சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவு வெளியானது..!
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 0.65% பேர் அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி அன்று தொடங்கின. 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 13ம் தேதியும், 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 2ம் தேதியும் முடிவடைந்தன. இந்த பத்து மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வினை மொத்தம் 39 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர்.
இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியானது. இதில் 87.98% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 0.65% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
99.91% பெற்று திருவனந்தபுரம் மண்டலம் முதலிடத்தை பெற்றுள்ளது. 98.47 % பெற்று சென்னை மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. அனைத்துப் பாடங்களிலும் மாணவர்களை விட மாணவிகள் 6.40% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 85.12 சதவீதமும், மாணவிகள் 91.52 சதவீதமும், மாற்று பாலினத்தவர் 50 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். cbseresults.nic.in என்ற இணையதள முகவரி மூலம் தேர்வு முடிவுகளை அறியலாம்.