142 ரயில்கள் மிக்ஜாம் புயல் காரணமாக ரத்து..! | நா.சதீஸ்குமார்
மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரா நோக்கி செல்லும் 142 ரயில்களை ரத்து செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை தென்மேற்கு வங்கக் கடலில் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புயலானது வடக்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திரப் கடற்கரையை அடைந்து டிச. 5-ம் தேதி முன் மதியம் நெல்லூர் மற்றும் மச்சிலிப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும். அப்போது காற்றின் வேகம் 80-90 கிமீ வேகத்திலும் இடையே இடையே 100 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
மிக்ஜாம் புயல் டிசம்பர் 5-ம் தேதி முற்பகலில் கரையை கடக்க கூடும் எனவும், இதனால் அடுத்து வரும் 3 நாட்களுக்கு (டிச. 3, 4, 5) வட தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தென்மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இந்நிலையில் மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக நாளை (டிச.3) முதல் டிச. 6ம் தேதி வரை 4 நாட்களுக்கு 142 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.
டிச. 3, 4, 5 தேதிகளில் சென்னை-கொல்கத்தா வழித்தடத்தில் செல்லும் பெரும்பாலான ரயில்களும், மதுரை நிஜாமுதீன், மதுரை-சண்டிகர், சென்னை-அகமதாபாத் உள்ளிட்ட முக்கிய ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பெங்களூரு, கோவை, மன்னார்குடி, திருப்பதி செல்லும் சில ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.