மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 14 | பெ. கருணாகரன்

 மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 14 | பெ. கருணாகரன்

எட்டுக்கு எட்டில் ஏழரை!

மேன்ஷன் வாழ்க்கை, பிரமச்சாரிகளின் சொர்க்கம். அதுவும் திருவல்லிக்கேணி மேன்ஷன்கள் கல்யாணமாகாத பிரம்மச்சாரிகளுக்கும் கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரிகளுக்கும் சொர்க்கம். தங்கிக் கொள்ள  குருவிக்கூடு போல் ஓர் அறை. வீட்டுச சாப்பாட்டுச் சுவையுடன் உணவளிக்கும் மெஸ்கள். சைவம் என்றால் காசி வினாயகா. அசைவம் என்றால் நாயர் மெஸ். மாதத்தின் காசு கொழிக்கும் முதல் வாரங்களில் புகாரி. மாதக் கடைசியில் பர்ஸ் இளைக்கும்போது, இருக்கவே இருக்கிறது கையேந்தி பவன்கள். ஒரே வேளையில் ஆயிரம் ரூபாய்க்கும் சாப்பிடலாம். பத்து ரூபாய் இருந்தால் அதைக் கொண்டும் வயிற்றுக்குச் சமாதானம் சொல்ல முடியும். இரவில் சினிமா பார்க்க ஏகப்பட்ட தியேட்டர்கள். வர்க்க பேதமில்லாமல் வந்தாரை வாழ வைத்தன திருவல்லிக்கேணி மேன்ஷன்கள்.

மேன்ஷன் வாழ்வு இனிமையாக அமைய நமது ரூம்மேட் பங்காளி ஒழுங்காக அமையும் கொடுப்பினை வேண்டும். அவன் கொஞ்சம் ‘கோக்கு மாக்காக’ இருந்து விட்டால் நரகம் நம் கைவசம். மேன்ஷன் வாழ்வில் எனக்கு கோக்குமாக்குகள்தான் கொடுப்பினையாக இருந்தன. நான் நாலைந்து மேன்ஷன்களில் தங்கியிருக்கிறேன். அப்போதெல்லாம் மேன்ஷன்கள் எனக்கு நரகத்தின் கிளை அலுவலகமாகவே தோன்றின. ஒரு இன்ரோவெர்ட்டாக இருக்கும் ஒருவனுக்கு எக்ஸ்ட்ரோவெர்ட் ரூம்மேட்டாக அமைவது துரதிர்ஷ்டத்தின் உச்சம். எனக்கும் அப்படித்தான் அமைந்தது. இப்போது நினைத்தால் ஒரு சீரியஸ் படத்தின் காமெடி டிராக்காகவே அவை தோன்றுகின்றன.

ஆனந்த விகடனில் வேலை கிடைத்து சென்னைக்கு வந்தபோது, முதலில் தங்கிய இடம் ரங்கநாதன் தெருவில் உள்ள துர்காபவன். இப்போதுபோல் ரங்கநாதன் தெரு 1989ல் பிஸினஸ் பிஸியில் பிதுங்கி வழியவில்லை. அப்போது சரவணா ஸ்டோர்ஸ் மட்டும்தான் பிரபலம். சாதாரண கடைவீதி போலதான் அப்போது அது இருந்தது. துர்கா பவன் இப்போதைய ஜெயச்சந்திரன் ஜூவல்லரி இருக்கும் இடத்தில் இருந்திருக்கலாம் என்று யூகம். மூன்றாவது மாடியில் எங்கள் அறை. இரண்டாவது மாடியில் ஒரு பெந்தேகொஸ்தே தேவாலயம். என் அறையில் என்னையும் சேர்த்து மொத்தம் நான்கு பேர். அவர்களின் என் ஊர் நண்பரும் ஒருவர். மற்ற மூன்று பேருக்கும் உறவினர்களும் நண்பர்களும் அதிகம். தினமும் அறையில் யாராவது நாலைந்து பேர் புதிதாக வந்து தங்குவார்கள். காலையில் குளித்து விட்டுத் தங்கள் ‘சோலி’யைப் பார்க்கக் கிளம்புவார்கள். எனக்குப் பத்திரிகை அலுவலகத்தில் வேலை என்பதால், வாரத்தில் இரண்டு நாட்கள்தான் அறைக்கு வருவேன். மற்ற நாட்களில் இரவில் அலுவலகத்தில் வேலை இருக்கும். விடுமுறை நாட்களில் ஊருக்குக் கிளம்பி விடுவேன். எப்போதாவதுதான் இரவில் வந்து தங்க வேண்டியிருந்ததால் புதிதாகச் சிலர் அறையில் தங்குவது எனக்குப் பெரிய பிரச்சினையாக இருந்ததில்லை.

