“சங்கர நேத்ராலயா” நிறுவனர் பத்ரிநாத் காலமானார்..!
சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனரான கண் மருத்துவர் எஸ்.எஸ்.பத்ரிநாத் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 83.
இந்தியாவின் மிகப் பெரிய கண் மருத்துவமனைகளில் ஒன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கர நேத்ராலயா. இதன் நிறுவனர், தலைவர் எஸ். எஸ். பத்ரிநாத் ஆவார். ஏழை எளியோருக்கான மருத்துவ சேவைகளுக்காக 1996ஆம் ஆண்டு பத்மபூஷன் பெற்றார்.
மேலும் பத்மஸ்ரீ மற்றும் டாக்டர் பி.சி.ராய் விருது உள்ளிட்டவைகளும் பெற்றுள்ளார். சென்னையில் பிறந்தவர் பத்ரிநாத். இவரது பெற்றோர் சிறுவயதிலேயே இறந்துவிட்டனர். இதையடுத்து அவரது தந்தைக்கு கிடைத்த காப்பீட்டு பணத்தை வைத்து மருத்துவம் படித்தார் பத்ரிநாத்.
உடல்நல குறைவால் பள்ளிப் படிப்பை தாமதமாக தனது 7வது வயதில்தான் தொடங்கினார். அவர் மயிலாப்பூரில் உள்ள பிஎஸ் உயர்நிலை பள்ளியிலும் சென்னை ராமகிருஷ்ணா மிஷன் உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். லயோலா கல்லூரியில் கல்லூரி படிப்பை படித்தார்.
இதையடுத்து 1963 ஆம் ஆண்டு மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் எம்பிபிஎஸ் பயின்றார். பின்னர் நியூயார்க்கில் உள்ள கிளாஸ்லேண்டஸ் மருத்துவமனையில் தனது பயிற்சியை முடித்தார். நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் கண் மற்றும் காது மருத்துவமனையில் பணியை தொடங்கினார். 1970களில் இந்தியா வந்த அவர் 1976 ஆம் ஆண்டு வரை தன்னார்வ சுகாதார சேவைகளில் பணியாற்றினார்.
1978 ஆம் ஆண்டு சென்னையில் மருத்துவம் மற்றும் பார்வை ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவினார். இது சங்கர நேத்ராலயா அறக்கட்டளையின் ஒரு பிரிவாகும். ஒவ்வொரு நாளும் 100 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றன. இவருடைய இறப்பை தமிழக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராம சுகந்தன் உறுதி செய்துள்ளார். தனது ட்விட்டரில் பத்ரிநாத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.