என்னை காணவில்லை – 12 | தேவிபாலா

 என்னை காணவில்லை – 12 | தேவிபாலா

அத்தியாயம் – 12

ரவு எட்டு மணிக்கு துவாரகா வீடு திரும்பினான். சமையல் கட்டில் ஆச்சர்யமாக துளசி வேலை பார்த்து கொண்டிருந்தாள். இது உலக அதிசயம். அம்மா இருந்த வரை மாடு போல அம்மா உழைத்து கொண்டிருந்தாள். சமையல்கட்டு பக்கமே துளசி வர மாட்டாள். துளசி சமைத்து, துவாரகா சாப்பிட்டு பல மாதங்கள் ஆகி விட்டன. குடும்ப பணிகள் எதையும் துளசி செய்ய மாட்டாள். இன்று பேரதிசயம். இரவு உணவுக்கான வாசனை வந்து கொண்டிருந்தது. துவாரகா கண்டு கொள்ளவில்லை. தன் அறைக்குள் நுழைந்து கதவை சாத்தி கொண்டான். என்றைக்கும் இல்லாத அதிசயம் சமைக்கிறாள். என்னவோ திட்டமிடுகிறாள். கவனமாக இருக்கணும். அந்த காஞ்சனா, சுஷ்மா சொல்வது போல முதல் தர க்ரிமினல். இவள் என்னை கவிழ்க்க அவள் உதவியை நாடுகிறாள். துவாரகா கதவை தாளிட்டான். இந்த ஒரு வாரமாக மின்னணு ஏரியாவில் ஒரு புது முயற்சியை ராப்பகலாக முயன்றான். அதாவது குரல் மட்டும் பிறருக்கு கேட்கும். ஆனால் உருவம் தெரியாது. அதையும் ட்ரையல் எடுத்தான். சரியாக வந்தது. டிவைஸ் ஏற்கனவே அந்த அறையில் நிரந்தரமாக பொருத்தப்பட்டிருந்தது. ரூம் ஃப்ரெஷ்னர் சாதனத்தில் ரிமோட் இணைக்கப்பட்டிருந்தது.  சகலமும் சரி பார்த்த பிறகு வெளியே வந்தான். துளசி யாருடனோ ஃபோனில் பேசி கொண்டிருந்தாள். ஔிந்து நின்றான் துவாரகா.

“ காஞ்சனா! வசிய மருந்தை வெறும் வயித்துல காலை தரணுமா? இல்லை, சாப்பிட்ட பிறகா? எதுல கலக்கி தரணும்?”

“நாலு தடவை சொன்னேன். மறந்துட்டியா? காலைல துவாரகா முதல்ல என்ன சாப்பிடுவார்?”

“காபி தான் குடிப்பார்.”

“அதுல கலக்கி குடுத்துடு.!”

துளசி விரல் பட்டு ஸ்பீக்கர் ஓப்பன் ஆகியிருந்ததால், காஞ்சனா பேசுவது சகலமும் கேட்டது. துவாரகா உள்ளே வந்து விட்டான்.

“ எதுக்கு எனக்கு வசிய மருந்து? என்னை என்ன செய்யப்போறா துளசி?”

துளசி கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள்.

“ தோசை ஊத்தவா?”

“யாருக்கு தோசை?”

“இதென்ன கேள்வி? நைட் டின்னருக்குத்தான். குருமாவும், சட்னியும் ரெடி. நீங்க தயார்னா சூடா ஊத்தி தர்றேன்.”

“இதென்ன அதிசயம்? நீ சமைச்சு போட்டு பல மாசங்களாச்சே.!”

“இனிமே நான் தான் சமைக்கப்போறேன்.!”

“தேவையில்லை. எங்கம்மாவை முதியோர் இல்லத்துல விட்டாச்சு. குழந்தைங்க கொடை போயாச்சு. எனக்கெதுக்கு விருந்து? தேவையில்லை. உன் சமையலை நான் சாப்பிட தயாரா இல்லை. என்னை நீ வச்சு செய்யறதுக்கு உன் கை சாப்பாடு தான் பாக்கி?”

