மறந்து​போன மரபு வி​ளையாட்டுகள்- 6 | லதா சரவணன்

 மறந்து​போன மரபு வி​ளையாட்டுகள்- 6 | லதா சரவணன்

ஆறாவதுவி​ளையாட்டு

உடலெங்கும் எண்ணெய்யை தேய்தபடி அமர்ந்திருந்த வாசு மாலினியைக் கண்டதும் கதவிற்கு பின் பம்மினான்.

வாசு எதுக்கு என்னைப் பார்த்து ஒளியறே ? நேத்து ஒரு படம் பார்த்தேன் கதாநாயகனின் முகம் முழுவதும் மிருகத்தைப் போல சட்டென்று மாறிவிட்டது. அதாவது ஓநாய் மனிதனைப் போல ஆகிவிட்டான் அந்தமாதிரி ஏதாவது ஆகிவிட்டாயா ? வம்படியாக கதவிற்கு பின்னால் வந்தவன் அவனின் கோலம் கண்டு பின்வாங்கினாள்.

எருமைமாடு இன்னைக்கு சனிக்கிழமை கூட இல்லை எதுக்கு இத்தனை எண்ணையை தேச்சுட்டு நிக்குறே ?

சனிக்கிழமை மட்டும்தான் எண்ணெய் தேய்ச்சி குளிக்கணும்ன்னு சட்டம் இருக்கா என்ன ? வரவர நீ ஹார்லிக்ஸ் அம்மா மாதிரி அக்மார்க்கா மாறிட்டு வர்ற சரி விடு வயசாகுதுல்ல….

தலையில் ஒரு குட்டு கொட்டியபடியே என்னயிது ?! ஏதாவது சண்டைக்கு கோதாவுல குதிக்கப்போறீயா ?

சண்டையா எனக்கு வன்முறையில் எல்லாம் நம்பிக்கையில்லை தாயி நான் வாய்சொல்லில் வீரன் தெரியும் இல்லை

ஆமா…பெரிய வீரன்…போய் WWF பாரு என்னமா சண்டை போடறான் ஜெயிச்சு பட்டையா ஒரு கோல்ட் பெல்ட் வேற வாங்குறான் நீயும் ஒரு பெரிய வீரனான என் நண்பனும் பெரிய வீரன்னு நானும் நாலுபேருகிட்ட பெருமையா பேசுவேனே ?!

நீ பெருமையா பேசறதுக்கு நான் சாகணுமா என்ன ? எருமை அதென்ன கோல்ட் பெல்ட்டு எனக்கு இரும்பு பெல்ட் அதுவும் என் இடுப்பு சைசுக்கு அதுவே போதும்

 ம்க்கும்…இப்ப எதுக்கு இந்த அபிஷேகம்

சூடு அதிகம் ஆயிடுச்சி அதான் நீ இப்போ ஏன் வந்தே ?

வந்தது சென்றவாரம் நீ சொன்ன கபடி பத்தி கேட்க ? ஆனா இப்போ உன்னைப் பார்த்ததும் இது தொடர்பா எனக்கு தெரிந்த விளையாட்டைப் பத்தி நான் பேசப்போறேன்.

என்ன விளையாட்டு ?

மல்யுத்தம், குஸ்தி, இப்போ குத்துசண்டை

 அதான் தினமும் குழாயடியில் போடறீயே ? அது போதாதா

 சும்மாயிருடா நான் சொல்றதை கேளு….

சொல்லித்தொலை…….வாசு சலித்துக் கொண்டாலும் காதைக் கூர்மையாக்கினான்.

மல்யுத்தம் மற்போர் குஸ்தி 95களில் பெரும்பாலும் டிவி சேனல்கள் ஒளிபரப்பிய ஒரு விளையாட்டு இதற்கென்றே தனி சேனல்கள் (WWF) உருவாக்கப்பட்டு ரெஸ்லிங் கொண்டாடப்பட்ட காலமாக இருந்தது. பெரும்பாலும் திரையுலகம் தொலைக்காட்சியை புறக்கணித்திருந்த நேரம் என்று கூட சொல்லாம், மேட்சிங் எனப்படும் ஒரு கலர் அட்டை சிறுவர்கள் விளையாட்டில் இந்த குத்துச்சண்டை வீரர்களின் படங்கள் அலங்கரித்து இருக்கும்.

