மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை மார்ச் 5-ம் தேதி மாலையுடன் நிறைவு பெறுகிறது. இதுவரை 3 சுயேச்சைகள் மட்டுமே மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
நாடு முழுவதும் 37 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில், மார்ச் 16-ம் தேதி தேர்தல் நடத்த தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, கனிமொழி என்.வி.என்,சோமு, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், அதிமுகவைச் சேர்ந்த மு.தம்பிதுரை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகிய 6 பேரின் பதவிக் காலமும் முடிவடைகிறது.
இந்த 6 இடங்களுக்கு புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த பிப்.26-ல் தொடங்கியது. மனுத் தாக்கல் செய்ய நாளை மார்ச் 5-ம் தேதி கடைசி நாளாகும். மார்ச் 6-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படும்.
மனுக்களை வாபஸ் பெற மார்ச் 9-ம் தேதி இறுதி நாளாகும். அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். போட்டி இருப்பின் மார்ச் 16-ம் தேதி தேர்தல் நடைபெறும்.
இந்நிலையில், நேற்று வரை சேலம், மேட்டூரைச் சேர்ந்த தேர்தல் மன்னன் என்று அறியப்படும் கு.பத்மராஜன், திருச்சி குழுமணியைச் சேர்ந்த கே.பி.எம்.ராஜா, சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த டி.கே.மேஷாக் கிருபாகரன் ஆகிய 3 சுயேச்சை வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த 6 மாநிலங்களவை இடங்களை பொறுத்தவரை திமுக தரப்புக்கு 4, அதிமுகவுக்கு 2 இடங்கள் கிடைக்கும். இதுவரை, திமுக, அதிமுக தரப்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இன்றைக்குள் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு நாளை இறுதி நாளில் மனுத் தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் பிடிவாதம்: திமுகவைப் பொறுத்த வரையில், கட்சியின் மூத்த நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருக்கும் திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. மற்றொரு இடத்தை திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு வழங்க முதலில் முடிவு செய்யப்பட்டது.

மீதமுள்ள 2 இடங்களில் ஒன்றை தேமுதிக பொருளாளர் சுதீஷுக்கும், மற்றொன்றைக் காங்கிரஸுக்கும் வழங்க திமுக தலைமை திட்டம் வைத்திருந்தது. ஆனால் காங்கிரஸோ, “எங்களுக்கு மாநிலங்களவை சீட் வேண்டாம்; அதற்குப் பதில் கூடுதல் சட்டமன்றத் தொகுதிகள் வேண்டும்” என்பதில் பிடிவாதமாக இருக்கிறது.
இதனால், கான்ஸ்டன்டைனுக்கு அடுத்த முறை வாய்ப்பு கொடுத்துவிட்டு, அவர் இடத்தையும் சேர்த்து 2 இடங்களைக் காங்கிரஸுக்கே வழங்கி சரி கட்டலாம் என திமுக தலைமை ஆலோசித்தது. அதற்கும் காங்கிரஸ் உடன்படவில்லை என்பதால் கூட்டணியில் குழப்பமான சூழலே நீடிக்கிறது.
அதிமுகவில் தம்பிதுரைக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவது உறுதியாகிவிட்டது. மற்றொரு இடத்துக்கு அன்புமணி மற்றும் ஜி.கே.வாசன் இடையே பலப்பரீட்சை நடந்து வருகிறது.
“கடந்த முறை அதிமுக தயவில் சீட் வாங்கிவிட்டு பாஜக பக்கம் சென்றுவிட்டார் வாசன். எனவே, அவருக்கு மீண்டும் தரமுடியாது” என அதிமுக தரப்பு கறாராகச் சொல்லிவிட்டது. மறுபக்கம், ‘‘அதிமுக சீட் கொடுத்தாலும் உங்களுக்கு உண்மையாகவே இருந்தேன்; எனக்கு மீண்டும் சீட் வாங்கித் தாருங்கள்’’ என்று பாஜகவிடம் வாசன் வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், ‘‘என் தந்தையை பகைத்துவிட்டு உங்களுடன் கைகோர்த்திருக்கிறேன். எனவே எனக்குதான் சீட் வேண்டும்’’ என்று அன்புமணி பிடிவாதம் காட்டி வருகிறார்.
இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘‘கூட்டணிக் கட்சிகளுக்கு எம்.பி. சீட் கொடுக்க வேண்டாம். அவர்கள் கடைசியில் நம்மை கழற்றி விட்டுவிடுவார்கள். அதற்கு பதில் என் மகன் ஜெயவர்தனுக்கு சீட் கொடுங்கள். கடந்த தேர்தலில் அவர் தோற்றுவிட்டார். இந்த முறை அவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப விரும்புகிறேன்’’ என்று எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தியுள்ளார். இதனால் அதிமுகவின் 2-வது சீட் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.
