அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 12 | செல்லம் ஜெரினா
அத்தியாயம் -12
காருக்குள் கண்மூடி சரிந்திருந்தாள் அலமேலு. கையில் பழச்சாறை வைத்துக் கொண்டு அருகிலமர்ந்து மெதுமெதுவே புகட்டினாள் நிலவழகி. துளித்துளியாய் இறங்கிய சாறு தொண்டையை நனைத்து உயிரூட்டியது. சின்னுவும் மருதவள்ளியும் கூட ஜூஸ் குடிக்க நந்தன் மனைவிக்காக காத்திருந்தான். அதிர்ச்சியில் வாய் திறக்காமல் அவளே சொல்லட்டுமென காத்திருந்தான்.
சின்னுவை தூக்கிக் கொண்டு போலிஸ் ஸ்டேஷன் வந்த மருதவள்ளி ஸ்டேஷன் முன்னாலேயேயிருந்த தூங்குமூஞ்சி மரத்தடி நிழலில் நின்றாள்.உள்ளுக்குள்ளே அச்சம் வேர் விட்டது.செவத்தைய்யாவை வீட்டிலிருக்கும்படி சொல்லிவிட்டிருந்தாள். தெரிந்த அக்கா ஒருவருக்கு போன் பண்ணியிருப்பதாகவும் சொன்னாள்.
“வேணாம் புள்ளே நீ சின்ன ப் பொண்ணு “
என்ற செவத்தைய்யாவை சமாதானம் செய்து விட்டு நின்று கொண்டிருந்தாள். சின்னு அவள் தோளிலேயே அழுதழுது தூங்கிப் போய் விட்டாள். ‘அந்த அக்கா வந்திடுவாங்க த் தானே! ‘
மனம் குறுக்குசால் ஓட்டிக் கொண்டே இம்சித்தது.
நிலவழகியைப் பாத்ததுமே மருதவள்ளி “அக்கா” என வெடித்துக் கதறினாள். அதுவரை அழுந்தியிருந்த அழுத்தம் அழுகையாய் யெளிப்பட்டது. மருதவள்ளியும் சின்னப் பெண்தானே ! ஆறுதலாய் அவளைத் தட்டிக் கொடுத்தவள் உள்ளே நுழைந்தாள் . நிமிர்வோடு நுழைந்தவளைக் கண்டதும் பலராமன் வாயெல்லாம் பல்லாகப் பார்த்தான்.
‘யாரிந்த அப்சரஸ்’ என்று கேள்வியோடு மேலிருந்து கீழ்வரை பார்வையால் மேய்ந்தான்.
“எதுக்காக இவங்களை ஸ்டேஷன் கூப்பிட்டு வந்திருக்கிறிங்க? “
“முதல்லே நீ யாருன்னு சொல்லு. சட்டமா உள்ளே நுழைஞ்சு கேள்வி கேட்கிறே “
“நான் நிலவழகி நந்தன். இப்போ சொல்லுங்க”
“நிலவழகி! பேரு அட்டகாசமாயிருக்கு”.
அவனுடைய கண்கள் அவளின் மேனியை மொய்த்தன. உள்ளுக்குள்ளே அருவருப்பு பொங்கினாலும்
“இவங்களை எதுக்காக இங்கே கொண்டு வந்தீங்க? “
“நீ யாரும்மா? கேள்வி கேட்க அதுவும் எங்க வந்து யார்கிட்டே கேட்கிறே. ரொம்ப
பேசுனே உன்னையும் பிராத்தல் கேசுலே உள்ளாரப் போட்டுடுவேன். மரியாதையா போயிடு.”
“ஓ! அப்படியா? எங்க போடு பார்ப்போம்.”
“ஏய்! என்ன. ஏகவசனத்திலே பேசுறே. இதென்ன உன் வீடுன்னு நினைச்சியா? இது என்னோட ஸ்டேஷன். நான் தான் ராஜா. இப்போ உன் மேல கை வச்சாக்கூட ஒன்னும் செய்ய முடியாது.”
