என்னை காணவில்லை – 13 | தேவிபாலா

 என்னை காணவில்லை – 13 | தேவிபாலா

அத்தியாயம் – 13

ஹேங்கரிலிருந்து சட்டை மட்டும் அந்தரத்தில் மிதந்து வர துளசி பீதியில் அலறி விட்டாள். அது குளியலறைக்குள் போனதும் கதவு சாத்திக்கொண்டது. துளசி வெளியே ஓடி வந்தாள்.

“ அம்மா! என் கூட வாயேன். சீக்கிரம் வா.!”

அம்மாவை ஏறத்தாழ இழுத்து வந்தாள். வேகமாக சென்று குளியலறை கதவை திறந்தாள். சட்டை அங்கே தொங்கியது.

“ யாரும் எடுக்காம இந்த சட்டை தானா வந்தது.”

அம்மா நளினி அவளை ஒரு மாதிரி பார்த்தாள்.

“ சாதாரணமா சொன்னா, நாங்க போக மாட்டோம்னு, எங்களை பயப்படுத்தி இங்கிருந்து விரட்டப்பாக்கறியா?”

“அய்யோ இல்லைம்மா. இந்த வீட்ல ஏதோ துர் சக்தி இருக்கு.!”

“ எனக்கு தெரியுமே.”

“உனக்கு தெரியுமா? என்ன சொல்ற நீ?”

“ ரெண்டு துர் தேவதைகள் ஒரே வீட்ல இருக்காது. நீ இருக்கும் போது உன்னை விட பெரிய பேய் இருக்க முடியுமா?”

அம்மா வெளியேற, துளசி கடுப்புடன் திரும்ப,

“ துளசி! என் ஜட்டி, பனியனை எடுத்து குடேன்.!”

பாத்ரூமிலிருந்து துவாரகா குரல் வெகு அருகில் கேட்க, உருவம் இல்லை. துளசி மிரண்டாள்.

“ சரி, நானே வந்து எடுக்கறேன்.”

சில நொடிகளில் பார்க்க பாத்ரூமிலிருந்து ஈரம் சொட்டிக்கொண்டே வார்ட் ரோப் வரை காலடி சுவடுகள்.  ஜட்டி, பனியன் அந்தரத்தில் மிதந்து வருவது தெரிந்தது. தீடீரென செல்ஃபோன் தனியாக மிதந்து வந்தது.

“ நான் கிளம்பிட்டேன் சார். அரை மணில வந்துடுவேன்.!”

துவாரகா ஃபோனில் பேசும் தெளிவான குரல். ஆனால் உருவம் தெரியவில்லை. துளசிக்கு மயக்கமே வந்து அப்படியே கட்டிலில் உட்கார்ந்து விட்டாள். அருவமாக இருந்த துவாரகா சகலத்தையும் பார்த்தான். உருவம் தெரியாமல் குரல் மட்டும் கேட்கும் தன் மின்னணு ஆராய்ச்சிக்கு வெற்றி என புரிந்தது.

“ நிறைய இருக்குடி உனக்கு. ஏழு வருஷமா கொஞ்சமா என்னையும், குடும்பத்தையும் நீ பாடா படுத்தி வச்சிருக்கே. நீ பயந்து பயந்து சாகணும்டி. சந்தேக படற மனைவிகளோட கதி என்னானு உலகம் உன்னை பார்த்து புரிஞ்சுகணும்டி. புரிய வைக்கறேன்.!”

வெளியே வந்தான் துவாரகா, உருவமாக.

“ மாப்ளே, காபி தரட்டுமா?”

“வேண்டாம் அத்தே. அவசர வேலை இருக்கு. நான் ஃபோன் பண்றேன்.”

அவன் காரில் ஏறியதும், டாக்டர் பல்லவி ஃபோன் செய்தாள்.

“ துவாரகா! என் க்ளீனிக்ல எப்ப வந்து டிவைஸ் பொருத்தறீங்க?”

“இன்னும் நாலு நாட்கள்ள. அதுக்குள்ள மூளை கலங்கி துளசி வருவா. சிகிச்சை தர தயாரா இருங்க டாக்டர். !”

