உலகின் முதல் சகோதர – சகோதரி கிராண்ட்மாஸ்டர்களான பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலி விற்கு முதல்வர் வாழ்த்து..! | நா.சதீஸ்குமார்
உலகின் முதல் சகோதர – சகோதரி கிராண்ட்மாஸ்டர்களாக பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலி உருவாகியுள்ளனர்.
கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் மூத்த சகோதரி வைஷாலி தற்போது செஸ் கிராண்ட் மாஸ்டராக மாறியுள்ளார். ஸ்பெயினில் நடைபெற்ற செஸ் போட்டியில் இந்த சாதனையை அவர் படைத்தார். தன்னை எதிர்த்து விளையாடிய துருக்கியைச் சேர்ந்த வீரரை வென்று அவர் இந்த சாதனையைப் படைத்தார். இந்தியாவிலிருந்து கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெறும் மூன்றாவது வீராங்கனை வைஷாலி என்பது குறிப்பிடத்தக்கது. வைஷாலிக்கு முன்னதாக கொனேரு ஹம்பி மற்றும் ஹரிகா ஆகியோர் இந்தியாவிலிந்து கிராண்ட் மாஸ்டர் பட்டங்களை வென்றுள்ளனர்.
வைஷாலியின் சகோதரரான பிரக்ஞானந்தா கடந்த 2018 ஆம் ஆண்டு அவரது 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார். தற்போது அவரது சகோதரி கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ள நிலையில், இவர்கள் உலகின் முதல் சகோதர – சகோதரி கிராண்ட் மாஸ்டர்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளனர். கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற வைஷாலிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த வாழ்த்துப் பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் மூன்றாவது மற்றும் தமிழகத்தின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டராக மாறியுள்ள வைஷாலிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். 2023 ஆம் ஆண்டு உங்களுக்கு சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. நீங்கள் உங்கள் சகோதரருடன் இணைந்து தற்போது உலகின் முதல் சகோதர – சகோதரி கிராண்ட்மாஸ்டர்கள் என்ற வரலாற்றைப் படைத்துள்ளீர்கள் எனப் பதிவிட்டுள்ளார்.