“நான் இணக்கமா வந்தா கூட நீங்க ஏத்துக்க மாட்டீங்களா?”

“அந்த காஞ்சனா கூட எங்கே போனே காலைல?”

துளசி இதை எதிர் பார்க்கவில்லை. பலத்த அதிர்ச்சி.

“ இல்லையே! நான் காஞ்சனாவை பார்த்தே ரொம்ப நாளாச்சே.!”

“நம்பிட்டேன். தோசை ஊத்தி நீயே சாப்பிடு. நான் வெளில சாப்டாச்சு.!”

“எங்கே சாப்பிட்டீங்க?”

“ம்..அவசியம் தெரியணுமா? சுஷ்மா வீட்ல தான். என்ன செய்யப்போறே? வாசல்ல நின்னு கூச்சல் போடப்போறியா? போடு.!”

துளசிக்கு பழைய ஆவேசம் புறப்பட்டது. படக்கென பாம்பு போல தலை தூக்கினாள். உடனே கபாலி குரல் காதுக்குள் ஒலித்தது.

“ முதல்ல அவரை எதிர்க்கறதை நீங்க நிறுத்தணும். காரியம் சாதிக்கணும்னா தணிஞ்சு போங்க. இல்லைன்னா, அவரை வசியப்படுத்தறது நடக்காது. மனசுல உள்ள நெருப்பு அவருக்கு அணைஞ்சாத்தான் மருந்துக்கு பலன் கிடைக்கும். இது நரம்புகள் தொடர்பான ஆட்டம்.!”

“ஏன் கோவப்படறீங்க? நான் பழைய துளசி இல்லைன்னு இனி வர்ற நாட்கள்ள நீங்களே புரிஞ்சுபீங்க. சாப்பிட வாங்க.!”

“வேண்டாம். நான் உன்னை நம்பலை. சாப்பாட்டுல விஷம் கலந்திருப்பே நீ”

“புருஷன் சாகணும்னு எந்த மனைவியும் நினைக்க மாட்டா.!”

“நீ நினைப்பே. இனிமே சாக என்ன இருக்கு. நான் ஏற்கனவே செத்தாச்சே. ஆளை விடு. நான் படுக்கறேன்.!”

அவளும் அவனுடன் வர முயல, அவன் கதவை சாத்தினான். துளசி ஆடிப்போய் நின்றாள்.

‘ எதற்கும் இணங்காத இவருக்கு வசிய மருந்தை எப்படி தருவது?”

உள்ளே அவன் கதவை தாளிட, துளசி ஃபோன் செய்தாள் காஞ்சனாவுக்கு. நடந்ததை சொன்னாள்.

“ நீ பல வருஷங்களா துவாரகாவை பாடா படுத்தியிருக்கே. ஒரே நாள்ள அதை நீ சரிக்கட்ட முடியுமா? பொறுமையா முயற்சி செய். அவசரப்பட்டா எதுவும் நடக்காது.”

இரவு துளசி சரியாக உறங்கவில்லை. காலை எழுந்து வந்த போது, துவாரகா காபி கலந்து கொண்டிருந்தான். அதற்குள் ஃபோன் வர, அவன் போக, துளசி அந்த வசிய மருந்தை அவசரமாக எடுத்து வந்தாள். சுற்றிலும் பார்த்து விட்டு, அதை காபியில் போட்டு கலக்கினாள். படக்கென வெளியே வந்து விட்டாள். துவாரகா ஃபோன் பேசி முடித்து விட்டு உள்ளே வந்தான். காபியை கையில் எடுத்தான். உதட்டுக்கு அதை கொண்டு போக, காலிங் பெல் அடிக்க, துளசி போய் திறந்தாள். அவளது அப்பா, அம்மா வாசலில் நின்றார்கள். துளசி முகத்தில் எரிச்சல். துவாரகா வேகமாக வந்தான்.

“ வாங்க மாமா, வாங்க அத்தே.”

“இவங்க எதுக்கு இந்த காலை நேரத்துல வந்து நிக்கறாங்க?”