அவன் காரை ஓட்டும் நேரம், ஓரளவு தெளிந்த துளசி, பீதியுடன் அந்த அறை, குளியலறை என சகலமும் பார்த்தாள். பிறகு வெளியே வந்தாள். அப்பா, அம்மா சிரித்து சிரித்து அப்போது தான் கல்யாணமான ஜோடி போல பேசிக்கொண்டிருக்க, துளசிக்கு ஆவேசம் அதிகமானது.

“ இந்த வயசுல என்ன ரொமான்ஸ்? உங்க ரெண்டு பேருக்கும் வெக்கமால்லை?”

“ஏண்டீ கூச்சல் போடற? காதலுக்கும், காமத்துக்கும் வயசே இல்லை, அது கணவன் மனைவியை பொறுத்த வரைக்கும். பாவம் மாப்ளை! உன்னை விவாகரத்து பண்ணிட்டு ஒரு அழகான நல்ல பெண்ணை கல்யாணம் செஞ்சுகற அன்னிக்குத்தான் மாப்ளைக்கு தான் ஒரு ஆம்பளைங்கற ஞாபகமே வரும்? அவரை பார்க்க வேதனையா இருக்கு. உடம்பை பட்டினி போட்டாச்சு. நாக்காவது உசிரோட இருக்கட்டும் அவருக்கு. என்னங்க, காய்கறி வாங்கணும். வர்றீங்களா?”

இருவரும் புறப்பட, துளசிக்கு காஞ்சனா ஃபோன் செய்தாள்.

“ என்ன நடக்குது துளசி?”

இவள் உள்ளே வர, அம்மா பதுங்கி வந்து கதவோரம் நின்றாள்.

“ இவர் என் கையால பச்சத்தண்ணி கூட குடிக்கறதில்லை. சமைச்சு போட எங்கம்மா, அப்பா வந்திருக்காங்க. நான் கலந்த வசிய மருந்தை அப்பா சாப்பிட்டு, அம்மா கூட அவர்….!”

“உங்கப்பா நல்ல பர்சனாலிட்டி. உங்கம்மாவும் எடுப்பா அழகா இருப்பாங்க. அய்யோ சூப்பர்டி…!”

“உன்னை நான் கொல்லப்போறேன்.!”

“நீ இன்னும் எத்தனை பேரை கொல்லப்போறே?”

“வாயை மூடு. இன்னும் கொஞ்சம் பேசணும். கபாலியை நான் சந்திச்சு நிறைய பேசணும். இல்லைன்னா என் கதை முடிஞ்சிடும். சீக்கிரம் ஏற்பாடு செய். அவன் ஒரு மந்திரவாதி. அவனால தான் எனக்கு வர்ற ஆபத்தை தடுக்க முடியும்.!”

“உனக்கென்ன ஆபத்து?”

“அதை கபாலி கிட்ட நான் பேசிக்கறேன்.”

“பணம் இல்லாம பார்க்க விட மாட்டான். ரெடியா இரு.!”

அம்மா நளினி பதட்டமாக ஓடி வந்தாள். அப்பா வாசலில்.

“ பைக்கை எடுங்க. தனியா ஒக்காந்து பேசணும். சீக்கிரம்.!”

ஒரு ஓரமாக பைக்கை நிறுத்தி அப்பா பார்க்க,

“ இவ, அந்த கேடு கெட்ட காஞ்சனாவை கூட்டிட்டு ஒரு மந்திரவாதி கிட்ட போய் வசிய மருந்து வாங்கியிருக்கா. மாப்ளைக்கு அதை கலந்திருக்கா. அதை நீங்க குடிச்சு நேத்திக்கு என்னை…”

“ ஆமாண்டி, வழக்கத்தை விட எங்கிட்ட வீரியம் அதிகமா இருந்தது எனக்கே புரிஞ்சது.!”

“அதுவா இப்ப முக்கியம். மாப்ளையை தன் பின்னால சுற்ற வைக்க, அந்த மந்திரவாதியை நாடியிருக்கா. எத்தனை பெரிய தப்பு? மேலும் மேலும் மோசமான பாதைல பயணிக்கறா.!”

அப்பா முகம் மாறியது.