“கைய வச்சுத்தான் பாரேன். நீ கொடுத்ததுதானே திருப்பி உனக்குக் கிடைக்கும்.உனக்கு மரியாதை வேணுமா? .”
அவன் கோபமாய் அருகில் வந்து தோளில் கை வைக்கப்போனான். நிலாவோ அசராமல் அதிராமல் கையைக் கட்டிக்கொண்டு உறுத்துப்பார்த்தாள்.
“என்னடி முறைக்கிறே? அவளுக்கு வக்காலத்து வாங்கிட்டு வந்து நிக்கிறே. நல்ல பொம்பளை எவளாவது போலிஸ் ஸ்டேஷன் வாசலை மிதிப்பாளா.?இதுலருந்தே தெரியுதே! உன் யோக்யதை. ஓ! இப்போ என்ன? அவ வயித்தை நிரப்பிட்டு வந்திட்டதாலே நீதான் இப்போ அவளுக்கு சம்பாதிச்சு போடுறியோ.? அவளோட ஒருத்தன் இருப்பானே! செந்திலு செந்திலுன்னு அவன்தான் ஆள் பிடிச்சு தருவானா? ஒரு ராத்திரிக்கு எவ்ளோ ன்னு சொன்னா நல்லாயிருக்கும் தானே. என்னை நிரந்தரக் கஸ்டமரா வைச்சுக்கோயேன். மாசாமாசம் ஒரு அமௌண்ட் குடுத்திடறேன். என்ன சொல்றே? ஓக்கேயா? “
நிலா ‘நீ பேசுவதெல்லாம் பேசு ‘என்பது போல் பார்த்தாள்.
“தோ பாரு. நீயும் சிம்லா ஆப்பிள் கணக்கா இருக்கே. நீ ம் முனு சொல்லு அவளை விட்டுறேன். “
அப்போது மேஜை மீதிருந்த டெலிபோன் அலற ஏட்டையா ஓடிவந்து எடுத்தார்.
“ஹலோ!”
“………….”
“ஹாங்! சரிங்க ஸார்.. “
என்றவர் போனை ஸ்பீக்கரில் போட்டு பலராமனிடம் தந்தார்.
“யோவ் யாருய்யா? இப்ப கழுத்தறுப்பு? ஏன்யா ஸ்பீக்கர்ல போட்ட “
ஏட்டய்யா ஏதும் பேசாமலிருந்தார்.
“ஹலோ!”
“பலராமன். உங்க மேலதிகாரி உங்களுக்குக் கழுத்தறுப்பா? ஸ்டேஷன்ல என்னய்யா ப்ரச்னை”
“ஸாஸாஸாஸார்ர்ர்ர்ர்….ஒ..ஒன்னுமேயில்லையே ஸார். எல்லாமே நல்லாப்போகுது ஸார்”
என்றவன் அனிச்சையாக சல்யூட் வைத்தான் எழுந்து நின்று.
“அப்படியா? என் காதுக்கு வேற என்னமோ வந்ததே !யாரோ கர்ப்பிணி பொண்ணை ஸ்டேஷன்ல வச்சு டார்ச்சர் பண்றதா “
“அய்யோ ஸார் இங்க யாருமேயில்லை. யாரோ என்னைப்பத்தி தப்பா திரிச்சி போட்டுருக்கிறாங்க ஸார். “
“யோவ்! வாயை மூடுய்யா! கண்ணால பார்த்துகிட்டேதான்யா விசாரிக்கிறேன். ஏதேது முழுசா பூசணிக்காயையே வட்டில் சோத்துல வச்சு மறைச்சுடுவே போல”
பலராமன் ஜெர்க்கானான்.