“மாப்ளை தான் வரச்சொன்னார். பேசணுமாம்.”

“ என்ன பேசணும்?”

“அதை உனக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவங்க உன்னை மதிச்சு வரலை. ரெண்டு பேரும் ஒக்காருங்க. மாமா, முதல்ல இந்த காபியை குடிங்க.!”

துவாரகா தர, வசிய மருந்து காபியை துளசியின் அப்பா பத்மநாபன் வாங்க, துளசி பதறி விட்டாள்.

“ அதை நீங்க ஏன் குடிக்கறீங்க? இது அவரோட காபி!”

“காபில என் பேரு எழுதி வச்சிருக்கா? யார் குடிச்சா என்ன? நீங்க சாப்பிடுங்க மாமா.!”

அறுபத்தி நாலு வயசு மாமனார் வசிய மருந்து கலந்த காபியை வேகமாக குடிக்க, துளசி கடுப்பானாள்.

“ எதுக்கு வந்தீங்க ரெண்டு பேரும்?”

“அவங்க இனிமே இங்கே தான் இருப்பாங்க.!”

“எதுக்கு?”

“எனக்கு சமைச்சு போட்டு, என்னை கவனிக்கத்தான்.!”

“அதுக்குத்தான் நான் இருக்கேனே!”

அம்மா நளினி கடுப்பாகி விட்டாள்.

“ கிழிச்சே. மாமியாரை, புள்ளைங்களை விரட்டியாச்சு. எங்களுக்கும் அதே கதி தான். மாப்ளை கிட்ட சொன்னோம். அவர் கேக்கலை. என் வீடு, என் வருமானம், என் முடிவுகள் எல்லாமே..யாரும் கேக்க முடியாது. கேக்கற உரிமையும் இல்லை. இவ கை சோத்தை நான் சாப்பிட மாட்டேன். நீங்க ரெண்டு பேரும் வந்து எனக்கு வேண்டியதை உங்க மகனாட்டம் நினைச்சு செய்ங்கனு உருக்கமா சொன்னார். அதான் வந்தோம். மாப்ளை, என்ன மெனு?”

“அத்தே! நீங்க என்ன தந்தாலும் நான் சாப்பிடுவேன். உங்க மகன்னு சொல்லியாச்சு. அப்புறமா என்ன?”

நளினி உள்ளே போய் விட, துளசி ஆவேசமாகி விட்டாள். வேகமாக உள்ளே வந்தாள்.

“ மரியாதையா ரெண்டு பேரும் போயிடுங்க.!”

“அடிப்போடி. உன் மாமியார் பாவம். பயந்த சுபாவம். தன் பிள்ளை வாழணும்னு எல்லாத்தையும் தாங்கிக்கிட்டாங்க. ஆனா நாங்க வேற மாதிரி. உன்னை மாதிரி பேயை பெத்தவங்க. உன்னை எப்படி கையாளணும்னு எனக்கு தெரியும்டி. வழியை விடு. காற்று வரட்டும்.”

துவாரகா உள்ளே வந்தான்.

“ அத்தே காபி குடுங்க.!”

அதற்குள் வசிய மருந்தை சாப்பிட்ட அப்பா உள்ளே வந்தார்.

“ நான் குளிக்கப்போறேன். நீ வந்து முதுகை தேச்சு விடு நளினி.”

அம்மா சமையலுக்கான ஆரம்ப வேலைகளை முடித்து குக்கர் வைத்தாள். அப்பா அழைக்க, அம்மா உள்ளே போக, அப்பா அம்மாவை இழுத்து உள்ளே போட,

“ விடுங்க. உங்க வயசுக்கு இது நல்லாருக்கா? மாப்ளை பார்த்தா என்னாகும்?”

“அவரைத்தான் இந்த மூதேவி ஜடமாக்கி வச்சிருக்காளே.!”

உள்ளே அம்மாவின் பேச்சு அடங்க, துளசி வெறுப்புடன் வெளியே வந்தாள். ஆனால் ஒன்று புரிந்தது.

