மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு..!
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவுப் பெற்றது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, நவம்பர் 13 ஆம் தேதி முதல் கட்ட வாக்கு பதிவு நடந்தது. அதனைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 37 தொகுதிகளுக்கு 14,218 வாக்குச்சாவடிகளில், இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. முதலமைச்சர் ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா, எதிர்க்கட்சி தலைவர் அமர் குமார் ஆகியோர் இன்று தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் போட்டியிட்டுள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. 5 மணி நிலவரப்படி 67.59% வாக்குகள் பதிவாகி உள்ளது.
அதேபோல் 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்திற்கும் ஒரேகட்டமாக இன்று தேர்தல் நடைபெற்ற நிலையில், மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. முக்கியத் தலைவர்களான முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார், சரத் பவார், உத்தவ் தாக்கரே ஆகியோர் இன்று வாக்களித்தனர். இதேபோல பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான், சல்மான்கான் உள்ளிட்ட நடிகர்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். மாலை 5 மணி நிலவரப்படி 58.22% வாக்குகள் பதிவாகி உள்ளன. இரு மாநிலங்களுக்குமான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.