“அந்த புள்ளைதாய்ச்சி பொண்ணைப்பத்தி விசாரிக்க வந்த இன்னொரு பொண்ணை நீ பேசினதெல்லா காதால கேட்டும் கண்ணால பார்த்துட்டும் தான்யா உன்னை கூப்பிட்டேன். உன்னையெல்லாம் தண்ணியில்லாத பாலைவனத்துலே போடனும்யா. லேடிஸ்ங்கிற மரியாதைக்கூட இல்லாம என்னய்யா பேசுற? உன்னைமாதிரி ஆளுங்களாலேதான்யா நம்ம டிபார்ட் மெண்ட் பேரே நாறுது. முதல்லே அவங்க ரெண்டு பேர்கிட்டேயும் மன்னிப்பு கேக்குறே. அடுத்து உனக்கு ஒரு மெயில் வரும். சஸ்பென்ஷன் ஆர்டர் வரும். என் கொயரிக்கு பதில் சொல்லு. உன்னை என்ன செய்றேன்னு பாரு. இந்த வீடியோ ஆதாரமே போதும்யா. உன்னை தூக்க.
அந்த நிலவழகிக்கிட்டே போனை குடுய்யா “
பலராமன் முகம் சுண்டிப்போனவனாய் ரிஸிவரைத் தர
நிலவழகி ஆங்கிலத்தில் பேச்சைத் தொடர்ந்தாள். நன்றி சொல்லி வைத்தாள் .
அதற்குள் ஏட்டய்யா அலமேலுவை ஆதரவாக மரபெஞ்சின் மீது அமர்த்தினார்.
அப்போதுதான் வாசலில் கைகளை பாண்ட் பாக்கெட்டில் விட்டுக் கொண்டு கால்களை அகற்றிவைத்து நின்றபடி மனைவியை மெச்சுதலாகப் பார்த்துக் கொண்டிருந்த கணவன் கண்ணில் விழ முகம் மலர்ந்தது.
“என்ன நிலா? ஸாருக்கு சரியானபடி சூடு வச்சிட்டே போல! இவனுக்கெல்லாம் எத்தனைதடவை பட்டாலும் புத்தி வராது போல! நம்மளோடு ஓரண்டை இழுக்கிறதே வேலையா வச்சிருக்கான். “
பலராமன் குழப்பமாகப் பார்த்தான். என்ன வீடியோ? யார் எடுத்தது? அனுப்பியது? இவங்க ரெண்டு பேருக்கும் என்ன தொடர்பு? என்று பலதும் வண்டாகக் குடைய கண்களை இடுக்கிக் கொண்டு ஏறிட்டான்.
“நிலா! அவங்களை அழைச்சுட்டு வா!”
நிலவழகி கைத்தாங்கலாய் அலமேலுவை தன் மேலே சார்த்திய படி காரை சமிபித்தாள். மருதவள்ளி ஓடி வந்தாள்.
“அக்கா! ஒன்னுமல்லைன்னு விட்டுட்டாங்களா? ரொம்பத் தேங்க்ஸ்க்கா.”
“மருதவள்ளி ! நீயும் வண்டியிலே ஏறு”
வண்டியை எடுத்த நந்தனுக்கு புதிராகவே இருந்தாலும் மனைவியே விளக்கம் சொல்லட்டும் என்று காத்திருந்தான்.அவளோ ஆழ்ந்த யோசனையிலிருந்தாள். பின்னால் திரும்பிப் பார்த்தவனுக்கு அந்தப்பெண்மணியின் நிலைமை மனதை வருத்த ஒரு ஜூஸ்கடையின் முன்னே நிறுத்தினான். வண்டி நின்றதும் நிமிர்ந்தவளிடம் கண்களால் கடையையும் அலமேலுவையும் காட்ட மருதவள்ளியையும் அழைத்துக்கொண்டு இறங்கினாள். மருதவள்ளிக்கு ஐஸ் போட்ட பழச்சாறும் குழந்தைக்கு ஐஸ் போடாத பாதம் பாலும் வாங்கித் தந்து விட்டு பழச்சாறை அலமேலுவுக்கு தந்தாள்.
பிறகே கணவனும் மனைவியும் அருந்தினர்.கணவனின் முகத்தில் தெரிந்த கேள்விகளைக் கண்டதும். .