‘அப்பாவுக்கே வசிய மருந்து வேலை செய்கிறது. இவருக்கு நன்றாக வேலை செய்யும். இவர்களை விரட்டினாலும் போக மாட்டார்கள். துவாரகாவிடம் மோதுவதால், நான் நினைத்தது நடக்கப்போவதில்லை. பொறுமை வேண்டும்.’

அம்மா, சமையல் டிபன் எல்லாம் முடித்து, துவாரகாவை சாப்பிட அழைத்தாள்.

“ ஹாட் பேக்ல லன்ச் கட்டியாச்சு மாப்ளை. ஆப்பம் சூடா இருக்கு. வாங்க.!”

அப்பாவும் வந்து உட்கார்ந்தார். அம்மா இருவருக்கும் பரிமாற, துவாரகா ருசித்து சாப்பிட்டான்.

“ பிரமாதம் அத்தே. உங்க கைப்பக்குவம் அபாரம்.!”

“உங்கத்தைக்கு எல்லா பக்குவமும் அபாரம் மாப்ளை!”

அவர் கண்ணடிக்க, அம்மா வெட்கப்பட, துளசிக்கு அவர்களை வெட்டி போடும் ஆத்திரம் வந்தது. துவாரகா புறப்பட்டான். அம்மா உள்ளே வர,

“ வயசுக்கு தகுந்த மாதிரியா நடக்கறீங்க ரெண்டு பேரும்? என் மானம் போகுது. எனக்கு கொலை வெறி வர்றதுக்கு முன்னால ரெண்டு பேரும் ஓடிப்போயிடுங்க.!”

“நாங்க எதுக்குடி போகணும்? எதுடீ வயசுக்கு தகுந்த வாழ்க்கை? எத்தனை வயசானாலும் கணவன் மனைவிக்குள்ள எல்லாம் இருக்கலாம். இது உடம்பு சம்பந்தப்பட்டது மட்டுமில்லை. இங்கே மனசு முக்கியம்டி. மாப்ளை உத்தமமான மனுஷன். ராமனை விட உசத்தி. அப்படிப்பட்டவரை, வாழ வேண்டிய வயசுல ஜடமாக்கி வச்சிருக்கியே. உன் கை சோறு கூட வேண்டாம்னு எங்களை வரவழைச்சிருக்கார்னா, நீ செத்தாச்சுடி. உனக்கு எந்த நேரமும் இந்த ஒடம்பு ஞாபகம் தாண்டி. ஆனா மாப்ளை மரத்தாச்சு. மாமியார் எனக்கே கண்ல ரத்தம் வடியுதுன்னா, அவரை பெத்த அம்மாவுக்கு எப்படி இருக்கும்? நீ திருந்த மாட்டே. நீ செத்து ஒழிஞ்சாத்தான் மாப்ளை வாழ்க்கைல வெளிச்சம் வரும்டி. உன்னை பெத்தவளை இந்த மாதிரி பேச வச்சிட்டியேடீ!”

அம்மா கதறி அழுதாள். அப்பா ஒரு ஓரமாக நின்றார் வெறுப்புடன்.

“ விடு நளினி. நீ என்ன பேசினாலும், அவ மாற மாட்டா. திருந்தவும் மாட்டா. மாப்ளை சொன்னதால அவரை மதிச்சு நாம வந்திருக்கோம். இவ கிட்ட முகம் கொடுத்து இனி பேசாதே.”

இருவரும் உள்ளே போய் விட்டார்கள். துளசி பதிலுக்கு பதில் பேசாமல் விட மாட்டாள். இப்போது பேசவில்லை.  துவாரகா இரவு ஒன்பது மணிக்கு வந்தான். சாப்பிட்டு உள்ளே போய் விட்டான். அரை மணி கழித்து, துளசி உள்ளே வர, ஹேங்கரிலிருந்த சட்டை மட்டும் தனியாக அந்தரத்தில் மிதந்து வந்தது. துளசி அலறி விட்டாள்.

(-தொடரும்…)

முந்தையபகுதி -11 | அடுத்தபகுதி -13

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...