ஒருநாள் இரவு, மணி ஒன்றிருக்கும். அலுவலக வேலை கொஞ்சம் முன்பே முடிந்துவிட்டதால் அலுவலக காரில் வந்து இறங்கிக் கொண்டு, அறைக்கு வந்து கதவைத் தட்டினேன். சிலமுறை தட்டியவுடன் உள்ளே சலனங்கள். ‘டேய்… தள்ளிப்படு… கர்ணா வந்திருக்கார். கதவைத் திறக்கணும்…’ என்று நண்பரின் குரல். அதைத் தொடர்ந்து கதவு திறக்கப்பட்டது. உள்ளே நுழைய நான் காலெடுத்து வைக்கப் போனேன். சட்டென்று அதிர்ந்து காலைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டேன். காரணம், நுழைவாயில் அருகில் ஒருவர் படுத்திருந்தார். மெல்லிய வெளிச்சம் பரவியிருந்த அறையில் பார்வையை உள்ளே செலுத்திய நான் அதிர்ந்துபோனேன். குறுக்கும் நெடுக்குமாக கிட்டதட்ட இருபது பேர் படுத்திருந்தார்கள். எனக்கு நிற்கக் கூட இடம் இருக்காது போலிருந்தது. மூன்று பேரின் ஊரிலிருந்தும் உறவினர்கள் வந்துவிட்டதால் ஆட்கள் அதிகமாகி விட்டதாகவும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும்படியும் கூறினார் நண்பர். நான் நண்பரிடம் அலுவலகத்தில் போய் படுத்துக் கொள்வதாகக் கூறிவிட்டு, அந்த இரவில், கையில் ஆட்டோவுக்குக் காசில்லாத நிலையில் ஒரு வெறியோடு அலுவலகத்துக்கு நடந்தே செல்ல ஆரம்பித்தேன். அந்தநாள்… இனி அந்த மேன்ஷனில் தங்கக் கூடாது என்று முடிவெடுத்த நாள். அந்த மாதத்தின் இறுதியுடன் அந்த மேன்ஷனிலிருந்து நான் காலி செய்து கொண்டேன். பிறகு, அலுவலக நண்பர் ஒருவர் ஆலோசனைப்படி சேப்பாக்கம் முனையிலுள்ள ஒரு மேன்ஷனில் அறையெடுத்தேன்.

அந்த மேன்ஷனில் முதல் மாடியில் அறை. அறையின்  மேற்கூரை உயரம் மிகவும் குறைவு. என் ரூம்மேட் ஊருக்குச் சென்றிருந்ததால் நான் மட்டுமே அறையில். அங்கு முதல்நாள் அனுபவமே அதிர்ச்சியாக இருந்தது. காலையில் குளித்து முடித்தால் உடம்பெல்லாம் பிசுபிசுவென்றிருந்தது. காரணம் உப்பு நீர். உடல் கொஞ்சம் அருவருப்பாய் உணர்ந்தது. அது முதல் நெருடல் என்றால், அலுவலகத்துக்குச் செல்ல கொஞ்சம் கையை உயர்த்தி சட்டையை மாட்டும்போது, ‘டடக்’ என்று மின்விசிறியின் இறக்கை என் விரல்களைப் பதம் பார்த்தது. முதல் நாளே வெறுப்புடன்தான் கிளம்பினேன்.  மறுநாள் விடிகாலையில், நான் அலுவலகத்திலிருந்து அறைக்கு வந்தால் அறை உள்புறம் தாழிடப்பட்டிருந்தது.

ரூம்மேட் ஊரிலிருந்து வந்துவிட்டான் போலும். அறைக் கதவைத் தட்டினேன். கதவைத் திறந்தவனுக்கு 30 வயது இருக்கலாம். ‘வாங்க பிரதர்… மேனேஜர் சொன்னாரு…’ என்று அவன் பேசிய தமிழில் கொஞ்சம் தெலுங்கு வாடை. நான் அவனுக்கு ‘ஹலோ…’ சொல்லிவிட்டு, என் கட்டிலில் மல்லாந்து படுத்தபோது, அறையின் மேற்கூரை மூச்சுக் குழலை அழுத்துவதுபோல் ஓர் உணர்வு. இந்த உணர்வைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தில் காற்றோட்டம் நிறைந்த வீட்டில் கலாட்டாவான சூழ்நிலையில் நீங்கள் வளர்ந்திருந்தால்தான் முடியும். கூட்டுக் குடும்பங்களில் வளர்ந்த ஒருவன் சென்னை மேன்ஷன்களில் எட்டுக்கு எட்டு அறையில் தங்குவதென்பது மிகப்பெரும் கையறு நிலைதான்.

நாட்கள் நகர்ந்தன. இந்த ரூம்மேட்டுடனும் நான் அதிகம் பழக நேர்ந்ததில்லை. வாரத்தில் இரண்டு மூன்று முறைதான் எங்கள் சந்திப்பே இருக்கும். பெரும்பாலான இரவுகள் அலுவலகத்தில் தங்க நேர்ந்ததால் ரூம்மேட்டுடன் பழக நேர்ந்ததில்லை. மேலும் சாதாரணமாக அவருடன் பேசுவதற்குக் கூட மொழி எனக்குத் தடையாக இருந்தது. அந்த ரூமுக்கு நான் வந்து சேர்ந்து 20 நாட்கள் ஆகியிருக்லாம். அன்று காலையில் நான் தூங்கிக் கொண்டிருந்தபோது, ரூம் மேட் எழுப்பினான். தூக்கக் கலக்கத்துடன் நான் ‘என்ன?’ என்று கேட்டபோது, ‘மாசக் கடைசி… 500 ரூபாய் பணம் இருந்தால் கொடுங்க பிரதர்… ’ என்றார்.

‘எனக்கும் மாசக் கடைசிதான். கையில் காசு இல்லே தலைவா…’ என்றேன். அவர் சரி என்று கூறிவிட்டுக் கிளம்பி விட்டார். மறுநாள் காலையில் அலுவலகத்திலிருந்து வந்து, அசதியில் தூங்கினேன். எழுந்தபோது, நண்பகல் இருக்கும். ஒரு தேனீர் அருந்த வேண்டும் என்று தோன்றியதால், எழுந்து சட்டையை அணிந்துகொண்டு, கதவைத் திறக்க முயன்றேன். வெளியில் தாழிடப்பட்டிருந்தது. நான் கதவை தடதடவென்று தட்டினேன். ‘வெளியில் யாரு? கதவைத் திறங்களேன்…’ என்று கத்தினேன். அது பகல்நேரம் என்பதால் பக்கத்து ரூம்காரர்கள் எல்லாம் அலுவலகம் சென்றுவிட்டதால், கதவைத் திறக்க யாருமில்லை. நீண்ட நேரம் தட்டிய பிறகு, கீழே மேனேஜர் காதில் சத்தம் விழுந்து என்னவென்று எட்டிப் பார்த்தார். பிறகு அவர், ‘வெளியில் பூட்டியிருக்கே சார்…’ என்றார். நான் அதிர்ந்துவிட்டேன்.

‘ராஸ்கல் ஐநூறு ரூபாய் இல்லேன்னு சொன்னதுக்காக, ஒருத்தனை அறையில் வெச்சுப் பூட்டிட்டுப போவானா?’ என்று கடுங்கோபத்துடன் என்னிடம் இருந்த சாவியை கதவின் இடுக்கு வழியாக வெளியே தள்ளினேன். அதன் பிறகு, ஒரு வழியாகக் கதவு திறக்கப்பட்டு வெளியே வந்தேன். அன்று இரவு அவனுக்குச் சரி பாட்டு கிடைத்தது என்னிடமிருந்தும், மேனேஜரிடமிருந்தும். ‘மேன்ஷன் வாழ்க்கையில் இதுவெல்லாம் சாதாரணமப்பா…’ என்கிற தினுசில் அவன் அலட்டிக் கொள்ளாமல், மறந்து போய் பூட்டிவிட்டுச் சென்றதாகச் சொன்னான். அவனிடம் அந்த மாதத்துடன் அறையை காலி செய்து கொள்ளச் சொல்லி மேன்ஷன் மேனேஜர் சொன்னபோது, ‘வேணாம் சார். நானே காலி பண்ணிக்கிறேன்… இந்த மான்ஷன் எனக்குப் பிடிக்கலே…’ என்று கூறிவிட்டு அன்றே மான்ஷனை காலி செய்தேன். இதற்கடுத்து சில தினங்கள் அலுவலக வாசம்.