“ இவனுங்கள்ளாம் மந்திரம், தந்திரம்னு எதையாவது செஞ்சு பணத்தை கறப்பானுங்க. மாப்ளை உயிருக்கே ஆபத்தா முடியலாம். குடும்பத்துக்கும் இது பெரிய ஆபத்தா முடியும். உடனே இதை தடுத்தாகணும்.!”

“நம்ம ரெண்டு பேரையும் விரட்ட, வீட்ல துர் சக்தி இருக்குன்னு நாடகமாடறா. நாம இருந்தா அவளால மாப்ளையை எதுவும் செய்ய முடியாது நளினி.!”

“ பாவம்ங்க மாப்ளை. என்ன பாவம் செஞ்சாரோ, இந்த பாவி கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கறார். யாருக்கும் இந்த நிலை வரக்கூடாதுங்க.”

அம்மா நளினி அழுது விட்டாள்.

“ அழற காரணமா இதுக்கு தீர்வு இல்லை. இவ அழகில்லை. மாப்ளை பேரழகன். இவளுக்கு நிறைய தாழ்வு மனப்பான்மை உண்டுன்னு நமக்கு தெரியும். தெரிஞ்சும் எந்த தகுதியும் இல்லாத இவளை அவர் தலைல கட்டினோம்.!”

“யாரும் அவரை கட்டாயப்படுத்தலையே? அவர் முழு மனசோட தானே தாலி கட்டினார்? இதுல நம்ம குற்றம் என்ன இருக்கு? இவளை ஒக்கார வச்சு நாம மாசக்கணக்கா பாடம் நடத்தியிருக்கோம். இந்த சந்தேகம் உன் வாழ்க்கையை அழிச்சிடும்னு நாம சொல்லலியா? நம்ம பங்குக்கு பெத்தவங்களா மகளை ஆதரிக்காம அவளை கண்டிக்கலையா?”

“அதெல்லாம் இனி பேசி லாபமில்லை. இது கரை கடந்தாச்சு. இவ மந்திரம், வசியம்னு தப்பான ரூட்ல போறதை தடுத்தே ஆகணும்.”

“அவ வரட்டும். நமக்கு எல்லாம் தெரியும்னு பேசிடலாம்.!”

“முதல்ல நாம பேச வேண்டியது மாப்ளை கிட்ட. அவரை எச்சரிக்கணும். இதுக்கான பாதுகாப்பை உறுதி படுத்தணும். அவர் படிச்சவர், புத்திசாலி. உடனே யோசிப்பார். ஏற்கனவே தன் அம்மா, குழந்தைகளை அவர் அப்புறப்படுத்த காரணம், இவ கிட்டேயிருந்து அவங்களை பாதுகாக்க. அவருக்கும் ஏதோ தெரிஞ்சிருக்கு. உடனே பேசிடலாம்.”

அப்பா ஃபோன் போட, துவாரகாவின் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என வந்தது. திரும்ப திரும்ப முயல அதே டோன். அதே நேரம், காஞ்சனா துளசிக்கு ஃபோன் செய்தாள்.

“ இன்னிக்கு சாயங்காலம் ஏழு மணிக்கு கபாலி உன்னை பார்க்க சம்மதம் சொல்லியாச்சு. இருபதாயிரம் பணத்தோட வா.!”

“அன்னிக்கு அம்பதாயிரம் தந்தேனே.!”

“உனக்கு பிரச்னை தீரணும்னா கேட்டதை குடு.! தெரு முனைல நில்லு. நான் ஆறு மணிக்கு வந்து கூப்பிடறேன் உன்னை.!”

ஒரு மணி நேரத்தில் அப்பா, அம்மா வீடு திரும்பி விட்டார்கள். அவர்களை துளசி கண்டு கொள்ளவில்லை. ஆனாலும் ஆறு மணிக்கு புறப்படும் போது இவர்கள் இருந்தால் நல்லதில்லை என தோன்றியது. அம்மாவிடம் வந்தாள்.

“ அம்மா! துர்கையம்மன் கோயில்ல சாயங்காலம் நீங்க ரெண்டு பேரும் போய் ஒரு அபிஷேகம் பண்ணிடுங்க. ஆறு மணி அபிஷேகம். அஞ்சு மணிக்கு புறப்படுங்க.!”

