ஆளுநர் மாளிகை வாயிலில் பெட்ரோல் குண்டு வீச்சு…
ஆளுநர் மாளிகை முன்பு நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் சர்ச்சைகள் வெடித்துக் கிளம்பியுள்ளன. காவல்துறை தரப்பில் ஒரு விளக்கம் சொல்ல, அதற்கு முற்றிலும் முரண்பாடான தகவலை வெளியிட்டுள்ளது ஆளுநர் மாளிகை.
நேற்று (அக்டோபர் 25) பிற்பகல் நேரத்தில் சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை வாயிலில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்தது. இதையடுத்து, பெட்ரொல் குண்டு வீசியதாக சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரௌடி கருக்கா வினோத் உடனடியாக கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநர் மாளிகை மீதான இந்த தாக்குதல் முயற்சிக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்த சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, “நண்பகல் 3 மணியளவில், சர்தார் படேல் சாலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ராஜ்பவன் நுழைவு வாயில் பகுதியை குறிவைத்து, பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசுவதற்கு முயற்சித்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அந்த நபரை பார்த்துவிட்டதால், அந்த நபர் எதிர் திசையில் உள்ள ஹைவே ரிசர்ச் சென்டர் என்ற பகுதியில் இருந்து அந்த பாட்டிலை வீச முயற்சித்தார். அப்போது பிரதான நுழைவு வாயில் பகுதியிலும், வெளியிலும் இருந்த காவலர்கள் அந்த நபரை சுற்றி வளைத்தனர்.
அந்த நபரை போலீசார் பிடித்தபோதும், அவர் ஒரு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீசினார். அதிலிருந்து எந்தவிதமான தீயும் வரவில்லை. அந்த பகுதியில் பேரிகார்டு அருகே அப்படியே உடைந்து கிடந்தது. அவரை பிடித்தபோது, மேலும் 4 பாட்டில்கள் அவரிடம் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்துவிட்டனர். இந்தச் சம்பவம் சர்தார் படேல் பிரதான சாலையில் நடந்தது. அங்கிருந்து வீசும்போது, ஆளுநர் மாளிகையின் நுழைவு வாயில் முன்பிருந்த பேரிகார்டு முன்பாக விழுந்தது. இதில் யாரும் பாதிக்கப்படவில்லை. எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை.
அந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தபோது, அந்த நபர், 42 வயதுடைய கருக்கா வினோத் என்பது தெரியவந்தது. தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இதேபோல, ஒரு அரசியல் கட்சி அலுவலகத்தின் மீது, பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீசியுள்ளார். அதற்கு முன்னதாக, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இதே மாதிரியான சம்பவத்தை நடத்தியுள்ளார்.
சமீபத்தில் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்திருக்கிறார். இன்று காலை மது அருந்தியுள்ளார். சம்பவத்தின்போது அவர் நிதானத்தில் இல்லை. எனவே, அவரை மிகுந்த எச்சரிக்கையுடன் பிடித்து, அவரிடமிருந்த பாட்டில்களை பறிமுதல் செய்தோம். காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த விசாரணைக்குப் பின்னர், முழு விவரம் தெரியவரும்” என்று தெரிவித்தார். சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பிலும் இந்த விவரங்களே இடம்பெற்றிருந்தன.
ஆனால், அடுத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர்” என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக ஆளுநர் மாளிகை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும், டிஜிபி அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநரின் துணை செயலர் செங்கோட்டையன் சார்பில் இந்த புகார் காவல்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த புகாரில், காவல்துறை அளித்த விளக்கத்திற்கு முரண்பாடான பல தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அந்த புகாரில், “பிற்பகல் 2.45 மணியளவில் சில விஷமிகள், பெட்ரோல் குண்டுகளுடன் ஆளுநர் மாளிகையின் பிரதான நுழைவாயில் 1 வழியாக ராஜ் பவனுக்குள் நுழைய முயன்றுள்ளனர். பாதுகாப்பு காவலர்கள் அவர்களைத் தடுத்துள்ளனர். அப்போது ஒரு பெட்ரோல் குண்டை பிரதான நுழைவாயில் பகுதியில் வீசியுள்ளனர். அந்த குண்டு பெரிய சத்தத்துடன் வெடித்தது. இதையடுத்து காவலர்கள் அந்த நபர்களை பிடிக்க முயன்ற நிலையில், மீண்டும் மற்றொரு பெட்ரோல் வெடிகுண்டு வெடித்தது. இதில் ஆளுநர் மாளிகை பிரதான நுழைவாயில் பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.