உனக்கு ஞாகபம் இருக்கான்னு தெரியலை என் அண்ணன் எப்பபாரு மல்யுத்த நிகழ்ச்சியைப் பார்த்திட்டு அவன் அப்படி அடித்தான் இவன் இப்படி கத்தினான்னு பேசிகிட்டே இருப்பான்.

இப்பவும் அவன் கத்திக்கிட்டேதான் இருக்கான்.

ஒருமுறைப்பின் பிறகு, மெட்ரோ உள்ளே வந்தது எல்லார் பார்வையும் அதுமேல திரும்பிச்சி, இப்போபாரு நைட்டு முழுக்க தூங்க விடாமல் எந்நேரமும் உறக்கத்தில் கூட சில விவாதங்களை முன்னிறுத்தி வைக்கும் அளவிற்கு தொலைக்காட்சியின் ஆதிக்கங்கள் நம்மில் பரந்து விரிந்திருக்கிறது.

சரி இதில் மல்யுத்தம் எங்கே வருகிறது.

அந்த சாப்டருக்குத்தான் வர்றேன் அவசரகுடுக்கை வாசு நீ ?! மல்யுத்தமே குத்துச்சண்டையின் பிறப்பிடமாக இருந்திருக்கிறது. கிரீஸ் நாட்டில் கி.மு. 688-ல் தோன்றிய ஒலிம்பிக் விளையாட்டில் இந்த விளையாட்டு முதலிடம் பெற்றது ஒரு வரலாறு. சங்ககாலத்தல் புகார் நகரில் இந்த போட்டிகென ஒரு விளையாட்டு மன்றம் இருந்திருக்கிறது.

வடிவேலுவின் இம்சை அரசனின் படத்தில் சாதிச்சண்டைகளுக்காகவே தனி அரங்கம் அமைத்து உங்களுக்குள் கோபம் வந்தால் இந்த அரங்கத்திற்கு வந்து முன்பணம் கட்டி சண்டையிட்டுக் கொள்ளுங்கள் அதில் வெற்றிபெறுவர்களுக்கு பரிசுகள் அதைவிட களைப்படைந்தால் அக்காமாலா, கப்ஸி என்று இரண்டு பானங்கள் மிகவும் சிரிப்பானதொரு விஷயமாக இருந்தாலும், இம்மாதிரி சண்டைகள் இப்போதுதான் அதிகமாக இருக்கிறது உதாரணத்திற்கு ஆணவகொலைகள். ஆனால் அவை இந்தக் கட்டுரைக்கு அவசியமில்லை என்பதால் நாம் மல்யுத்தம் பற்றித் தொடர்வோம்.

சங்கத்தமிழில் இலக்கியபாடல்களில், ரிக், அதர்வ வேதங்களிலும் மல்யுத்தம் பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது. இதிலும் இரண்டு வகை உண்டு. தான் எதனால் யாரைத் தாக்கிறோம் எந்த விலங்கைத் தாக்கிறோம் என்றே அறியாமல் ஆதி மனிதன் குகைகளில் சண்டை போட்டு இருப்பான். தன் இருப்பை இருப்பிடத்தை காப்பாற்ற தோன்றிய யுத்தமே நாளடைவில் மல்யுத்தமாக மாறியிருக்க வேண்டும்.