“இதப்பாரு, நாங்க போகலை. நீ உன் புருஷன் கிட்டே ஒழுங்கா, ஒரு நல்ல மனைவியா நட. ஆயிரம் வழி பாடுகளுக்கு அது சமம்.”

“உன்னை நான் உபதேசம் கேக்கலை. நானே போறேன்.!”

“இதாரு, சந்தேகம் காரணமா அவரை இத்தனை வருஷங்களா ஆட்டி வச்சாச்சு. தன் தாய், குழந்தைகளை அவர் வீட்டை விட்டு அப்புறப்படுத்தற அளவுக்கு நிலைமை மோசமாயாச்சு. நீ எதுக்கும் கலங்காம அடுத்த கட்ட தப்புக்களை செய்ய ஆரம்பிச்சிருக்கே. ஊருக்கே உன் சந்தேகம் தெரிஞ்சாச்சு. அவருக்கு உன்னை உதறிட்டு போக எத்தனை நேரமாகும்?”

“விட்ருவேனா?”

“ஒரு பொண்டாட்டி செய்யற காரியமா நீ செஞ்சே? எதுக்குடி வசிய மருந்து? அதை உங்கப்பா சாப்பிட்டு நடந்தது என்னானு தெரியுமா? வெக்கமால்லை உனக்கு? ஒரு புருஷனை வெறுப்போட உச்ச கட்டத்துக்கு கொண்டு வந்து எல்லா கிரிமினல் வேலைகளையும் செஞ்சிட்டு, இப்ப வசிய மருந்தா? உன்னை பார்த்தா அருவருப்பா இருக்குடி.!”

துளசிக்கு பேரதிர்ச்சி.

‘ அம்மாவுக்கு இன்னும் என்னல்லாம் தெரிஞ்சிருக்கு? எப்படீ?”

நளினி அடுத்ததை பேச வர, அப்பா குறுக்கே வந்தார்.

“ போதும் நளினி. இதுக்கு மேல நீ எதுவும் பேச வேண்டாம். நாம தலையால தண்ணி குடிச்சாச்சு. பலன் இல்லை. நிறுத்திக்கோ. உள்ள வா.!”

அம்மா உள்ளே வர,

“ மேற்க்கொண்டு நீ பேசினா அவ உஷார் ஆயிடுவா. அந்த மந்திரவாதி சங்கதிகள் நமக்கு தெரியாம போயிடும். அதனால மாப்ளை கிட்ட இதை சொல்லாம நாம இதுல நேரடியா இறங்கக்கூடாது. இது அவர் பிரச்னை. அவருக்கு தெரிஞ்சே ஆகணும்.!”

“அபிஷேகம்னு சொல்லி நம்மை அனுப்பிட்டு இவ போகப்போறா.!”

“அதுக்குள்ளே மாப்ளைக்கு இது தெரிஞ்சாகணும். அவர் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்னு வருது. பதட்டமா இருக்கு.!”

இவர்கள் உள்ளே பேசும் நேரம், துளசி வெளியே படபடப்பாக இருந்தாள்.

“ இவங்க ரெண்டு பேரும் லேசு பட்டவங்க இல்லை. இவங்களுக்கு தெரிஞ்சதை நிச்சயமா துவாரகேஷ் கிட்ட சொல்லாம இருக்க மாட்டாங்க. இதை தடுக்க நான் என்ன செய்யப்போறேன்?”

ஒரு பக்கம் மகளை மடக்க அப்பா, அம்மாவும்…அவர்களை விரட்டியடிக்க மகளும் ஆளுக்கொரு விதமாக யோசிக்க, துவாரகா ஃபோன் தொடர்ந்து ஸ்விட்ச் ஆஃபில் இருக்க, துளசி காத்திருந்த அந்த மாலை ஆறு மணி பொழுதும் வந்து விட்டது.

காஞ்சனாவின் ஃபோன் அடிக்க, துளசி உள்ளே இருக்க, அப்பா எடுத்தார்.

“ துளசி, நான் காஞ்சனா பேசறேன். தெருக்கோடில நீல நிற காரோட நிக்கறேன். சீக்கிரம் வா.!”

(-தொடரும்…)

முந்தையபகுதி – 12 | அடுத்தபகுதி -14

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...