அடுத்து, பெல்ஸ் ரோடு முனையில் ஒரு மேன்ஷன். தரை தளத்திலேயே எனது அறை இருந்தது. ‘அடங்குமுறை’ என்ற என் சிறுகதை ஒன்றில் இந்த மேன்ஷனில் சூழலை வைத்துதான் இப்படி எழுதியிருப்பேன். ‘எட்டுக்கு எட்டடியில் அறை! அது சிறை! கடகடக்கும் மின் விசிறியின் சத்தம். பக்கத்து ரூம் கல்யாணம் ஆகாத முதிர் ஆடவனின் ’லொக்… லொக்…’ இருமலும், பீடி நாற்றமும்…  காலையில் படுக்கையில் புரண்டு, உருண்டு கொண்டிருக்கும்போது, வெளியே  கை பம்ப்பின் ’லொடக், லொடக்’ சத்தம்…  எங்கிருந்தோ மிதந்து வரும் டேப் ரிக்கார்டர் கானா… நடுவில் யாரோ விசிலடித்துக் கொண்டே ஓடுவார்கள். ஏதோ ஓர் அறையின் வெளிக் கதவு  பூட்டப்படும்  ’டு டக்… டர்க்…’ சத்தம். தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று கரம் மசாலாவாக அவ்வப்போது வெளியில் பேச்சுக்குரலகள்’

இந்த மேன்ஷனின் கூரை கொஞ்சம் உயரமாக இருந்தது. கொஞ்சம் காற்றோட்டமாகவும் இருந்தது. இங்கும் ரூம்மேட்தான் பிரச்சினை. இந்த அறையின் ரூம்மேட் 50 வயதுக்காரர். சரியான தண்ணிவண்டி. இரவுகளில் நான் ரூமில் தங்க வேண்டிய சூழல் வரும்போதெல்லாம் நரகம்போல் உணர்வேன். மது அருந்திவிட்டு, வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக் கொண்டிருப்பார். உளறிக் கொண்டே நம்மை வேறு பார்த்துக் கேவலமாய் புன்னகைப்பார்.

அவர் தொல்லை தாங்காமல் மொட்டை மாடியில் போய்ப் படுத்தால் அங்கும் படுக்கையை எடுத்துக் கொண்டு வந்துவிடுவார். எனக்குப் பக்கத்திலேயே படுக்கையைப் போட்டுக் கொண்டு மீண்டும் தனது உளறல் கச்சேரியை ஆரம்பித்து விடுவார். நடுவில் திடீரென்று மூடு வந்து ‘எங்கே நிம்மதி?’ என்று பாடத் தொடங்கி விடுவார். இவர் தொல்லை தாங்காமல் மேன்ஷன் மேனேஜரிடம் என்னை ரூம் மாற்றி விடச் சொன்னேன். வேறு ஏதாவது ரூம் காலியானால் சொல்கிறேன் என்று அவர் கூறியிருந்தார். நாட்கள் தினம் தினம் ரணம் ரணம் என்று ஓடின. ஒரு மாதம் முடிந்திருந்த நிலையில் இங்கும் பிரச்சினை.

மாதத்தின் முதல்நாள் அது. ரூம்மேட் அன்று மாலை என் அலுவலகத்துக்கு வந்தார். ஊரில் பாட்டி இறந்துவிட்டதாகவும் ஊருக்குச் செல்ல வேண்டியிருப்பதால் இரண்டாயிரம் ரூபாய் பணம் வேண்டுமென்று கேட்டார். என்னிடம் பணம் இல்லை என்றேன். ‘அப்போ இருநூறு ரூபாயாவது கொடுங்க… ஊருக்குப் போயிட்டு வந்து தந்திடறேன்…’ என்று இருநூறு ரூபாய்  வாங்கிக் கொண்டு கிளம்பினார். மறுநாள் காலை அலுவலகம் முடிந்து நான் ரூமுக்குச் சென்றபோது, மேன்ஷனின் மேனேஜர், பரபரப்பாக என்னிடம் கூறினார். ‘உங்க ரூம்மேட் நைட்டு தண்ணி போட்டுட்டு வந்து கலாட்டா பண்ணினான் தெரியுமா? மேன்ஷன்ல பொம்பளைங்களை வெச்சு தொழில் பண்றீங்களாடா?’ன்னு கூச்சல் போட்டான். அப்புறம் அவனை ரெண்டு தட்டி அவரோட பெட்டி படுக்கையை எல்லாம் தூக்கி வெளியில் போட்டுட்டோம். அப்புறமும் வெளியிலே நின்னுக்கிட்டு விடாம சத்தம் போட்டதாலே போலீஸ்க்கு போன் பண்ணினோம். போலீஸ் வந்து செமத்தையா அவனைச் சுளுக்கு எடுத்து அனுப்பிச்சு…’ என்றார். நான் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்திருந்தால் அம்பேல் ஆகியிருக்குமோ?