அதிலும், மன்னர்கள் காலத்தில் இது ஒரு வீர விளையாட்டு திருவிழாக்கள் மற்றும் தங்கள் வீரத்தை வெளிப்படுத்த இந்த மல்யுத்த விளையாட்டுக்கள் அரசரின் முன் நடத்தப்பட்டு சிறந்த மல்யுத்த வீரர்களுக்கு உயரிய கெளரவமாக பதவியும், பொருளும் ஏன் சில நேரங்களில் திருமணம் கூட நடத்தி வைக்கப்படும். அப்படிப்பட்ட மல்யுத்தத்தில் சிறந்து விளங்கிய அரசன் முதலாம் நரசிம்ம பல்லவன் அதனாலேயே அவருக்கு மாமல்லன் என்ற பெயர் ஏற்பட்டது. மகாபலிபுரமும் என்ற பெயர் காரணத்திற்கும் அரசனே காரணம்.

கோதாவில் சண்டையிட்டுக் கொள்ளலாம் என்ற பேச்சுவழக்கு ஒன்றும் உள்ளது. அந்த கோதா அதாவது மல்யுத்தத்திற்கு பயன்படும் மைதானம் அதை எப்படி தயார் செய்வார்கள் தெரியுமா ?!

சுத்தம் செய்யப்ட்டு வெண்மையாக்கிய செம்மண்ணை கொண்டு வந்து பரப்பி, அதன் மீது நல்லலெண்ணெய், அல்லது ஆமணக்கு எண்ணெய், தயிர், பால், இதை ஊற்றி அந்த மண்ணை ஒரு வட்டை கொண்டு நன்றாக அடித்து கட்டியாக்கி வெயிலில் உலவிட்டு ஒரு நாள் கழித்து கட்டியான அந்த தரையை உடைத்து தூள்தூளாக்கி விடுவார்கள் மென்மையான அந்த கோதாவில் தான் அரசர்கள் காலத்தில் மற்போர்கள் எனப்படும் மல்யுத்தம் நடத்தப்படும்.

காஞ்சித்தலைவன், பருத்திவீரன்,மதராஸப் பட்டிணம், எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, பூலோகம், இறுதிசுற்று, பத்ரி, தங்கல் போன்ற அநேக சினிமாக்கள் மல்யுத்தத்தை காலத்திற்கேற்ப குத்துச்சண்டையாக கொண்டு வந்தது. சினிமாக்கள் மட்டுமல்ல இலக்கியத்திலும் மல்யுத்தம் நடைபெற்றதற்கு சான்றுகள் உள்ளது.

மஹாபாரதத்தில் பீமனுக்கும் கீசகனுக்கும் மற்போர் நடந்தது சைரந்திரி என்ற பெயரில் வேலை பார்த்த திரெளபதியை கீசகன் துன்புறுத்தவே பீமன் அவனை கொன்றான். பீமன் மல்யுத்த வீரனாக போரிட்டதை மகாபாரதம் விரிவாகவே தரும்.

இராமாயணத்தில் சீதையை மீட்க உதவும் ராமருக்கு உதவ வரும் சுக்ரீவன் அவனின் சகோதரன் வாலி தன் தம்பியின் மனைவியை விரும்பியதற்காக அவர்கள் இருவரும் மல்யுத்தம் புரிந்ததையும் விரிவாகவே படித்திருக்கிறோம்.

காட்டூனாக குழந்தைகளுக்கும், கண்ணனின் லீலைகளாக பெரியவர்களுக்கும் சொல்லப்படும் பலமாராமனும் கிருஷ்ணனும் சானுரனையும், கம்சனையும் மல்யுத்தத்தினால் கொன்றதை !

பரிபாடல், சிலப்பதிகாரம் ஆகிய இலக்கியங்களிலும் பறை அறிவித்து மக்களிடைய நிகழ்த்தப்பட்ட வீர விளையாட்டுகளாக மல்யுத்தங்களைச் சொல்லலாம். பரணர் தன் பாடல்கள் வழியாக மல்லர்களின் வாழ்வியலை விளக்குகிறார். இந்த விளையாட்டுகள் அப்போது கையுறை அணியாமல் வெறுங்கையால் குத்தி விளையாடப்பட்டது.