“இவங்க பேரு அலமேலு. எனக்கு சித்தி முறை உங்களுக்கு மாமி முறை . போனமுறை அமுதசுரபிக்காக இங்கே சுத்துப்பட்ட ஊருக்கெல்லாம் வந்திருந்தோமில்லையா. அப்படித்தான் இவங்க பழக்கமானாங்க. எனக்கு அந்தப்பொண்ணு மருதவள்ளிதான் போன் பண்ணி சொன்னா.பலராமன் அவங்களை அடாவடியா ஸ்டேஷனுக்கு இழுத்துப் போனதை. அதான்….உங்களுக்கு போன் பண்ணிட்டு இங்கே வந்தேன். கூடவே என் தோழியோட அப்பாதான் இந்தச் சரகத்துக்கு மேலதிகாரி அதனாலே அவளிடமிருந்து அவருடைய போன் நம்பரை வாங்கி இங்கே நடப்பதை அப்படியே வீடியோவா அவருக்கு அனுப்பினேன்.லாயர் தேவைப்படுமோன்னுதான் உங்ககிட்டேயும் சொன்னேன்.”
“லாயர் கோர்ட்டுலேயிருப்பதா சொன்னார். சரிதான் என்ன பிரச்சினையோன்னு விழுந்தடிச்சு வந்தேன். என் பொண்டாட்டி ஜான்ஸிராணி கணக்கா பலராமனை போட்டு விளாசுறாங்க. சிங்கப் பொண்ணு தாண்டீ நீ! “
“பலராமன் ஏனிப்படி நடந்துகிடறாறோ…ச்சே! “
“சில ஜென்மமெல்லாம் இப்படித்தான் திருந்தாத ஜென்மாக்கள். இத்தனைக்கும் பங்காளிங்க அண்ணன் தம்பி முறைதான் நானும் அவனும். ஆனாலும் சின்னவயசு முதலே அவங்க குடும்பத்துக்கு நம்ம குடும்பத்து மேலே கோபம்.அன்னிக்கு நம்ம கல்யாணத்தப்போ என்ன கலாட்டா பண்ணினான். சரி கிளம்பு போலாம்.”
“அக்கா ! நம்ம வீட்டுக்கு வலதாலே போகனுமேக்கா வண்டி நேராப்போகுதே! “
“எங்க வீட்டுக்கு போகலாமின்னு “
“அப்போ நான் இறங்கிடவாக்கா”
“எதுக்கு நீயும் தான் வா! “
“ஆனா….அக்கா பாப்பாவுக்கு அண்ணிக்கு மருந்து மாத்திரை வேணுமேக்கா. நான் இறங்கி எடுத்துட்டு வந்திடவா?”
மனைவி கணவனைப் பார்க்க அவன் அவளைப்பார்க்க வண்டி ரிவர்ஸ் எடுத்து வலதில் திரும்பியது. மருதவள்ளி சொன்ன இடத்தில் நிற்க கணவனும் மனைவியும் இறங்கினர். மருதவள்ளி குழந்தையையும் தூக்கிக் கொண்டு உள்ளே ஓடினாள். செவத்தைய்யா
“அய்யா இன்னும்வரவுமில்லை. போனையும் எடுக்கலேயேம்மா”
எனவும் நிலா
அலமேலுவை தாங்கள் தங்கள் வீட்டுக்கு அழைத்துப்போவதாகச் சொன்னாள்.செவத்தைய்யா
நந்தனை அடையாளம் தெரிந்தவராய் வணங்கிவிட்டு வீட்டினுள் அழைத்துப்போனார். கூடத்தில் வாசலுக்கு நேரெதிரில் இருந்த பெரிய புகைப்படம் கண்ணில் பட்டது. மாலையும் கழுத்துமாக அலமேலு அருகில் செந்தில் வேலன் சிரித்துக் கொண்டு நின்றிருந்தார்.
நந்தன் சக்ரவர்த்தி திகைத்து நின்றான். மனைவியைத் திரும்பிப் பார்த்தான்.
(-சஞ்சாரம் தொடரும்… )
முந்தையபகுதி – 11 | அடுத்தபகுதி – 13