2024- 2025-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல்.
தமிழக சட்டசபையில் 2024- 2025 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்தார்.
தமிழக சட்டசபையில் நேற்றைய தினம் தமிழக அரசின் நிதிநிலை தாக்கல் செய்யப்பட்டது. இதை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.
திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளித்தபடி கடந்த 2021 ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று தமிழ்நாட்டின் தனி வேளாண் பட்ஜெட் முதன் முதலாக தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதைத்தொடர்ந்து, 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளிலும் தனியாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து துறைகள்தோறும் மானியகோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று, துறைகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு வரும் மார்ச் மாதம் மக்களவை பொதுத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் என தெரிகிறது.
தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டால், நடத்தை விதிகள் அமலாகிவிடும். அதன்பின் மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளை வெளியிடவோ, செயல்படுத்தவோ கூடாது. எனவே, தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய அறிவிப்புகளை வெளியிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி இந்தாண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது துணை மானிய கோரிக்கைகளையும் பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த நிலையில் தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியது. அப்போது வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.