மேன்ஷன் எனக்கு இனி சரிப்படாது என்கிற முடிவுக்கு வந்து விட்டேன். மனம் வெறுத்திருந்த நிலையில், சென்னையிலிருந்த ஊர் நண்பர்கள் சிலர் சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு தனி வீடெடுத்துத் தங்கப் போவதாகக் கூறினார்கள். அட, ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் கருணாகரா’ என்று பரவசமாகி உடனே நானும் அந்தக் கூட்டணியில் இணைந்தேன். இங்கும் என் பிரச்சினை அலுவலகத்திலிருந்து திரும்பி வருகிற நேரம்தான். பலநாட்களில் இரவில் வராமல் விடிகாலையில் திரும்பி வந்தது நண்பர்களுக்கு என்னைப் பற்றிய சந்தேகத்தைக் கிளப்பி விட்டிருந்தது. நான் விடிகாலையில் ரூமுக்கு வருகிற போதெல்லாம், அவர்கள் ஒருவருக்கொருவர் ரகசியப் பார்வை பார்த்து, புன்னகைத்துக் கொள்வர்கள். எனக்கு அதற்கான காரணம் புரியவில்லை. ஒரு மாதம் ஓடியிருக்கும்.

ஒருநாள் விருத்தாசலத்துக்குப் போயிருந்தபோது, ‘என்னடா… கருணா…. எப்படியிருக்கே?’ என்று ஆரம்பித்த என் வகுப்புத் தோழன் ஒருவன்தான் அந்த அதிர்ச்சிகரமான கேள்வியைக் கேட்டான். ‘எப்படிடா போயிக்கிட்டிருக்கு குடும்ப வாழ்க்கை?’

‘என்னடா விளையாடறியா? உனக்குத் தெரியாம எனக்கெப்படிடா கல்யாணம் நடக்க முடியும்?’ என்றேன். ‘எல்லாம் எங்களுக்குத் தெரியும்டி… ரகசியமா கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ குடும்பம் நடத்துற சமர்த்து… ஏதோ நல்லா இருந்தால் சரிதான்…’ என்றான்.

அதன் பிறகுதான் நான் ஆபீசிலிருந்து விடிகாலையில் ரூமுக்கு வரும்போது, அந்த நண்பர்கள் என்னைப் பார்த்து மர்மமாகச் சிரித்தற்கான காரணம் புரிந்தது. இதுதான் காரணமா? ஒரு பத்திரிகைக்காரனின் வேலையைப் புரிந்து கொள்ளாமலே இஷ்டத்துக்குக் கதை கட்டுகிறார்களே என்று நொந்து கொண்டேன். சென்னைக்கு வந்தபிறகு இது குறித்து அவர்களிடம் நான் எதுவும் கேட்கவே இல்லை. அவர்களுடன் பேசவும் பிடிக்கவில்லை. அந்த மாதத்துடன் காலி செய்வதென்று முடிவெடுத்து விட்டேன். சில தினங்கள் சென்றிருந்தன. அன்று அலுவலகத்தில் எனக்கு இரவுப் பணி இருந்தது. மற்ற மூன்று நண்பர்களில் இருவர் ஊருக்குச் செல்லப் போவதாகப் பேசிக் கொண்டிருந்தனர். அன்று எனக்கு முன்னிரவு பதினொரு மணிக்கெல்லாம் பணி முடிந்து விட்டது. அறைக்குச் செல்லலாம் என்று நினைத்து, பஸ்பிடித்து வீட்டுக்கு வந்தேன். கதவைத் தட்டக் கையெடுத்துச் சென்றபோது, கலகலவென்று நண்பனது சிரிப்புச் சத்தம். ‘போடா லூசு…’ என்று தொடர்ந்து ஒரு பெண் குரல். கதவைத் தட்டாமலே அலுவலகத்துக்குத் திரும்பி விட்டேன்.

(- தொடரும்…)

முந்தையபகுதி – 13 | அடுத்தபகுதி – 15

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...