தலைப்புச்செய்திகள் (23.11.2024)

‘தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில், வரும், 25 முதல், 28 வரை, ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம்.இது, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த இரு தினங்களில், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இருந்து மன்னார் வளைகுடா வரை, ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அத்துடன், தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதனால், இன்றும், நாளையும், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

அதானி குழுமத்தின் பங்குகள், முந்தைய நாளில் சரிவிலிருந்து இன்று மீண்டது. அதே வேளையில், இந்திய பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் இன்று 2.54 சதவிகிதம் உயர்ந்து 79,117.11 புள்ளிகளில் நிலைபெற்றது. அம்புஜா சிமெண்ட்ஸ் பங்குகள் 3.50 சதவிகிதமும், ஏசிசி 3.17 பங்குகள் சதவிகிதமும், குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் சதவிகிதமும், அதானி போர்ட்ஸ் பங்குகள் 2 சதவிகிதமும், அதானி டோட்டல் கேஸ் பங்குகள் 1.18 சதவிகிதமும், என்டிடிவி பங்குகள் 0.65 சதவிகிதமும் உயர்ந்தது. இதற்கு மாறாக, அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் 8.20 சதவிகிதமும், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் 6.92 சதவிகிதமும், அதானி பவர் 3.23 சதவிகிதமும், அதானி வில்மர் 0.73 சதவிகிதம் சரிந்தது.

பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் பல நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவை சீனா அறிவித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடாக இருக்கும் சீனாவில் சுற்றுலாவை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பெருந்தொற்று காரணமாக முடங்கி கிடந்த சுற்றுலா துறை தற்போது புத்துயிர் பெற்றுள்ளது. இதன்படி பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் 9 நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை என சீனா அறிவித்துள்ளது. அந்தவகையில் ஜப்பான், பல்கேரியா, ருமேனியா, மால்டா, குரோஷியா, மாண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா, எஸ்டோனியா, லாட்வியா ஆகிய நாடுகளுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக சீனா வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்தார். இவ்வாறு பயணம் மேற்கொள்பவர்கள் 30 நாட்கள் வரை சீனாவில் தங்கிக் கொள்ளலாம். இந்த திட்டம் வருகிற 30-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது. இதன் மூலம் சீனாவுக்கு விசா இன்றி பயணம் மேற்கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.

உள்ளாட்சிகள் தினமான கடந்த நவம்பர் 1-ஆம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி விடுமுறையை தொடர்ந்து, அடுத்த நாளும் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், இந்த கிராம சபை கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று (நவ., 23) கிராம சபை கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சி இயக்குநர் உத்தரவிட்டிருந்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில், “தமிழகம் முழுவதும் இன்று (23ம் தேதி) காலை 11 மணிக்கு, கிராம சபை கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி நடத்த திட்டம்.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழைபொழிந்து வருகிறது.இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20-ம் தேதி தென்காசி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதை ஈடு செய்யும் வகையில் இன்று (சனிக்கிழமை) பள்ளி வேலைநாள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கை, நீக்கம், திருத்தம் முகாம் இருப்பதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வரும் 30ம் தேதி பள்ளிகள் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

பம்பையில் 300 ரூபாய் கட்டணத்தில் 24 மணி நேரமும் இருமுடி கட்டுவதற்காக பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. இருமுடி கட்டு எடுத்து வர முடியாத பக்தர்களின் வசதிக்காக பம்பை கணபதி கோயிலின் பின் இருமுடி கட்டுவதற்கு தேவசம்போர்டு வசதி செய்துள்ளது.
இதற்காக தேவசம்போர்டு நிர்ணயித்துள்ள 300 ரூபாய் கட்டணத்தை செலுத்தி ரசீதுடன் சென்றால் அங்கு இருக்கும் பூஜாரி இருமுடி கட்டு கட்டி பக்தரின் தலையில் ஏற்றி விடுவார். இங்கு கட்டப்படும் இருமுடியில் பாலித்தீன் பயன்பாடு இருக்காது. 300 ரூபாய் கட்டணத்தில் ஒரு நெய் தேங்காய் மட்டும் தரப்படும். கூடுதல் நெய் தேங்காய்க்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாத பக்தர்கள் பம்பையில் வந்து ஸ்பாட் புக்கிங் செய்து, இருமுடி கட்டிக்கொள்ளலாம்.

பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று நாடுகளுக்கு சென்ற நிலையில், கடந்த ஐந்து நாட்களில் மட்டும், 31 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தி உள்ளதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவுக்கு, பிரதமர் மோடி கடந்த 16ம் தேதி சென்றார்.அதன்பின் 18 – 19ல், தென் அமெரிக்க நாடான பிரேசில் சென்ற பிரதமர் மோடி, அங்கு நடந்தஜி – 20 உச்சி மாநாட்டில் பங்கேற்றார். பிரேசிலில் இருந்து தென் அமெரிக்க நாடான கயானாவுக்கு கடந்த 19ம் தேதி சென்ற நிலையில், 22-ம் தேதி நாடு திரும்பினார்.ஐந்து நாள் அரசு முறை பயணத்தில், 31 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசியதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நைஜீரியாவில் அந்நாட்டு அதிபர் போலா அகமது டினுபுவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார்.அதன்பின் பிரேசிலில் நடந்த ஜி – 20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, இந்தோனேஷியா, போர்ச்சுகல், இத்தாலி, நார்வே, பிரான்ஸ், பிரிட்டன், சிலி, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!