தமிழ்நாடு முழுவதும் இன்று கூடுகிறது கிராமசபை..!

 தமிழ்நாடு முழுவதும் இன்று கூடுகிறது கிராமசபை..!

உள்ளாட்சிகள் தினமான கடந்த நவம்பர் 1-ஆம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி விடுமுறையை தொடர்ந்து, அடுத்த நாளும் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், இந்த கிராம சபை கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இன்று (நவ., 23) கிராம சபை கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சி இயக்குநர் உத்தரவிட்டிருந்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில், “தமிழகம் முழுவதும் இன்று (23ம் தேதி) காலை 11 மணிக்கு, கிராம சபை கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி நடத்த வேண்டும். இந்த கிராம சபை கூட்டத்தில், கிராம ஊராட்சிகளில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்களை சிறப்பிக்க வேண்டும். மகளிர் சுய உதவி குழுக்களை கவுரவிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும்.

மேலும், தூய்மை பாரத இயக்க திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம் ஆகியவை குறித்தும் விவாதம் நடத்தப்பட வேண்டும்.

கிராம சபை கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்தக்கூடாது. கிராமசபை கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே ஊரக பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும், இன்று நடைபெற உள்ள கிராம சபை கூட்டம், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை எடுத்திடுவதுடன், கூட்ட நிகழ்வுகளை `நம்ம கிராம சபை’ செல்போன் ஆப் மூலம் உள்ளீடு செய்திட வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளநிலையில், அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...