“கானசரஸ்வதி” பி. சுசீலாவிற்கு இசை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார்..! | நா.சதீஸ்குமார்
தென்னகத் திரையிசையின் தேன்மதுரக் குரல் “கானசரஸ்வதி” பி. சுசீலாவிற்கு இசை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பன்மொழிகளில் ஏறக்குறைய 40,000க்கும் அதிகமான பாடல்களை பாடியவர் பி.சுசீலா. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற இவருக்கு ஏற்கனவே பத்மபூஷண் விருது, ஐந்து முறை தேசிய விருது, மூன்று முறை தமிழக அரசு விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று (நவ.,21) காலை நடந்தது. இதில் மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. அதோடு பின்னணி பாடகி பி.சுசீலாவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. அதேபோல், இசையியல் அறிஞர் பி.எம்.சுந்தரம் என்பவருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதனை தமிழக முதல்வரும், பல்கலைக்கழக வேந்தருமான ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.
பின்னர் ஸ்டாலின் பேசியதாவது: இசைக்கும் எனக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது. இந்தியாவில் இசைக்காக உருவாக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் இதுதான். முழுக்க முழுக்க மாநில அரசின் நிதியுதவியில் இப்பல்கலை செயல்படுகிறது. அதைவிட சிறப்பு, இப்பல்கலைக்கு மட்டும்தான் மாநில முதல்வர், வேந்தராக இருக்கும் உரிமை உள்ளது. நான் அரசியல் எல்லாம் பேசவில்லை, எதார்த்தத்தை பேசுகிறேன்.
முதல்வரே வேந்தராக இருந்தால் தான் பல்கலைக்கழகங்கள் சிறப்பாக வளர முடியும். மற்றவர்கள் கையில் இருந்தால் அதன் நோக்கம் சிதைந்து விடும் என்பதால் தான் 2013ல் முதல்வரே வேந்தராக இருக்கும் வகையில் அன்றைக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். இதற்காக அவரை மனதார நாம் பாராட்டலாம், நானும் பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
பாட்டு பாடிய முதல்வர் ஸ்டாலின்
நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், பி.சுசீலா பாடிய ‘நீ இல்லாத உலகத்திலே..’ என்ற பாடலை பாடி காட்டினார். அப்பாடலின்
‘‘நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை..
உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை சிந்தனையில்லை..
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை..
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை..
உன்னைக் கண்டு கொண்ட நாள் முதலாய்
பெண்ணுறங்கவில்லை பெண்ணுறங்கவில்லை” – என்ற வரிகளை ஸ்டாலின் பாடியபோது அரங்கத்தில் இருந்தவர்கள் கைத்தட்டினர்.