ஊற்றிவிட்டு மீண்டும் அந்த இடத்துக்குப் பாத்திரத்தைக் கொண்டு வந்து வைக்க வேண்டும். இதற்கு எல்லாப் பாத்திரங்களையும் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்த் தண்ணீரை கொண்டு சென்று வெளியில் ஊற்றும் வேலையை நானும் என் அக்காவும் செய்வோம்.

மழையின் வேகத்துக்கேற்ப பாத்திரங்களில் விழுந்து எழும் நீர்ச்சொட்டுக்களின் தாளலயம் மாறிக் கொண்டே இருக்கும். பாத்திரங்கள் நிரம்புகிறதா என்று கண்காணித்துக் கொண்டே நான் சிறிய மூங்கில் குச்சியை எடுத்துப் பாத்திரங்களின் விளிம்பில் டொய்ங்… டொய்ங் என்று டிரம்ஸ் வாசிப்பேன்.  ‘டேய்… சும்மா இருடா…’ என்று அம்மா செல்ல எரிச்சலைக் காட்டுவார்.

இந்த வேடிக்கையெல்லாம் கொஞ்சநேரம்தான். எனக்குத் தூக்கம் வரும். சிலநேரங்களில் பேய்த்தனமாக மழை பெய்யும்போது, அம்மா என்னையும் அக்காவையும் பக்கத்து வீட்டில் போய்ப்படுத்துக் கொள்ளச் சொல்வார். ஆனால், நாங்கள் போக மாட்டோம். மழை ஓரளவு நின்றபிறகு, வீட்டிலிருக்கும் பெஞ்சுக்கு மேலே இரண்டு குடைகளை விரித்து, அம்மா பிடித்துக்கொண்டு பெஞ்சின் ஓரமாய் உட்கார்ந்திருக்க, அவள் மடியில் நான் படுத்துக்கொண்டு தூங்குவேன். அப்பா ஒரு மூலையில் ஸ்டூலில் உட்கார்ந்துகொண்டு, பீடி புகைத்துக்கொண்டே மேலே வெறிப்பார். ஏக்கப் பெருமூச்சு அவரிடமிருந்து கிளம்பிவரும். என்ன யோசித்துக் கொண்டிருந்திருப்பார் என்று இதுவரை எனக்குப் புரிபட்டதில்லை.

அப்பாவைப் பார்த்தால் எனக்குப் பாவமாக இருக்கும். மழை அவருக்குக் கவலையைக் கொடுக்கும். மழையைத் திட்டுவார். அந்த அளவில் அவருக்குத் திருப்தி. வீட்டுக் கூரையை மாற்ற வேண்டுமென்று நினைத்தாலும் அவரால் அது முடிந்ததில்லை.

இவையெல்லாம் ஐந்தாவது ஆறாவது படிக்கும்போது நடந்த அனுபவங்கள். நாட்கள் செல்லச் செல்ல அதன் வலி பெரிதாகத் தொடங்கி விட்டது. பத்தாவது படிக்கும்போது, அது ஒரு வெறியாகவே மனதுக்குள் சீண்டிக் கொண்டே இருந்தது. வளர்ந்து பெரியவன் ஆனதும், இந்த வீட்டின் கூரையை மாற்றி மாடி வீடு கட்டணும். அந்த வைராக்கியம் நாள் செல்ல நாள் செல்ல கான்க்ரீட் போல் மனசுக்குள் இறுகிக் கொண்டே இருந்தது. நான் படித்து முடித்து நக்கீரனில் வேலை செய்தபோதுதான் என் கூரை வீட்டை ஓட்டு வீடாக மாற்ற முடிந்தது. அதன்பிறகு பதினைந்தாண்டுகள் கழித்துதான் அந்த ஓட்டு வீட்டை மாடி வீடாக மாற்றியமைக்க முடிந்தது.

இப்போது கூட கடந்த வாரம் தொடர்ந்து நாலைந்து நாட்கள் விடாமல் கொட்டித் தீர்த்தது வானம். இந்த மழையில் நனைந்து, தன் ஓட்டைக் குடிசைக்குள் ஏதோ ஓர் ஒழுகாத மூலையில் ஒதுங்கி, ஒடுங்கி, வெதும்பி சில அழுக்கு அரை டிரவுசர்கள் மனஉறுதி எடுத்திருக்கலாம். ‘நான் பெரியவன் ஆனதும்….’ அந்தச் செல்லக் கண்மணிகளின் வைராக்கியம் நிறைவேற மனதார வாழ்த்துகிறேன்.

முந்தையபகுதி – 21

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...