பண்டைய கால மக்களின் வாழ்க்கை முறையாக விளங்கிய மல்யுத்தமே இப்போது பண மேடைகளில் புழங்கும் குத்துச்சண்டை இந்த வீர விளையாட்டுகளின் அஸ்திவாரம் 4000வருடங்களுக்கு முன்பே போடப்பட்டு விட்டது. மல்யுத்தம் அதற்கு முன்னரே தொடங்கியது இந்தியாவில் வரலாற்றில் இதற்குண்டான சான்றுகளை இந்த இலக்கியங்கள் சொல்கிறது

 இன்னொரு செய்தியாக எகிப்தில் பேனிஹாசன் என்னும் இடத்தில் எழுதப்பட்ட சுவரில் பழைய கிரேக்கர்கள் வெளியிட்ட நாணயங்கள் பானைகள் சிலைகள் ஆகியவை ஓவியங்களாக செதுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இவை 2500 ஆண்டு பழையவை.

முயாய் தாய் சண்டை தாய்லாந்தை பிறப்பிடமாகக் கொண்டது இந்த வீரவிளையாட்டு, தாய்லாந்தின் தேசிய விளையாட்டான இதற்கு ஒலிம்பிக்கில் இடமில்லை இந்த முயாய் தாய் எனும் சொல் மாவ்யா என்ற சமஸ்கிருதத்தில் இருந்து உருவானது.

செம்ம மாலி ஆனா நீ எப்படி இத்தனை தகவல்கள் எடுத்தே

 இதுக்கே வாயைப் பிளந்திட்டியே வாசு இன்னமும் இருக்கு ?!

ஹல்க்ஹோகன், ரிக் ப்ளேர், ஹிட்மேன், மாச்சோமேன், அண்டர்டேக்கர், ஸ்டோன்கோல்டு, ராக், படீஸ்டா, ட்ரிப்பிள் எச் ஆகியவர்கள் ஆதர்ஸ நாயகர்கள். புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த ரோமன் ரெய்ன்ஸ், அமெரிக்காவில் மேயருக்கான வேட்பாளராக நின்று வெற்றி பெற்ற மல்யுத்த வீரர் கெயின் 7அடி உயரம் கொண்ட இவர் முகமூடி போட்டு சண்டையிட்டார். கார்ட்டூன் ஜாக்கிசானில் வரும் பீமா, முகமூடி போன்ற கதாபாத்திரங்கள் இவர்களுக்கு உயிர் தந்திருக்கிறது. பிரபர வீரர் அண்டர் டேக்கர் இவரின் சகோதரர்

 ஆசிய மல்யுத்தப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீராங்கனை வினேஷ், ராயல்ரம்பள் என்ற போட்டியில் ஒரு ரிங்கில் கிட்டத்தட்ட 30போர் இருப்பார்கள் அதில் ஒருவரையொருவர் வெளியே தள்ளிவிடவேண்டும் வெளியே விழுந்தவர்கள் அவுட், இந்தியாவைச் சேர்ந்த பேட்டல் ராயல் அத்தனை பேரையும் வீழ்த்தி வெற்றிப் பெற்றுள்ளார்.

மேரிகோம் உலக குத்துச்சண்டை போட்டியில் 5முறை தங்கம் வெற்றவர். 2012 லண்டன் கோடைக்கால ஒலிம்பிக் போட்டியி கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்ட இந்தியாவின் ஒரேயொரு குத்துச்சண்டை வீராங்கனை இவங்கதான். அப்பறம் இறுதிசுற்று ரித்திகாசிங் கூட ஒரு குத்துசண்டை வீராங்கனைதான்.

கடவுளே நீ எதுக்கோ தயாராகுரா மாதிரியிருக்கே

 நானும் இப்போ குத்துச்சண்டை பயிற்சி எடுக்கலாமான்னு இருக்கேன் என்று முஷ்டியை ஓங்க வாசு தப்பித்து ஓடினான்.

(- தொடரும்…)

முந்தையபகுதி – 5 | அடுத்தபகுதி – 7

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...