குரலால் சாகாவரம்பெற்ற மலேசியவாசுதேவன்
மலேசியவாசுதேவன் காலமான தினமின்று
கோலிவுட்வாசிகளிடம் வாசுதேவன் என்றால் யார் என்றுதான் கேட்பார்கள்… மலேசியா வாசுதேவன் என்றால் அடடே அவரா? என்பார்கள்.. மலேசிய ரப்பர் தோட்ட தமிழரான இந்த வாசுதேவன் கடல் கடந்து வந்து தமிழகத்தை கட்டிப்போட்ட ஞானவித்தகன்.. இன்று அவரது நினைவுதினம்.. சாகாவரம் பெற்ற இந்த கலைஞனை நினைவுகூர்வதில் ” ஆந்தை சினிமா அப்டேட்ஸ்” பெருமை கொள்கிறது!!
லாங்க் ட்ராவலில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கும்போது, வீசும் எதிர்காற்றைப்போல இதமானதுதான் அந்தக் குரல். ஹீரோ இன்ட்ரோவில் திரை தீப்பிடிக்காத காலகட்டத்தின் நாயகர்களின் அறிமுகப் பாடல் மூலம் ரசிகர்களுக்கு தீயைக் கடத்தியதும் அந்தக் குரல்தான். இப்படி இருவேறு தொனிகளில் ஜாலங்களை நிகழ்த்தி, பலரது மனங்களை மயக்கிய அந்த மாயக்குரல் மலேசியா வாசுதேவனுடையது.
கேரளாவின் பாலக்காடு பகுதியை பூர்வீகமாக கொண்ட வாசுதேவன் மலேசியாவில் பிறந்தவர். டெல்லி டூ மெட்ராஸ் என்ற படத்தில் தனது முதல் பாடலை பாடினார். இதன்பின்னர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ என்ற பாடல் மலேசியாவின் வெண்கலக்குரலை பட்டி தொட்டியெங்கும் ஒலிக்கச் செய்தது. இத்தனைக்கும் 16 வயதினிலே’ படத்தில் ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ பாடலை மாறுபட்ட குரலில் பாட முடிவு செய்திருந்த எஸ்பிபிக்கு தொண்டை கட்டி குரல் கம்மி போயிருந்தது..1
“என்னய்யா இது.. பாலுக்கு இப்பப் போய் உடம்பு சரியில்லையாமே..என்ன செய்ய” என்று பாரதிராஜா டென்ஷனனார்..
ஏன் புலம்பறே.. அமைதியா இரு” என்று சொல்லி பின்னாடி திரும்பினார் இளையராஜா..
அங்குக் கூட்டத்தில் ஒருவராக இருந்தவரிடம் “வாசு.. டிராக் ஒன்னு பாடணும்.. சரியா பாடிடுடா.. அப்படி பாடிட்டா, இந்த பாட்டில இருந்து உனக்கு எல்லாமே வெற்றிதான்” என்று இளையராஜா சொன்னதுதான் மலேசியா வாசுதேவனின் ஏணிப்படியின் துவக்கப்புள்ளி!!
அடுத்தடுத்து வந்த 80-களின் இசை பிரியர்கள் வானொலியில் காலை எட்டரை மணிப் பாடல்களின்போது. ‘கோவில்மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ…?’ என்ற காலை பாடலையும், மாலையில் வானொலியின் மற்றொரு அலைவரிசையில் ‘வான் மேகங்களே… வாழ்த்துகள் பாடுங்கள்…’ என்னும் ஏகாந்த பாடலையும் கேட்டு பாட்டுடை தலைவனாக்கினர் மலேசியா வாசுதேவனை.
தமிழில் 8000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் மனம் கவர்ந்திருக்கிறார். பிற தென்னிந்திய மொழிகளில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களையும் பாடியிருக்கிறார். ‘
இப்பேர்பட்டவர் ஒரு பேட்டியின் போது “யாரிடமும் நான் எதையும் எதிர்பார்த்ததில்லை. பிறருடைய வாய்ப்புகளைத் தள்ளிவிட்டு எனக்கு கிடைக்கவேண்டும் என்று நினைத்ததுமில்லை. ஒன்றிரண்டு பாடல்கள் சினிமாவில் பாடிவிட்டால் போதும் என்ற கனவோடுதான் ம்லேசியாவிலிருந்து இந்தியா வந்திறங்கினேன். ஆனால் ஐயாயிரம் பாடல்களைப் பாடிவிட்டேன். 85க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தேன். வெற்றி, புகழ், பணம் எல்லாம் பார்த்து விட்டேன்” என்று சொன்னார் அவர்.
ஆனால் 2003 ஆம் ஆண்டில் மூளையில் ஏற்பட்ட கோளாறினால் கடுமையான பக்கவாதத்தால் தாக்கப்பட்டு அவரது உடம்பு செயலிழந்தது. நடக்கவோ, பேசவோ இயலாத நிலைக்கு தள்ளப்பட்டார். மாதக்கணக்கில் அவசர சிகிச்சைப் பிரிவிலேயே இருந்தார். சொல்லும்படியாக சினிமாத் துறையினரிடமிருந்து ஆதரவான எந்த ஒரு குரலும் அவரை அழைக்கவில்லை. நலம் விசாரிக்கக் கூட எவரும் முன் வரவில்லை! மலேசியா வாசுதேவன் என்ற உச்சநட்சத்திரப் பாடகர் மறக்கப்பட்ட ஒருவராக ஆகிவிட்டார். தொடர்ந்த சிகிச்சையின் காரணமாக சிரமத்துடன் நடக்கவும், சிரமமில்லாமல் பேசவும் முடிந்தது. ஆனால் ஒரு சுரத்தைக் கூட அவரால் பாட முடியவில்லை.
தன் வாழ்க்கையே இசைக்கு அர்ப்பணித்த ஒரு மகத்தான பாடகனுக்கு இதைவிட என்ன பெரிய துயரம் நிகழ முடியும்? உயர் சிகிச்சைகள் மீண்டும் நலத்தை கொண்டுவந்திருக்கலாம் தான் ஆனால் அதற்க்கான பொருளாதார வசதிகள் அவரிடம் இருந்த்தில்லை. யாருமே உதவவுமில்லை. அவர் இறந்த செய்தி கேட்டவுடன் போட்டி போட்டு அவருக்கு அஞ்சலி செலுத்திய இசைமேதைகள், பல பல பாடல்களில் அவரது குரலுக்கு வாயசைத்த் திரை நட்ச்த்திரங்கள் போன்ற ஏறத்தாழ அனைவருமே கடந்த இருபது ஆண்டுகளாக அவரை முற்றிலுமாக புறக்கணித்தவர்கள். எப்போதாவது நிகழும் ஒரு தொலைபேசி அழைப்பையோ ஒரு சந்திப்பையோ தவிர இவற்களிடமிருந்து எதையுமே அவர் எதிர்பார்த்த்தில்லை என்பதுதான் நிஜம்.
ஆனாலும் இன்றும் தமிழ்திரையுலகில் தனக்கென்று தனித்துவத்தை கொண்டுள்ள மலேசிய வாசுதேவன் உடலால் மறைந்தாலும் குரலால் சாகாவரம் பெற்று கோடானுகோடி மக்களின் உள்ளத்தில் வாழ்கிறார் என்பதில் ஐயமில்லை
From The Desk of கட்டிங் கண்னையா!