10-வது நாளாக நீடிக்கும் உத்தரகண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணிகள்..!| நா.சதீஸ்குமார்

 10-வது நாளாக நீடிக்கும் உத்தரகண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணிகள்..!| நா.சதீஸ்குமார்

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிக்கொண்ட 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இரவு பகலாக நேற்று 10-வது நாளாகவும் நீடித்தது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி பகுதியில் பிரம்மகால்-யமுனோத்திரி நெடுஞ்சாலையில் சில்க் யாரா-தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே மலைக்கு கீழ் நீண்ட சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு எளிதான போக்குவரத்து வசதிக்காக இந்த சுரங்கப்பாதையை கடந்த சில ஆண்டுகளாக அமைத்து வருகிறார்கள்.

கடந்த 12-ந்தேதி சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது அதன் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதனால் 41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதைக்குள் சிக்கிக் கொண்டனர். சுரங்கம் தோண்ட வேண்டிய மலை பகுதிக்கு கீழும் ஏற்கனவே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு இடையில் அவர்கள் சிக்கி தவித்து வருகிறார்கள்.

அவர்களை மீட்க பேரிடர் மீட்பு குழுவினர் கடந்த 8 நாட்களாக போராடி வருகிறார்கள். முதலில் 3 அடி சுற்றளவு கொண்ட குழாய்களை உள்ளே செலுத்தி 40 தொழிலாளர்களையும் அதன் வழியாக மீட்கலாம் என்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதற்கு வெற்றி கிடைக்கவில்லை. இதையடுத்து டெல்லியில் இருந்து அமெரிக்காவில் தயாரான அதிநவீன எந்திரம் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. அந்த எந்திரம் சுரங்கப்பாதைக்குள் மண் சரிந்து விழுந்துள்ள 70 மீட்டர் தூரத்தில் 24 மீட்டர் தூரத்துக்கு தோண்டியது. அதற்கு பிறகு மலைப்பகுதியில் குறிப்பாக சுரங்கப்பாதை மேல் அதிர்வுகள் ஏற்பட்டதால் ஒட்டுமொத்த சுரங்கப்பாதையும் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் அமெரிக்க எந்திரம் மூலம் சுரங்கம் தோண்டும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதற்கிடையே சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு தொடர்ந்து சிறிய குழாய் வழியே உலர் பழங்கள், உணவு வகைகள், ஆக்சிஜன் காற்று அனுப்பப்பட்டு வருகின்றன.

41 தொழிலாளர்களும் சிக்கியுள்ள சுரங்கத்துக்குள் அதிர்ஷ்டவசமாக மின் இணைப்பும், குடிநீர் இணைப்பும் உள்ளது. இதனால் தொழிலாளர்கள் சற்று தைரியமான மனநிலையுடன் வெளியில் இருப்பவர்களுடன் பேசி வருகிறார்கள். 41 தொழிலாளர்கள் எத்தகைய நிலையில் இருக்கிறார்கள் என்பதை சிறிய ரக டிரோன் மூலம் கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் 41 தொழிலாளர்களையும் மீட்க சுரங்கப்பாதை மேல் பகுதியில் மலை உச்சியில் இருந்து துளையிட்டு மீட்பு பணிகளை செய்யலாமா? என்று ஆலோசிக்கப்பட்டது. இந்த பணிகள் செய்வதற்கு எந்திரங்களை எடுத்து செல்ல மலை மீது சுமார் ஆயிரம் மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்க வேண்டும். அந்த பணிகள் நடந்தது. கடந்த 2015-ம் ஆண்டு இதுபோல் நடந்த ஒரு விபத்தில் மலை உச்சியில் இருந்து துளையிட்டு பணியாளர்கள் மீட்கப்பட்டனர். அதே தொழில்நுட்பத்தை கையாள முடிவு செய்து மலையில் சாலை அமைக்கும் பணியை எல்லைப்படை வீரர்கள் தொடங்கி உள்ளனர். நேற்றும் மலையில் சாலை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்தது.

இதற்கிடையே 41 தொழிலாளர்களை மீட்பதற்கு 5 முன்னணி நிறுவனங்கள் களத்தில் குதித்து உள்ளன. எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனம் (ஓ.எம்.சி.) சட்லஜ் நதி வாரியம் ரெயில் நிறுவனம், தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம், தெக்ரி டெக்ரோ டெவலப் மெண்ட் கார்ப்பரேஷன் ஆகிய 5 நிறுவனங்களும் 5 விதமான திட்டங்களுடன் மீட்பு பணியில் தங்களது நிறுவனங்களை இறக்கி விட்டுள்ளன. இவர்களுக்கு பேரிடர் மீட்பு குழு மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை வீரரக்ள் துணையாக இருந்து பணிகளை தொடங்கி உள்ளனர். சட்லஜ் நதி நீர் நிறுவனத்தினர் மலை உச்சியில் இருந்து சுரங்கப்பாதையை இணைக்கும் துளையை போடுவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

இந்த நிலையில் மற்ற நிறுவனங்கள் மூலமாகவும் சுரங்கப்பாதைக்குள் இருக்கும் 40 தொழிலாளர்கள் இருக்கும் பகுதியை இணைக்க 3 இடங்களில் துளை போட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. இப்படி பல்வேறு வகைகளிலும் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. நேற்று 10-வது நாளாக மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்தது. நேற்று தொடங்கி இருக்கும் பணிகளில் திட்டமிட்ட வெற்றி கிடைத்தால் இன்னும் 2 தினங்களில் 41 தொழிலாளர்களையும் மீட்க முடியும் என்று மத்திய-மாநில அரசு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...