தமிழகம் முழுவதும் விவசாய சங்கங்கள் இன்று போராட்டம்..! | நா.சதீஸ்குமார்
தமிழக அரசு குண்டர் சட்டத்தின் கீழ் விவசாயிகள் மீது நடவடிக்கை எடுத்ததை கண்டித்து இன்று 24 மாவட்டங்களில் அரசுக்கு எதிராக 100-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்துகின்றன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்துக்காக 11 கிராமங்களில் 3200 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்கியது. விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சித்த தமிழக அரசை எதிர்த்து 161 நாட்கள் அமைதியான வழியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னைக்கு வந்து எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ஒரு நாள் அடையாள போராட்டத்தையும் விவசாயிகள் நடத்தினர். இந்த நிலையில் அவர்களுடைய போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர 500-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸார் அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திய 20 விவசாயிகளையு்ம கைது செய்தனர். இவர்களில் 7 பேர் மீது திடீரென குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளியானது. இதற்கு கண்டனங்கள் எழுந்தன. கடந்த 18ஆம் தேதி சட்டசபை சிறப்பு கூட்டம் நடக்கவுள்ள நிலையில் விவசாயிகள் பிரச்சினையை பெரிதாக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன.
அப்போது விவசாயிகள் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழான நடவடிக்கையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. எனினும் விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை எதிர்த்து இன்று 100-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் 24 மாவட்டங்களில் போராட்டம் நடத்துகிறார்கள். இதற்காக விவசாயிகள் போராட்ட குழுவை உருவாக்கி உள்ளனர். இந்த போராட்ட குழு சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அது போல் வரும் 29ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது.